நேற்று திருச்சியில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிரம்பிய கூட்டம், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இடம் கிடைக்காமல் நிகழ்ச்சி முழுவதும் நின்று கொண்டே கேட்டனர்,
வெளீயீட்டு விழாவிற்கெனக் கொண்டுவந்த புத்தகங்கள் ஒட்டுமொத்தமாக விற்று தீர்ந்து போனதோடு பலரும் பணம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வரிசையில் நின்றதும் நடந்தேறியது
இப்படி ஒரு உணர்ச்சிபூர்வமான பார்வையாளர்களை என் வாழ்வில் நான் கண்டதேயில்லை,
புத்தகங்களை வெளியீட்டு பேசிய தேவதச்சன் அருமையான துவக்கத்தை ஏற்படுத்தினார், அறிமுகவுரையை நண்பர் துளசிதாசனும், வரவேற்புரையை நண்பர் மனுஷ்யபுத்திரனும், நன்றியுரையைச் சந்திரகாந்தும் நிகழ்த்தினார்கள்,
எனது ஆசான் எஸ் ஏ பெருமாள், இலக்கில்லாத பயணி பற்றியும் கவிஞர் நந்தலாலா காந்தியோடு பேசுவேன் சிறுகதைகள் பற்றியும், முருகேச பாண்டியன் ஏழு இலக்கிய உரைகள் குறித்தும், விரிவாகப் பேசினார்கள், அத்துடன் வாசகர்களின் கலந்துரையாடலும் எனது அனுபவ உரையும் இடம் பெற்றது,
சிறப்பான இந்த நிகழ்விற்கு முக்கியக் காரணம் திருச்சியில் இயங்கும் களம் இலக்கிய அமைப்பினர், குறிப்பாக நண்பர்கள் துளசிதாசன், ரமேஷ்பாபு, சந்திரகாந்த், ஷேக் தாவூத், ஆகியோர் கடந்த ஒரு மாத காலமாக இந்த நிகழ்விற்குத் தொடர்ந்து உழைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும்
புத்தகங்களை வெளியிட்ட எம் .செல்வராஜ், முகமது ரபி, சத்யமூர்த்தி , பெற்றுக் கொண்ட ரமேஷ்பாபு, சுதா பன்னீர்செல்வம், சேதுராமன், ஜெயபால், டாக்டர் வெங்கடாசலம், கவிஞர் ஹசீம், ரவீந்திரன், சந்திரமோகன் டாக்டர் பரமசிவம் ஆகியோருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றிகள்
பத்து புத்தகங்களும் மிகச்சிறப்பாக வடிவமைக்கபட்டுள்ளன, இதனைச் சாத்தியமாக்கிய உயிர்மை பதிப்பகத்திற்கும் , வெளியிட்ட நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும், இந்தப் புத்தகங்களை வடிவமைப்பதில் காலம் நேரம் மறந்து தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்ட செல்விக்கும் எனது தீராத நன்றி
புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சுப்பையா என்ற ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி யார் புதிய புத்தகங்களை வாங்க விரும்பினாலும் அதன் விலையில் இருநூறு ரூபாயை தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்,
நேற்று மட்டும் அவர் தனது கைப்பணத்தில் இருந்து இருபதாயிரம் ரூபாய்க்கும் மேலாக வாசகர்களுக்கு அளித்தார் என்பது உணர்ச்சிபூர்வமான நிகழ்வு, அவரை எனக்கு முன்பரிச்சயம் கிடையாது, நிகழ்ச்சி ஏற்படுத்திய எழுச்சி தன்னியல்பாக அவரை உதவி செய்ய வைத்திருக்கிறது.
ஒவ்வொரு புதிய புத்தகம் வெளியாகும் போதும் மனது பதைபதைப்புடன், உள்ளார்ந்த சந்தோஷத்துடன், நெகிழ்வுடன் தான் எதிர்கொள்கிறது, நேற்றும் அப்படித்தான் இருந்தது
