கலையில் கண்கள்

இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் கண்ணை வடிவமைப்பது முக்கியமானது. இந்தியக் கலைஞர்கள் கண்ணின் வழியே உணர்ச்சிகளை மிகத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள். இந்திய இலக்கியத்தில் கண்களைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் ஏராளம். கண்களே உணர்ச்சிகளின் ஜன்னலாக இருக்கிறது.

இந்திய ஓவியர்கள் கண்களை எப்படி வரைந்தார்கள். எத்தனை விதமான வடிவங்களில் கண்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. கடவுளின் கண் எப்படியிருக்க வேண்டும் என்பது போல இந்தியக் கலையுலகில் கண்ணின் முக்கியத்துவத்தை விவரிக்கும் “The Eye In Art” என்ற புத்தகத்தைப் பப்ளிகேஷன் டிவிசன் வெளியிட்டிருக்கிறது.

மிகச்சிறந்த இந்த நூலை ஐம்பது சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்கிறார்கள். 250 ரூபாயில் மிக முக்கியமான புத்தகம் கிடைக்கிறது. ஓவியம் பயிலும் மாணவர்கள் மற்றும் கலையின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமாகும்

An Andalusian Dog என்ற லூயி புனுவலின் திரைப்படத்தில் கண்ணை ஒரு பிளேடினைக் கொண்டு குறுக்காக வெட்டும் காட்சியிருக்கிறது. சர்ரியலிசத்தின் பாதிப்பால் உருவான காட்சியது. நம் பார்வை இறுக்கமடைந்து வரம்புகளுக்குள் உட்பட்டிருக்கிறது. அதை மாற்றியமைக்க வேண்டும். புதிய அழகியலை உருவாக்கக் கண்ணை விஸ்தாரணம் செய்ய வேண்டும் என்கிறார்கள்

ஓவியர் டாலி கலை இயக்குநராகப் பணியாற்றிய ஹிட்ச்காக் படத்தில் கண்ணின் விசித்திரமான வடிவங்களைக் கொண்டு ஒரு அரங்கினை உருவாக்கியிருப்பார்.

மேற்குலகம் கண்களைச் சித்தரிக்கும் விதமும் இந்தியக் கலைகள் கண்களைச் சித்தரிக்கும் விதமும் மாறுபட்டவை. குறிப்பாக இந்திய ஓவியங்களில் காணப்படும் வெட்கம். சாந்தம். கருணை, தனிமையை மேற்கத்திய ஓவியங்களில் காணமுடியாது. பண்டைய எகிப்திய கோவில்களில் அறிவின் பாதுகாவலராகப் பயன்படுத்தப்படும் ஹோரஸின் கண் மிகவும் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகும்.

ராஜேந்திர பாஜ்பாயின் “The Eye In Art” புத்தகம் ஒரு முன்னோடியான ஆராய்ச்சி நூலாகும். இதில் தொகுப்பில் பன்னிரண்டு அத்தியாயங்கள் உள்ளன. இந்தியாவின் கிளாசிக்கல் கால ஓவியர்கள் மேற்கொண்ட முயற்சிகளை மதிப்பிடும் அவர் அஜந்தா, ராஜஸ்தானி மற்றும் பஹாரி ஓவியங்களில் கண்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தைச் சிறப்பாக விளக்குகிறார்.

நவரசங்களையும் கண்ணின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகப் புத்தரின் கண்களைப் பாருங்கள். அதில் தான் எத்தனை சாந்தம். எவ்வளவு ஞானம். அஜந்தா ஓவியங்களில் காணப்படும் பெண்களின் கண்களையும் வெண்கலச் சிற்பங்களில் காணப்படும் கண்ணின் அழகினையும் காணும் போது இதற்கு நிகரேயில்லை என்றே தோன்றும்.

ராஜஸ்தானிய ஓவியம் ஒன்றில் யானையின் கண்களை அவ்வளவு அழகாக வரைந்திருப்பதைக் கண்டேன். உயிரோட்டமான அந்தக் கண்களே ஓவியத்தை பெரும் கலைப்படைப்பாக மாற்றுகின்றன. மீன் போன்ற கண்கள் தாமரை போன்ற கண்கள். வில்லின் வடிவத்தை ஒத்த கண்கள் போன்றவை மரபாக ஓவியங்களில் சித்தரிக்கப்படுகின்றன. Vishnudharmottar எனும் சித்திர சூத்திரம் கண்கள் எவ்வாறு வரையப்பட வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக விளக்குகிறது

மேற்கத்திய மற்றும் கிழக்கு மரபுகளில் கண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பதுடன் ஒப்பிட்டு இந்தியக்கலைகளை ஆய்வு செய்திருக்கிறார். கலைவரலாற்றில் மிகுந்த தேர்ச்சியும் தீவிர ஈடுபாடும் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்

லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் எழுதிய Seiobo There Below நாவல் 2015ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த கலைஞர்களின் கலைத்திறன் பற்றியது இந்நாவல். பல்வேறு துண்டுகளால் ஒன்றிணைந்த வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

இந்நாவலில் ஜப்பானிலுள்ள புத்த கோவில் ஒன்றில் பழங்காலப் புத்தரின் சிலையை எப்படி மறுசீரமைப்பு செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பகுதி எழுதியிருக்கிறார்.

