திரையில் அமரும் ஈ

புதிய சிறுகதை. ஜுன் 9 .2026

மல்லிகாவிற்குச் சினிமாவில் வரும் திருமணக்காட்சியை மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவள் சினிமா பார்த்தாள்.

தனது பக்கத்துவீட்டுப் பையன்களிடம் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஒடுகிறது என்பதை விசாரிப்பதோடு அதில் கல்யாணக் காட்சி இருக்கிறதா என்றும் கேட்டுத் தெரிந்து கொள்வாள்.

“ இருக்கிறது“ என்று சொன்னால் “ கடைசிக்காட்சியிலா“ எனக்கேட்பாள்.

“ இல்லைக்கா..பாதியில வருது“ என்று சொல்லிவிட்டால் போதும் அடுத்த நாளே அந்தப்படத்திற்குப் போய்விடுவாள்.

சினிமா பார்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. அடுத்தவர் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருட்டில் அமர்ந்து கொண்டு இன்னொருவர் வாழ்வின் இயக்கத்தை, அந்தரங்கங்களைக் காணுவது இன்பமில்லையா.

சின்ன மார்க்கெட்டில் வெற்றிலைபாக்கு கடை வைத்துள்ள ரத்னசாமியும் கூடத் தினம் சினிமா பார்க்கக் கூடியவர் தான். அது சினிமாவின் மீது ஏற்பட்ட விருப்பத்தால் அல்ல. அவருக்கு இரவு இரண்டுமணி வரையில் தூக்கம் வராது. வீட்டில் லைட்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. அதனாலே அவர் தினமும் செகண்ட் ஷோ போகிறார். அவரைப் போலக் கடைசி டவுன்பஸ்ஸை தவறவிட்ட கிராமவாசிகள். பின்னிரவு ரயிலில் வெளியூர் போகிறவர்கள், கல்லூரி பிடிக்காத இளைஞர்கள். வேலையில்லாத படித்தவர்கள் எனப் பலரும் நேரத்தைக் கடத்தவே சினிமாப் பார்க்கிறார்கள்.

ஒரு படகு ஆற்றின் வெகுதொலைவிற்கு அழைத்துச் செல்வதைப் போலச் சினிமா அவர்களை எங்கோ கூட்டிச் செல்கிறது. படம் முடியும் போது அதே கரையில் திரும்பக் கொண்டுவந்து இறக்கிவிடுகிறது.

சினிமா தியேட்டரின் பைக் ஸ்டாண்ட் நிர்வாகியான சின்னச்சாமி எந்தப் படத்தையும் பார்த்ததேயில்லை. சினிமா ஒடுகிற சப்தம் மட்டும் தான் கேட்டிருக்கிறார். அதுவே அவருக்குப் போதுமானதாகயிருந்தது.  ஆனால் ஆபரேட்டர் சண்முகத்திற்கோ எல்லா நாளும் சினிமா பார்ப்பதே வாழ்க்கை.

வீட்டில் சண்டை போட்டவர்களுக்கு, கடன்பிரச்சனையில் வீடு செல்ல முடியாதவர்களுக்கு, போக்கிடம் இல்லாத பிச்சைக்காரர்களுக்கு, ரகசிய காதலர்களுக்கு, இறந்து போன துணையை நினைத்து வருந்துகிறவர்களுக்கு, அடைய முடியாத வெற்றியை நினைத்து ஏங்குகிறவர்களுக்கு. விற்பனை பிரதிநிதிகளுக்கு, ஹோட்டல் பணியாளர்களுக்கு எனப் பலருக்கும் சினிமா தேவையாக இருந்தது. ஒரே படத்தை ஒவ்வொருவரும் ஒருவிதமாகப் பார்க்கிறார்கள். புரிந்து கொள்கிறார்கள்.

