இத்தாலிய ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் படங்களின் பாணியில் துருக்கியில் யில்மாஸ் குனே இயக்கிய திரைப்படம் The Hungry Wolves (1969). பனிப்பிரதேசத்தில் வாழும் சிற்றூரைக் கொள்ளையர்கள் தாக்கிப் பெண்களைக் கவர்ந்து செல்கிறார்கள். பிணையக் கைதிகளாகச் சிலரைப் பிடித்து வைத்துப் பணம் கேட்கிறார்கள். அப்படிக் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் அவர்கள் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு விலை அறிவிக்கிறார். இந்தப் பணியை மேற்கொள்ளும் செர்சே மெமெட்டின் கதையைப் படம் விவரிக்கிறது.

செர்ஜியோ லியோனின் திரைப்படங்களை நினைவுபடுத்தும் கதைக்களன். படமாக்கபட்ட முறையும் பின்ணணி இசையும் லியோனை அதிகம் நினைவுபடுத்துகிறது. படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக யில்மாஸ் குனே நடித்திருக்கிறார்
அகிரா குரோசாவா இயக்கி, தோஷிரோ மிஃபுனே நடித்த ‘யோஜிம்போ ‘ படத்தின் தாக்கத்தையும் காணமுடிகிறது. இரண்டிலும் கொள்ளையர்களிடமிருந்து பெண்ணை மீட்கும் காட்சி இடம்பெறுகிறது. குற்றவுலகினுள் நுழையும் தனிப்போராளி இடம்பெறுகிறான். தாக்குதல் நடக்கும் முறை மற்றும் தீப்பற்றி எரியும் காட்சி ஒன்று போலவேயிருக்கிறது.

குளிர்காலம் தொடங்கியதும், ஓநாய்களும் கொள்ளையர்களும் கிராமங்கள் மீது படையெடுக்கிறார்கள். . ஓநாய்கள் இரக்கமற்றவை. அவை காயம்பட்ட இன்னொரு ஓநாயைத் தின்னக்கூடியவை. அது போன்ற செயலைத் தான் கொள்ளையர்களும் மேற்கொள்கிறார்கள். ஓநாய்கள் அலைந்து திரிவதைப் போலவே பனியில் அலைந்து திரிகிறார்கள். கூட்டமாக வேட்டையாடுகிறார்கள். என இப்படம் குறித்துக் குனே குறிப்பிடுகிறார்.
கடுமையான, பனி மூடிய கிழக்கு அனடோலிய எல்லைப்பகுதி. குறைவான வீடுகள் கொண்ட கிராமம். ஆள் அரவமேயில்லாத நீண்டவெளி. எங்கிருந்தோ ஒலிக்கும் எனியோ மோரிகோனின் இசைக்கோர்வை எனப் படம் மிக அழகாகத் துவங்குகிறது.
படத்தின் தனிச்சிறப்பு முடிவற்ற பனிப்பிரதேசத்தினுள் எடுக்கபட்ட அழகான காட்சிகள். அதுவும் பனியினுள் மெமேட் செல்லும் காட்சி . கொள்ளையர்கள் நடந்து அலைவது, மற்றும் பனியினுள் குழிபறித்துத் தாக்கும் காட்சி.
பனியில் கால்புதைய அவர்கள் நடக்கும் போது நமக்கும் சில்லிடுகிறது. ஒளிப்பதிவாளர் அலி உகுரின் ஒளிப்பதிவு அபாரமானது
கொள்ளையர்களிடமிருந்து ஒரு இளம்பெண்ணை மெமெட் மீட்டு அவளது குடும்பத்திடம் ஒப்படைக்கிறான். குடும்பம் அவளை ஏற்க மறுக்கிறது. போக்கிடம் இல்லாத அந்தப் பெண் மெமெட்டிடம் கதறி அழும் போது யார் மோசமானவர் என்ற கேள்வி எழுகிறது.
இன்னொரு காட்சியில் அவளது கணவனிடம் தான் மெமெட் தனது கடந்தகால வாழ்க்கை குறித்த உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறான். அந்தப் பெண்ணை ஏற்கச் சொல்லி வாதிடுகிறான்.

