விக்டோரியா மகாராணியின் பேத்தியான இளவரசி மேரி லூயிஸ் தனது வாழ்க்கை வரலாற்றை My Memories of Six Reigns என எழுதியிருக்கிறார். தனது எண்பது ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் விதமாக இதனை எழுதியிருக்கிறார். தனது பாட்டியின் ஆலோசனைப் படி இந்நூலை எழுதியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் நினைவுகள் என்பதால் அந்தக் கால அரண்மனை வாழ்க்கையும் அன்றாட நிகழ்வுகளும் வெகு துல்லியமாக, நுணுக்கமாக விவரிக்கபட்டுள்ளன. வரலாற்றின் சில முக்கிய முடிவுகள். நிகழ்வுகள் எப்படி நடந்தன என்பதன் சாட்சியமாக இதனை எழுதியிருக்கிறார்.

விக்டோரியா மகாராணியின் பேத்தியாகப் பிறந்த போதும் தனது வாழ்க்கையில் குறைவான சந்தோஷங்களே இடம் பெற்றன என்றும், பெரும்பாலும் கண்ணீரும் கவலைகளும் பகிர்ந்து கொள்ள முடியாத கசப்பான நினைவுகளும் கொண்டதே தனது வாழ்க்கை என மேரி குறிப்பிடுகிறார்.
மேரி லூயிஸ் பிறப்பதிலிருந்து புத்தகம் துவங்குகிறது. மன்னர் குடும்பத்தில் பிரசவம் நடக்கும் போது அமைச்சர் அல்லது அரண்மனையின் உயரதிகாரி முன்னிலையில் வகிப்பது வழக்கம். பிறந்த குழந்தையை அவர் பார்வையிட்டு சான்று அளிப்பதோடு அவரே அரண்மனைக்குத் தகவல் அனுப்பியும் வைப்பார். அப்படித் தான் பிறந்தவுடன் இங்கிலாந்தின் அமைச்சரை சந்தித்துவிட்டேன் என்று பரிகாசமாக மேரி லூயிஸ் குறிப்பிடுகிறார்
ஃபிரான்சிஸ்கா ஜோசஃபா லூயிஸ் அகஸ்டா மேரி கிறிஸ்டினா ஹெலினா என்பது அவருக்கு தேவாலயத்தில் சூட்டப்பட்ட பெயர். தந்தை ஜெர்மானிய வம்சாவழியில் வந்தவர். தாய் பிரிட்டன் அரச குடும்பம்.
இங்கிலாந்தின் மகாராணியாக இருந்த போதும் ஒரு பாட்டியாக விக்டோரியா எவ்வளவு அன்புடன் நடந்து கொண்டார் என மேரி சிறப்பாக எழுதியிருக்கிறார்.
விடுமுறைக்குப் பாட்டியின் அரண்மனைக்குச் சென்று தங்கிய நாட்கள் பற்றியும் பாட்டி அவள் அழகற்றவள் என்று குறிப்பிட்டத்தில் மனம் வருந்தியதைப் பற்றியும் வெளிப்படையாக எழுதியிருக்கிறார்.
மன்னர் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அவரது பிறந்த நாள் தோறும் மகாராணியிடமிருந்து ஒரு முத்து பரிசாகக் கிடைப்பது வழக்கம். அந்த முத்துகள் சேர்ந்தவுடன் அதனைக் கோர்த்து மாலையாக அணிந்து கொள்ள வேண்டும். அந்த முத்துமாலை அரிய பொக்கிஷமாகக் கருதப்படும். இது போலப் பத்து வயதை அடைந்தவுடன் மகாராணியின் சார்பில் தங்க கடிகாரம் பரிசாக அளிக்கபடும். அதைக் கையில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டினையும் மேரி பெற்றிருக்கிறார்.