மல்லிகா சிறுமியாக இருந்த போது அவளைச் சாமிபடங்களுக்கு மட்டுமே வீட்டில் அழைத்துப் போனார்கள். அதுவும் ஆறு மாதங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மட்டுமே. அவ்வளவு தான் சாமி படங்கள் வரவும் செய்தன.  தியேட்டரில் விற்கப்படும் முறுக்குக்கென தனிருசியிருந்தது. ஒரு முறுக்கும் ஒரு கடலை மிட்டாயும் அவளுக்கு இடைவேளையில் வாங்கித் தருவார்கள். அந்த முறுக்கை சிறிய துண்டுகளாக உடைத்து வைத்துக் கொண்டு படம் நடக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருப்பாள். முறுக்கு தீர்ந்த போதும் பாவனையாக கையை வாயில் போடுவது போல நடித்துக் கொள்வாள்.  எப்போது சினிமா விட்டு வீடு திரும்பினாலும் பசி அதிகமாகி விடுவது வழக்கம். நேராக சமையலறைக்குப் போய் சாப்பிட்டுவிட்டு தான் பிறருடன் பேசுவாள்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு ஞாயிற்றுகிழமை திருட்டுத்தனமாக வேணியோடு அருகிலிருந்த லட்சுமி தியேட்டரில் காலைக்காட்சி பார்க்கச் சென்றாள். படம் முடியும் வரை யாராவது பார்த்து வீட்டில் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்திலே படம் பார்த்தாள். ஆனால் வீட்டில் எவருக்கும் தெரியவில்லை.

பத்தாம் வகுப்பு பரிட்சை முடிந்து கோடை விடுமுறை துவங்கியது முதல் அவளுக்குச் சினிமா பார்க்க துணையாக சுகந்தி கிடைத்தாள். பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடிவந்த பெண். அவளை விட நான்கு வயது மூத்தவள். கல்லூரி மாணவி. இருவருமாக நிறையப் படம் பார்த்திருக்கிறார்கள்.

எந்தப் படம் பார்த்தாலும் அதைப் பற்றிக் காரசாரமாக சுகந்தி விவாதிப்பாள். அவளுக்குச் சினிமாவில் பாட்டே இருக்கக் கூடாது. இங்கிலீஷ் படத்தில் பாட்டுக் கிடையாது என்று சொல்வாள். பார்த்த படத்தைத் திரும்பப் பார்க்க கூடாது என்பது சுகந்தியின் முடிவு. ஆனால் மல்லிகாவிற்குப் பார்த்த சினிமா இரண்டு நாளில் மறந்துவிடும். ஆகவே அதைப் புதிய படம் போலவே திரும்பப் பார்ப்பாள்.

மல்லிகாவின் தாத்தா வீடிருந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது கோவிலடி மைதானத்தில் திரைக்கட்டி இலவசமாகச் சினிமா காட்டுவார்கள்.  வெட்டவெளியில் அமர்ந்து காணும் போது சினிமா பார்த்த அனுபவமேயிருக்காது.

சுகந்தியின் அம்மா பூரணி மேத்ஸ் டீச்சர். அவளும் சினிமா விரும்பி பார்ப்பாள். ஆனால் பழைய படங்களை மட்டுமே பார்ப்பாள். அரிதாகவே பழைய படங்கள் தியேட்டருக்கு வருவது வழக்கம். அதற்கு ஒன்றிரண்டு போஸ்டர் மட்டுமே ஒட்டியிருப்பார்கள். பூரணி மட்டும் தனியே போய்  மாலைக்காட்சி பார்த்து வருவாள். மற்றபடி  இரவு நேரங்களில் டிவியில் போடும் பழைய படங்களைப் பார்த்து ரசிப்பாள்.

“ ஏன் டீச்சர் நீங்க புதுப்படம் பாக்குறதில்லது“ என மல்லிகா ஒரு முறை கேட்டாள்

“ பழைய படம் எல்லாம் தேனில் ஊறிய நெல்லிக்காய் மாதிரி. அதோட டேஸ்ட்டே தனி. அந்தக் காலப்படம் எல்லாம் கதையை விட்டு விலகாமல் போகும். இப்போ அப்படி யாரும் கதை சொல்றதில்லை. நடிக்கிறதுமில்லை“ என்று பூரணி சலித்துக் கொண்டாள்.  