யில்மாஸ் குனே துருக்கி சினிமாவின் முன்னோடி இயக்குநர். சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். அரசியல்காரணங்களுக்காகச் சிறைபட்டவர். நடிகராக அறிமுகமாகி சிறந்த இயக்குநராக உருவானவர். இப்படத்திலும் அவரது நேரடியான அரசியல் நிலைப்பாடு வெளிப்படுகிறது
மெமெட் ஏழு ஆண்டுகளாகத் தேடப்படும் குற்றவாளியாக அலைந்து திரிகிறான். அவனைப் பிடிக்கக் காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிடிபட்டால் அவனைத் தூக்கிலிடுவார்கள். காவல்துறையின் பிடியில் சிக்காமல் தப்பி அலைந்து கொள்ளையர்களை வேட்டையாடி வருகிறான்.
அதற்குக் காரணம் பள்ளி ஆசிரியராக இருந்த அவனது வாழ்க்கை கொள்ளையர்களால் பறிபோனது. அவனது மனைவி கொள்ளையர்களால் தூக்கிச் செல்லப்பட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கொல்லப்படுகிறாள். அதற்குப் பழிவாங்கும் விதமாகக் கொள்ளையர்களைத் தேடிக் கொல்லும் வேட்டையில் இறங்குகிறான்.
ஒரு காட்சியில் மெமெட் தனது கடந்தகால வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறான். அதில், “ எல்லாம் முடிந்துவிட்டது. நான் ஒருபோதும் மறக்க முடியாத அந்த அழகான நாட்கள், என்றென்றைக்குமாகப் போய்விட்டன.. வாழ்க்கை தாங்க முடியாத சுமையாக மாறிவிட்டது; நான் ஒரு ரத்தம் கக்கும் ஆயுதமாக மாறிவிட்டேன்“ என்கிறான்
பனியில் அவன் கொள்ளையர்களைத் தேடிச்சென்று வேட்டையாடும் காட்சிகள் சிறப்பானவை. மளிகைக் கடைக்கு மெமெட் வருகை தரும் போது நடக்கும் நிகழ்வுகளும் இறுதி தாக்குதலும் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன. பசியைத் தவிர அவனிடம் வேறு உணர்ச்சிகளேயில்லை. முடிவில் அவன் தனது பசியைப் போக்கிக் கொண்டு நெருப்பின் வருகைக்காகக் காத்திருக்கிறான்.
பனிக்கரடிகள் செல்வது போலக் கொள்ளையர்கள் அலைந்து திரிகிறார்கள். அடிபட்ட விலங்கைப் போலவே மெமெட் நடந்து கொள்கிறான். அவன் வேட்டையாடும் வேகமும் அப்படியே இருக்கிறது. தன்னால் காப்பாற்றபட்ட பெண்ணைப் பாதுகாக்கும்படி விட்டுச் செல்லும் காட்சியில் மட்டுமே அவனது ஈரமனது வெளிப்படுகிறது.
கொள்ளையனால் தூக்கிச் செல்லப்பட்ட பெண் தன்னைக் கொன்றுவிடும்படி முறையிடும் போது உன்னிடம் பணம் இருக்கிறதா என மெமெட் கேட்கிறான். அவள் இல்லையென்றும் எனது துப்பாக்கி பணமில்லாமல் வெடிக்காது என மறுத்துப் போகிறான்.
யில்மாஸ் குனே தனது சிறுவயதில் சினிமா தியேட்டருக்குச் சைக்கிளில் படச்சுருளை கொண்டு போகும் வேலையினைச் செய்தவர். அப்படிதான் சினிமாவின் மீதான அவரது ஆசை துவங்கியது. அந்த நாட்களில் திறந்தவெளி திரையரங்கில் நிறையத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார்
குனே அங்காராவுக்குச் சென்று பொருளாதாரம் படித்தார். சினிமா ஆர்வம் காரணமாகப் படிப்பைக் கைவிட்டு இயக்குனர் அதீஃப் யில்மாஸை சந்தித்துத் தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார். அவரது உதவியாளராகப் பணியாற்றியதுடன் கதைகள் எழுதவும் துவங்கினார். நடிகராகத் திரைப்படங்களில் பங்களித்த அவர் ஆரம்பக் காலங்களில் சாகசப்படங்களை எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
1960களின் பிற்பகுதியில் சமகாலப் பிரச்சனைகளை, குறிப்பாக அரசியல் சூழலை விமர்சிக்கும் படங்களை இயக்கத் துவங்கினார். அதன் காரணமாகச் சர்வதேச சினிமா அரங்கில் பெரிதும் கவனிக்கப்பட்டார்.
1970 இல் அவர் இயக்கிய உமுத் (நம்பிக்கை ) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, “துருக்கி சினிமாவின் முதல் யதார்த்தமான திரைப்படம்” என்று அதனைக் குறிப்பிடுகிறார்கள். சில காலம் சிறைவாழ்க்கையை அனுபவித்த குனே அரசியல் காரணங்களுக்காகத் தேசத்தை விட்டு வெளியேறி பாரீஸ் நகரில் வசிக்கத் துவங்கினார். உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 47 வயதில் இறந்து போனார்.
படத்தின் கடைசியில் காவலர்களால் முற்றுகையிடப்படும் போது மெமேட் அமைதியாகத் தனக்குப் பிடித்தவற்றை உண்ணுகிறான். அப்போது அவனிடம் அவசரமில்லை. தனது முடிவைத் தானே தேடிக் கொள்கிறான். பனியினுள் அவனது நினைவுகளும் புதைந்துவிடுகின்றன
..