மேரி லூயிஸ் விக்டோரியா மாகாராணியின் மூன்றாவது மகளான இளவரசி ஹெலினாவின் மகள் . அவளது தந்தை ஷ்லெஸ்விக்-ஹோல்ஸ்டீன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹோல்ஸ்டீனுக்குக் குதிரை வளர்ப்பில் ஆர்வம் அதிகம். குதிரைப்பந்தயங்களை நடத்துவார். ஆனால் பந்தயம் கட்டி ரேஸ் விளையாட மாட்டார். தனது தந்தை ஹோல்ஸ்டீனுடன் வேட்டைக்குச் சென்ற நாட்களைப் பற்றியும். இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றதையும் மேரி விரிவாக எழுதியிருக்கிறார்
அந்தக் கால அரச குடும்பங்களில் பெண்கள் எவ்வாறு கல்வி கற்றார்கள். நடனம் இசை, மொழி என அவர்களுக்கென நியமிக்கபட்ட தனி ஆசிரியர்கள் எவரெவர். அவர்களிடம் என்ன கற்றுக் கொண்டார்கள். அவர்களின் அன்றாட உணவுப்பழக்கம். வெவ்வேறு நிகழ்வுகளில் அணிந்து கொள்ள வேண்டிய உடை. மற்றும் நடத்தைவிதிகள். விருந்திற்குச் செல்லும் போதும் பயணத்தின் போதும் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகள். கட்டுபாடுகள் பற்றி மேரி லூயிஸ் சிறப்பாக எழுதியிருக்கிறார்
அரண்மனையின் மதிய உணவு நேரம் நாலு மணி என்பதையும். கோடையில் மட்டும் அது இரண்டு மணியாக மாற்றப்படும் என்றும் குறிப்பிடுகிறார். இது போல இரவு உணவு 11 மணிக்கு வழங்கப்படுவதையும். ஒவ்வொருவர் அறையினுள்ளும் அன்று என்ன உணவு வகைகள் சமைக்கபடுகின்றன. பரிமாறப்பட இருக்கின்றன என்ற செய்தி அச்சிடப்பட்டு வைக்கப்படும் என்பதையும் குறிப்பிடுகிறார்.
மேரி தனது பதினெட்டு வயதில் அரிபெர்ட் என்ற ஜெர்மானிய இளவரசனை ஒரு விருந்தில் சந்தித்துக் காதல் கொண்டார். அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அதனை விக்டோரியா மகாராணியும் ஏற்றுக் கொண்டார்.
லூயிஸும் அரிபெர்ட்டும் 1891 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி வின்ட்சரில் திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு மாத ஐரோப்பிய தேனிலவுக்குப் பிறகு, அவர்கள் ஜெர்மனியில் குடியேறினர்
அங்கே சென்ற பிறகே தனது கணவன் தன்பாலுறவு வேட்கை கொண்டவன் என்ற உண்மை தெரிய வந்தது. ஆகவே அவள் அரண்மனையிலே பிரிந்து வாழ வேண்டியிருந்தது. கணவனின் தன்பாலுறவு வேட்கை குறித்து வெளியே பகிரவும் முடியவில்லை. அத்தோடு கடுமையான ஜெர்மானிய அரசவை மரபுகளை லூயிஸால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது சிறைச்சாலையில் அடைப்பட்டது போன்ற மனநிலையை உருவாக்கியது.
ஒருமுறை, அரண்மனையில் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்த போது அங்கே வந்த தூதுவருக்கு ஹாய் சொன்னதற்காக மேரி கண்டிக்கபட்டார். . ஜெர்மானிய இளவரசிகள் மதிய உணவின்போது ஆண்களிடம் பேசவோ, சைகை செய்யவோ வெளிப்படையாகச் சிரிக்கவோ அனுமதி கிடையாது. இது போலக் குத்துசண்டையில் அணியும் கையுறைகளை அவள் விலைக்கு வாங்கியதை கண்டு அரண்மனையே அதிர்ச்சி அடைந்தது. குத்துச் சண்டை கையுறை பெண்கள் தொடுவதற்கே அருகதையற்ற பொருள் என்றார் மகாராணி.
