நினைவில் பறக்கும் காட்டுவாத்துகள்

ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டரின் கவிதை ஒன்றின் வழியே தான் சீனக்கவிஞர் லி சிங்-சாவ் (Li Ch’ing-chao )பற்றி அறிந்து கொண்டேன். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெண்கவியை நினைவு கூர்ந்து மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார்.

காட்டுவாத்துகளுடன் லிசிங் சாவ் பனிக்காலத்தை எதிர் கொண்டதை பற்றிப் பேசும் இந்தக் கவிதையின் வழியே பனிமூட்டத்திற்குள் ஒளிரும் நட்சத்திரம் போல லிசிங் சாவ் அறிமுகமானார்.

கடந்த சில நாட்களாக லி சிங் சாவோவின் உலகிற்குள் புகை போலச் சுற்றிக் கொண்டிருந்தேன்.

என்னிடமுள்ள சீனக்கவிஞர்களின் தொகைநூலில் லி சிங் சாவின் கவிதைகள் இருக்கிறதா என்று தேடினேன். சில கவிதைகள் இருந்தன. பின்பு இணையத்தின் வழியே அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளை வாசித்தேன். அவர் எழுதிய கவிதைகளில் பெருமளவு காணாமல் போய்விட்டன. எஞ்சியிருப்பது ஒரு தொகுப்பு மட்டுமே.

கவிதை என்பது முடிவில்லாத பாலங்களின் தொடர்ச்சி என்றே தோன்றுகிறது. ஒரு பாலத்தின் வழியே இன்னொரு பாலத்திற்குச் செல்வது போன்றதே எனது கவிதை வாசிப்பு. கவிதையின் ஒற்றை வரியென்பது உண்மையில் பாலம் போன்றதே. எந்த இரண்டினை அது இணைக்கிறது என்பது வியப்பானது.

இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவியும் பத்தாம் நூற்றாண்டு சீனக்கவியும் ஒரே புள்ளியில் இணைகிறார்கள். அல்லது ஒரே ஜன்னலின் வழியே உலகைக் காணுகிறார்கள். மீனா அலெக்சாண்டரின் கவிதை பிரிந்து போன சகோதரியின் நினைவினை எழுதுவது போல எழுதப்பட்டிருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முந்தைய கண்ணாடி என்றாலும் நம் முகத்தைக் காட்டத்தானே செய்கிறது. அப்படித் தான் மீனா அலெக்சாண்டர் தன் அகத்தினை லியின் கவிதைகளின் வழியே கண்டிருக்கிறார்.

லி சிங்-சாவ் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அவளுடைய தந்தை, லி கெஃபே புகழ்பெற்ற இலக்கியவாதி, ஆகவே சிறு வயதிலேயே லி சிங்-சாவ் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். தனது பதினேழு வயதில், இரண்டு நீள் கவிதைகளை எழுதிப் புகழ்பெற்றார். தனது பதினெட்டு வயதில் மிங்செங் ஜாவோவை மணந்தார். இருவருக்கும் இலக்கியம் கலையின் மீது தீவிரமான ஈடுபாடு இருந்தது. ஆகவே வீட்டினை ஒரு ம்யூசியம் போல மாற்றினார்கள். அரிய நூல்கள். கலைப்பொருட்கள். சித்திர எழுத்துகள். ஓவியங்களைத் தேடித்தேடிச் சேகரித்தார்கள். அவற்றை ஆய்வு செய்து தொகுப்பாக வெளியிட்டார்கள்.

ஒவ்வொரு நாளும் இரவு உணவை முடித்த பிறகு அவர்கள் ஹாலில் அமர்ந்து கொண்டு ஏதாவது ஒரு புத்தகத்திலுள்ள ஒரு நிகழ்ச்சியைத் தேர்வு செய்வார்கள். அது எந்தப் புத்தகத்தில் உள்ளது என்று யார் சொல்கிறார்களோ அவர்களே முதலில் மதுக்கோப்பையைத் தொடவேண்டும். இந்த விளையாட்டினை மனமகிழ்ச்சியோடு ஈடுபட்டோம் என்கிறார் லி சிங்-சாவ்

அவர்கள் வீட்டின் பத்து அறைகள் முழுவதும் அவர்கள் சேகரித்த அரிய நூல்களும் கலைப்பொருட்களும் நிரம்பியிருந்தன.

சீன செவ்வியல் கவிஞர்கள் தமிழின் சங்க கவிதைகள் போலவே போரையும் காதலையும் கொண்டாடி எழுதியிருக்கிறார்கள். முக்கியக் கவிஞர்களின் காதல் கவிதைகளில் பிரிவும் சோகமும் மையமாக விளங்குகின்றன. தனிப்பட்ட மகிழ்ச்சியை கட்டுப்பாடற்ற விதத்தில் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் லி சிங்-சாவ் கவிதைகள் எழுதியிருக்கிறார்

உயர்வகுப்புக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இசையும் கலையும் இயல்பாக அறிமுகமாகியிருந்தன. தனது கவிதைகளை அவரே இசை அமைத்துப் பாடியிருக்கிறார்.

