மரியம் தௌசானி இயக்கிய மொராக்கோ திரைப்படமான ‘கல்லே மலகா’ அழகாகத் துவங்குகிறது. தனித்து வாழும் எண்பது வயதான மரியா டான்ஜியரில் வசிக்கிறார். அதுவும் கடைகள் நிறைந்த பரபரப்பான வீதி ஒன்றில் அவரது வீடிருக்கிறது.

காலையில் அவர் நடந்து திரிந்து சமையலுக்குத் தேவையான காய்கறிகள். பழங்கள் என ஒவ்வொன்றாக வாங்குகிறார். கடை நடத்துபவர்களுடன் அவருக்குள்ள நீண்டகால நட்பு. அங்குள்ள இளைஞர்களுடன் நடக்கும் இயல்பான உரையாடல். பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் உள்ள உறவு என அவரது உலகம் நேர்த்தியாக மலர்கிறது.
தனது வீட்டில் ஆசையாகச் சமைக்கிறார். அவரது அழகான உடை. வீட்டின் அலங்காரம், இசை கேட்டபடி சமைக்கும் விதம் எல்லாவற்றிலும் தனித்த அழகும் ரசனையும் வெளிப்படுகிறது.
தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊர் என்பதால் டான்ஜியரை மிகவும் நேசிக்கிறார். டான்ஜியர் மொராக்கோவின் வடக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரம். கலாச்சாரப் பன்முகத்தன்மை கொண்டது. வரலாற்றுப்பயணி இபின் பதூதா இந்த ஊரில் பிறந்தவர்.
ஒரு நாள் மாட்ரிட்டில் வசிக்கும் மகள் கிளாரா அம்மாவைத் தேடி டான்ஜியர் வருகை தருகிறாள். அம்மாவும் மகளும் அதிகம் பேசிக் கொள்வதில்லை. ஆனால் ஒருவர் மனதை மற்றவர் நன்கு அறிந்திருக்கிறார்கள். மகளின் திருமண வாழ்க்கை சீராகயில்லை. கடினமாக உழைத்து பிள்ளைகளை வளர்க்கிறாள் என மரியாவிற்குப் புரிந்திருக்கிறது. இது போலவே தந்தை இறந்தபிறகு அம்மா தனியே வாழ்கிறாள். தந்தையின் சொற்ப ஒய்வூதியத்தில் வாழ்க்கை நடத்துவது சிரமம் என மகளுக்கும் புரிந்திருக்கிறது
ஆனாலும் எதிர்பாராத நெருக்கடி கிளாராவை ஒரு முடிவு எடுக்க வைக்கிறது.
மகள் தன்னைத் தேடி வந்திருப்பது தான் குடியிருக்கும் வீட்டினை விற்பதற்காக என அறிய வரும் போது மரியா அதிர்ச்சி அடைகிறார்.
கணவனைப் பிரிந்து வாழும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் மாட்ரிட்டிற்கு வெளியே ஒரு புதிய வீட்டை வாங்குவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருப்பதாகவும் அதற்காக அம்மா குடியிருக்கும் வீட்டை விற்கப் போவதாகவும், தங்களுடன் வந்து மாட்ரிட்டில் தங்குமாறும் அம்மாவை அழைக்கிறாள்.
அதனை ஏற்க முடியாது. செத்தாலும் இந்த ஊரில் தான் சாவேன் என்கிறார் மரியா.
அது தான் உன் விருப்பம் எனில் இதே ஊரில் உன்னை முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறேன். இந்த வீட்டை அப்பா என் பெயரில் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆகவே இதனை உடனடியாக விற்கப் போகிறேன் என்று கிளாரா உறுதியாகச் சொல்கிறாள். இது மரியாவிற்கு அதிர்ச்சி அளிக்கிறது. நீ இப்படி நடந்து கொள்வாய் என உன் தந்தை நினைக்கவில்லையே என்று மரியா புலம்புகிறாள்.
அம்மாவும் மகளும் பேசிக் கொள்ளாமல் வீட்டிற்குள் நடந்து கொள்ளும் விதம் ஹைக்கூ காட்சிகள்.