திரையில் காட்சிகள் ஒடினாலும். சினிமாவிற்குள்ளாக ஒரு தாத்தா மறைந்திருந்து கதையைச் சொல்வது போல மல்லிகா உணர்ந்திருக்கிறாள்.

பழைய காலப் படங்களில் கல்யாணத்திற்காகப் பெண் பார்ப்பது,  நிச்சயம்செய்வது. பத்திரிக்கை அடிப்பது. பத்திரிக்கை கொடுப்பது. மாப்பிள்ளை அழைப்பு. சீர்வரிசைகள் என  விரிவாகக் காட்டுவார்கள். அந்தக் கால மணமேடையில் பெரிய அலங்காரமிருக்காது.  இரண்டே வாழைமரங்கள். எளிமையான கல்யாண மாலைகள். தாலிகட்டும் காட்சியை மட்டும் காட்டுவார்கள்.

ஒரே நேரத்தில் அண்ணன் தம்பி இருவரும் அக்கா தங்கையை ஒரே மேடையில் திருமணம் செய்துகொள்வதாகக் கூட ஒரு படத்தில் பார்த்திருக்கிறாள். ஒரு மாயாஜாலப் படத்தில் ஆடாக மாறிய பெண்ணுக்கு கதாநாயன் தாலி கட்டுவது போன்ற காட்சியைக் கூட பார்த்திருக்கிறாள்.  அதனை மல்லிகாவால் மறக்க முடியவேயில்லை.

சில புதுப்படங்களில் பணக்காரப் பெண்ணுக்குத் திருமணம் நடைபெறும். அவள் மகாராணியைப் போல உடையணிந்து சர்வ அலங்காரத்துடன் நடந்து வருவாள். மாப்பிள்ளை கம்பீரமான குதிரையில் ஊர்வலம் வருவார். வண்ணப்பொடிகளை வீசி இளம்பெண்கள் ஆடுவார்கள்.. மாப்பிள்ளை பொண்ணும் கூடச் சந்தோஷத்தில் சுழன்றாடுவார்கள். இப்படியான காட்சிகளை எல்லாம் பார்க்க மல்லிகாவிற்குச் சந்தோஷமாகவும் ஏக்கமாகவும் இருக்கும்.

பெரும்பான்மை திரைப்படங்களில் கிளைமாக்ஸில் தான் திருமணக்காட்சி இடம்பெறுகிறது. அதுவும். திருமணம் நடப்பதோடு படம் நிறைவுபெறுவதும் உண்டு. வில்லன் தோற்றுப் போனதும் படம் பார்ப்பவர்களில் பலர் வெளியேறி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் மல்லிகா திரையை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருப்பாள்.கடைசியில் திருமணம் நடைபெறும்.  ஏன் இவ்வளவு குறைவாகத் திருமணக் காட்சியைக் காட்டுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டபடி தியேட்டரை விட்டு வெளியேறி நடப்பாள்..

சினிமாவில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண் கழுத்தில் அணிந்துள்ள விதவிதமான தங்க நகைகள், வைரக்கம்மல். நெக்லஸ். கைநிறைய பொன் வளையல்கள். கண்ணைப் பறிக்கும் பார்டர் கொண்ட அடர்வண்ண பட்டுபுடவை. ஜடை அலங்காரம் என அனைத்தும் அவளைப் பிரமிக்கச் செய்யும்.

ஏனோ மணமக்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிடுகிற காட்சி படத்தில் இடம்பெறுவதில்லை.

அதையும் காட்ட வேண்டுமில்லையா.

மணமக்கள் சாப்பிடும் இலையில் என்ன வகையான இனிப்புகள் இருந்தன. என்ன உணவையெல்லாம் சாப்பிட்டார்கள் என்று ஏன் விரிவாகக் காட்ட மாட்டேன் என்று மல்லிகா யோசிப்பாள்.

