உலகெங்கும் சூரியகாந்திப்பூக்களைக் காத்திருப்பின் அடையாளமாகவே கருதுகிறார்கள். ஆனால் ஓவியர் வான்கோ அவற்றைப் புரிந்து கொள்ளப்படாத சந்தோஷத்தின் வடிவமாகக் காணுகிறார்.

அவர் வரைந்த சூரியகாந்திப்பூக்களின் ஓவியங்கள் லண்டன், டோக்கியோ, ம்யூனிச், ஆம்ஸ்டர்டாம், பிலடெல்பியா ஆகிய ஐந்து நகரங்களின் கலைக்கூடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வான்கோவின் சூரியகாந்திப்பூக்கள் பற்றி Sunflowers (2021) என ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. டேவிட் பிக்கர்ஸ்டாஃப் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக வான்கோ பற்றி இரண்டு ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார்
இந்தப் புதிய ஆவணப்படத்தில் பிக்கர்ஸ்டாஃப் சூரியகாந்திப் பூக்கள் ஓவியத்தை வான்கோ வரைந்துள்ள விதம் மற்றும் தனித்துவத்தை விவரிப்பதுடன் இந்த ஓவியத்தின் பின்னுள்ள அறியப்படாத உண்மைகளையும் ஆராய்ந்து விவரிக்கிறார்

ஐந்து நகரங்கள் ஐந்து சூரியகாந்திப்பூக்கள். அதைத்தேடிச் செல்லும் பயணம் என்பதே வசீகரமாகவுள்ளது. வான்கோவின் ஓவியங்களை அறிந்தவர்களுக்கு அவர் சூரியகாந்திப்பூக்கள் ஓவியத்தில் பயன்படுத்தியுள்ள மஞ்சள் வண்ணமும் பதினைந்து பூக்களை வரைந்துள்ள விதமும் அசாத்தியமானது என்பது புரியும்.
வான்கோ தனது நண்பரும் ஓவியருமான பால் காகினின் வருகைக்காகக் காத்திருந்த நாட்களில் இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார். நீண்ட தனிமையும் குழப்பமான எண்ணங்களும் படைப்பாற்றலின் உச்சமும் கொண்ட அந்த நாட்களில் அவருக்குள்ளிருந்த மனக்கொந்தளிப்பின் வடிவமாகவே சூரியகாந்திப்பூக்கள் வரையப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் குறித்து வான்கோ தனது கடிதம் ஒன்றில் எழுதியிருக்கிறார்.
உலகெங்கும் ஆயிரமாயிரம் சூரியகாந்திப்பூக்கள் தோன்றுகின்றன. வீழ்ந்து அழிகின்றன. ஆனால் வான்கோவின் சூரியகாந்திப்பூக்கள் காலத்தைத் தாண்டி ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்த ஓவியங்களை ஐந்து சகோதரிகளைப் போலவே கருதுகிறார்கள்.
ஆவணப்படத்தைக் காணும் போது எனக்கும் ஐந்து வேறுவேறு தேசங்களில் வசிக்கும் சகோதரிகளை ஒருவர் தேடிச் சென்று காண்பது போன்ற அனுபவமே ஏற்பட்டது.

சூரியகாந்திப்பூக்கள் ஓவியத்தில் வான்கோ நிகழ்த்தியிருப்பது ஒரு மாயாஜாலம். அதுவரை வண்ணங்களைப் பயன்படுத்தும் போது பின்புலமும் உருவத்தின் வண்ணமும் ஒன்றாக இருக்கக்கூடாது என்பார்கள். ஆனால் வான்கோ அதைப் பொருட்படுத்தவேயில்லை. அவர் மஞ்சளைத் தனது தீவிர மனநிலையின் குறியீடாக மாற்றியிருக்கிறார்
இந்த ஆவணப்படத்தில் அருங்காட்சியக இயக்குநர்கள் மற்றும் கலை வரலாற்றாசிரியர்கள் கண்ணோட்டத்தில் ஓவியங்களின் சிறப்பு விவரிக்கப்படுகிறது.
பிரான்சில் வசித்த வான்கோ ஏன் சூரியகாந்திப்பூக்களை வரைவதற்குத் தேர்வு செய்தார் என்பதற்குக் காரணம் அவரது வறுமையான சூழலே. அவர் மாடல்களுக்குப் பணம் கொடுத்து வரைய இயலாதவராக இருந்தார் ஆகவே இயற்கையிடம் தஞ்சம் புகுந்தார்.
சூரியகாந்திப்பூக்களின் வியத்தகு அழகினையும் உயரமான தண்டுகள் மற்றும் பெரிய முகத்தையும் ஆழ்ந்து ரசித்து ஓவியமாக வரைந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.
டோக்கியோவிலுள்ள சூரியகாந்தி ஓவியம் கொயாடா யமமோட்டோவால் வாங்கப்பட்டது. அவர் 20,000 யென்கள் கொடுத்து இந்த ஓவியத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்.
1920ல் சூரியகாந்தி ஓவியம் பிரான்சிலிருந்து கப்பல் மூலம் ஜப்பானை வந்தடைந்தது. 1921 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஓவியம் கண்காட்சியில் இடம்பெற்றது. இரண்டாம் உலகப் போரின் கடைசி ஆண்டுகளில் நடந்த கடுமையான குண்டுவெடிப்புகளின் போது யமமோட்டோ ஒசாகாவில் உள்ள ஒரு வங்கியிடம் இந்த ஓவியத்தைப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் வங்கி இதை ஏற்க மறுத்துவிட்டது.
ஆகவே தனது இல்லத்தின் சுவரில் இந்த ஓவியத்தை வைத்திருந்தார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத்தின் இறுதி விமானத் தாக்குதலில் யமமோட்டோவின் வீடு எரிந்து சாம்பலானது.

