முதல் இந்தியச் சிற்பம்

இந்தியாவின் மிகப்பெரிய பதிப்பாளர் சாகித்ய அகாதமி. 24 மொழிகளில் புத்தகங்களை வெளியிடும் ஒரே நிறுவனம் சாகித்ய அகாதமி மட்டுமே. அரசு நிதி உதவியுடன் செயல்படும் இந்தப் பதிப்பகம் மலிவு விலையில் மிகச்சிறப்பான நூல்களை வெளியிட்டுவருகிறது

சாகித்ய அகாதமி வெளியிடும் புத்தகங்களின் உள் அட்டையில் ஒரு சிற்பத்தின் படம் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது எழுதும் கலையைச் சித்தரிக்கும் முதல் இந்தியச் சிற்பமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு முறை சாகித்ய அகாதமி நூலைக் கையில் எடுக்கும் போதும் இந்தச் சிற்பத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். எத்தனை அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. சிற்பத்தில் இருப்பவர்களின் அமர்ந்த கோலங்களில் தான் எத்தனை வேறுபாடுகள். நளினங்கள். காலை மடக்கி அமர்ந்திருப்பரின் பாதமும் அடிவயிற்றுமடிப்பும் சாமரம் வீசும் பெண்களின் கண்களும் அழகாக உள்ளன.

நாகார்ஜுனகொண்டா (Nagarunakonda) எனப்படும் நாகர் மலை ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கப் பௌத்த ஸ்தலமாகும். மகாயான பௌத்தத்தைப் பரப்பிய பௌத்த அறிஞர் நாகார்ஜுனரின் பெயரால் நாகார்ஜுனகொண்டா என அழைக்கப்படுகிறது.

அங்கே சென்றிருக்கிறேன். தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கிருந்த பௌத்த விகாரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் தங்கிப் பயின்றிருக்கிறார்கள். முக்கியமான பௌத்த கல்வி நிலையமாக செயல்பட்டிருக்கிறது.

சாதவாகன அரசின் வழிவந்த இச்சவாகு மன்னர்களின் தலைநகராக நாகார்ஜுனகொண்டா விளங்கியது. இச்சவாகு மன்னர்களால் தான் இங்கே பௌத்த விகாரைகள் கட்டப்பட்டது. இடிபாடுகளாக உள்ள இந்தத் தொல்லியல் நினைவுச்சின்னத்திலிருந்த கலைப்பொருட்களைத் தற்போது டெல்லி ம்யூசியத்தில் பாதுகாத்து வருகிறார்கள்

இந்தச் சிற்பம் புத்தரின் பிறப்பு குறித்த கனவை விவரிக்கிறது. அரசி மாயாதேவி கண்ட கனவினை மன்னர் சுத்தோதனருக்கு மூன்று நிமித்திகர்கள் பலன் சொல்லுகிறார்கள் அதை ஒரு எழுத்தர் குறிப்பாக எழுதிக் கொண்டிருப்பதைச் சிற்பம் சித்தரிக்கிறது.

எழுதும் கலையைச் சித்தரிக்கும் தொன்மையான சிற்பங்கள் ஓவியம் மிக குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதில் இதுவே மிகப்பழமையானது. இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது.

கனவிற்குப் பலன் சொல்லும் நிமித்திகர்களை இந்தச் சிற்பத்தில் காணுகிறோம். கனவிற்குப் பலன் சொல்வதை ஒரு கலையாகப் பயின்றிருக்கிறார்கள். நிமித்திகர்களின் ஆலோசனைகளைக் கேட்பது அந்நாளைய வழக்கம்.

சிற்பத்தில் நம்மை வசீகரிப்பது அவர்கள் அமர்ந்துள்ள விதம் மற்றும் கால்விரல்கள் கூடத் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ள நுண்மை. சாமரம் வீசும் பெண்கள். நிமித்திகர்களின் முகபாவம். மற்றும் கைமுத்திரை. அவர்களின் தலையலங்காரம். எழுதுகிற நபர் காலை மடித்து உட்கார்ந்துள்ள விதம் மற்றும் அவரது கையிலுள்ள எழுத்தாணி, அவரது முகபாவம் என மிக அற்புதமான சிற்பமாக உள்ளது