படத்தில் வரும் கல்யாணப் பெண்ணின் தோழியும் கூட அவ்வளவு அழகாக இருப்பாள். சில படங்களில் கல்யாணத்தில் பாட்டும் நடனமும் ஆரவாரமாக இருக்கும். அப்படி ஒரு கல்யாணத்தைக் கூட அவள் நேரில் கண்டதேயில்லை.

இதையெல்லாம் சினிமா காட்டாமல் போயிருந்தால் பகட்டான, ஆடம்பரமான, பிரம்மாண்டமான திருமணங்கள் நடக்கும் என்றே அவளுக்குத் தெரிந்திருக்காது. சிறுநகரில் வாழ்ந்த அவள் இப்படியான திருமணங்களை கண்டதேயில்லை. சினிமா உருவாக்கிய ஆசைகள். நடைஉடைகள், கேலிச் சொற்கள் எல்லோர் வாழ்விலும் கலந்திருந்தன.

கல்யாணக்காட்சி திரையில் ஒளிரத் துவங்கியவுடன் மல்லிகா உடல் எடையற்றுப் போனது போல உணருவாள். தான் ஒரு ஈயாக மாறிவிட்டது போல நினைப்பாள். அந்த ஈ பறந்து போய்த் திரையில் ஒட்டிக் கொள்ளும். கதாநாயகி அணிந்திருந்த கல்யாண மாலையில் ஈ அமர்ந்து கொள்ளும். அவள் கூடவே மணமேடையில் இருக்கும். அது ஒரு வேடிக்கை. விசித்திரமான நெருக்கம். அந்த நேரங்களில் மல்லிகாவிற்கு கூச்சமாகவும் சந்தோஷமாகவும் ஏக்கமாகவும் இருக்கும்.

ஒரு கல்யாணம் நடப்பதை மட்டுமே வைத்து ஒரு முழுப்படத்தையும் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கல்யாணத்திற்குள் எத்தனை எத்தனை கதைகள். நிகழ்ச்சிகள். கோபதாபங்கள். சண்டை சச்சரவுகள் இருக்கின்றன. கல்யாண வீட்டிற்குச் சமையல் செய்வது எளிதா என்ன. மண்டபத்தில் வேலைசெய்கிறவர்களின் கஷ்டங்களை, காதலை  யார் தான் சொல்வார்கள். அந்தக் காலத்தில் கல்யாணத்திற்கு வர முடியாமல் போன பெரியவர்களின் வீடுகளுக்குப் போய்க் காலில் விழுந்து ஆசி வாங்கி வருவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறாள். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. அவளது கல்யாணத்தில் அப்படி நடந்தது.

சினிமாவில் நடப்பது போல மல்லிகாவின் திருமணம் ஆடம்பரமாக நடக்கவில்லை. அது எளிமையாக சுப்ரமணிய சாமி கோவிலில் வைத்து ஒரு புதன்கிழமை காலை நடந்தேறியது.

கல்யாணத்தன்று பட்டுரோஸ் நிறத்தில் காதி சில்க் புடவை கட்டியிருந்தாள். வீட்டிலிருந்து நடந்து போய்விடும் தூரத்தில் கோவில் இருந்த காரணத்தால் மணப்பெண்ணான அவள் கழுத்தில் மாலையோடு நடந்தே சென்றாள். கூட மூன்று பெண்கள் நடந்து வந்தார்கள். சாலையில் போகிறவர்கள் அவளை கவனித்தது மாதிரி தெரியவில்லை.

மாப்பிள்ளை சேகர் தாடியைக் கூட எடுக்கவில்லை. லேசாக ட்ரிம் பண்ணியிருந்தான். பட்டுவேஷ்டி சட்டை அணிந்திருந்தான். கையில் கறுப்பு நிற சைனா வாட்ச். மாப்பிள்ளைக்கு அரைப்பவுனில் மோதிரம் போட்டார்கள். திருமணத்திற்காக அவளுக்கு ஒன்பது பவுன் நகை போட்டார்கள்.

