மிலாஸ் போர்மனின் அமேடியஸ் திரைப்படம் எனக்கு மிகவும் விருப்பமானது, 1984ல் வெளியான இப்படத்தை இருபத்தைந்து தடவைக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன், உலக சினிமாவில் இது ஒரு இசைக்காவியம், எட்டு ஆஸ்கார் விருதுகள் உள்ளிட்ட நாற்பது விருதுகளைப் பெற்ற படமிது,
இசைமேதை மொசார்ட்டின் வாழ்வினை விவரிக்கும் இப்படம், திரைக்கதை எழுத விரும்புகின்றவர்களுக்கு ஒரு ஆதாரப்பாடம் என்றே சொல்வேன்,
ஒரு இசை ஆளுமையைப் பற்றிய படத்தை பீட்டர் ஷெபர்ஸ் இது போன்ற திரைக்கதை வடிவத்தில் எழுதியிருப்பது அவரது தனித்திறனையே காட்டுகிறது, மொசார்ட்டின் வாழ்வினை விவரிக்கும் இந்தப் படம் அவரை மிகவும் வெறுத்த, மூத்த இசைக்கலைஞரான அன்டோனியோ சலேரியின் தற்கொலையில் துவங்குகிறது, மனக்குழப்பங்களுக்கு உள்ளான சலேரி மொசார்டின் சாவிற்குத் தானே பொறுப்பு என்று தனது கழுத்தை அறுத்துக் கொள்கிறார், அவரது ஒலத்தில் துவங்கி நினைவோட்டத்தின் வழியே மொசார்ட்டின் மேதமையை கொஞ்சம் கொஞ்சமாக படம் வெளிப்படுத்துகிறது
பொதுவாக வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட்ங்கள் நேர்கோட்டில் தான் படமாக்கபடும், படத்தின் துவக்கத்திற்காக ஏதாவது ஒரு முக்கியப் புள்ளியை மையமாகக் கொள்வார்கள், காந்தி படத்தின் துவக்கம் அவரை கோட்சே துப்பாக்கியால் சுடுவதில் துவங்குவது ஒரு உதாரணம்.
இப்படம் ஒருவரின் புகழைச் சொல்வதற்கு அவரை வெறுத்த ஒருவரின் வழியே கதையை சொல்வது என்ற புதிய சொல்முறையை அறிமுகம் செய்கிறது, சலேரியின் ஒலத்தை மொசார்ட் என்ற ஆளுமையின் வருகையால் உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்துவந்த இசைக்கலைஞர்களுக்குள் ஏற்பட்ட ஆதங்கத்தின், இயலாமையின் வெளிப்பாடாகவே கருதுகிறேன்
தனக்கான இடம் கிடைத்த போதும் இன்னொருவரின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாத மனதோடு தான் கலைஞர்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள், அது ஒருவிதமான மனச்சிக்கல், அதே நேரம் அவர்கள் தனது படைப்பை விடவும் சிறந்த படைப்பை உள்ளுற விரும்புகிறார்கள், அதன் மேன்மையை ருசிக்கிறார்கள், அதைப் படைத்த கலைஞனைத் தான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
இப்படத்திலும் அது தான் நடக்கிறது, வியன்னாவின் அரண்மனை இசைக்கலைஞராக உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள சலேரிக்கு சிறுவனான மொசார்ட்டின் வருகை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை, ஆனால் அவனது இசைத்திறமை தனக்கு ஏன் இல்லாமல் போனது என்ற அவரது கேள்வி அவரது மனதை சித்ரவதை செய்யத் துவங்குகிறது
