என் நண்பரின் அறிமுகத்தால் சுசாந்த் மிஸ்ரா என்ற ஒரியாவைச் சேர்ந்த இயக்குனரை 1994 ல் சந்தித்தேன். சுசாந்த் மிஸ்ரா இந்தர் தனுர் சாயா என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர்.
அவரது இன்னொரு படம் பிஸ்வபிரகாஷ் உலக படவிழாக்களில் கலந்து கொண்டு பாராட்டை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான பரதநாட்டிய கலைஞரை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரிப்பதற்காக அவருக்கு தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் நிதியுதவி அளித்திருந்தது.
அந்த படத்திற்கான பின்ணணி ஆய்வு மற்றும் இடங்களை தேர்வு செய்தவற்கு உதவி செய்வதற்காக என்னையும் ஆவணப்படத்தில் பணியாற்றுமாறு சுசாந்த்கேட்டுக் கொண்டார். நான் முன்னதாக ஹிந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளுக்காக ஜல்லிகட்டு, திருவாரூர் கோவில் இசை மரபு, தமிழக ஆதிவாசிகள் , தேர் செய்கின்றவர்கள், வேஷத்திருவிழா என்று பல்வேறு ஆவணப்படத் தயாரிப்புகளில் பணியாற்றியிருந்தேன்.
ஆகவே தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனருடன் சேர்ந்து வேலை செய்ய போகிறோம் என்ற பரபரப்பு தொற்றிக் கொள்ள பகலும் இரவும் சுசாந்தின் அறையில் கூடவே இருந்தேன். மைலாப்பூரில் உள்ள ஒரு வீட்டின் மாடியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார் சுசாந்த் மிஸ்ரா.
சுசாந்த் மிஸ்ரா ஒரு சாப்பாட்டு பிரியர். ஒரு நாள் அவரை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள பொன்னுசாமி ஹோட்டலுக்குச் சென்றோம். தட்டில் கொண்டு வந்து நீட்டிய மீன் வறுவல், சுக்கா, ஈரல், குழம்பு மீன், மூளை, சுறாபுட்டு என்று அத்தனையும் பார்த்து ஆசை தாங்கமாமல் அப்படியே முழு தட்டையும் வைத்து விட்டுப் போகச் சொன்னார். இவ்வளவும் சாப்பிட முடியாது என்று நாங்கள் தடுத்த போது அவர் கேட்கவேயில்லை.
தன்னால் சாப்பிட முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு குளிர்பானம் வாங்கி கையில் வைத்தபடியே அரைமணி நேரத்திற்குள் அவ்வளவும் சாப்பிட்டு முடித்தார். பில் வந்த போது அறுநூறு நாற்பது என்றிருந்தது. அவரால் நம்ப முடியவில்லை. இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை அசைவ உணவுகள் கிடைக்கின்றதா என்று வியந்தபடியே தினமும் இங்கே வந்துவிட வேண்டியது தான் உற்சாகத்துடன் சொன்னார்.
ஆவணப்படத்திற்கான ஆரம்ப தயாரிப்புகளை பற்றி எப்போது பேசினாலும் அவர் உற்சாகம் காட்டுவதேயில்லை. அவரது கவனம் முழுவதும் பொன்னுசாமி அஞ்சப்பர், முனியாண்டி விலாஸ்., காரைக்குடி என்றே நீண்டு கொண்டிருந்தது.
நல்ல சாப்பாடு, மதிய உறக்கம், மாலையானதும் குளித்து அழகாக உடை அணிந்து வாசனை திரவியங்கள் பூசி பரதநாட்டிய கலைஞரைத் தேடி போய்விடுவார். அந்த பெண் பிரமாதமான அழகி. இருவரும் சிரித்து பேசுவார்கள். ஒன்றாக காரில் பயணம் செய்வார்கள். இரவானதும் ஒரு பாட்டில் விஸ்கியுடன் அசைவ உணவுகள் சேர்ந்து கொள்ள சுசாந்த் மிஸ்ரா ஒய்வு எடுக்க ஆரம்பித்து விடுவார்
அநேகமாக ஒரு மாதத்திற்குள் சென்னையில் உள்ள எல்லா அசைவ உணவகங்களிலும் சாப்பிட்டு பார்த்து அலுத்துப் போய்விட்டார். அது போலவே எல்லா வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களையும் போலவே ஆர்வமாக தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள் சிலவற்றை வேகமாக கற்று வைத்துக் கொண்டார். அடிக்கடி அதை பிரயோகமும் செய்வார்.
