சோல்செனிட்சினுடன் உரையாடல்

அலெக்சாண்டர் சுக்ரோவ் ரஷ்யாவின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர். திரைக்கலையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்ற கலைஞர். இவரது திரைப்படங்களை  poetic cinema என்கிறார்கள். சுக்ரோவ்  தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்டவர்.  ரஷ்யாவின் மனசாட்சியாகத் திகழுகிறார் என்று திரை விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள்.

இவரது Russian Ark ஒரே ஷாட்டில் எடுக்கபட்ட சிறந்த திரைப்படம். பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள ஹெர்மிடேஜ் ம்யூசியத்தினுள் முழுப்படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. கலைநேர்த்தி மிக்கத் திரைப்படமது.

சுக்ரோவ் ஹிட்லரை மையாக வைத்து Moloch என்ற படத்தை இயக்கினார். இது போலவே லெனினை மையப்படுத்தி Taurus, ஜப்பானிய மன்னர் Hirohitoவை முதன்மைப்படுத்தி The Sun என மூன்று வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். Music composer Dmitri Shostakovich, writer Aleksandr Solzhenitsyn இருவர் குறித்தும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். சுக்ரோவிற்கு விருப்பமான திரைப்பட இயக்குநர் Robert Bresson

சுக்ரோவ் இயக்கிய Father and Son (2003), Mother and Son இரண்டு படங்களும் நிகரற்ற காவியங்கள் என்பேன்.

••

1970ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை வென்றவர் அலெக்சாண்டர் சோல்செனிட்சின்.

இவர்  அரசிற்கு எதிராகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டி சோவியத் அரசு நாடு கடத்தியது 1994 வரை இவர் மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வசித்தார். பின்பு ரஷ்யா திரும்பி தனது கடைசி நாட்களை மாஸ்கோவில் கழித்தார்.

இந்த ஆவணப்படத்தில் தேசம் விட்டு வெளியேறி வாழ்ந்த துயரமிக்க நாட்களையே சோல்செனிட்சன் நினைவு கூறுகிறார்.

மாஸ்கோவிலுள்ள சோல்செனிட்சின் வீட்டின் பின்புறமுள்ள சிறிய காட்டுப்பகுதியில் இருவரும் நடக்கிறார்கள். ஒரு மரத்தடியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து கொண்டு உரையாடுகிறார்கள். பேச்சின் ஊடாகவே இன்னொரு பெஞ்சிற்கு இடம் மாறிக் கொள்கிறார்கள். தனது இளமைக்காலத்தினை நினைவு கூறும் போது மட்டும் தான் சோல்செனிட்சின் முகத்தில் சந்தோஷம் பீறிடுகிறது. வீடு, சமையலறை, அவரது எழுதும் மேஜை, படிப்பறை என அவரது உலகம் மெல்ல நம் கண்முன்னே விரியத்துவங்குகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ரஷ்யாவின் செம்படை ராணுவத்தில் சோல்செனிட்சின். பணியாற்றியிருக்கிறார். யுத்த களத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக இரண்டு முறை பதக்கங்களும் பெற்றிருக்கிறார்.

One Day in the Life of Ivan Denisovich , Cancer Ward, The Gulag Archipelago. Two Hundred Years Together போன்ற முக்கிய நூல்களை எழுதியிருக்கிறார்.

The Dialogues with Solzhenitsyn ஆவணப்படத்தில் சோல்செனிட்சின் மனைவி போலினா தாங்கள் அனாதரவாக்கப்பட்ட நிலையை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறார். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு எங்கே போவது எனத் தெரியாமல் தடுமாறிப்போனோம். நெருக்கமான நண்பர்கள் கூட எங்களைச் சந்திப்பதற்குப் பயந்து போனார்கள்.  வேட்டையில் உயிர் தப்பிய விலங்கினைப் போலவே வாழ்ந்து வந்தோம் என்கிறார்.

ஆவணப்படத்தில் சோல்செனிட்சின் தனது உணர்ச்சியை நேரடியாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நிதானமாகவும் ஆழ்ந்து யோசித்து உரையாடுகிறவராகவுமே இருக்கிறார். தன்னைக் காலத்தின் சாட்சியமாகக் கருதும் சோல்செனிட்சின் எழுதுவதற்காகவே தான் உயிர் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார்.