டச்சு இலக்கியத்தில், சூரியகாந்திப் பூக்கள் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. சூரியகாந்திப் பூக்களின் பல்வேறு தோற்றங்களை வான்கோ வரைந்திருக்கிறார். இயற்கையை அவர் அப்படியே நகலெடுக்கவில்லை. மாறாக உணர்ச்சியைத் தீவிரமாக வெளிப்படுத்தவே மஞ்சள் வண்ணத்தை உக்கிரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
தன் வாழ்நாளில் வான்கோ 12 சூரியகாந்திப் பூக்கள் ஓவியங்களை வரைந்திருக்கிறார். இதில். 1888 – 1889 இல் ஆர்லஸில் இருந்தபோது அவர் வரைந்த ஏழு ஓவியங்கள் தனியாகக் குறிப்பிடப்படுகின்றன. மற்ற ஐந்து ஓவியங்களை 1887 இல் பாரீஸில் இருந்தபோது வரைந்திருக்கிறார்.
வான்கோ 1888 இல் தியோவின் பாரிஸ் வீட்டிலிருந்து தெற்கு பிரான்சில் உள்ள ஆர்லஸுக்குக் குடிபெயர்ந்தார், அங்கு அவர் மஞ்சள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். வசந்த காலத்தில், அவர் ப்ரோவென்ஸின் வசீகர நிலப்பரப்புகளையும், அருகிலுள்ள செயிண்ட்ஸ்-மேரி-டி-லா-மெரில் உள்ள கடற்பரப்புகளையும் வரைந்து வந்தார். வான்கோவின் கடிதங்களை வாசிக்கும் போது அவர் எவ்வளவு ஆழ்ந்து பைபிளை வாசித்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
வான்கோ. சூரியகாந்திப்பூக்களின் இதழ்களை மஞ்சள் தீப்பிழம்புகள் போல வரைந்திருக்கிறார் தரையில் முளைத்துள்ள சூரியனைப் போலவே சூரியகாந்திப்பூக்களை அவர் கருதியிருக்கக் கூடும்.
சப்தமில்லாத ஓலம் ஒன்றைச் சூரியகாந்திப் பூக்கள் எழுப்புகின்றன. அவற்றை வான்கோ காது கொடுத்துக் கேட்டிருக்கிறார் எனலாம். வான்கோவின் சூரியகாந்திப்பூக்களிடம் நாம் மகிழ்ச்சியை மட்டும் காணமுடிவதில்லை. துயரத்தை மீளமுடியாத வீழ்ச்சியையும் அறிந்து கொள்கிறோம். சூரியகாந்திப் பூக்களைக் கொண்ட குவளைப் போன்றதே தனது நாட்கள் என வான்கோ கருதியிருக்கிறார்.
பிலடெல்பியா ம்யூசியத்திலுள்ள வான்கோவின் ஓவியத்தில் பன்னிரண்டு சூரியகாந்திப் பூக்கள் காணப்படுகின்றன. அவை, வளர்ச்சி மற்றும் சிதைவின் பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றன. எந்த இரண்டு சூரியகாந்திப்பூக்களும் ஒன்று போல இல்லை. தனிப்பட்ட ஆளுமை கொண்டதாகவே ஒவ்வொரு பூவும் வரையப்பட்டிருக்கிறது. வலதுபுறத்திலுள்ள ஒரு பெரிய சூரியகாந்தியின் மையத்திற்கு அடர் சிவப்பு நிறம் கொடுத்திருப்பது தனிச்சிறப்பு. தனக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்பினை தான் அவர் சூரியகாந்திப்பூக்களாக உருமாற்றியிருக்கிறார்.

வான் கோவின் சூரியகாந்திப்பூக்கள் அதிகம் நகலெடுக்கப்பட்டிருக்கின்றன. காகின் கூடச் சூரியகாந்திப்பூக்களை வரைந்திருக்கிறார். ஆனால் எதனாலும் இந்த நிகரற்ற ஓவியங்களின் மதிப்பை அடைய முடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வான்கோ குறித்து இது போன்று புதிய ஆவணப்படங்கள் வெளியாகின்றன. அவரைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். தன்வாழ்நாளில் கிடைக்காத அங்கீகாரத்தையும் மதிப்பையும் வான்கோ இன்று பெறுகிறார். இளந்தலைமுறையினர் ஒரு ராக்ஸ்டாரைப் போல வான்கோவை கொண்டாடுகிறார்கள் என்கிறார்கள். இது அவரது வாழ்நாளில் கிடைத்திருந்தால் வான்கோ பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அங்கீகரிக்கப்படாத கலைஞனின் வலியை உலகம் புரிந்து கொள்வதேயில்லை. இந்த அவலம் இன்றைக்கும் தொடரவே செய்கிறது.
••