திரும்ப முடியாத பாதை

குற்றவுலகின் கதவுகளைத் தள்ளி ஒருவர் உள்ளே நுழைந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். கணவன், மகனுடன் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் எத்தேல் வைட்ஹெட் விரும்பி குற்றவுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறாள். சுழலைப் போல அந்த உலகம் உள்ளே இழுத்துக் கொள்கிறது.

தனது வாழ்க்கையைப் பந்தயமாக வைத்துச் சூதாடிய பெண்ணின் கதை என்று The Damned Don’t Cryயைச் சொல்லலாம். Film Noir வகையைச் சார்ந்த படம். ஜோன் க்ராஃபோர்ட் சிறப்பாக நடித்துள்ளார். வின்சென்ட் ஷெர்மன் இதை இயக்கியுள்ளார்

அரிசோனாவின் டெசர்ட் ஸ்பிரிங்ஸ் நகருக்கு வெளியே இரவில் செல்லும் ஒரு காரிலிருந்து ஒரு உடல் வீசி எறியப்படுகிறது. மறுநாள் காலை மணற்மேட்டில் கிடந்த அந்தச் சடலம் கண்டுபிடிக்கப்படுவதில் இருந்து படம் தொடங்குகிறது.

கொலையோடு தொடர்புடைய லோர்னா ஹேன்சன் ஃபோர்ப்ஸ் என்ற இளம்பெண் தேடப்படுகிறாள். அவள் யார். எதற்காக இந்தக் கொலையைச் செய்தாள் என்ற போலீஸின் விசாரணையைத் தொடர்ந்து லோர்னா அறிமுகமாகிறாள். அவளது நினைவலைகளாகப் படம் விரிவு கொள்கிறது.

தனது மகன் டாமி ஆசைப்படும் சைக்கிள் ஒன்றைக் கையில் பணமில்லாத போது தவணைக்கு வாங்கித் தருகிறாள் எத்தேல். அதனைத் தொழிற்சாலை ஊழியரான அவளது கணவன் கண்டிக்கிறான். தனது காப்பீட்டிற்காகப் பணம் செலுத்த முடியாத நிலையில் குடும்பம் இருக்கிறது. இதில் எதற்காகச் சைக்கிள், உடனே அதனைத் திருப்பி ஒப்படைத்துக் கொடுத்த பணத்தை வாங்கி வா என்று சண்டையிடுகிறான்.

மகனின் ஆசையைக் கெடுக்க வேண்டாம் என எத்தேல் மன்றாடுகிறாள். ஆனால் கணவன் கேட்கவில்லை. வீட்டு வாசலில் நின்றபடி டாமியை சப்தமாகக் கூப்பிடுகிறான். தந்தையின் கோபக் குரல் கேட்டு அவசரமாகத் திரும்பும் டாமி சாலைவிபத்தில் சிக்கி இறந்து போகிறான்.

அத்தோடு எத்தேலின் வாழ்க்கை திசை மாறிவிடுகிறது. கையில் பணமில்லாத. ஆசைப்பட்ட எதையும் அனுபவிக்க முடியாத இந்த வாழ்க்கை வேண்டாம் என முடிவு எடுக்கிறாள். கணவனைப் பிரிந்து மாநகரை நோக்கிச் செல்கிறாள். வேலை தேடுகிறாள். மாடலாகிறாள். சந்தர்ப்பம் அவளைக் குற்றவுலகிற்குள் தள்ளிவிடுகிறது. தனது உடற்கவர்ச்சியை முன்னிறுத்தி அவள் மேலேற ஆரம்பிக்கிறாள். பணமும் வசதிகளும் வந்து சேர்கின்றன.