படத்தின் மிகச்சிறப்பான பகுதி கன்னியாஸ்திரியான தனது தோழியை மரியா சந்தித்துத் தனது மனக்கவலைகளைப் பகிர்ந்து கொள்வதாகும். கன்னியாஸ்திரி நீண்டகாலமாக மௌனவிரதமிருக்கிறார். ஆகவே எவருடனும் பேச மாட்டார். ஆனால் தனது நீண்டகாலத் தோழி மரியாவின் கவலைகளைக் கேட்டுக் கொள்கிறார். மென்மையாகச் சிரிக்கிறார். அந்த நட்பு படத்தில் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
கிளாரா வீட்டை விற்பதற்கான ஏற்பாடுகளை அவசர அவசரமாக மேற்கொள்கிறாள். வீட்டிலுள்ள பொருட்களை அகற்றி உடனே காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அலங்கார சரவிளக்கு, கட்டில், அலமாரிகள், நாற்காலிகள், ரிக்கார்ட் பிளேயர் உள்ளிட்ட அத்தனையும் விற்க வேண்டியதாகிறது.
தனது வீட்டுப் பொருட்களைப் பிரிய மரியாவிற்கு மனமில்லை. ஆனால் மகளின் கட்டாயத்தால் உள்ளூர் பழைய பொருள் விற்பவர் ஒருவருக்கு விற்பனை செய்கிறார். கிளாரா முதியோர் காப்பகத்தில் அம்மாவை சேர்த்துவிடுகிறாள். அங்கே மரியாவால் இருக்க முடியவில்லை. பொய் சொல்லி வெளியேறி தனது சொந்த வீட்டிற்கே திரும்பி வருகிறார்
இன்னமும் விற்கப்படாத காலியாக உள்ள வீட்டில் வெறும்தரையில் படுத்துக் கொள்கிறார். மின்சாரமில்லாத வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கொண்டு காலியான சமையலறையை வெறித்துப் பார்த்தபடி பிஸ்கட்டை சாப்பிட்டு அங்கேயே உறங்குகிறார்.
அதன்பிறகு தனது வீட்டைக் காப்பாற்றிக் கொண்டு அங்கேயே வாழ்வதற்குப் புதிய வழியொன்றை கண்டுபிடிக்கிறார். அது தான் படத்தின் சிறப்பு., எதிர்பாராத நிகழ்வது. ஆனால் மிக அழகாக, உண்மையாக விவரிக்கபடுகிறது
மரியாவிற்குப் புதிய உலகம் திறக்கிறது. அவர் தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை எழுத ஆரம்பிக்கிறார். வீடு புத்துயிர் பெறுகிறது. புதிய உறவு ஏற்படுகிறது. தான் விற்ற வீட்டுப் பொருட்களை ஒவ்வொன்றாக அவர் மீட்பது உணர்ச்சிப்பூர்வமானது. குறிப்பாக ரிக்கார்ட் பிளேயரை மீட்பதற்காக மேற்கொள்ளும் பயணம். இசைத்தட்டை நள்ளிரவில் கொண்டு வந்து தரும் கடைக்காரரின் மனது. அவர் மீது உருவாகும் நேசம் எனக் கவித்துவமான காட்சிகள்.