கல்யாணத்தின் போது மணப்பெண்ணின் கழுத்து நிறையட்டுமே எனக் கவரிங் நகைகள் நிறைய வாங்கி வந்து அணிவித்திருந்தார்கள்.

சினிமாவில் வரும் மணப்பெண்ணைப் போலத் தங்க நிற செருப்பு அணியவில்லை. ஹீல்ஸ் இல்லாத செருப்பு. அதுவும் பூப்போட்ட தட்டையான செருப்பு வாங்கியிருந்தாள்.

கோவிலில் கல்யாணம் என்பதால் ஐம்பது பேருக்கும் குறைவாகவே வந்திருந்தார்கள். பக்கத்தில் இருந்த ரத்னவிலாசில் மதியச் சாப்பாடு சொல்லியிருந்தார்கள். சாதம், சாம்பார், ரசம், மோர், ஒரு கூட்டு, ஒரு பொறியல், அப்பளம், சேமியா பாயாசம், மட்டுமே. அதைச் சாப்பிடும் போது அவளுக்கு அழுகை வருவது போலிருந்தது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

சேகர் அந்தச் சாப்பாட்டையும் ஆசையாகச் சாப்பிட்டான். உச்சிவெயிலோடு அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறி சேகரின் தாத்தா வீட்டிற்கு ஆசி வாங்கப் போனார்கள். அன்று மாலை முரளி ஸ்டுடியோவிற்குப் போய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். திருமணமான இரண்டாம் நாளில் சேகருடன் சினிமாவிற்குச் சென்றாள். அந்தப் படத்தில் திருமணக் காட்சியே இல்லை. சண்டைப்படம்.  இடைவேளைக்குள் ஐந்து சண்டை காட்சிகள் வந்துவிட்டன. அதில் ஒன்று காரில் துரத்தித் துரத்தி சுடுவது. காதைத் துளைக்கும் உரத்த சப்தம். கார்களின் அதிரடி மோதல். அவளால் திரையை பார்க்க முடியவில்லை. இடைவேளையின் போது சேகரிடம் கேட்டாள்

“உங்களுக்குச் சண்டைபடம் தான் பிடிக்குமா“ எனக்கேட்டாள் மல்லிகா

“நம்மாளே இப்படி மிஷின்கன்னை தூக்கிச் சுட முடியுமா. பத்து பேரை அடிக்க முடியுமா. அதான் சினிமாவுல பாத்து ரசிச்சிகிடுறேன்“ என்றான் சேகர்

தனக்குச் சண்டைப்படம் பிடிக்காது என்று அவள் சொல்லவில்லை. மாறாகத் “தலைவலிக்கிறது“ என்றாள்

“அப்போ கண்ணை மூடி தூங்கீரு.. படம் பாக்க வேணாம்“. என்றான் சேகர்

அவள் கண்களை மூடிக் கொண்டு வேறுபடத்தில் தான் பார்த்த கல்யாணக் காட்சி ஒன்றை நினைத்துக் கொண்டாள். வீடு திரும்பும் போது சேகர் சொன்னான்

“தீபாவளி அன்னைக்கு ஒரே நாள்ல நாலு படம் பாத்துருக்கேன். அதெல்லாம் இப்ப குறைஞ்சி போச்சு. “

அவள் ஒரு தீபாவளி அன்று கூடச் சினிமா பார்த்ததில்லை., வீட்டு வேலை, சமையல், விளக்கேற்றுவது, பூஜை என ஒயாத வேலைகள் அழுத்திக் கொண்டிருக்கும்

திருமணத்தின் முன்பு வரை மீன்மார்கெட்டில் வேலை செய்து கொண்டிருந்த சேகர் ஆறு மாதங்களின் பின்பு துபாயில் வேலை கிடைத்துப் போனான்.  வாரம் ஒரு நாள் போனில் அவளுடன் பேசினான். அதில் என்ன படத்தை எவ்வளவு விலையுள்ள டிக்கெட் வாங்கிப் பார்த்தான் என்பதை மறக்காமல் சொன்னான்.