திடீரென திரைப்பட வளர்ச்சி நிறுவனத்திலிருந்து அவருக்கு போன் வரும். ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவிப்பார். சில வார காலம் புவனேஷ்வர் போய்விடுவார். பிறகு நிதானமாக சென்னை திரும்புவார்.
பரதநாட்டியம் பற்றி நானாக கலாசேஷ்த்ராவிலும், கன்னிமாராவிலும் போய் ஏதாவது தேடி படித்து கொண்டிருப்பேன். ஹிண்டுவில் வெளியாகும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை தேடிச் சென்று என் பரதநாட்டியம் பற்றிய அறிவை விருத்தி செய்து கொண்டிருப்பேன். சில பரதநாட்டிய அரங்கேற்றங்களில் நானும் நடனமாடும் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் மட்டுமேயிருந்தோம்.
பரம்பரா, சம்பிரதாயா என்று இசைகாப்பங்களில் சென்று ஏதாவது தேடிக் கொண்டிருப்பேன். இதனிடையில் பொட்டி ஸ்ரீராமுலு ஹால் என்றொரு இடம் மைலாப்பூரில் உள்ளது. அங்கே மாலைநேரங்களில் வரும் சுப்பாராவ் என்பவர் பரதநாட்டிய விமர்சகர் என்று அறிந்து அவரை தேடிச் சென்று ஒரு மாலை அவரது அறிவுரை மொழிகளை கேட்டு கொண்டேன்.
இப்படியாக பரதநாட்டியத்தின் பின்னால் நான் அலைந்து கொண்டிருந்த போது சுசாந்த் கும்பகர்ணனின் உறக்கம் போல ஆழ்ந்த சயனத்திலே இருந்தார்
அடுத்து ஒரு வாரத்தில் படப்பிடிப்பு துவங்கிவிடும் என்பது போல ஒரு முறை அவசரமாக சென்னை வந்து இறங்கினார். இரண்டு நாட்கள் லேப், கேமிரா, ஆட்கள் என்ற விசாரணை நடைபெற்றது.
மூன்றாம் நாளின் காலையில் சுசாந்த் கடற்கரையில் வாக்கிங் சென்றவர் கையில் ஒரு பெரிய பையோடு வந்து சேர்ந்தார். என்ன அது என்று கேட்ட போது மீன் மிக மலிவாக கிடைக்கின்றது. ஐந்து கிலோ வாங்கி வந்திருக்கிறேன் என்றபடியே சுத்தம் செய்து சமைக்கத் துவங்கினார். இரண்டு மணி வரை வியர்த்து வழியும் உடலுடன் சமையலை முடித்து சூடான சாதமும் மீன் பொறியலும் குழம்பும் தயாரித்து உற்சாகமாக சாப்பிடத் துவங்கினார். அவரது சமையல் பிரமாதமாகவே இருந்தது.
அன்றிலிருந்து அவருக்கு புதிய வேலை ஒன்று கிடைத்துவிட்டது. காலையானதும் மீன் மார்க்கெட்டிற்கு போவது தேவையான மீன்களை வாங்குவது அதற்கு தேவையான மசாலா, வெங்காயம், தேங்காய் வாங்குவது, அதைச் சுத்தம் செய்வது, சமைப்பது, சாப்பிடுவது என்று பரதநாட்டிய கலையை ஒரம்கட்டிவிட்டு நளபாகத்தில் மூழ்கியிருந்தார்.
