மகிழ்ச்சியின் திறவுகோல்.

மசாகி கோபயாஷி இயக்கிய பியூட்டிஃபுல் டேஸ் திரைப்படத்தில் மலர்களை விற்பனை செய்யும் வயதான பெண்ணிற்கும் ஓய்வு பெற்ற தொழிலதிபரான ஷிகாகிக்கும் இடையில் உருவாகும் நட்பு மிக அழகாக விவரிக்கபட்டுள்ளது. ஓசுவின் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் உள்ளன.

படத்தின் மையக்கதை இவர்களைச் சுற்றி நடக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியை உருவாக்கும் திறவுகோல்கள்.

முதியவர்களான இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும், மழையில் நனைந்து கொண்டு வரும் முதியவரின் விளையாட்டுதனமான பேச்சு. இளையமகனை அறிமுகம் செய்து வைக்கும் போது ஏற்படும் முதிர்ச்சி. பூங்காவில் நடந்தபடியே அவர்கள் பேசிக் கொள்ளும் விதம் என அற்புதமான காட்சிகள் உள்ளன.

ஷிகாகி தனது இளையமகனுக்கு டோக்கியோகாவின் பேத்தியை திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.

அது நம்முடைய கையில் இல்லை. இளையவர்கள் தானே சந்தித்துப் பழகிக் கொள்ளட்டும். பின்பு அவர்கள் விரும்பினால் திருமணம் செய்து வைப்போம் என்கிறாள் பாட்டி டோக்கியோகா.

அதனை ஷிகாகி ஏற்றுக் கொள்கிறார். அவர்களின் சந்திப்பு நடைபெற உதவி செய்கிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காணுகிறார். ஆனால் டோக்கியோகாவின் பேத்தி வேறு ஒருவரைக் காதலிக்கிறாள். அந்தக் காதலை ரகசியமாக வைத்திருக்கிறாள். முடிவில் ஒரு நாள் பாட்டிக்கு உண்மை தெரிய வருகிறது.

மகிழ்ச்சியான நாட்கள் தொடர்ந்து வருவதில்லை. வாழ்க்கை பிரச்சனைகளும் சிக்கல்களும் நிரம்பியதாகவே தொடர்கிறது எனப் பலரும் சலித்துக் கொள்கிறார்கள். அப்படியில்லை திடீரென உங்கள் வாழ்க்கையில் வசந்தம் உருவாகத் துவங்கும். மகிழ்ச்சியான நாள் நிச்சயம் ஏற்படும். என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது இப்படம்.

கோபயாஷியின் மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது இது வன்முறை காட்சிகள் அற்ற படம். அழகான காதல்கதை. கூடுதலாக அந்தக் காலக் கட்ட இளைஞர்களின் மனநிலையைத் துல்லியமாக விவரிக்கும் திரைப்படம். நேர்த்தியான திரைக்கதை. சிறந்த ஒளிப்பதிவு, தேர்ந்த நடிப்பு. படத்தினைச் சிறந்த கலைப்படைப்பாக்குகிறது.

இமானிஷி, சகுரகோ, ஹகமடோ, நகாவோ ஆகிய நால்வரும் பள்ளி வயதிலிருந்து நண்பர்களாக இருக்கிறார்கள். அதில் டாக்டர் இமானிஷி மருத்துவம் வணிகமயமாவதை ஏற்க முடியாமல் தான் வேலை செய்த மருத்துவமனையை விட்டு விலகுகிறான். அறமற்ற முறையில் டாக்டர் நடந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறான். அவனது மனநிலையைத் தந்தை ஏற்றுக் கொள்கிறார்.ஆனால் அவனது அம்மா நல்லவேலையை விட்டுவிட்டாய் என்று கடிந்து கொள்கிறார்

இமானிஷியின் காதலி சகுரகோ. அவள் பூக்கடை நடத்தும் டோக்கியோகாவின் பேத்தி. போரில் தாய் தந்தையை இழந்தவள். பாட்டியால் வளர்க்கபடுகிறாள். பூக்கள் வாங்கவும் விற்கவும் பாட்டிக்கு உதவி செய்கிறாள். அவள் இமானிஷியை காதலிப்பது பாட்டிக்குத் தெரியாது.

ஹகமடா தொழிற்சாலையில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். அவனது வீடு பறி போகும் நிலையில் இருக்கிறது. பெற்றோர்களுக்கு மருத்துவம் பார்க்க கையில் காசில்லை. இந்நிலையில் நண்பனான இமானிஷி தானே வீடு தேடி வந்து மருத்துவம் செய்கிறான். தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களிக்கிறான்.