சித்ரா பௌர்ணமி நாளில் புத்தரின் தாயார் ராணி மாயா ஒரு விசித்திரமான கனவு கண்டார். கனவில் ஒரு வெள்ளை யானை தோன்றி அவளது உடலின் வலது பக்கத்தைத் தொட்டு அவளுக்குள் சென்று மறைந்தது. மறுநாள் மாயா இந்தக் கனவைப் பற்றித் தன் தன் கணவரிடம் சொன்னபோது, அவர் நிமித்திகர்களைக் கலந்தாலோசிக்கச் சென்றார். அவர்கள் இந்தக் கனவிற்கு விளக்கம் தந்தார்கள். அதன்படி ராணி ஒரு மகனாகக் கருத்தரித்துள்ளார். அந்த மகன் பேரரசனாகவே அல்லது ஒப்பற்ற ஞானியாகவோ வருவான் என்றார்கள். இவ்வாறு தான் புத்தர் பிறந்தார் என்று புத்த ஜாதகக் கதை சொல்கிறது. நிமித்திகர்களின் பலனை எழுதிக் கொள்ளுபவர் முகத்தைப் பாருங்கள். அவரது தோற்றமே விசித்திரமாக உள்ளது. எழுத்தும் படிப்பும் அன்றைக்கே முக்கியமாக இருந்திருக்கிறது என்பதையே இந்தச் சிற்பம் சித்தரிக்கிறது.

மாயாவின் கனவினைச் சித்தரிக்கும் இன்னொரு சிற்பத்தையும் பார்த்திருக்கிறேன். பேரழகான சிற்பமது.

விசித்திரமான கனவுகள் தோன்றுவதும் அதற்கு விளக்கம் தருவதும் ஜாதகக் கதைகளில் நிறைய இடம்பெற்றுள்ளது. புத்தரும் நிறையக் கனவுகளைக் காணுகிறார். புத்தரின் பிறப்பிற்கு மட்டுமின்றி மகாவீரரின் பிறப்பிற்கு முன்பாகவும் அவரது தாய் ராணி த்ரிஷாலாவின் கனவில் ஒரு வெள்ளை யானை தோன்றுகிறது.

அன்னை த்ரிஷாலாவின் பதினான்கு சுப கனவுகளாக அவை விவரிக்கப்படுகின்றன. த்ரிஷாலா பார்த்த முதல் கனவில் வெள்ளையானை வருகிறது. த்ரிஷாலா பார்த்த இரண்டாவது கனவு காளை பற்றியது. அதுவும் வெண்ணிறமானதே. மூன்றாவது கனவில் சிங்கம் தோன்றுகிறது. . இந்தச் சிங்கம் தன்னை நோக்கி இறங்கி வந்து தனது வாய்க்குள் நுழைவதை ராணி காண்கிறாள் . இது போலப் பதினான்கு விதமான கனவுகளை ராணி காணுகிறார்.

வெள்ளையானை ஒரு பெண்ணை மூன்றுமுறை வலம் வந்து அவளது உடலினுள் மறைந்துவிடுவது ஒரு தனித்த சிறுகதை போலவே உள்ளது. வெள்ளையானையை மகத்துவத்தின் குறியீடாகப் பௌத்தம் சொல்கிறது ஆனால் சந்தோஷத்தின் உச்சம் தான் வெள்ளையானை என்று எனக்குத் தோன்றுகிறது.

புத்தர் தனது ஐந்து கனவுகளை நினைவு கூர்ந்து அவற்றை பதிவு செய்திருக்கிறார்.

திபேத்திய ஒவியம் ஒன்றில் பறக்கும் வெள்ளையானை ஒன்றைக் கண்டிருக்கிறேன். யானையின் பறத்தல் மிக வசீகரமானது. வானில் அது ஒரு விசித்திமான பறவையைப் போலவே பறக்கிறது.

நாகார்ஜுனகொண்டா பற்றிப் பிலிம் டிவிசன் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம் மிகச்சிறப்பானது. இதன் பிரதி அத்தனை தரமாகயில்லை. ஆனால் தகவல்கள் சொல்லப்படும் விதமும் காட்சிகளின் கோணமும் சிறப்பாக உள்ளன. குறிப்பாக இசை இந்த ஆவணப்படத்தின் தனிச்சிறப்பு என்பேன்.

0Shares
0