ஒருவகையில் அவர் மொசார்ட்டின் வழியே தன்னை அறியத் துவங்குகிறார், தனது கலையின் பலவீனத்தை, போதாமையை மொசார்ட்டின் வருகையால் தான் உணர்கிறார், மொசார்ட் மகத்தான கலைஞன் என்பது அவரை நிம்மதியற்று போகச் செய்கிறது, அந்த தருணத்தில் இருந்து அவர் தன்னை வெறுக்க ஆரம்பிக்கிறார், அதன் உச்சபட்சமே அவரது தற்கொலை,
உலக சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு திரைப்பாத்திரம் அன்டோனியோ சலேரி, அந்தக் கதாபாத்திரத்திற்கு திரையில் உயிரூட்டிய நடிகர் முர்ரே ஆபிரகாம், அவர்கள் கண்கள் நடிக்கின்றன, உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு பேசும் முறை, மொசார்ட்டை எதிர்கொள்ளும் போது காட்டும் முகபாவம், இயலாமையில் அவர் ஏற்படுத்தும் ஒலம் என்று அற்புதமாக நடித்திருக்கிறார்
ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டைப் போல, கிங் லியரைப் போல, மெக்பெத்தைப் போல மனக்குழப்பமும், ஆசையும், வீழ்ச்சியும் கொண்ட மகத்தான கதாபாத்திரமாக சலேரி உருவாக்கபட்டிருக்கிறார்,
அமேடியஸ் படம் முழுவதும் சலேரி மொசார்ட்டை வெறுக்கிறார், ஆனால் அவரது இசையை ரகசியமாக ஆராதிக்கிறார், இவ்வளவிற்கும் மொசார்ட் காலத்தில் அவரை விட பிரபலமாக விளங்கியவர் சலேரி, அவரது ஒபரா நிகழ்ச்சிகளுக்கு வியன்னாவில் பெரிய வரவேற்பு இருந்தது, ஆனால் ஒரு சிறுவன் தனது அசாத்திய திறமையால் அவரை விடப் புகழ்பெற்றுவிட்டதோடு அவரையும் மயக்கி ரசிகனாக்கி விட்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை
யோசித்து பார்த்தால் சலேரி என்பது ஒரு குறியீடாகவே தோன்றுகிறது, இசையில் மட்டுமில்லை,எல்லாத்துறைகளிலும் சலேரிகள் இருந்து கொண்டேயிருக்கிறார்கள், அவர்கள் தங்களது துறையில் புதிதாக உள்ளே நுழைந்து தன்னை விட உயர்ந்து செல்லும் இளைஞனை வெறுக்கிறார்கள், அந்த வெறுப்பை அவர்கள் புன்னகை படர்ந்த முகத்தோடு காட்டிக் கொள்கிறார்கள், அந்தப் பாசங்கு அற்பத்தனமானது,
உண்மையில் அவர்கள் என்றுமே முதலிடத்தில் இருக்க ஆசைப்படுகிறார்கள், ஆனால் மகத்தான திறமை எவரிடமிருக்கிறதோ அவர் வென்றே தீருவார் என்ற உண்மை அவர்களை உறுத்துகிறது, இன்னொரு பக்கம் தங்களால் அடையமுடியாத திறமையை கடவுள் ஏன் இன்னொருவருக்கு கொடுத்துவிட்டார் என்று உள்ளுர புலம்புகிறார்கள், இயலாமையை மறைத்துக் கொள்ள மற்றவரை வெறுக்கவும் புலம்பவும் துவங்குகிறார்கள்
சலேரி இப்படத்தின் ஒரு காட்சியில் சொல்கிறார்
என்னுடைய அப்பா ஒரு வணிகர், அவர் கடவுளிடம் தனது வணிகம் நன்றாக நடக்கும்படி பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது நான் கடவுளிடம் என்னை ஒரு இசைக்கலைஞராக உருவாக்கும்படியாக மன்றாடினேன், கடவுளின் புகழை இந்த உலகமெல்லாம் பாடும் இசைகலைஞராக என்னை உயர்த்தும் படி கடவுளிடம் வேண்டினேன், கடவுள் என் குரலுக்குச் செவி சாய்த்து என்னை புகழ்பெற்ற இசைக்கலைஞராக உருவாக்கினார், ஆனால் எனக்கு அளிக்காத திறமையை இன்னொருவருக்கு அளித்து அவர் முன்னே என் இசை மங்கிப்போகும்படியாக கடவுள் ஏன் செய்கிறார் என்று தான் புரியவில்லை, கடவுளின் இந்த மௌனத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,
இது சலேரியின் குரல் மட்டுமில்லை, தன்னைக் கடந்து செல்லும் திறமை வாய்ந்த இளைஞனைப் பற்றி மூத்த கலைஞர்களின் மனதில் ஒலிக்கும் குரல் இதுவே,
மொசார்ட்யின் இசை வெற்றி அடையும் போதெல்லாம் அது தன்னை பார்த்து கடவுள் கேலியாக சிரிப்பதாகவே சலேரி உணர்கிறார், அது ஒரு சுயவெறுப்பு, இது மொசார்ட் மீது மட்டும் அவருக்கு உண்டாகவில்லை, அவரது காலத்தின் முக்கிய இசைக்கலைஞர்கள் அனைவர் மீதும் அவருக்கு இருந்திருக்கிறது, அவர்களை வெறுக்கும் அதே நேரம் உள்ளுற அந்த இசையைக் கேட்கவும் விரும்புகிறார், ரகசியமாக யாரும் அறியாதபடியே மாறுவேஷத்தில் அந்த இசை நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராகப் போய் ரசிக்கிறார், மற்றவர்களின் உயர்வான இசை அவருக்கு தீராத மனஉளைச்சலைத் தருகிறது
சிருஷ்டியின் தோல்வி ஏற்படுத்தும் வலியைப் போல வேறு எதுவும் கலைஞனுக்கு வலி தருவதில்லை, பணம், புகழ், அந்தஸ்து என யாவிலும் மேம்பட்டு இருந்த போது தன்னை விட மேலான சிருஷ்டி கொண்ட ஒருவனை நேசிக்க முடியாமல் போவது தான் கலைஞனின் இயல்பு, சலேரி அதன் கச்சிதமான வடிவமாக இருக்கிறார்,
சலேரி மொசார்ட்டை சந்திக்கும் முன்பாகவே அவனைப்பற்றி கேள்விபட்டிருக்கிறார், நான்கு வயதிலே இசை மேதையாக திகழ்ந்த சிறுவன் அரண்மனைக்கு வந்து என்ன செய்துவிடப் போகிறான் என்ற ஏளனம் அவருக்குள் இருந்தது, ஆனால் மொசார்ட் ஒரு பிறவி மேதை, விளையாட்டுத்தனமும் வேடிக்கைகளும் கொண்டிருந்த போதும் இசையை வாசிக்க துவங்கியதும் அவன் இசைக்கடவுளைப் போல ஆகிவிடுகிறான், முன்பே எழுதி முடித்து மண்டைக்குள் இருந்த இசையை கைவிரல்கள் வழியாக அவன் வெளிப்படுத்துகிறான், அதில் ஒரு துளி கூட கவனமற்று உருவாக்க படவில்லை, அவனது முயற்சியே இல்லாமல் இசை தானாக வெளிப்படுவது போல அத்தனை இயல்பாக எப்படி படைப்பாற்றலை மேற்கொள்ள முடிகிறது என்று சலேரி குழப்பமடைகிறார்
அவரது மனதின் குரலாகவே இந்த வசனம் ஒலிக்கிறது
This man had written his first concerto at the age of four; his first symphony at seven; a full scare opera at twelve. Did it show? Is talent like that written on the face?”
உண்மையில் சலேரி மனதிற்குள் மொசார்ட்டை ஆராதிக்கிறார், மொசார்டைக் காதலிக்கிறார், அவர் தானும் ஒரு மொசார்ட் ஆக விரும்புகிறார், ஆனால் அது இயலாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும், அந்த ஆசையே வெறுப்பாக உருமாறுகிறது, அவர் தன்னை விட உயர்வான இசைக்கலைஞனான மொசார்டை கொல்ல விரும்புகிறார், அவன் இறந்து போனால் அந்த இறுதிச் சடங்கில் அவனுக்கான மரண இசையை தானே நிகழ்த்தப் போவதாக மனதில் ஒத்திகை பார்க்கிறார், அந்த நிமிசம் மொசார்டின் சாவு மட்டுமே தனது இசையின் உன்னதநிலையை வெளிப்படுத்தும் தருணம் என்று அவருக்குப் புரிகிறது,
ஆனால் ஒரு மனிதனைக் கொல்வது எளிதானதில்லை, அதைப் பற்றி கற்பனை செய்ய மட்டுமே முடியும், அந்தக் கற்பனை அவரை மகிழ்வூட்டுகிறது, தான் நேசிக்கின்ற ஒருவரைக் கொல்வதும் தன்னை அழித்துக் கொள்வதும் ஒன்று தானே, அதை எப்படி நிகழ்த்த முடியும் என்றும் வேதனைப்படுகிறார்
ரகசியமாக மொசார்ட்டின் இசைக்குறிப்புகளை திருடிவந்து படித்து பார்க்கிறார், பியானேவின் கட்டைகளை மொசார்ட் தொடுவது போலத் தொட்டுப் பார்க்கிறார், எதனாலும் அவரால் மொசார்ட் ஆக முடியவில்லை, மொசார்ட் ஒரு நோயை போல அவரது நரம்புகளை பலவீனமாக்குகிறான், தூக்கத்தைக் கெடுக்கிறான், கனவுகளில் கூட நிம்மதியற்று போகச் செய்கிறான், தனது இசையில் இல்லாத பெருங் கருணையும் அன்பும் மொசார்ட்டின் இசையில் ததும்புவதை சலேரி நன்றாகவே உணருகிறார்
“I looked on astounded as from his ordinary life he made his art. We were both ordinary men, he and I. Yet from the ordinary he created Legends–and I from Legends created only the ordinary!”
ஒருவனின் கலைமேதமை மற்றொரு கலைஞனை துன்புறுத்தக்கூடியது என்பது தான் வரலாற்றின் காணக்கூடிய உண்மை, அது தான் சலேரியிடமும் ஏற்படுகிறது
அவர் மொசார்ட்டைச் சந்தித்த போது தனது வியப்பைக் காட்டிக் கொள்வதில்லை, அது ஒரு தந்திரம், அந்த தந்திரத்தை அவர் வெற்றிகரமாக நடித்து விடுகிறார், ஆனால் மொசார்ட் சலேரி மீது கொண்டிருந்த மதிப்பை நேரடியாகவே வெளிப்படுத்துகிறான், அது வெறும் முகஸ்துதிக்காக சொல்லப்படுவதாகவே சலேரி நம்புகிறார், மொசார்டை சந்தித்துவிட்டு திரும்பும் சலேரியிடம் கத்ரினா அவர் எப்படியிருக்கிறார் எனக் கேட்கிறாள்
அதற்கு சலேரி சொல்லும் பதில் அற்புதமானது
தோற்றமும் திறமையும் எப்போதும் ஒன்றிணைந்து இருப்பதில்லை கத்ரீனா
தோற்றத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை, திறமையை மட்டும் தான் ரசனை கொண்ட பெண்கள் விரும்புகிறார்கள்
என்று கத்ரினா சொல்கிறாள்
ஒரு இடத்தில் மொசார்ட் சொல்லும் பதிலும் கலைஞனின் புறத்தோற்றம் மற்றும் அவனது அன்றாடச் செயல்பாட்டிற்கும் அவனது படைப்பிற்குமான வேறுபாட்டை அழகாக விளக்குகின்றன
மொசார்ட் : Forgive me, Majesty. I am a vulgar man! But I assure you, my music is not.
திரைப்படத்தில் உருவாக்கபட்ட சலேரிக்கும் உண்மையாக வாழ்ந்த சலேரிக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்,
1750ல் இத்தாலியில் பிறந்த அன்டோனியோ சலேரி சிறுவயதிலே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், வீட்டில் தனது சகோதரனுடன் சேர்ந்து இசை வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார், பத்துவயதில் ஒரு இசைநிகழ்ச்சியில் கல்நது கொள்ள வீட்டை விட்டு ஒடிப் போனார், நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்த அவரை பெற்றோர் ஒரு அறையில் தள்ளிப்பூட்டி ஒருவார காலம் பட்டினி போட்டார்கள், மொசார்டின் அப்பா அவரை இசைக்கலைஞராக மாற்றுவதை தனது முழுநேர வேலையாக வைத்திருந்தார், ஆனால் சலேரியின் அப்பாவிற்கோ இசையே பிடிக்காது.
தேவாலயத்திற்கு செல்லும் நாளில் அங்கு வாசிக்கபடும் இசையை ஆழ்ந்து கேட்டு அறிந்து தனது ரசனையை வளர்த்துக் கொண்டார் சலேரி, இப்படித் தொடர்ச்சியாக இசையில் மிகுந்த நாட்டம் கொண்டு முறைப்படி அதைக் கற்றுக் கொண்ட சலேரி நாற்பதுக்கும் அதிகமான ஒபரா எழுதியிருக்கிறார், வியன்னாவின் அரச சபையில் முக்கிய இசைக்கலைஞராக இருந்திருக்கிறார்,
24 வயதிலே புகழ்பெறத்துவங்கி மன்னரின் விருப்பத்திற்குரிய இசைக்கலைஞராக கௌரவிக்கப்பட்டார் சலேரி, அரண்மனையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இசை அமைப்பது, இளவரசர்களுக்கு இசை கற்றுதருவது, சபையில் இசை வாசிப்பது என்று நாட்டின் உயர்ந்த ஸ்தானத்தில் சலேரி இருந்தார்
இசை வரலாற்றில் தான் என்றும் போற்றப்படும் உன்னதமான இடத்தை அடைந்துவிட்டோம் என்றே சலேரி நம்பினார், அந்த நம்பிக்கையை பொய்யாக்கினார் மொசார்ட், ஒரு சூறாவளி போல அவனது இசை முன்பிருந்த போலித்தனமான இசையைக் காலி செய்தது.
மொசார்டின் இசையை கேட்ட மக்கள் சந்தோஷ மிகுதியால் கண்ணீர் சிந்தினார்கள், அவனது இசை நிகழ்வு நடக்கும் அரங்கில் கடவுளும் ஒரு பார்வையாளராக அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நம்பினார்கள், மொசார்ட் ஒரு இசைமாயாவி, மைடாஸ் மன்னன் தொட்டதை எல்லாம் தங்கமாக்கியது போல மொசார்ட்டின் விரல்பட்ட அத்தனையும் உன்னத இசையாகியது, தனது திறமையை மொசார்ட் நன்றாக உணர்ந்திருந்தார்
படத்தில் ஒரு வசனம் இடம்பெறுகிறது
Count Von Strack: Mozart, you are not the only composer in Vienna.
Mozart: No. But I’m the best!
தனது திறமை குறித்து மொசார்டிற்குள் இருந்த இந்த உறுதியான நிலைப்பாடு தான் சலேரியை துன்புறுத்தியது, தனது இசைத் திறமை அரைவேக்காடுதனமானது, அது மொசார்ட் போல முழுமையானதில்ல என்று அவருக்கு நன்றாக புரிந்தது,
எத்தனையோ அரைவேக்காட்டு ஆட்கள் கலைஞர்களாக சபையில் இருக்கிறார்கள், அவர்கள் இசையை வைத்து தனக்கான பதவி, பணத்தைச் சம்பாதித்துக் கொள்ள முடியும், ஆனால் காலம் தன் நினைவில் இருந்து அவர்களை நிச்சயம் அழித்துவிடும், அந்த உண்மையை சலேரியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,
தான் எல்லாக் காலத்திலும் கொண்டாடப்படக்கூடிய நித்ய கலைஞராக இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டார், ஆனால் ஆசையும் திறமையும் ஒன்றாக இருப்பதில்லையே, அது தான் சலேரியின் பலவீனமாக இருந்தது, சலேரியின் மனதிற்குள் வெறுப்பும் வன்மமும் கசப்பும் பீறிடத்துவங்கிய பிறகு அது அவரது இசையிலும் வெளிப்படத்துவங்கியது, கலைஞனின் வெறுப்பு அவன் படைப்பில் நிச்சயம் வெளிப்படவே செய்யும், அது தான் அவர் வீழ்ச்சியின் அடையாளம்.
வரலாற்றில் வாழ்ந்த சலேரி மொசார்டை உள்ளுற வெறுத்தார் என்பது நிஜம், தனது இறுதிகாலத்தில் மனக்குழப்பம் ஏற்பட்டு அவர் தானே மொசார்ட்டை கொன்றதாக பிதற்றியதும் உண்மை, ஆனால் அவருக்கும் மொசார்ட்டின் சாவிற்கும் நேரடியாக எவ்விதமான தொடர்பும் இல்லை, மொசார்ட்டின் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களில் சலேரியும் ஒருவர், அவர்கள் இருவரும் இரண்டுவிதமான இசைமரபை கொண்டவர்கள், ஆகவே இயற்கையாகவே இந்த வெறுப்பு இருந்திருக்க கூடும் என்கிறார்கள்,
சலேரியை மொசார்ட்டின் எதிரியாக சித்தரித்தவர் கவிஞர் புஷ்கின், அவரது “Mozart and Salieri. படைப்பில் தான் சலேரி வில்லனாகச் சித்தரிக்கப்படுகிறார், அதிலிருந்து சலேரி குறித்த பிம்பம் உருமாறத்துவங்கியது, அந்த பிம்பத்தை முழுமையாக்கியவர் பீட்டர் ஷெபர்ஸ் என்கிறார் ராபர்ட் ரெயிட் என்ற விமர்சகர்
பீட்டர் ஷெபர்ஸ் உருவாக்கிய சலேரி காலம் தோறும் இருந்தும் வரும் வெறுப்புணர்வின் குறியீடு, கலையின் உன்னதத்தை அடைய முடியாத தோல்வியுற்ற கலைஞனின் வடிவம், சலேரி என்பது ஒருவரை மட்டும் குறிப்பதில்லை, எண்ணிக்கையற்ற சலேரிகள் இருக்கிறார்கள், சலேரியாக ஒருவன் மாறுகிறான் என்பது தான் உண்மை, அப்படி தன்னைச் சலேரியாக உணரும் ஒருவர் அதை ஒத்துக் கொள்வதில்லை, ஆனால் அவரது பேச்சில், எழுத்தில், செயல்பாட்டில் சலேரியின் கசப்புணர்வு பீறிடுவதை மற்றவர்கள் எளிதாக உணர்ந்துவிடுகிறார்கள், , உள்ளுக்குள் அழுகிக் கொண்டிருக்கும் ஒரு பழத்தைப் போல சலேரியாக வாழ்கின்றவன் தன்னை தானே அழித்துக் கொண்டிருக்கிறான் என்பதே நிஜம்
சலேரியும் மொசார்ட்டும் இரண்டு எதிர் மனநிலைகள், ஒன்று தனது அசாத்தியமான திறமையால் உயர்வடைவது, மற்றது அரைவேக்காடுதனத்துடன் தன்னை முதன்மைபடுத்திக் கொள்வது, கலை அரைவேக்காட்டுதனங்க்ளை அனுமதிக்கும், ஆனால் முடிவில் அடையாளமற்றுப் போகச் செய்துவிடும், தனித்துவமிக்க திறனோ அடையாளம் கண்டு கொள்ளப்படாமல் கூட போக்கூடும், ஆனால் அது கால மாற்றத்தில் அழிந்து போய்விடவே செய்யாது, மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரத்தை அடைந்தே தீரும்.
God was singing through this little man to all the world, unstoppable, making my defeat more bitter with every passing bar
என்று சலேரி மொசார்ட் பற்றிய தனது வெறுப்பை ஒத்துக் கொள்கிறார், இப்படி நடப்பு உலகில் யாரும் ஒத்துக் கொள்வதில்லை, அந்த வகையில் தான் சலேரியை முக்கியமான கதாபாத்திரமாக கருதுகிறேன்
சலேரி பற்றிய வரலாற்று பிம்பத்தை சினிமா உருமாற்றிவிட்டது என்று எதிர்கருத்துகளும் இப்படத்தை பற்றி உண்டு,
இன்று பொதுமக்கள் ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தில் வரும் வில்லன் ஐயோகாவை போலவே சலேரியை நினைக்கிறார்கள், அவர் அப்படிபட்டவரில்லை, அவரது திறமை மொசார்ட்டிற்கு இணையாக இல்லாத போதும் தனித்துவமான இசைக்கலைராக வாழ்ந்தவர் என்று சலேரி வாழ்வைஆராய்ந்து வரும் மிஸ்டர் பீபா
நிச்சயம் அப்படிதானிருக்க கூடும், காரணம் அவரால் மொசார்ட்டின் மேதமையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிந்திருக்கிறது, பிரச்சனை அவர் அந்த திறமை தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று மனச்சிக்கலை உருவாக்கி கொள்வதில் தான் துவங்குகிறது,
சலேரியாக வாழும்போது ஒருவன் தனது கலையைத் தானே புகழ்ந்து பேசவும் முன்நிறுத்தவும் துதிபாடிகளை உருவாக்கவும் துவங்க நேர்கிறது, அது இன்னும் மோசமான ஒன்று, வீழ்ச்சியின் துவக்கபுள்ளி அதுவே
ஒரே இசையை தான் மொசார்ட்டும் கற்றிருக்கிறார், சலேரியும் கற்றிருக்கிறார், இருவருமே தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியே வெற்றியடைந்திருக்கிறார்கள், பின் இருவரில் ஒருவரது படைப்பு மட்டுமே உன்னதமாக கொண்டாடப்படுதும் மற்றவர் ஒதுக்கபடுவது ஏன் என்ற கேள்விக்கு இசை விமர்சகர் பீபே சொல்லும் பதில் முக்கியமானது
கற்பனை தான் படைப்பாற்றலின் ஊற்றுக்கண், அதில் மொசார்ட்டின் இசைக்கு நிகராக யாருமேயில்லை. சலேரியிடம் திறமை இருந்தது, ஆனால் மகத்தான கற்பனையில்லை, கற்பனை என்பது பயிற்சியால் வருவதில்லை, அது ஒரு தனித்துவம்,
அமேதியஸை இயக்கிய மிலாஸ் போர்மென் நம் காலத்தின் மகத்தான திரைக்கலைஞன், இசைக்கலைஞரைப் பற்றிய படத்தை இவ்வளவு விறுவிறுப்பாக, கவித்துவ அழகியலோடு உருவாக்கி காட்டியது அரியதொரு சாதனை. படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அதன் திரைக்கதையை எழுதிய பீட்டர் ஷெபர்ஸை வியக்கிறேன்,
படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனமும் முக்கியமானது, கதாபாத்திரங்களின் உணர்ச்சியை துல்லியமாக வெளிப்படுத்துதே அதன் நோக்கம், அதில் முழுமையான வெற்றியடைந்துள்ளது, அமேடியஸ் திரைக்கதை இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது, அவசியம் வாசிக்க வேண்டிய திரைக்கதை பிரதியது,
படத்தின் துவக்கத்தில் தனக்கு பாவமன்னிப்பு தர வந்த பாதிரியிடம் தான் யாரென தெரியுமா என சலேரி கேட்கும் போது ஒரு உரையாடல் இடம்பெறுகிறது
SALIERI Do you know who I am? You never heard of me, did you?
VOGLER That makes no difference. All men are equal in God’s eyes.
SALIERI Are they?
சலேரியின் இந்த Are they? ஒரு முக்கியமான கேள்வி, இதற்குப் பாதிரி பதில் சொல்வதில்லை, ஆனால் இக் கேள்வியின் வழியே சலேரி தானொரு தனித்துவமிக்கவர் என்பதை அடையாளப்படுத்துகிறார், அது தான் அவரது பலம், அதே நேரம் அது தான் அவரது சகல பிரச்சனைகளுக்குமான துவக்கபுள்ளி,
முடிவில்லாத காலவெளியில் இக்கேள்வி இன்றும் விடையற்று தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது
•••