நாளுக்கு நாள் அரண்மனையின் கட்டுபாடுகளால் துன்புற்று, அவள் நோயுற்றாள். இடைவிடாத காய்ச்சல். இருமல் அத்துடன் உடல் எடை குறைந்து போனது. ஆகவே மனக்கவலையைப் போக்க மேரி வெளிநாட்டுப் பயணம் ஒன்றை திட்டமிட்டு கிளம்பினாள்.
“கவுண்டஸ் வான் மன்ஸ்டர்பெர்க்” என்ற பெயரில் மாறுவேடத்தில் கப்பலில் அமெரிக்கப் பயணம் சென்றிருந்த நேரத்தில் அரிபெர்ட் மற்றும் அவரது தந்தையான ஜெர்மானிய சக்கரவர்த்தியும் அவளை விவாகரத்துச் செய்ய விரும்புவதாக விக்டோரியா மகாராணிக்கு தகவல் அனுப்பினார்கள்.
பயணத்திலிருந்து அவசரமாக லண்டன் திரும்பிய மேரி லூயிஸ் தனது திருமண வாழ்வின் தோல்விக்கான உண்மையான காரணங்களை விளக்கினார். விக்டோரியா மகாராணி அந்த விவாகரத்தை ஏற்றுக் கொள்ளவே 1900-ல் திருமணப் பந்தம் விலகியது. ஆனாலும் தனது வாழ்நாள் முழுவதும் மேரி லூயிஸ் திருமண மோதிரத்தை அணிந்திருந்தார்.
திருமண உறவிலிருந்து விவாகரத்தான இளவரசிக்கு பிரிட்டன் அரச குடும்பத்தில் எந்த மரியாதையும் கிடைக்காது. ஆகவே அரண்மனை விழாக்களில். முடிசூடும் நிகழ்வுகளில் அவர் இரண்டாம் தர நிலையில் நடத்தப்பட்டார். ஆகவே அரண்மனையின் கௌவரத்தை விடவும் எளிய மக்கள் சேவை மேலானது என முடிவு செய்து மருத்துவ உதவிகளைச் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார். செவிலியர்களுக்கான அமைப்பை உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறார். இவர் வின்ட்சரில் உருவாக்கிய குயின் மேரியின் பொம்மை வீடு இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது
திருமணத்திற்குப் பின்பு ஒருமுறை ஜெர்மனியின் அரண்மனையிலிருந்து ரகசியமாகத் தனது பணிப்பெண்ணுடன் வெளியேறி ஊர் சுற்றி, சந்தையில் செர்ரி பழங்களை வாங்கித் தின்றபடி திறந்த குதிரைவண்டி ஒன்றில் அரண்மனை திரும்பியிருக்கிறார்.
அதனை இன்னொரு அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் பார்த்துவிடுகிறாள். உடனே செய்தி அரண்மனையில் மேரியின் மாமியாரான மகாராணிக்குத் தெரிவிக்கபடுகிறது. இதற்கான விசாரணை நடக்கிறது. அப்படி எல்லாம் வெட்கம் கெட்டு நடக்க மாட்டேன். இது அபாண்டமான பொய் என்று மேரி நடிக்கிறாள். ஆனாலும் இப்படியான பேச்சு வருவது ஏற்றுக் கொள்ள முடியாதது. நீ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என மாமியார் கடிந்து கொண்டதாக நினைவு கொள்கிறார்
அரண்மனை பணிப்பெண்களின் விசித்திரமான நடத்தைகள். மனநிலைகள். அவர்களின் உடல்நலம், ரகசிய காதல்கள் பற்றி ஒரு இளவரசி துல்லியமாக எழுதியிருப்பது அவரது ஆழ்ந்த புரிதலை, அவதானிப்பை வெளிப்படுத்துகிறது.