வேலை நடக்கவில்லையே தவிர நல்ல உணவு கிடைத்தது. சில நாட்கள் இரவில் சினிமாவுக்கு போவோம். பின்னிரவில் பிரியாணி சாப்பிடுவது அவருக்கு பிடித்தமான ஒன்று. பிலால் பிரியாணியை ரசித்து சாப்பிடுவார். சினிமா பற்றியோ, படம் எடுப்பது பற்றிய ஆர்வமாக ஒருமுறை கூட அவர் பேசி நான் கேட்டதேயில்லை.
திரைப்பட வளர்ச்சி நிறுவனம் இனிமேல் காத்திருக்க முடியாது என்று நெருக்கத் துவங்கியது. ஒருவழியாக அவரது சாப்பாட்டு ஆசை விடுபட்டு படப்பிடிப்பிற்காக இடங்களை தேர்வு செய்வது என்று முடிவு செய்தோம்
பகல் முழுவதும் காரில் கடற்கரை சாலையில் பயணம் செய்வோம். எங்காவது நிறுத்தி கடல் அருகில் வரை நடந்து செல்வார். மணலில் அமர்ந்து கடலை வெறித்து பார்த்தபடியே இருப்பார். கடல் அலைகளின் முன்னால் பரதநாட்டியம் ஆடுவது போல எடுத்தால் எப்படியிருக்கும் என்று விவாதம் செய்வார். அதற்குள் மதியம் வந்துவிடும். உணவுப் பிரச்சனை ஆரம்பமாகிவிடும்.
ஒருநாள் காலை என்னிடம் தாமரை குளம் ஒன்று வேண்டும். அதன் முன்னால் பரதநாட்டியம் ஆடுவது போன்ற காட்சி ஒன்று தேவைபடுகிறது. சாகுந்தலத்தில் அப்படியொரு காட்சி இடம்பெற்றிருக்கிறது என்றார்.
தாமரை குளம் தானே என்று அருகில் எங்காவது கிடைக்கும் பார்த்துவிடலாம் என்று சொன்னேன். காலை ஏழு மணிக்கு காரில் செங்கல்பட்டு செல்லும் சாலையில் செல்லத் துவங்கினோம். வழியில் ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி தாமரை குளம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்போம். சில இடங்களை சுட்டிச் சொல்வார்கள். தேடி சென்றால் குட்டை போலிருக்கும். தாமரையே இருக்காது.
செங்கல்பட்டிலிருந்து விலகி சிங்கபெருமாள் கோவில்பக்கம் சென்றோம்.சில ஊர்களில் குளங்கள் என்று கண்மாயை காட்டினார்கள். பலருக்கும் எது அல்லி எது தாமரை என்று தெரியாத குழப்பமிருந்தது சில இடங்களில் தாமரை இருந்தது. ஆனால் ஒன்று கூட மலரவில்லை. நிறைய தாமரைகள் உள்ள குளத்தை தேடி பகல் முழுவதும் அலைந்தோம். ஒன்று கூட கிடைக்கவில்லை.
அந்த ஒரு நாளில் பல்வேறு நீர்நிலைகளை கண்டிருப்பேன்.. சுசாந்த் மிஸ்ராவோ தனக்கு எப்படியாவது ஒரு தாமரை பூத்த குளம் அவசியம் வேண்டும் என்று உறுதியாக இருந்தார். மாலை வரை சுற்றியும் கிடைக்கவில்லை. வரும்வழியில் மகாபலிபுரம் அருகில் ஒரு கிராமத்தில் தாமரைகள் இருப்பதாக அறிந்து அங்கு சென்றோம். அங்கு பாசி படர்ந்த குளம் மட்டுமேயிருந்தது.
மூன்று நாட்கள் சென்னையை சுற்றி நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்தது தான் மிச்சம் தாமரை பூத்த பெரிய குளம் எதுவும் கண்ணில் படவேயில்லை. சில குளங்களில் தாமரைகள் இருந்தன. ஆனால் அங்கே படம் பிடிக்க முடியாத நிலைமை இருந்தது. எதற்காக தாமரை குளங்களை தேடிக்கொண்டிருக்கிறோம் என்று ஒவ்வொரு ஊரிலும் கேட்பார்கள்.
