முறிந்த கரண்டி

ஒரு நல்ல சிறுகதை என்பது, குரலை உயர்த்தாமல், அலங்காரம் எதுவுமின்றி, இயல்பாக, எளிமையான வர்ணிப்பின் வழியாக, கச்சிதமான கதாபாத்திர உருவாக்கத்தினால் வாசிப்பவனுக்கு ஆழமான மனஎழுச்சியைத் தரக்கூடியதாக இருக்கும்,

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் எழுதிய The use of force.  அது போன்ற ஒரு சிறந்த சிறுகதை,

அமெரிக்காவின் முக்கியக் கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் (William Carlos Williams) ஒரு மருத்துவர், அதிலும் குழந்தைகள் மருத்துவர்,

எழுத்தாளராகச் செயல்படும் போது மருத்துவனைப் போல நடந்து கொள்கிறேன், மருத்துவராக இருக்கும் போது எழுத்தாளனைப் போல அக்கறை கொள்கிறேன் என்று வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஒரு குறிப்பில் கூறியிருக்கிறார்,

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் குறைவான கவிதைகளே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, நாம் தொடர்ந்து வாசிக்கவும் கொண்டாடவும் வேண்டிய முக்கியமான கவிஞர் அவர்,

பொதுவில் கவிஞர்கள் சிறுகதைகள் எழுதும் போது அதன் அடர்த்தியும் கதை சொல்லும் முறையும் முற்றிலும் புதியதாக இருக்கும், நகுலன், பிரமீள் போன்றோர் இதற்கு உதாரணம், உலக அளவில்  முக்கியக் கவிஞர்களான ரூபன் தாரியோ, ஆக்டோவியா பாஸ் இருவர் எழுதிய சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன், அவை அற்புதமானவை, அந்த வரிசையில் வைத்துப் பாராட்ட வேண்டிய சிறுகதை The use of force.

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் ஒரு டயரிக்குறிப்பு எழுதுவதைப் போல எளிமையாக, நேரடியாக இக்கதையை சொல்லிச் செல்கிறார், வாசித்து முடிக்கையில் நம் மனம் எழுப்பும் அதிர்வுகளும் கேள்விகளும், நம்மை நிறைய யோசிக்க வைக்கின்றன,

கதை ஒரு மருத்துவரைப் பற்றியது, அவர் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றினை நினைவுகூர்கிறார்,

உடல்நலமற்ற ஒரு குழந்தைக்குச் சிகிட்சை தருவதற்காக ஒரு நோயாளியின் வீட்டிற்குச் செல்கிறார் டாக்டர்,

நோயுற்ற குழந்தை களைத்துப் போய் ஒடுங்கியிருக்கிறாள், அவளது தந்தையும் தாயும் மருத்துவரிடம் அவளுக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் கண்டுள்ளதாகச் சொல்கிறார்கள், மருத்துவர் இனிமையான முகத்துடன் குழந்தையைப் பரிசோதனை செய்கிறார், அவளுக்கு தொண்டை வலி இருக்கிறதா எனக் கேட்கிறார், மருத்துவரிடம் எதையும் பேச மறுக்கிறாள் குழந்தை,

தனக்கு என்ன செய்கிறது என்று அவள் சொல்ல விரும்பாதவளைப் போல நடந்து கொள்கிறாள், இதற்காக தாயும் தகப்பனும் அவளைக் கோவித்துக் கொள்கிறார்கள், டிப்தீரியா எனும் தொண்டை அழற்சி நோய் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்வதற்காக குழந்தையின் வாயைத் திறக்கச் சொல்கிறார் டாக்டர், அவள் பிடிவாதமாக மறுக்கிறாள்,