ஆண்டிற்கு ஒருமுறை சேகர் துபாயிலிருந்து வந்து பத்து பதினைந்து நாட்கள் இருப்பான். அவன் ஊருக்கு வரும் ஒவ்வொரு முறையும் புதுப்பொருள் ஒன்று அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. இப்போது அவர்கள் வீட்டில் டிவி, வாஷிங்மிஷின். மிக்சி கிரைண்டர் என எல்லாமும் இருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கை அவளை மகிழ்ச்சிப்படுத்தவில்லை. அதே நேரம் கவலை அளிக்கவுமில்லை. தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் எண்ணெய் சொட்டினைப் போலிருந்தாள்.

மூன்று வருஷங்களுக்குப் பிறகு சித்ரா பிறந்தாள். அதன்பிறகு குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கே மல்லிகாவிற்கு நேரம் சரியாக இருந்தது. ஆகவே சினிமாவிற்குப் போவது குறைந்து போனது. ஆனால் பக்கத்துவீட்டு பெண்களுடன் சினிமாவைப் பற்றி பேசுவது நிற்கவில்லை.

எந்தப் படத்தில் எந்த நடிகை திருமணக்காட்சியின் போது என்ன நிறத்தில் பட்டுச்சேலை கட்டியிருந்தாள் என்பது மல்லிகாவிற்கு நன்றாக நினைவிலிருந்தது. எப்போதாவது ஜவுளிக்கடைக்குப் போகும் போது சும்மாவாவது அந்த நிறத்தில் சேலை இருக்கிறதா என விசாரிப்பாள். விலையைக் கேட்டதும் கையால் தொடுவதற்கே கூச்சமாக இருக்கும். ஆனாலும் கண்ணாடி முன்பாக நின்று கொண்டு தனது தோள்மீது அந்தச் சேலையைப் போட்டு பார்த்துக் கொள்வாள். அப்போது வரும் பெருமூச்சின் அர்த்தம் அருகில் இருக்கும் யாருக்கும் புரியாது.

ஒருமுறை சினிமா தியேட்டருக்குக் கையளவு அரிசியைச் சிறிய துண்டுக்காகிதத்தில் மடித்துக் கொண்டு போனாள். திரையில் கல்யாணம் நடக்கும் போது மணமக்களை நோக்கி அட்சதை வீசினாள். அந்தத் திருமணத்திற்குள் தானும் கலந்துவிட்டது போன்ற மகிழ்ச்சியை அது உருவாக்கியது. ஆனால் முன்வரிசையில் இருந்த பெண் அவளை முறைத்துப் பார்த்து ஏதோ திட்டினாள்.

சினிமா பார்த்துவிட்டு திரும்பும் ஒவ்வொரு இரவிலும் சினிமாவில் வந்தது போன்ற திருமணம் தனக்கு நடப்பதாகக் கனவு வந்துவிடாதா என ஏங்குவாள். ஒரு நாளும் அப்படிக் கனவு வந்ததில்லை. நாம் விரும்பி ஏன் ஒரு கனவை வர வழைக்க முடியவில்லை என்று அவளுக்கு ஆத்திரமாக இருந்தது.

ஒருமுறை அஜந்தா தியேட்டரில் பார்க்க போன போது டிக்கெட் கவுண்டர் திறக்கவில்லை. வேப்பமரத்தடியில் காத்திருந்த போது கையில் வயர்கூடையுடன் வந்த ஒரு நடுத்தரவயதுப் பெண் நிழலடியில் அமர்ந்து டிபன் பாக்ஸைத் திறந்து அதிலிருந்த இட்லிகளைச் சாப்பிட ஆரம்பித்தாள். சினிமா தியேட்டருக்கு வந்து சாப்பிடும் பெண்ணை வியப்போடு பார்த்தபடி இருந்தாள் மல்லிகா. அந்தப் பெண் பாதிச் சாப்பாட்டில் டிபன் பாக்ஸை மூடிவைத்துவிட்டு அவளை நோக்கிச் சொன்னாள்

“ பாதிப் படத்துல எனக்குப் பசிக்கும். அப்போ மிச்ச இட்லியை சாப்பிட்டுக் கிடுவேன்“.