அதுபோலவே அரண்மனையில் ரகசியமாகச் சமையல் கற்றுக் கொண்டததையும். சமையற்காரர்களுக்குப் பதிலாகத் தன்னுடைய கையால் சமைத்து கொடுத்த உணவை சாப்பிட்டு மகாராணி பாராட்டியதையும் நினைவு கொள்கிறார்.
முதல் உலகப்போரின் போது மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்துக்கொண்டே நாட்களைக் கழித்ததைப் பற்றியும் , இரண்டாம் உலகப் போரின் போது வின்ட்சருக்கு அருகிலுள்ள ஒரு மாளிகையில் எளிய வாழ்க்கையை மேற்கொண்டதையும் பதிவு செய்திருப்பதையும் காணும் போது இளவரசியின் வாழ்க்கைக்கும் எளிய பெண்ணின் வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாட்டினைக் காண முடியவில்லை.
அந்தக் கால அரச குடும்பப் பெண்களைப் போலவே, லூயிஸும் யுத்த காலப் பணிகளுக்கு நிறைய வகையில் உதவி செய்திருக்கிறார். குறிப்பாகப் பெர்மண்ட்சேயில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை அமைத்து, 1914 முதல் 1920 வரை ஆறு ஆண்டுகள் அதைத் தானே நடத்தியிருக்கிறார்
மேரி லூயிஸ் கார் ஒட்டக் கற்றுக் கொண்டிருந்ததோடு தனக்கென ஒரு காரையும் வைத்திருந்தாள். அரச குடும்பத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்த முதல் பெண் என்று பத்திரிக்கைகள் அவரைப் பற்றி எழுதின. இதைப் போலவே, விமானத்தில் பயணம் செய்த முதல் இளவரசி, மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்த முதல் இளரவசி அவள் தான் என்றும் சொல்கிறார்கள்
மேரி லூயிஸின் ஒரே ஆதர்சம் நெப்போலியன். அவரது கல்லறையை நேரில் பார்வையிட்டதோடு அங்கிருந்த வில்லோ மரத்தின் கிளை ஒன்றையும் நினைவாகக் கொண்டு வந்திருக்கிறார்.

மேரி லூயிஸ் தனது நூலில் அரண்மனை வாழ்க்கையோடு அந்தக் கால அரசியல் சூழ்நிலை. அரண்மனையின் நிலைபாடுகள். மற்றும் மன்னர்களின் பலவீனமான முடிவுகள். செயல்கள் குறித்தும் எழுதியிருக்கிறார் . அதே நேரம் தனது தவறுகளைச் சுட்டிக்காட்ட மறக்கவும் இல்லை. அவர் மீது கணவன் சுமத்திய புகார்களைப் பற்றி அவர் எந்த விளக்கமும் தரவில்லை.
நம் வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் சாகசம், எதிர்பாராத நிகழ்வுகள் நிறைந்தது என்று மேரி குறிப்பிடுகிறார். வெளியுலகின் கண்களில் பகட்டான, ராஜபோகத்தை அனுபவிக்கும் இளவரசிகள், ராணிகள் அரண்மனைக்குள் எப்படிக் கட்டுபாடுகளும், நெருக்கடியும் நிறைந்த வாழ்க்கையை அனுபவித்தார்கள். அவர்களின் தனித்திறமைகள் எப்படி உலகம் அறியாமலே போயின என்பதைக் கவலையோடு பதிவு செய்திருக்கிறார். 1956 டிசம்பர் 8 அன்று, தனது 84-வது வயதில் மேரி லூயிஸ் காலமானார்.
நம் முன்னேஅமர்ந்து கொண்டு தனது வாழ்க்கையில் நடந்தவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்வது போன்ற மேரியின் எளிமையான எழுத்து நடை சிறப்பாக உள்ளது. அதுவே 330 பக்கம் கொண்ட சுயசரிதையை ஆர்வமாக வாசிக்க வைக்கிறது