அதைக்கண்டு அப்பா அவளைத் திட்டுகிறார், அம்மா அவளின் பிடிவாத நடத்தையைக் கண்டிக்கிறாள், ஆனால் குழந்தை தன் வாயைத் திறந்து காட்டுவதேயில்லை, மருத்துவர் அவளை எப்படியாவது பரிசோதனை செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவராக ஆத்திரத்துடன் குழந்தையின் வாயைப் பிடித்துக் கொண்டு மர ஸ்பூனை, வைத்து அழுத்தி அவள் தொண்டையைப் பார்வையிட முயற்சிக்கிறார்,

அவள் திமிறிக் கொண்டு தள்ளுகிறாள், கரண்டி உடைந்து நாக்கில், வாயில் இரத்தம் வழிகிறது.  அவள் திமிறிக் கொண்டு ஒங்காரமாக அலறுகிறாள்,

எப்படியாவது அந்தக் குழந்தையை முழுமையாகப் பணியவைத்துவிட வேண்டும் என்ற வெறியில் மருத்துவர் ஒரு வெள்ளிக்கரண்டியை எடுத்து அவள் வாயை அழுத்திப் பிடித்துக் கொண்டு தொண்டை வரை செலுத்துகிறார்,

உமிழ் நீர் பைகள் வீங்கிக் கிடக்கின்றன, தொண்டை வலியைக் கண்டறிந்துவிட்ட திருப்தி டாக்டருக்கு, எப்படியாவது அவளை நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம் அவரைத் தன்னிலை மறக்கவைத்து அடக்குமுறையால் நோயாளியை ஒடுக்குபவராக மாற்றுகிறது

சிகிட்சைக்காகத் தன்னை அமுக்கி வைத்து உண்மையை அறிந்துவிட்டார்களே என குழந்தை கண்ணீர் விடுகிறாள், பரிதாபமான நிலையில், குழந்தை தன் அப்பாவின் மடியில் இருந்து தாவி, டாக்டரை அடிக்க பாய்கிறாள், கண்ணீர் அவள் பார்வையை மறைக்கிறது என்பதுடன் கதை முடிகிறது

ஒரு எளிய காட்சியைக் கதையாக்கியிருக்கிறார் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், இது அவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவமாக இருந்திருக்க கூடும்,

இது எப்படி சிறந்த கதையாகிறது என்பதை நாம் ஆராயலாம்,

கதையில் டாக்டரின் இயல்பு மெல்ல இறுக்கமடைந்து அவர் நோயாளியைத் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர செய்யும் கட்டாயமும், அதில் வெற்றி காணும்  அதே நேரம், ஏன் அப்படி நடந்து கொண்டோம் எனத் தன்னை உணரும் தருணமும் அழகாக வெளிப்படுகின்றன, இந்த உணர்வெழுச்சி தான் இக்கதையைச் சிறப்பான ஒன்றாக மாற்றுகின்றது

கதையில் வரும் நோயுற்ற குழந்தை ஒரு அற்புதமான கதாபாத்திரம், பொதுவாக குழந்தைகள் தனது நோயை மறைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள், காரணம்  பயம், மற்றொன்று நோய் எப்படி உருவானது என்று கேட்டு பெற்றோர் கொடுக்கும் தண்டனை மற்றும் அறிவுரை. இரண்டையும் மனதில் கொண்டே குழந்தைகள் நோயைப் பற்றி  வெளிப்படையாகச் சொல்வதில்லை,

வலியும் சோர்வும் குழந்தையின் இயல்பினை மேலும் இறுக்கமடையச் செய்கிறது, மருத்துவரை, குழந்தை தன்னை நலமாக்குவதற்காக வந்திருப்பவர் என்று நம்புவதில்லை, மாறாக தன்னைத் துன்புறுத்த வந்திருப்பவர் என்றே நினைக்கிறது, அதனால் தான் கதையின் ஆரம்பத்தில் அம்மா, குழந்தையிடம் இவர் உன்னை துன்புறுத்த மாட்டார் என்று சொல்கிறார், ஆனால் குழந்தை அதை நம்பவில்லை,

