குற்றவுணர்வின் மூன்று கிளைவழிகள்

A TALE OF THREE SISTERS என்ற துருக்கிப் படத்தைப் பார்த்தேன். 2019ம் ஆண்டு வெளியானது. சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகச்சிறப்பான ஒளிப்பதிவு கொண்ட படமிது. துருக்கியின் புகழ்பெற்ற இயக்குநரான நூரி பில்கே சிலானின் படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நிலக்காட்சிகளை தேர்ந்த ஓவியரைப் போலக் கையாளக்கூடியவர். ஆன்டன் செகாவின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அவரது கதைகளிலிருந்தே தனது படத்திற்கான மையக்கருவை உருவாக்குகிறவர்.

சிலானின் படங்களில் ஒளிப்பதிவு அபாரமாகயிருக்கும். குறிப்பாக இரவுக்காட்சிகளைக் குறைந்த ஒளியில் அவர் சித்தரிக்கும் விதம் ரெம்பிராண்டினை நினைவு கொள்வதாகயிருக்கும். ONCE UPON A TIME IN ANATOLIA படத்தில் வாகனங்களின் விளக்கொளிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதும். வீட்டில் சந்திக்கும் பெண் கைவிளக்கேந்தி வரும் போது அவள் ஒரு விண்ணுலகத் தேவதை போலத் தோற்றம் அளிப்பதும் நிகரற்ற காட்சிகள்.

இந்தப் படத்தின் இயக்குநர் எமின் ஆல்பர் நூரியின் ரசிகர். கல்லூரி நாட்கள் துவங்கி அவரது படங்களை ஆழ்ந்து ரசித்துவந்தவர். அந்தப் பாதிப்பினை இப்படத்தில் துல்லியமாகக் காணமுடிகிறது. குறிப்பாகக் கைவிளக்கேந்தியபடியே இரவு நடந்து செல்லுபவர்களின் காட்சியும். பாறை ஒன்றின் அடியில் நெருப்பு மூட்டி அவர்கள் ஒன்றாகக் குடிக்கும் காட்சியும் உறைபனியின் ஊடாக ஊர் சித்தரிக்கப்படும் விதமும். வீட்டினுள் கசியும் மஞ்சள் ஒளியும் அசாத்தியமானது. ஒளிப்பதிவாளர் எம்ரே எர்க்மென் வண்ணங்களைத் தேர்ந்த ஓவியரைப் போலவே பயன்படுத்தியிருக்கிறார். நிலப்பரப்பை இத்தனை அழகுடன் திரையில் காணுவதும் மிகுந்த நெருக்கத்தை உருவாக்குகிறது.

THREE SISTERS என்ற தலைப்பைக் கேட்டவுடன் ஆன்டன் செகாவின் நாடகம் தான் நினைவிற்கு வந்தது. அதற்கும் இந்தப் படத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் மூன்று சகோதரிகளின் வாழ்க்கையை முன்வைத்துச் செகாவ் எழுதிய நாடகம் போல மூன்று சகோதரிகளின் வாழ்க்கை நெருக்கடிகளை, அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பைப் படம் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

Cries and Whispers என்ற பெர்க்மெனின் படமும் மூன்று சகோதரிகளைப் பற்றியதே. பெண்களின் அகவுலகினையும் மனஉணர்வுகளையும் பெர்க்மென் போல சித்தரித்த இயக்குநரைக் காண இயலாது. ஒருவகையில் இந்த துருக்கி படத்திற்கும் Cries and Whispers என்ற தலைப்பு பொருத்தமாகவே தோன்றுகிறது.

நூரியின் Three Monkeys, Once Upon a Time in Anatolia, Winter Sleep மற்றும் The Wild Pear Tree 1980 போன்ற படங்களில் கதையை விடவும் அது சொல்லப்படும் விதம் தான் சிறப்பானது. பனி உருகுவது போல இயல்பாகக் கதை நகர்ந்து செல்லும். எதிர்பாராத திருப்பங்களை விடவும் ஆழமான நகர்வுகளையே அவர் முதன்மையாகக் கொண்டிருப்பார். அது போலேவே தான் எமின் ஆல்பரும் படத்தை இயக்கியிருக்கிறார்.