அதைக் கேட்க மல்லிகாவிற்குச் சிரிப்பாக வந்தது.

அந்தப் பெண் தியேட்டரின் தண்ணீர் குழாயில் கைகழுவிவிட்டு அவளருகில் வந்து உட்கார்ந்து கொண்டபடியே சொன்னாள்

“ இந்தப் படத்தை நாலாவது தடவையா பாக்குறேன். எங்க ஊரு புதுப்பட்டி. சினிமா பாக்குறதுக்காக வந்துருக்கேன். “

“ படம் நல்லா இருக்கா“

“ கதை சரியில்லை. ஆனா. ஒரு சீன்ல ஹீரோவோட அம்மா சோற்றை உருண்டை உருட்டி மூணு பிள்ளைகளுக்கும் கொடுக்குது. எங்கம்மாவும் அப்படித் தான் செய்யும். அதைத் திரையில பாக்கும் போது செத்து போன எங்க அம்மாவைப் பாக்குற மாதிரியே இருக்கு.. அந்த நடிகைக்கும் எங்க அம்மா ஜாடை. எனக்கும் ஒரு உருண்டை சோறு கிடைக்காதானு திரையைப் பாத்து கையை நீட்டிக்கிட்டு இருப்பேன்“ எனச் சிரித்தாள்

“ எனக்குக் கல்யாண காட்சி வந்தா உடம்பு சிலிர்த்து போயிடும்.“ என்றாள் மல்லிகா

“ நீயும் என்னைப் போலத் தானா“ என அந்தப் பெண் சிரித்தாள்

அப்படிச் சொல்லிச் சிரித்தது மல்லிகாவிற்குப் பிடித்திருந்தது.  மல்லிகா தனது நினைவில் வைத்திருந்த சினிமா திருமணங்களை ஆசையாக விவரிக்க ஆரம்பித்தாள். பேசப்பேச இருவரின் வயதும் கரைந்தோடிக் கொண்டிருந்தது.

அவர்கள் ஒன்றாக அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்து படம் பார்த்தார்கள். பாதிப் படத்தில் அவள் தனது டிபன் பாக்ஸை திறந்து மீதமிருந்த இட்லியை பிய்ந்து இட்லிப்பொடியில் தொட்டு மல்லிகாவிடம் நீட்டினாள். அதை ஆசையோடு மல்லிகாவும் வாங்கிக் கொண்டு சாப்பிட்டாள். அந்தப் படத்தில் இடம்பெற்ற திருமணக்காட்சியை இருவரும் ஆசையாகப் பார்த்தார்கள். அதைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அந்தப் பெண் சொன்னாள்

“ அருவில குளிச்சிட்டு வந்தது மாதிரி சுகமா இருக்கு “

அந்த அனுபவம் சரிதான் என்பது போல மல்லிகா தலையாட்டிக்கொண்டாள். அந்தப் பெண் தியேட்டரிலிருந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மல்லிகா அவளுடன் பிள்ளையார் கோவில் வரை நடந்து வந்து பால்பண்ணை நோக்கிப் பிரியும் தெருவிற்குள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்

அதன்பிறகு அந்தப் பெண்ணை எந்தத் தியேட்டரிலும் பார்க்க முடியவில்லை. ஆனால் தியேட்டரில் இட்லி சாப்பிட்ட நினைவு மறக்காமலிருந்தது.