உலகில் மருத்துவரை நேசிக்கும் ஒரு குழந்தையைக் கூட நான் கண்டதில்லை, மருத்துவர் குறித்த பயத்தை ஆழமாக குழந்தைகள் மனதில் உருவாக்கி வைத்திருக்கிறோம், டாக்டர் வந்தால் ஊசி போட்டுவிடுவார் என்று பயந்து அலறும் எத்தனையோ குழந்தைகள் நினைவில் வந்து போகிறார்கள்,

அதே நேரம் குழந்தையின் பிடிவாதமான மனநிலையைத் தாண்டி, எப்படியாவது காப்பாற்றி நலமடையச் செய்ய பெற்றோர் மேற்கொள்ளும் தவிப்பு , குறிப்பாக அம்மாவின் ஆதங்கம், அப்பாவின் எரிச்சல், மருத்துவரின் இயலாமை அத்தனையும் கதையில் நுட்பமாகப் பதிவாகி உள்ளது,

குடும்ப மருத்துவர் என்ற ஒருவர் காணாமலே போய்விட்ட இன்றைய சூழலில் கதையில் நோயாளியின் வீடு தேடிப் போய் பார்க்கும் மருத்துவரும், அவரது அக்கறையும் முக்கியமானதாக உள்ளது,

கதையில் வரும் மருத்துவர் தான் குழந்தையிடம் இப்படி நடந்து கொண்டதற்காக வெட்கப்படுகிறார், ஏன் அப்படி நடந்து கொண்டோம் என சுயபரிசீலனை செய்து கொள்கிறார், பெரும்பான்மை மருத்துவர்கள் இது போல ஒரு போதும் உணர்வதேயில்லை,

மருத்துவமனை குறித்த பயமும், மருத்துவர் குறித்த பயமும் இல்லாத மனிதர்களே இல்லை, இதற்குக் காரணம் மருத்துவம் நமக்கு தந்த மோசமான அனுபவங்களே, இந்தக் கதையில் வரும் மருத்துவர் கனிவான மனிதராகத் தான் அறிமுகமாகிறார், ஆனால் சிறுமியின் பிடிவாதம், உரையாடலற்ற புறக்கணிப்பு, அவரை மூர்க்கமடைய செய்கிறது,

மருத்துவர் ஒரு நோயாளியை எப்படிக் கையாள வேண்டும், ஏன் அடக்கி ஒடுக்க கூடாது என்பதை இக்கதையின் மூலம் தெளிவாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது,

நோயைக் கண்டறிய இது போன்ற கடுமையான பரிசோதனைமுறையை ஒரு டாக்டர் மேற்கொள்வது சரியா, தவறா என்ற கேள்வி நம் முன்னே எழுகிறது, ஒரு மருத்துவராக அவர் நடந்து கொண்டது சரி, அதே நேரம் ஒரு மனிதராக தான் அப்படி நடந்து கொண்டது குறித்து அவர் வெட்கப்படுகிறார், அது தான் அவரை உன்னதமான கதாபாத்திரமாக மாற்றுகிறது,

கதையை வாசித்துக் கொண்டிருந்த போது அகிரா குரசேவாவின் ரெட்பியர்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி நினைவில் வந்து போனது,

நோயுற்ற ஒரு சிறுமிக்கு ஒரு ஸ்பூனில் மருந்து புகட்டுவார் மருத்துவர், அந்தச் சிறுமி ஆத்திரத்துடன் அதைத் தள்ளி விடுவாள், மறுபடி இன்னொரு ஸ்பூன் மருந்து புகட்டுவார், அதையும் தள்ளிவிடுவாள், அவளது செய்கையை கண்டு அவர் கோபம் அடையாமல் திரும்பத் திரும்ப மருந்தை அவளுக்கு நீட்டிக் கொண்டேயிருப்பார்,

ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமி தனது நிராகரிப்பை கைவிட்டு மருந்தை ஏற்றுக் கொள்வாள்,  பொறுமையும், அக்கறையும், துயருற்ற நோயாளி மீது காட்டும் பரிவும்  மருத்துவருக்கு முக்கியமானது என்பதை குரசேவா அழகாக சுட்டிக்காட்டுவார், அதே விஷயம் தான் இக்கதையில் இன்னொரு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது

மருத்துவரின் உணர்ச்சிநிலை, தன்னை அறிந்து தனது செயலுக்கு தானே பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் நேர்மை, இன்று எத்தனை மருத்துவர்களிடம் இருக்கிறது,

இக்கதையை மருத்துவம் படிக்கும் மாணவர்களும், மருத்துவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொல்வேன்,

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் கதை மருத்துவரைப் பற்றியதாக இருந்தாலும் அதன் மையம் குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோம், எப்படி அவர்களின் இயல்பு உலகினைப் புரிந்து கொள்ளாமல் துன்புறுத்துகிறோம் என்பதையே முதன்மைபடுத்துகிறது,

அதே நேரம் மருத்துவம் போன்ற அரிய சேவையைச் செய்கிற டாக்டரும் கூட சாதாரண மனிதர் தான், அவருக்குள்ளும் அடக்க இயலாத கோபமும், அடக்குமுறையும் இருக்கவே செய்யும் என்ற உண்மையையும் இக்கதை எடுத்துக்காட்டுகிறது,

இரண்டு பக்க அளவில் உள்ள ஒரு கதையின் வழியே நம் மனசாட்சியை உலுக்கி எடுத்துவிடுவதே  வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் சிறப்பு,

மருத்துவராகப் பணியாற்றிய  இவரைப்பற்றி இலக்கிய விமர்சகர் ஹெரால்ட் ப்ளும்,  நிறைய கவிதைகளையும், நிறைய குழந்தைகளையும் உலகிற்கு கொண்டுவந்தவர் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்,

பிரசவம் பார்த்தல், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம் என்று தனது வாழ்நாளை குடும்ப மருத்துவர் என்ற அடையாளத்துடன் கழித்த வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், இலக்கியவாதிகளைத் தேடிச்சென்று விவாதிப்பதையோ, கூட்டங்களில் கலந்து கொள்வதையோ, அனுபவங்களைச் சேகரிக்க அதிக தூரம் பயணம் செய்வதையோ விரும்பாதவர், மருத்துவமனை தான் அவரது உலகம்,

மருத்துவமனைக்குள் ஏற்பட்ட அனுபவங்களும். நோயாளிகளைச் சந்திக்க செல்லும் போது எதிர் கொண்ட விசித்திரமான சூழ்நிலையும் அங்கிருந்த மனிதர்களும்,  மனித மனம் கொள்ளும் கவலை, சந்தோஷம், பிரிவுத்துயர், மரணம் குறித்த அச்சம், வியப்பு இவையே அவரது எழுத்தின் ஆதாரங்களாக இருக்கின்றன

நோயாளிகள் வராத இடைவெளி நேரங்களில் தட்டச்சில் அவசரமாகக் கவிதைகளை எழுதுவது அவரது வழக்கம், பலநாட்கள் இரவில் வார்டு ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு தனது அறையை மூடிக் கொண்டு கவிதை எழுதுவாராம், வில்லியம்ஸ் கார்லோஸ் வில்லியம்ஸின் கவிதைகள் அமெரிக்க நவீன கவிதைகளில் படிமக் கவிதைகளாக கொண்டாடப்படுகின்றன

அவரது சிறுகதையை வாசிக்க விரும்புகிறவர்களுக்கு

The use of force – short story by William Carlos William/ America

https://www.classicshorts.com/stories/force.html

இக்கதையை நண்பர்கள் யாரேனும் மொழியாக்கம் செய்து அனுப்பினால் எனது இணையதளத்திலே வெளியிட விரும்புகிறேன்

•••

0Shares
0