1980களில் வடகிழக்கு துருக்கியின் மலைப்பிரதேச கிராமம் ஒன்றை நோக்கி ஒரு கார் வருகிறது. பதிமூன்று வயதான ஹவ்வா தனது இளைய சகோதரனின் மரணத்தைத் தொடர்ந்து தனது வீட்டிற்குத் திரும்பி வருகிறாள். அவள் கையில் ஒரு பெட்டியோடு பதற்றமாகக் காரில் அமர்ந்திருக்கிறாள். தந்தை அவளை வரவேற்கிறார். துக்க நிகழ்வு காரணமாக வீடு திரும்பிய அவளை மீண்டும் படிக்க அனுப்பி வைக்காமல் வீட்டுவேலைக்கு அனுப்பிவிட நினைக்கிறார் தந்தை.

அவளின் மூத்த சகோதரி ரெய்ஹான் திருமணமாகி கணவருடன் வாழுகிறாள். கணவன் ஆடுமேய்க்கிறான். அவர்களுக்கு ஒரு குழந்தையிருக்கிறது. நகரிலுள்ள வசதியான வீடுகளுக்கு இவளைப் போல வீட்டோடு தங்கி வேலை செய்யும் பணிப்பெண்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காக ரெய்ஹான், நூர்ஹான் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை ஆகவே சண்டையிட்டுத் திரும்பி வந்துவிடுகிறார்கள்.

வீட்டிலிருக்கும் அக்கா, அவளது கணவன். கைக்குழந்தை. வயதான தந்தை. கோவித்துக் கொண்டு வரும் தங்கை படிப்பை முடித்து வரும் இளையவள் என அந்தச் சிறிய குடும்பம் அழகாகச் சித்தரிக்கப்படுகிறது. நூர்ஹான் வந்தவுடன் அவளுக்கும் ரெய்ஹானுக்கும் சண்டை துவங்கிவிடுகிறது. துரத்தி அடிக்க ஓடுகிறாள் ரெய்ஹான். தந்தை அவளைத் தடுத்து நிறுத்துகிறார். அன்றிரவே அந்தக் கோபம் வடிந்து நூர்ஹான் அக்காவிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவர்கள் நெருக்கமாகிவிடுகிறார்கள். எவ்வளவு அழகான காட்சியது.

வீட்டுவேலையிலிருந்து சண்டைபோட்டுக் கொண்டு வந்த நூர்ஹான் தனக்கு அந்த டாக்டரின் பிள்ளைகளைப் பிடிக்கவில்லை என்று திட்டுகிறாள். அதே வீட்டில் தான் ரெய்ஹானும் வேலைக்கு இருந்திருக்கிறாள் என்பதால் அவள் அதை ஏற்கவில்லை.

ரெய்ஹானின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிப்படும் விதமும் அவளது கடந்த கால நினைவுகளும் படத்தில் அழகாக விரிவு கொள்கிறது.

வீடு திரும்பிய நூர்ஹான் உடல்நலமற்று போகிறாள். பனிக்காலம் துவங்கி பாதை தெரியாமல் உறைபனி நிரம்பிவிடுகிறது. ஊரின் சாலைகள் மூடப்பட்டுவிடுகின்றன. இதனால் மருத்துவரை அழைத்துவரக்கூட வெளியே போக முடியவில்லை. இன்னொரு பக்கம் ரெய்ஹானின் வாழ்க்கை திசைமாற்றம் கொள்கிறது.

படத்தில் வரும் தந்தை அதிகம் பேசுவதில்லை. ஆனால் அவர் பெண்களுடன் கதை பேசுகிறார். விளையாட்டு காட்டுகிறார். அவரது நேசம் மொழியற்றது. அவருடன் மருமகன் சண்டையிடும் போது அவர் அடையும் ஆத்திரமும், டாக்டரை வரவேற்று உபசரிக்கும் விதமும் சிறப்பான வெளிப்பாடாகும்

மூன்று சகோதரிகளுக்குள் நடக்கும் உரையாடல் வெகு நிஜமாக எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் ரெய்ஹான் தனது கடந்தகாலத் தவறினைப் பற்றிச் சொல்வதும் அதை அறிந்து கொண்ட இளையவள் அதிர்ச்சியடைவதும் தேர்ந்த காட்சியாக உருவாக்கப்பட்டிருக்கிறது

அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் பனிக்காலம் துவங்குகிறது. அதன்பிறகு கதையின் போக்கும் பனிபோலவே உறைந்துவிடுகிறது. தானே அது உருகியோடுவது போல நிகழ்வுகள் நடக்கின்றன. அதுவும் குற்றமனதோடு வீடு திரும்பும் கணவன் வெய்செலை ரெய்ஹான் சந்தித்துப் பேசும் போது அவள் முகத்தில் வெளிப்படும் வெறுப்பு அபாரம்.

வெய்செல் படிப்பறிவில்லாதவன். எப்படியாவது நகரத்திற்குப் போய் வாழ வேண்டும் என்று நினைப்பவன். முட்டாள்தனமாகப் பேசக்கூடியவன். தன்னை ஏமாற்றி ரெய்ஹான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. கோபத்தில் நெருப்பை அவன் கிண்டிவிடும் காட்சியில் அவனது மனக்கொதிப்பு நன்றாக வெளிப்படுகிறது.

மூவரில் தனித்துவமிக்கவள் நூர்ஹான், அவளது மனம் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. தான் செய்தது சரியா தவறா என்று தன்னைக் குழப்பிக் கொள்கிறாள். தன்னை மன்னித்து அழைத்துக் கொண்டு போய்விடும்படியாக அவள் நெகாட்டியை கேட்கிறாள். தான் அவளை மன்னித்தாலும் தனது மனைவி அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ளமாட்டார் என்கிறார். அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நோயாளியாகிறாள். அந்தக் குற்றவுணர்விலிருந்து அவளால் மீள முடியவில்லை

ஹவ்வா புதிய வேலைக்குப் போவதற்காகத் தயாராக இருக்கிறாள். அவளுக்கு வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை. ஆனால் அவளுக்கு உலகம் தெரியவில்லை. அவள் நினைப்பது போல உலகம் அன்பாக நடத்தாது என்பதை மூத்த சகோதரிகள் அவளுக்கு உணர்த்த விரும்புகிறார்கள். ஆனால் ஹவ்வா அதைப் புரிந்து கொள்ளவில்லை.

மூவரில் ரெய்ஹான் விரும்பித் தவறுகள் செய்கிறாள். அதிலிருந்து வெளிவந்தபோதும் கடந்தகாலத்தின் நிழல் அவளைவிடுவதில்லை. அவளை இயக்குவது அவளது உடல். அதன் இச்சைகள் மட்டுமே. ஆனால் ஒரு பெண் துறவியைப் போலவே நூர்ஹான் நடந்து கொள்கிறாள். பாலுறவை அருவருப்பாகக் கருதுகிறாள். முள் முறிந்து போனது போலச் சிறு நிகழ்வு அவள் மனதை கசப்பாக்கிவிடுகிறது. இதே போலவே ஹவ்வா ஒரு விசித்திர கனவு காணுகிறாள். அதைப் பற்றி ரெய்ஹான் விசாரிக்கும் போது பேதைப் பெண்ணுக்கு உள் அர்த்தங்கள் புரிவதேயில்லை

டாக்டர் நெகாட்டி ஏன் இரவில் அங்கே தங்க நினைக்கிறார். அவர் அந்தப் பெண்களின் தந்தையோடு கூடிக்குடிக்கும் போது நகரவாழ்க்கையை விடவும் இப்படி மலைக்கிராமம் ஒன்றில் ஆடுமேய்க்கிறவனாக இருப்பது மேலானது என்கிறார். வெய்செலுடன் சண்டைபோட்டதற்காக மன்னிப்பு கேட்கிறார். அவரையும் குற்றவுணர்வு தான் வழிநடத்துகிறது

உண்மையில் குற்றவுணர்வின் மூன்று கிளைவழிகள் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்வது போன்றே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தேர்ந்த ஒளிப்பதிவு சிறந்த இசை, சிறப்பான நடிப்பு. நிலவெளியின் பிரம்மாண்டம் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப்படத்தை மறக்கமுடியாத அனுபவமாக்குகிறது.

0Shares
0