எழுத்தாளர் ஷாஜகான் எனது விருப்பத்திற்குரிய நண்பர், அவரைக் காண்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தேன்,
திருமங்கலத்தில் வசிக்கும் அவரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன்,
ஷாஜகான் சிறந்த சிறுகதை எழுத்தாளர்,காட்டாறு என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார், வம்சி பதிப்பக வெளியீடு,
நல்ல பேச்சாளர், தீவிர இலக்கிய வாசகர், மாற்றுக் கல்வி குறித்த நூல்களை மொழியாக்கம் செய்து வருபவர்.பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்,
ஷாஜகானும் எழுத்தாளர் கந்தர்வனும் ஜோடிகள், இருவரும் பேச ஆரம்பித்தால் சிரித்து உருள வேண்டியிருக்கும், கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருப்பவர் சட்டென மனதை கனக்க செய்துவிடும் உணர்ச்சிபூர்வமான ஒரு சம்பவத்தை சொல்லி நம்மை உறையச் செய்துவிடுவார்
ஷாஜகானின் கதை உலகம் கு. அழகிரிசாமியின் கதை உலகோடு தொடர்பு கொண்டது, சாமானிய மனிதர்களின் துயரத்தை, எளிய வாழ்க்கையின் ஊடாக வெளிப்படும் கலைமனதை அடையாளம் காணச்செய்யும் கதைகள் இவருடையது, அழகிரிசாமி போலவே இவருக்கும் இசையில் தீவிர ஈடுபாடு உண்டு
ஷாஜகான் எழுதிய ஈன்ற பொழுதில் சிறுகதை செம்மலர் நடத்திய சிறுகதை போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது,
அருமையான சாப்பாடும் உபசரிப்பும் பேச்சுமாக நேற்றைய பொழுது மிகுந்த சந்தோஷமாக கழிந்தது,
தனது பால்யவயது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்ட போது சிறுவயதில் தஙகளுக்கு ஒரு பலாச்சுளையை அத்தை தரவில்லை என்பதற்காக அவரது அப்பா எப்படி வீட்டை துவம்சம் செய்தார் என்பதை வேடிக்கையாக சொன்னார், கேட்கும் போது சிரிப்பு பொங்கியது,
ஆனால் வீடு வந்து சேர்ந்தபோது பால்யவயதில் நாம் அடையும் அவமானங்கள், துயரங்கள் எப்படி நம் மனதில் அழிவற்று தங்கிப்போய்விடுகின்றன என்று நினைத்தபோது மிகுத்த வருத்தமாக இருந்தது, இந்த சம்பவத்தை அவர் ஒரு கதையாக எழுதினால் அது தமிழின் மிக முக்கியமான கதையாக அமையும்
ஷாஜகானால் மிக நுட்பமாக, அற்புதமாக எழுத முடியும், ஆனால் தனது ஆசிரியர் வேலைக்குள் தன்னை ஒடுங்கிக் கொண்டு இலக்கியப்படைப்புகளில் அதிகம் கவனம் செலுத்தாமலே இருந்து வருகிறார், அவரது காட்டாறு சிறுகதைத் தொகுப்பு முக்கியமானது,
வீடு வந்து சேர்ந்தும் பிள்ளைகள் அவர் பேச்சை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தார்கள், அது தான் ஷாஜகானின் தனிச்சிறப்பு
•••