ஜப்பானின் ஜெங்கன்-ஜி கோயிலில் உள்ள அமிதா புத்தரின் மரச் சிலை 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. இந்தச் சிலையின் சிறப்புப் பாதித் திறந்த விழிகளுடன் உள்ள புத்தரின் தோற்றம். கால ஒட்டத்தில் இந்தச் சிலை சிதைந்து வருவதை உணர்ந்த மடாதிபதி சிலையை அங்கிருந்து அகற்றி முறையாக மறுசீரமைப்புச் செய்ய முற்படுகிறார்.

இதற்காகப் பீடத்திலிருந்து புத்தர் சிலையை அகற்றும் சடங்கு நான்கு துறவிகளால் ரகசியமாகச் செய்யப்படுகிறது,

புஜிமோரி என்பவரால் நடத்தப்படும் மறுசீரமைப்பு பட்டறைக்குச் சிலையைக் கொண்டு போகிறார்கள். அங்கே மறுபடியும் உரியச் சடங்குகள் செய்யப்பட்டுச் சிலை சுத்தம் செய்யப்படுகிறது.

பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்று சேர்ந்து மறுசீரமைப்பு செய்கிறார்கள்.

சிலையின் பாதி மூடிய கண்களை மறுசீரமைப்பு செய்யும் வேலை கொய்னோமி ஷுன்சோ என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் கண்களைச் சரிசெய்வதற்குக் கவனமாக வேலை செய்கிறார். சிலையின் சிறப்பு அந்தக் கண்கள் தான் என்பதால் புஜிமோரி அடிக்கடி அந்தப் பணியைப் பார்வையிட்டுக் கவனமாக வேலை செய்யும்படி கடிந்து கொள்கிறார்

முடிவில் ஒரு நாள் கண்கள் சீரமைப்பு செய்யப்பட்டு விட்டதாகக் கொய்னோமி ஒப்படைக்கிறார். புஜிமோரி அவரது கலைத்திறன் கண்டு வியந்து போகிறார்.

மற்ற பணிகள் முடிந்து சிலை மீண்டும் மடாலயத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்போது. புத்தர் சிலையை லாரி ஒன்றில் ஏற்றி புத்த கோவிலுக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கே புத்தர் சிலையை வரவேற்க பொதுச் சடங்கு நடைபெறுகிறது

மக்கள் ஒன்று கூடி சடங்குகளை நிகழ்த்துகிறார்கள். சடங்கின் உச்சக்கட்டத்தில், நின்று, மண்டியிட்டு, கோஷமிட்டு, பிரார்த்தனை செய்தபின், அமிதா புத்தர் மீண்டும் தெய்வச்சிலையாகிறார்.. கடைசியாக,கூட்டம் கலைந்துபோகிறது, யாருமில்லாத கோவிலில் மடாதிபதி தனியாகச் சோர்ந்து போய்ப் படிகளில் அமர்ந்தபடியே, வலம் வரும் ஒரு எறும்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

புத்தர் சிலை வெளியேறிச் செல்வதும் மடாலயம் திரும்புவதுமான நிகழ்வு காலமாற்றத்தில் ஜப்பான் அடைந்துள்ள நிலையின் குறியீடு போலவே உள்ளது. புத்தரின் கண்களை மறுசீரமைப்பு செய்யும் கொய்னோமி அடையும் உணர்வுகளும் மடாதிபதி முடிவில் யாருமற்ற மடாலயத்தில் எறும்பைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதும் ஒரே மனநிலை தான். வேறுவேறு விதமாக வெளிப்படுகிறது. இப்போது அது பழைய புத்தர் சிலை தான். ஆனால் அது புதுப்பிறவி எடுத்துள்ளது. ஜப்பானியப் பண்பாட்டின் அடையாளமாகவே அந்தச் சிலை முன்வைக்கப்படுகிறது. கலையின் வழியாக அபூர்வமான தருணங்கள், நிகழ்வுகள் உருவாவதையே லாஸ்லோ இந்நாவலில் முதன்மைப்படுத்தியிருக்கிறார்

பாதித் திறந்த புத்தரின் கண்கள் என்பது ஒரு குறியீடு. அதைப் புரிந்து கொள்வதற்கு ராஜேந்திர பாஜ்பாயின் புத்தகம் போன்ற கலை ஆய்வுகளை வாசிப்பது அவசியமானது.

••

0Shares
0