தனது கணவரின் கல்லறைக்குச் சென்று மரியா மலர்கள் வைத்துப் பிரார்த்தனை செய்யும் போதும் தனது தோழியின் சிதைந்த கல்லறையைச் சரி செய்ய முயலும் போதும் அவரது அன்பின் ஆழம் சிறப்பாக வெளிப்படுகிறது
தனது பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் மரியா கொண்டிருக்கும் நட்புறவின் அடையாளமாக வீடு காலி செய்யும் போது தனக்கு விருப்பமான சமையற்பாத்திரங்களை அவருக்கு அன்பளிப்பாகத் தருகிறார் பின்பு அதே பாத்திரங்கள் தனக்குத் தேவை என்றதும் மரியா. உரிமையாகத் திரும்பக் கேட்டு வாங்கிக் கொள்கிறார். அவர்களுக்குள் உள்ள உறவும் நேசமும் கிளாராவை எதிர்கொண்டு அழைப்பதில் துவங்கி படம் முழுவதும் நேர்த்தியாக வெளிப்படுகிறது

அம்மாவே தனக்கு உதவி செய்ய மறுக்கிறாரே எனக் கிளாரா அழுது கண்ணீர்விடும் போது அவளது நியாயத்தை உணருகிறோம். அதே நேரம் தான் வாழ்ந்த ஊரைவிட்டு போக விருப்பமில்லாத, தனது சொந்த வீட்டை இழக்க முடியாத மரியாவின் நியாயத்தையும் நாம் உணருகிறோம். இருவரும் சரியே. ஆனால் ஏதாவது ஒன்றை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழலில் மரியாவே விட்டுக் கொடுக்கிறார்
கார்மென் மௌரா மரியாவாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். உறைந்து போன தனது வாழ்விலிருந்து மரியா உயிர்த்தெழுவதே படத்தின் மையக்கரு. வீடு ஒரு அடையாளம் மட்டுமே.
கால்பந்து போட்டியின் மீதான இளைஞர்களின் ஆர்வம். இசையில்லாமல் வாழ முடியாது என்ற ஸ்பானியர்களின் ரசனை. இறந்தவர்களின் நினைவைக் காப்பதில் காட்டும் அக்கறை. தன் நகரத்தின் மூத்தகுடிமக்களை நகரநிர்வாகம் கவனித்துக் கொள்ளும் முறை. மரியாவிற்கு உதவி செய்யும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் ஆர்வம். பக்கத்து கடைக்காரர் மகன் செய்யும் உதவிகள் என நிஜமான மனிதர்களும் அசலான நிகழ்வுகளும் கொண்டதாகப் படம் உருவாக்கபட்டுள்ளது
சொந்த வீடு என்பது நினைவுகளால் உருவாக்கப்பட்டது. அதன் சுவரில் மாட்டப்பட்டுள்ள ஓவியங்கள். புகைப்படங்கள் காலத்தின் சாட்சியங்கள். தனது வீட்லுள்ள பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற மரியா மறப்பதேயில்லை. அந்த அக்கறை சென்ற தலைமுறை வாழ்க்கையின் அடையாளம். அதே நேரம் பெற்றோரிடம் எதையும் எதிர்பார்க்காமல் வேலைக்குப் போய்த் தானே திருமணம் செய்து கொண்டு அதில் ஏமாற்றமடைந்து மீதமிருக்கும் வாழ்க்கையை எப்படியாவது பிரச்சனையின்றி ஒட்டவேண்டும் என நினைக்கும் கிளாரா போன்ற பெண்களின் வாழ்க்கை இன்றைய நிஜம்.
கிளாரா தனது முதுமையைச் சந்திக்கும் போது நிச்சயம் அவளது அன்னையைப் போலிருக்க மாட்டாள். நடந்து கொள்ள மாட்டாள். சிறிய நகரங்களுக்கென்றே தனித்துவமான வாழ்க்கையும் மனிதர்களும் இருக்கிறார்கள். அதையே படம் பிரதிபலிக்கிறது
இரண்டே முக்கியக் கதாபாத்திரங்கள். ஒரு வீடு. ஒரு நிஜமான பிரச்சனை. இவற்றை வைத்துக் கொண்டு அழகான ஒரு படத்தை உருவாக்கவும் சர்வதேச அளவில் கவனம் பெறவும் செய்யமுடியும் என்பதை இப்படம் நிரூபிக்கிறது. தனது சொந்த அனுபவத்திலிருந்து இப்படத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார் இயக்குநர் மரியம். எல்லா ஊர்களிலும் இதே கதை நடக்கிறது. அன்றாடம் ஏதோ ஒரு மரியா தனது சொந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். திரைப்படத்தைப் போல தனக்கான கதவைக் கண்டறிந்து திறந்து கொள்ளும் மரியாக்கள் அதில் ஒரு சிலரே.