படப்பிடிப்பிற்கு என்று சொன்னதும் எந்த நடிகர் வருகிறார் என்று விசாரிப்பார்கள். இது பரதநாட்டியம் பற்றியது என்று சொல்வேன். நீயூஸ் ரீலா என்று ஒரு பையன் கேட்டான். ஆமாம் என்றதும் நீயூஸ் ரீல்ல ஒரு ஆள் பேசுவாரோ அவர் இவரா என்று சுசாந்தை காட்டி கேட்டான். ஆமாம் என்று தலையாட்டி வைத்தேன். அவரை உடனே கேலி செய்ய துவங்கினார்கள்.
சுசாந்த் புவனேஷ்வரில் நிறைய தாமரை குளங்கள் இருக்கின்றன. அங்கேயே படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். ஆனால் பரதநாட்டிய கலைஞரோ அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
முடிவில் ஐயங்கார் குளம் அருகில் ஒரு கிராமத்தில் தாமரை குளம் ஒன்றை கண்டுபிடித்தோம். அந்த குளத்தில் படப்பிடிப்பு நடத்த யாரிடம் அனுமதி கேட்பது என்று விசாரித்த போது ஒரு ஆள் அது தன்னுடைய இடம் என்றும் இரண்டாயிரம் பணம் தந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றான். அவனோடு பேசி சம்மதிக்க வைத்து படப்பிடிப்பிற்காக நாள் முடிவு செய்யப்பட்டது
இதற்கிடையில் ஒரு நாள் மாலை வெளியே சென்று வந்த சுசாந்த் மிஸ்ரா மிகுந்த உற்சாகத்துடன் வீட்டில் வந்து பாடிக் கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று கேட்டபோது தான் அந்த பரதநாட்டிய கலைஞரை காதலிப்பதாகவும் அதை அவளிடம் தெரிவித்துவிட்டதாகவும் அவளுக்கும் தன்னை பிடித்திருப்பதாக சொல்லி மிகுந்த உற்சாகத்தில் இரவெல்லாம் குடித்து கொண்டிருந்தார்
காதல் துவங்கிய பிறகு ஆவணப்படத்திற்கு என்ன வேலையிருக்கிறது. அது தானாக ஒதுங்கி கொண்டது.
பரதநாட்டிய பெண் தயிர்சாதம் தவிர வேறு எதையும் சாப்பிட மாட்டாள். அதுவும் அவள் தயிர்சாதம் சாப்பிடுவதே பரதநாட்டியமாடுவது போல பாவங்களுடன் கூடியதாக இருக்கும். அதிகபட்சமான ஒருநாளைக்கு இரண்டு பழச்சாறுகள், ஒரு துண்டு ஆப்பிள், ஒரு தயிர்சாதம் அவ்வளவு தான் அவளுடைய உணவு.
சுசாந்தோ பொன்னுசாமி ஹோட்டலின் பாதியை கைபார்க்க கூடிய ஆசாமி. அவளது காதலுக்காக சில நாட்கள் வசந்தபவன், முருடீஸ் என்று சைவ உணவுகளை சாப்பிட்டு தன்னை மாற்றிக் கொண்டார் சுசாந்த் . இளநீர் குடிப்பது. எலுமிச்சை சாறு குடிப்பது என்று புதிய பழக்கங்களை உருவாக்கினார். ஆனால் எதுவும் பத்து நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கவில்லை. காதலை விட சாப்பாட்டு பிரச்சனையே வென்றது.
தான் சென்னைக்கு வந்தது அவளை காதலிப்பதற்காக இல்லை ஆவணப்படம் எடுப்பதற்காக என்று முடிவு செய்து படப்பிடிப்பை வேகமாக ஆரம்பித்தார்.