தனது 49வது வயதில் மிங்செங் இறந்து போனார். அந்தத் துயரை லியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கணவரின் இழப்பைத் தாங்க முடியாமல் அவர் எழுதிய கவிதைகள் இன்றும் மீளாத் துயரின் சாட்சியமாக உள்ளன. தார்த்தாரிய படையெடுப்பின் காரணமாகத் தப்பியோடி மறைந்து வாழும் வாழ்க்கையினை மேற்கொண்ட அவர் நீண்ட காலம் கவிதைகளை விட்டு விலகியே வாழ்ந்திருக்கிறார்.

நான் ஒரு மஞ்சள் பூவை

விட மெல்லியள்

என்ற லியின் கவிதை வரிதான் அவளது அடையாளம்.

இரவை எதிர்கொள்வதும் இரவினுள் கரைந்து போவதும் தான் லி கவிதைகளின் மையம். அவள் தனது காத்திருப்பை வேதனையாகக் கருதவில்லை மாறாகக் காத்திருப்பின் வழியே தனக்குள் மலர்வதாக உணர்ந்திருக்கிறார்.

தனக்குள் ஆழ்ந்து செல்ல செல்ல புற உலகின் காட்சிகள் யாவும் அகவுலகின் காட்சிகளாக மாறுவதைக் கண்டறிந்திருக்கிறார். அதனால் தான். வானில் பறக்கும் காட்டுவாத்துகள் அவள் கண்ணுக்குள் பறக்கின்றன. பிளம்பூக்கள் அவளது அடையாளமாக மாறுகின்றன.

மெல்லிய மூடுபனி, அடர்ந்த மேகங்கள், துக்கம் நிறைந்த நாள்;

தங்க விலங்கில் சுப தூபம் எரிகிறது.

நள்ளிரவு குளிர்

என் திரையைத் தொடுகிறது.

எனும் போது குளிர்காற்றால் சலனமுறும் திரையாக அவளே மாறிவிடுகிறாள்

இரவைக் கடந்து செல்ல அவள் கவிதைகளைப் படகாக மாற்றுகிறாள். அதன் துடுப்பாக மது இணைகிறது.

என் முற்றம் சிறியது,

ஜன்னல்கள் செயலற்றவை,

தொலைதூர மலையிலிருந்து மேகங்கள் எழுகின்றன

இரவு வெகு தொலைவில் இருக்கிறது

என்பது போன்ற வரிகளின் வழியே அவள் இரவை அழைக்கிறாள்.

உண்மையில் இரவென்பது தனிமைத்தோழனாக மாறுகிறது. வெளிச்சம் தீண்டும் போது அவள் விழித்துக் கொள்கிறாள். மதுவின் சூடு அவளுக்குள் எரிகிறது.

பெண்களின் குடியிருப்பிற்குள் வசந்தம் வருகிறது. தோட்டத்தில் சிவப்புப் பூக்கள் மலரத்துவங்குகின்றன, வானில் நீலமேகங்கள் கடந்து போகின்றன. லி சிங்-சாவ் தன்னை இழப்பதற்கு இயற்கையைத் துணைகொள்கிறார். பூக்கள் மலரும் போதும், திடீர் மழையின் போதும், தொலைதூர மலைகளின் மீது செல்லும் நிலவினாலும் அவர் தன்னை இழக்கிறார். மதுவை அருந்துவது போலவே அவர் தன்னைச் சுற்றிய உலகையும் கொஞ்சம் கொஞ்சமாக அருந்துகிறார்.

கவிஞர்களால் பாடப்படாத பூக்களைப் பற்றி எழுதும் லி சிங்-சாவ் பெண்களின் வசிப்பிடத்தைத் தனித்த குறியீடாக மாற்றுகிறார். மேற்தளத்திலுள்ள தனது அறையிலிருந்து காணும் காட்சிகளை விவரிக்கும் போது அந்தத் தளம் என்பது தனிமையின் ஒரு நிலை என்பது போலவே விவரிக்கிறார்

பதினைந்து வருஷங்களின் முன்பு,

நிலவொளியில்

மலர்களை ரசித்துக்கொண்டு

நண்பர்களுடன் அமர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன்.

இன்று, நிலவொளியில் பூக்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன,

ஆனால் என் உணர்வுகள் எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும்?

என்றொரு கவிதையை லி எழுதியிருக்கிறார். இதில் மாறாத நிலவொளியும் மலர்களும் மாறும் மனதும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இருப்பின் சுகதுக்கங்களைக் கவிதையின் வழியே வெளிப்படுத்தும் லி சீன நிலக்காட்சி ஓவியங்களின் அழகுடன் கவிதைகள் எழுதியிருக்கிறார். அது தான் இன்றும் அவரைக் கொண்டாட வைக்கிறது

••

0Shares
0