இவர்களின் நண்பனான நகாவோ இசைக்கலைஞன். நடனவிடுதி ஒன்றில் வேலை செய்கிறான். அங்கே பணியாற்றும் கணவனை இழந்த பெண்ணுடன் நட்பாகப் பழகுகிறான். உதவிகள் செய்கிறான். அவனது பிடிவாதமான குணம் மற்றும் அலட்சியமான பேச்சு நண்பர்களைச் சங்கடப்படுத்துகிறது. தன் மனதிலுள்ள உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாத நகாவோ படத்தின் தனித்துவமான கதாபாத்திரம். நெருக்கடியான தருணம் ஒன்றில் அவனே உதவிக்கு முன்நிற்கிறான். நண்பனுக்காகக் கையேந்தி கடன் வாங்குகிறான். போதை மிகுதியான தருணத்தில் தன் மனதிலுள்ள அன்பை வெளிப்படுத்துகிறான்.

அவன் காதலிக்கும் யூமி என்ற இளம் பெண்ணைச் சந்திக்கும் இமானிஷி அவளது அம்மாவிற்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்கிறான். நகாவோவின் மனதிலுள்ள எண்ணத்தை வெளிப்படுத்தி அவளைத் திருமணம்செய்து கொள்ள வைக்கிறான்.

டோக்கியோகாவின் பூக்கடையில் பணிபுரியும் இளம்பெண்ணான . சகுரகோ பணக்கார வாடிக்கையாளரை சந்திக்கச் செல்லும் போது நடந்து கொள்ளும் முறை. உணவு விடுதியில் இருந்து வீடு திரும்பிய பின்பு பாட்டியோடு உரையாடும் விதம். பணக்கார இளைஞனுடன் காரில் நகர்வலம் வரும் போது ஏற்படும் மகிழ்ச்சி என அசலான மனஉணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறாள். இமானிஷி மீது அவள் கொண்டகாதல் நிறைவேறாமல் போய்விடுமோ என அஞ்சுகிறாள்.

சகுரகோவின் பாட்டி இளைஞர்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாள். தேவையான நேரத்தில் அறிவுரை சொல்கிறாள். தேவை எனில் உதவிகள் செய்கிறாள். தனது பேத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அவளது கனவு. அவள் கடந்தகாலத் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளும் காட்சி உணர்ச்சிப்பூர்வமானது .

பூக்கடையில் சகுரகோவினை காண வரும் டாக்டர் இமானிஷி தனது பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என நினைக்கிறான். ஆனால் அவனை மீறி ஒரு பூவை கிள்ளி எடுத்துவிடும் தருணத்தில் அது வெளிப்படுகிறது. அதைச் சுட்டிக்காட்டி சகுரகோ சொல்லும் போது தற்செயலாக நடந்தது என்கிறான். இல்லை நீ வேண்டுமென்றே அதைப் பறித்தாய் என்று உண்மையைச் சுட்டிக்காட்டுகிறாள் சகுரகோ. இமானிஷி அதனை ஏற்றுக் கொள்கிறான். அந்தக் காட்சியில் தன்னை அறியாத தவறுகளை உடனே ஏற்றுக் கொள்கிறவன் என்ற அவனது மனஇயல்பு அழகாக வெளிப்படுகிறது

பணக்கார பையனுடன் காரில் நகர்வலம் போவதற்குச் சகுரகோ புறப்படும் போது பாட்டி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டிய பூக்களைக் கொண்டு போகச் சொல்கிறாள். காரில் தானே போகிறாய். வழியில் இவற்றைக் கொடுத்துவிடு என்கிறாள். அது தான் பாட்டியின் இயல்பு. அதனை ஏற்றுக் கொள்கிறாள் சகுரகோ. அதிலிருந்து அவள் பாட்டியின் விருப்பங்களை மீற மாட்டாள் என்பது தெளிவாகிறது.

எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளால் நால்வரும் பாதிக்கபடுகிறார்கள். ஆழ்ந்த நட்பாலும் ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள தெளிவான புரிதலாலும். நிகரற்ற அன்பாலும் மீண்டும் மகிழ்ச்சியான நாட்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அது சாத்தியம் என்பதைப் படம் அடையாளப்படுத்துகிறது.

••

0Shares
0