இந்த நிலையில் நேர்மையான கணக்காளரான மார்ட்டின் பிளாக்ஃபோர்டுக்கு உதவி செய்கிறாள். வாழ்க்கையில் பணமும் அதிகாரமும் வசதிகளும் மட்டுமே முக்கியம் என அவனை நம்ப வைத்துக் குற்றவேலைகளில் ஈடுபடச் செய்கிறாள்

அப்போது மார்ட்டினிடம் எத்தேல் , “ நீ ஒரு நல்லவன்…. ஆனால் இந்த உலகம் நல்லவர்களுக்கானது அல்ல. நீ அடித்துப்பிடித்துச் சண்டையிட்டு தான் மேலே வர வேண்டும், யாரும் உனக்காக உதவி செய்யப் போவதில்லை. நீதான் அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் நம்மைத் தவிர வேறு யாரும் நம் மீது அக்கறை காட்டுவதில்லை “. என்கிறாள். அது உண்மை என்று மார்ட்டின் உணருகிறான். உடனடியாகச் சூதாட்ட கணக்குகளைச் சரிசெய்யும் பணியைத் துவக்குகிறான்.

இந்நிலையில் ஜார்ஜ் காஸில்மேன் என்ற குற்றவுலகின் தலைவனிடம் மார்டின் அறிமுகமாகிறான். அந்தச் சந்திப்பின் போது எத்தேல் உடனிருக்கிறாள். அவளது பகட்டான உடை மற்றும் மலிவான வாசனைத் திரவியத்தை ஜார்ஜ் விரும்பவில்லை மாறாக அவளது தைரியம் மற்றும் பணத்தாசை, அதை அடைவதற்கான புத்திசாலிதனத்தால் கவரப்பட்ட காஸில்மேன் அவளைத் தனது ஆசைநாயகியாக்கிக் கொள்கிறான்.

உடனே அவள் மார்டினை விட்டு காஸில்மேனின் பக்கம் போய்விடுகிறாள். மார்டின் சூதாட்ட கணக்காளராக வளர ஆரம்பிக்கிறான். காஸில்மேனின் வலதுகரம் போலாகிறான். மார்ட்டினின் உதவியால், காஸில்மேனின் திட்டங்கள் செழிக்கின்றன,

இந்நிலையில் அதிகாரப் போட்டி காரணமாகக் காஸில்மேன் தனது எதிரி நிக்கினைக் கண்காணிக்க ஏதேலை வெளியூர் அனுப்பி வைக்கிறான். லோர்னா ஹேன்சன் ஃபோர்ப்ஸ் என்ற புதிய பெயரில் பணக்காரியாகச் செல்லும் ஏதேல் காதல்வலையைப் பின்னுகிறாள். நிக் பிரென்டா அவளைக் காதலிக்கத் துவங்குகிறான். அவளுக்காக எதையும் செய்யத் துணிகிறான்.

எதிர்பாராமல் உண்மை வெளியாகிறது. ஒரு பக்கம் நிக் பிரென்டா மறுபக்கம் காஸில்மேன் இருவருக்கும் இடையில் எத்தேல் மாட்டிக் கொள்கிறாள். மார்டின் அவள் தப்பிச் செல்ல உதவி செய்கிறான். எதிர்பாராத முடிவு ஏற்படுகிறது

வீட்டைவிட்டு வெளியேற எத்தேல் முடிவு செய்யும் காட்சியில் அவளது மாமனார் “அவளைப் போக விடு… வெளியே வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அவள் தெரிந்துகொள்வாள்.” என்று கோபத்துடன் சொல்கிறார்.

அது போலவே முடிவில் பிரச்சனைகளில் சிக்கி போக்கிடமின்றி எத்தேல் தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பி போகிறாள். அந்தக் காட்சியில் அவளது அன்னை காட்டும் அன்பும் தந்தையிடம் வெளிப்படும் கோபம் மற்றும் அச்சம் சிறப்பாக வெளிப்படுகிறது. தனது சொந்த படுக்கையில் அவள் விழும் போது அவளது வயது கலைந்து போகிறது. காலம் பின்னோக்கி நகர்கிறது.

பணம் வசதி. ஆடம்பரமான வாழ்க்கை எல்லாமும் அவளுக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. தான் ஒரு விளையாட்டு பொம்மையைப் போல நடத்தப்படுவதாக உணருகிறாள். ஒருமுறை காஸில்மேனின் மனைவியைச் சந்தித்து எத்தேல் உரையாடுகிறாள். எதிர்காலத்தில் அவளைப் போலத் தானும் மாறிவிடுவோம் எனப் பயப்படுகிறாள்.

நேர்மையான கணக்காளரான மார்ட்னை நட்பின் பெயரால் குற்றவுலகிற்குள் அழைத்துச் செல்கிறாள் எத்தேல். அவளது அறிவுரை மற்றும் துணை மார்டினின் இயல்பை மாற்றிவிடுகிறது.

எத்தேலை திருமணம் செய்து கொள்ள அவன் ஆசைப்படுகிறான் ஆனால் அவள் மறுத்துவிடுகிறாள். அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மார்ட்டின் எத்தேல் இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போலவே சித்தரிக்கபடுகிறார்கள்.

எனது வாழ்க்கையில் இதுவரை நான் பெற்றதை விடப் பெரியதாக ஒன்றை நான் விரும்புகிறேன். என்ன செய்தாவது அதனை நான் அடைந்தே தீருவேன்… எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கும்போதே, ஏதாவது செய்தாக வேண்டும் என்று தன்னிலை விளக்கம் தருகிறாள் எத்தேல்.

சந்தர்ப்பம் எத்தேலை மாற்றுகிறது. எதையும் வேகமாகக் கற்றுக் கொள்கிறாள். பயன்படுத்திக் கொள்கிறாள். எளிதில் வெற்றி அடைகிறாள். எதிர்பாராமல் தோற்றும் போகிறாள்.

பணம் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெண் தனது இலக்குகளை அடைவதற்காகத் தனது அழகையும் வசீகரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்வாள் என்பதற்கு எத்தேல் ஒரு உதாரணம்.

தனது தோல்வியை எத்தேல் ஏற்றுக் கொள்ளும் தருணத்தில் அதிலிருந்து மீள முடியாது என்பதை நன்றாக உணருகிறாள். அவளது பெற்றோர்களுக்குத் தங்கள் மகளின் கடந்தகாலம் தெரியவில்லை. அவர்கள் அறியாப் பெண்ணாகவே அவளை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை வேறாக இருக்கிறது.

குற்றவுலகை சித்தரிக்கும் வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து எது இப்படத்தை வேறுபடுத்துகிறது. எத்தேலின் வாழ்வில் நடைபெறும் துயரநிகழ்வும் அதைத் தொடர்ந்த அவளது முடிவும். மார்டின் தன் பக்க நியாயத்தை உணர்வது. லோர்னாவாக மாறிய பின்பும் அவள் எத்தேலாக இருப்பதற்கான காரணங்கள். ரத்தம் சொட்டும் குற்றநிகழ்வுகள் படத்தில் அதிகமில்லை. ஆனால் மறைக்கபட்ட உண்மைகள், ரகசிய ஆசைகள் இருக்கின்றன. அதை லோர்னா உருவாக்குகிறாள். அதுவே இப்படத்தைச் சிறப்பாக்குகிறது.

படத்தின் ஒரு காட்சியில் எத்தேலிற்குத் திருமணமாகிவிட்டதா எனக் காஸில்மேனின் மனைவி கேட்கிறாள். இல்லை என்கிறாள் எத்தேல். அப்போது அவள் தனது வயதை மறைத்துக் கொள்கிறாள். கடந்தகாலத்தை முற்றிலும் மறக்க விரும்புகிறாள். அவள் தனக்குத் தானே புனைந்து கொண்ட வேஷத்தை முடிவில் தானே கலைத்துவிடுகிறாள். அப்போது அவளது வேதனை இரட்டிப்பாகிறது. மகனுக்கு நடந்த விபத்தை விடவும் அவளுக்கு நடந்த விபத்து பெரியது. அவளே விரும்பி ஏற்படுத்திக் கொண்டது.

••

0Shares
0