பூமாவின் கண்கள்

பூமா (PUMA) எனப்படும் மலைச்சிங்கத்தைப் பற்றிய Into the Puma Triangle டாமெண்டரியைப் பார்த்தேன்.

மலைச்சிங்கங்கள் மிகச் சக்திவாய்ந்த உடலமைப்பு கொண்டவை. மான்களை வேட்டையாடுவதில் திறமையானவை. சிலே நாட்டில் பூமாக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வனவிலங்குகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வரும் கேசி ஆண்டர்சன் மோன்டானாவில் பல ஆண்டுகளாகப் பூமாக்களைக் கண்காணித்து வருகிறார், ஆனால் அவரால் ஒருமுறை கூடப் பக்கத்தில் போய் பூமாவைக் காண முடிந்ததில்லை .

ஆவணப்படத் தயாரிப்பாளர் ரெனே அழைப்பில் சிலே செல்லும் கேசி ஆண்டர்சன் அங்குள்ள டோரஸ் டெல் பெயின் தேசிய பூங்காவில் தனது படக்குழுவினருடன் பூமாவைக் காணப் பயணம் மேற்கொள்கிறார்.

தேசியபூங்கா பாதுகாக்கபட்ட பகுதி என்பதால் அரசின் அனுமதி பெற்று அவர்கள் உள்ளே செல்லுகிறார்கள். மலைச்சிங்கத்தை நெருங்கிஙக காண வேண்டும் என்பது தனது வாழ்நாள் கனவு என்கிறார் கேசி. இன்று அது நிறைவேறிவிடும் என்று உற்சாகப்படுத்துகிறார் ரெனே.

அவர்கள் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்கிறார்கள். மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்த பகுதி. பாதுகாப்பு வேலி அமைத்திருக்கிறார்கள். மான்கள் சுதந்திரமாக உலவுகின்றன. மலைச்சிங்கம் ஒன்றைத் தூரத்தில் காணுகிறார் கேசி ஆண்டர்சன். அந்தச் சிங்கம் அவரைப் பொருட்படுத்தவேயில்லை. பக்கத்தில் போய்ப் பார் என்று நண்பர் தூண்டுகிறார். அச்சத்தோடும் ஆசையோடும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார். பூமா திரும்பிப் பார்க்கிறது. அவர் மிக அருகில் சென்று அதைப் படமாக்குகிறார். அப்போதஅவர் அடையும் சந்தோஷம் நிகரற்றது.

ஒன்றிரண்டில்லை எட்டு மலைச்சிங்கங்களை அவர் காணுகிறார். இணைவிழைச்சிற்காகப் பெண் பூமாவைத் தேடி ஆண் பூமா துரத்திச் செல்வதையும் பூமாக்கள் ஒன்று கூடி வேட்டையாடுவதையும் படமாக்குகிறார். மனிதர்களின் வாழ்க்கையில் நடந்துள்ள புதிய மாற்றங்களைப் போல வனச்சிங்கத்தின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் உருவாகியுள்ளன. மலை சிங்கங்கள் எப்போதும் தனியே தான் வேட்டையாடும் என்பார்கள். ஆனால் ஒன்று சேர்ந்து வேட்டையாடுவதை முதன்முறையாகக் கேசி ஆண்டர்சன் காணுகிறார்.

ஆண் பூமாக்கள் ஒன்று சேர்ந்து கொன்ற மானைத் தின்று தீர்க்கின்றன. தனது பசிக்காகப் பெண் பூமா ஒன்று காத்துக் கொண்டேயிருக்கிறது. மீதம் வைத்துப் போன எலும்புகள் மட்டுமே பெண் பூமாவிற்குக் கிடைக்கின்றன. அதுவும் போனால் போகட்டும் என்பது போலவே ஆண் பூமாக்கள் அனுமதிக்கின்றன. தயங்கித் தயங்கி பெண் பூமா நிற்கும் காட்சி மனதை விட்டு அகலவில்லை.

ஒரு காட்சியில் பூமா நேரடியாகக் கேசி ஆண்டர்சனை வெறித்துப் பார்க்கிறது. அவரும் அதை ஆழ்ந்து நோக்குகிறார். கண்கள் சந்தித்துக் கொள்ளும் அந்த நிமிஷத்தினை ஆவணப்படம் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. அந்த விலங்கைப் பொறுத்தவரை தான் ஒரு இரை. எந்த நிமிஷத்திலும் தன்னைப் பூமா கொன்று விட முடியும். அந்த உண்மை கண்களை நேர் கொண்ட போது மனதில் தோன்றியது. ஆனால் பூமா அமைதியாகத் தன்னைக் கடந்து போய்விட்டது ஒரு கருணையே என்கிறார்

ஒரு காட்சியில் எங்கோ தொலைவில் பூமா நடந்துவருவது மானின் காதுகளைத் துடிக்க வைக்கிறது. அதை வைத்துத் தான் பூமாவின் வருகையைக் கண்டறிகிறார்கள். தன்னை மலைச்சிங்கம் கொன்றுவிடும் என அறிந்த போதும் மான் பதற்றம் அடைவதில்லை. அது தப்பிச் சென்றுவிட முடியும் என உறுதியாக நம்புகிறது.

பாதுகாப்பின்மை தான் உலகின் நிதர்சனம் என்றபோதும் தன் மீதான நம்பிக்கையே உறுதியான பாதுகாப்பு என்று மான் நினைப்பது போல அந்த காட்சி உள்ளது.

பசியும் காமமும் தான் விலங்குகளை இயக்குகின்றன. இரண்டும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. இரண்டும் வேட்டையாடுதலில் தான் சாத்தியமாகின்றன.

பாதுகாப்பு வேலியை ஒட்டி சப்தம் எழுப்பாமல் பதுங்கி பதுங்கி பூமா தனது இரையை நோக்கிச் செல்லுவது அதன் புத்திசாலித்தனத்தின் அடையாளமாகவே இருக்கிறது. கொல்வதற்காக மானைத்துரத்தும் போது அதன் கண்களில் ஒளிரும் உக்கிரம் அச்சமூட்டுகிறது.

மிக ஆபத்தமான பகுதியில் நெருக்கமாகச் சென்று படக்குழுவினர் தைரியமாகப் பூமாக்களைப் படமாக்கியிருக்கிறார்கள்.

போர்ஹெஸின் Inferno I, 32” கதையில் சிறுத்தையின் கனவில் தோன்றி கடவுள் சொல்வதாக எழுதியிருக்கிறார்

God spoke to it in a dream: You shall live and die in this prison, so that a man that I have knowledge of may see you a certain number of times and never forget you and put your figure and your symbol into a poem, which has its exact place in the weft of the universe. You suffer captivity, but you shall have given a word to the poem. In the dream, God illuminated the animal’s rude understanding and the animal grasped the reasons and accepted its fate, but when it awoke there was only an obscure resignation in it, a powerful ignorance, because the machine of the world is exceedingly complex for the simplicity of a savage beast.

இந்த ஆவணப்படத்தைக் காணும் போது போர்ஹெஸின் கதையே நினைவில் வந்தது

••

Categories
Archives
Calendar
November 2020
M T W T F S S
« Oct    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Subscribe

Enter your email address: