ரஷ்ய அரசின் ஒத்துழைப்புடன் சென்னையில் உள்ள ரஷ்யக் கலாச்சாரம் மற்றும் விஞ்ஞான மையம் வழங்கும் மாக்சிம் கார்க்கி விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் உள்ள ரஷ்யக் கலாச்சாரம் மற்றும் விஞ்ஞான மையம் தனது நாற்பதாவது ஆண்டு துவக்கவிழாவைக் கொண்டாடுகிறது, இதனை ஒட்டி ரஷ்ய இலக்கியம் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு உறுதுணை செய்த தமிழகத்தின் பல்துறை கலைஞர்களையும், இந்தியக் கலைகளின் மீது ஆர்வம் கொண்ட ரஷ்ய கலைஞர்களையும் கௌரவிக்கும் விதமாக பல்வேறு விருதுகளை இந்தோ ரஷ்ய நட்புறவு மையம் அறிவித்துள்ளது,
சிறந்த இசையமைப்பாளருக்கான சைக்கோவெஸ்கி விருது இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், லியோ டால்ஸ்டாய் விருது எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கும், மாக்சிம் கார்க்கி விருது எனக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது, எங்களுடன் பல்வேறு துறைகளைச் சார்ந்த பதினைந்து சாதனையாளர்கள் விருது பெறுகிறார்கள்,
இதற்கான விருதளிப்பு விழா டிசம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு சேத்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகக் கலைஅரங்கில் நடைபெற உள்ளது,
இந்த நிகழ்வில் இந்தியாவிற்கான ரஷ்யத்தூதர் திரு. அலெக்சாண்டர் எம் கடாகின் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.
••••