இந்த டிசம்பரில் சேகர் துபாயிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த போது அவர்கள் ஒன்றாகச் சினிமாவிற்குப் போனார்கள்.  அதுவும் புதிதாக திறந்திருந்த தியேட்டருக்கு. சிவப்பு நிற குஷன் கொண்ட இருக்கைகள். அகன்ற திரை. ஜில்லிடும் குளிர்ச்சி.  சித்ரா அவளது மடியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

விளம்பரம் ஒன்றில் காட்டப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தைக் காட்டி அதில் தான் துபாயிலிருந்து திரும்பி வந்ததாக சொன்னான் சேகர். அத்தோடு பிளைட்லயும் சினிமா பார்க்கலாம் என்றான்

அப்போது தயங்கி தயங்கி மல்லிகா சொன்னாள்

“சினிமாவுல நடக்கிற கல்யாணம் எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு. நம்ம கல்யாணத்துல நீங்க தாடியை கூட எடுக்கலை.“

“தாடி எடுத்தா அசிங்கமாத் தெரிவேன். லட்சம் லட்சமா செலவு பண்ணினா தான் கல்யாணமா. தேவையில்லாம பணத்தை வேஸ்ட் பண்ணுறாங்க.  எப்படி நடந்தாலும் எல்லாம் ஒரே கல்யாணம் தான்… நாம எல்லாம் சிம்பிளா தானே கல்யாணம் பண்ணிகிட்டோம் .. இப்போ சந்தோஷமா இல்லையா. அந்தக் காலத்துல எங்க தாத்தா கல்யாணத்துக்கு ஆன செலவு வெறும் நூற்று ஐம்பது ரூவாயாம். எழுதி வச்சிருக்கார். “

“அன்னைக்கு கல்யாண மண்டபம் ஏது. வீட்ல தானே கல்யாணம் நடந்துச்சி. வெத்தலைபாக்கு வச்சி அழைச்சா போதும். யாரு பத்திரிக்கை அடிச்சது “ என்றாள் மல்லிகா

“நம்ம கல்யாணம் பெரிசா நடக்கலைனு உனக்கு வருத்தமா“ என அவளது முகத்தைப் பார்த்துக்கேட்டான் சேகர்

மல்லிகா பதில் சொல்லாமல் திரையை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்

“நம்ம பொண்ணு சித்ரா கல்யாணத்தைப் பெரிசா நடத்தியிருவோம். அதுக்குள்ளே நானும் நாலு காசு பாத்துடுவேன். சினிமாவுல வர்ற மாதிரி சூப்பரா பண்ணிடுவோம்“

அதைக் கேட்டவுடன் அதுவரை அவள் சினிமாவில் பார்த்து ரசித்த திருமணக்காட்சிகள் யாவும் அவளிடமிருந்து விலகி மகளின் திருமணத்தை நோக்கியதாக மாறியது

“இப்போ தான் சித்ராவுக்கு மூணு வயசாகுது. அது கல்யாணம் எப்போ, யார் கூட நடக்கப் போகுதோ“ என்றாள் மல்லிகா

“பாத்துகிட்டு இருக்கும் போதே வருஷம் ஓடிப்போயிடும். இப்பவே நாம நகை வாங்கிச் சேக்க ஆரம்பிக்கணும்பா“ என்றான் சேகர்

“ஆமாம்“ எனத் தலையாட்டினாள் மல்லிகா. பின்பு சேகரிடம் சொன்னாள்

“இப்படியே சினிமா பாத்துத் துட்டை செலவழிச்சிட்டு இருந்தா. நாம என்னைக்கு நகை வாங்குறது. நான் இனிமே சினிமா பாக்க போறதில்லப்பா. சினிமாவுல மழை பெஞ்சா நம்ம தலை நனையவா போகுது. நம்ம பொழப்பை நாம தான் பாக்கணும். “

“படம் போட்டுட்டான். பேசாம இரு“ என்றபடியே சேகர் திரையைக் கவனிக்கத் துவங்கினான்.

மல்லிகா திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக மடியில் உட்கார வைத்திருந்த சித்ராவின் தலையைத் தடவி விட்டபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது திரை வெகுதொலைவு பின்னால் போய்விட்டது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது..

•••

.

0Shares
0