ஒரு மகிந்திரா வேன் அதற்குள் ஐந்து ஆறு பேர். பரதநாட்டிய கலைஞர் ஒரு காரில் வந்து சேர்வார். அதிகாலையில் படப்பிடிப்பு துவங்கும். பாறையின் மீது நடனம் ஆடச் சொல்வார். அந்த பெண்ணோ சமதளமில்லாத எதிலும் தன்னால் ஆட முடியாது என்று மறுத்துவிடுவார்.
தாமரை குளத்திற்கு ஒருவழியாக படப்பிடிப்பு நடத்த சென்றோம். அந்த குளத்தின் அருகில் இருந்த குப்பைகளையும் கழிவுகளையும் கண்டு பயந்து போன பரதநாட்டியப் பெண் காரை விட்டு கிழே இறங்கி வர மறுத்துவிட்டார். குளத்தின் அருகில் ஒருமரப் பலகையையில் மேடை போல போட்டு அதன் மீதேறி அவள் நடமாடுவது போல படமாக்கினார்கள்
சிதம்பரம் கோவிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு வாங்கினார்கள். அங்கே ஒரியாவில் இருந்து உதவிக்கு வந்திருந்த ஒருவன் கால் வலிக்கிறது பிரகாரத்திலிருந்த சிவலிங்கம் ஒன்றின் மீது ஏறி உட்கார்ந்து விட்டான். அடுத்த நிமிசம் கோவிலே பரபரப்பாகி அந்த ஆளை உதைக்க தேடியது. கடத்தி கொண்டு சென்று காரில் ஒளித்து வைத்தோம். அவசர அவசரமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கபட்டது.
ஒவ்வொரு நாளும் பரதநாட்டிய பெண் தனக்கு வேண்டிய தயிர்சாதத்தை வீட்டிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வரவழைத்து அங்கிருந்து காரில் கொண்டு வந்து சாப்பிட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருந்தாள்
இருபது நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து முடிந்தது. புவனேஷ்வரில் கொண்டு சென்று எடிட் செய்து கொண்டுவிட்டு வருவதாக கிளம்பி சென்றார் சுசாந்த். ஊருக்கு கிளம்பிய நாளில் என்னிடம் புவனேஷ்வருக்கு வா. விதவிதமாக சமைத்து தருகிறேன் என்று உரிமையோடு அழைத்தார். அதன் பிறகு இன்று வரை அவரைச் சந்திக்கவேயில்லை. அந்த ஆவணப் படம் ஒராண்டிற்கு பிறகு முடிக்கபட்டு ஏதோவொரு திரைப்பட விழாவில் காட்டப்பட்டதாக செய்தியை வாசித்தேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற மாதம் அதே தாமரைக் குளங்களை தேடிய கிராமங்களில் இன்னொரு படப்பிடிப்பு குழுவினர்களுடன் இடம் தேடி அலைந்து கொண்டிருந்தேன். எப்படி ஒவ்வொரு ஊரிலும் குளம் எங்கேயிருக்கிறது என்று சரியாக சொல்கிறீர்கள் என்று நண்பர் கேட்டார். அது பெரிய கதை என்று சொல்லிச் சிரித்தேன்.
முடிவில் சுசாந்த் படப்பிடிப்பு நடத்திய குளத்திற்கு சென்றோம். ஆச்சரியம் அங்கே இப்போது குளம் நிறைய தாமரைகள் பூத்திருந்தன. இப்படியொரு குளத்தை தான் சுசாந்த் தேடிக் கொண்டிருந்தார். அன்று இது சாத்தியமாகவில்லை.
காரை விட்டு இறங்கி ஒரேயொரு தாமரையை பறித்து கொண்டுவந்தேன். அது வழியெங்கும் சுசாந்தை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு படத்தின் பின்னாலும் இப்படி நூற்றுக்கணக்கான கதைகள் நிகழ்ச்சிகள் மறைந்திருக்கின்றன. சினிமா என்பது திரையில் காண்பது மட்டுமில்லை இதுவும் சேர்ந்தது தான்.
**