கோடை விடுமுறையில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பினேன், விடுமுறைப் பயணம் என்ற போதும் ஒய்வெடுக்கவில்லை, தொடர்ந்த சந்திப்புகள், இலக்கியக் கூட்டங்கள் என சுற்றியலைந்து கொண்டிருந்தது மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது
ஊரில் இருக்கிற நாட்களில் ஒருநாளைக்கு அதிகபட்சம் மூன்றோ நான்கோ தொலைபேசி அழைப்புகள் மட்டுமே வந்தன, வாகன நெருக்கடிகள் இல்லை, ஏகாந்தமான காலை நடை, ஆசை தீரக் குளிப்பது, பிடித்தமான சாப்பாடு, அப்புறம் இரண்டு மணி நேரம் படிப்பது
யாராவது நண்பர்களைத் தேடிப் போய் சந்திப்பது, மதிய உணவு வரை உரையாடுவது, பின்பு ஏதாவது ஒரு பழைய கறுப்பு வெள்ளை படம் பார்ப்பது, சிறு தூக்கம், மாலையில் மீண்டும் நடை, இலக்கிய நண்பர்களின் சந்திப்பு, இரவு பத்து மணிக்கு வீடு திரும்பி பிள்ளைகளுடன் சீட்டு விளையாடுவது, கிரிக்கெட் பார்ப்பது, பொருட்காட்சி போய்வருவது என ஒவ்வொரு நாளும் இனிமையாக கழிந்தது.
என்னோடு படித்த நண்பர்கள், எனது ஆசிரியர்கள், என் மனைவியோடு படித்தவர்கள், இலக்கிய நண்பர்கள், எழுத்தாளர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவராகத் தேடிப்போய் பார்த்து உண்டு உரையாடி வந்தது புத்துணர்வு தருவதாக அமைந்தது
குறிப்பாக கோவில்பட்டியில் கவிஞர் தேவதச்சனைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தது, ராஜபாளையத்தில் சா.தேவதாஸ் ஏற்பாடு செய்து நடத்தி மார்க்வெஸ் சிறப்புக்கூட்டம், சாத்தூரில் நடைபெற்ற டாக்டர் ஹானிமன் பிறந்தநாள்விழா கருத்தரங்கு ஆகியவை மிகுந்த உத்வேகம் தந்தன.
இனி நாளை முதல் வழக்கமான சென்னை வாழ்க்கை,
தாம்பரத்தைத் தாண்டியதும் தொலைபேசி அடிக்க துவங்கிவிட்டது, வீடு வந்து சேர்ந்து கம்ப்யூட்டரை இயக்கினால் இன்பாக்ஸில் 235 மெயில்கள் படிக்கபடாமலே இருக்கின்றன
பிரிக்கபடாத கடிதங்கள், வார, மாத இதழ்கள், முடித்து தர வேண்டிய திரைப்பட பணிகள், பத்திரிக்கைக் கட்டுரைகள், பாதி எழுதி முடித்த நாவல், அடுத்த இலக்கியமுகாமிற்கான திட்டமிடல், வெளிநாட்டுப் பயணம் என விடுபட்டிருந்த வேலைகள் பயமுறுத்துகின்றன
விடுமுறைக்கு வெளியூர் போய் விட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவனைப் போல ஏன் அதற்குள் லீவு முடிந்துவிட்டது என்ற மனநிலையில் உட்கார்ந்திருக்கிறேன்
அதே நேரம் ஒரு ஆண்டு எழுதுவதற்கு தேவையான சக்தியை நிரப்பிக் கொண்டுவந்துவிட்டது போல மனது உற்சாகமாக உள்ளது.
இளைப்பாறுவதே அடுத்த பறத்தலுக்குத் தயார் ஆவதற்குத் தானே
••