1945 இல் கிழக்குப் பிரஸ்ஸியாவில் பணியாற்றும் போது ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் போரை நடத்திய விதம் தவறானது எனக் குறிப்பிட்டு நண்பரான நிகோலாய் விட்கேவிச்க்குத் தனிப்பட்ட கடிதம் ஒன்றை எழுதினார் சோல்செனிட்சின். அக் கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. தேசத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை எழுதியதற்காகச் சோல்செனிட்சின் கைது செய்யப்பட்டார், மாஸ்கோவில் உள்ள லுபியங்கா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை விசாரித்தார்கள். முடிவில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சோல்ஜெனிட்சின் தண்டனையின் முதற்பாதி பல்வேறு பணி முகாம்களில் வழங்கப்பட்டது. பின்பு 1950 இல் அவர் அரசியல் கைதிகளுக்காக ஒரு “சிறப்பு முகாமுக்கு” அனுப்பப்பட்டார். அந்தக் கொடுஞ்சிறையில் மிக மோசமாக நடத்தப்பட்டார். எழுதுவதற்குக் காகிதம் கிடைக்காமல் கழிவறை காகிதங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த நாட்களில் சோல்செனிட்சினை புற்றுநோய் தாக்கியது. அதை ஆரம்பத்தில் கண்டறியவில்லை. ஆகவே முற்றிய நிலையில் அவர் சிகிச்சைக்காக தாஷ்கண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,  மரணத்தின் வாசலைத் தொட்டு மீண்டார். இதன் காரணமாக அவரது சிந்தனையில் பெரிய மாற்றம் உருவானது. மெய்த் தேடலும் சமய ஈடுபாடும் கொண்டவராக மாறினார்.

நாடுகடத்தப்பட்ட காலத்தில் சோல்செனிட்சின் பகலில் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இரவில் ரகசியமாக எழுத்து பணியை மேற்கொண்டார்.

1969 ஆம் ஆண்டில், சோல்செனிட்சின் எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 1970 இல், அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஸ்டாக்ஹோமிற்கு நோபல் பரிசை ஏற்றுக் கொண்டால் மீண்டும் சோவியத் யூனியனுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பயந்தார்.

அதற்குப் பதிலாக, மாஸ்கோவில் உள்ள ஸ்வீடிஷ் தூதரகத்தில் நடந்த ஒரு சிறப்பு விழாவில் அவர் பரிசைப் பெறலாம் என அறிவுரை வழங்கப்பட்டது. அதை ஸ்வீடன் அரசாங்கம் ஏற்க மறுத்துவிட்டது. , பின்னர் 1974 நடைபெற்ற விழாவில் சோல்செனிட்சின் தனது நோபல் பரிசைப் பெற்றார்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கழித்த போதிலும், சோல்செனிட்சின் ரஷ்யராகவே வாழ்ந்தார்.

மாஸ்கோவில் இயற்கையோடு இணைந்த சூழலில் வாழும் அவர் தனது வீட்டினையும் சுற்றுப்புறத்தையும் நினைவு கூறும் போது இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே எனக்கானது. பூமியோடு நேரடி தொடர்பு வேண்டும். சூரிய உதயத்தைக் காண வேண்டும். பறவைகள் பாடுவதைக் கேட்காமல் என்ன வாழ்க்கை. இங்கே வசந்த காலத்தில் காடு பாடுகிறது. அது தான் எனது சங்கீதம். தனிமையில் காட்டில் இந்தச் சங்கீதம் கேட்டபடியே நடப்பது தான் ஆனந்தமானது என்கிறார். வெர்மாண்டில் வாழ்ந்த நாட்களில் தான் ஒரு விவசாயி போலவே வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகிறார்

சோல்செனிட்சினின் மூன்று மகன்களுக்கும் இசை, வானவியல், ரஷ்ய இலக்கியம், இலக்கணம் என யாவும் வீட்டிலே அவர் போதித்து வந்தார். சோல்செனிட்சினின் எழுத்துப்பணிக்குப் பேருதவி செய்தவர் அவரது மனைவி போலினா. அவர் இல்லாவிட்டால் தன்னால் எதையும் எழுதி முடித்திருக்க முடியாது என்கிறார்

சுக்ரோவின் ஆவணப்படத்தில் தாயகம் திரும்பும் தனது கனவைப் பற்றிக் குறிப்பிடும் போது சோல்செனிட்சின் என்றாவது ஒரு நாள் தன்னை ரஷ்ய சமூகம் புரிந்து கொள்ளும் என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்.

அந்த ஆதங்கம் சமீபத்தில் தீர்ந்து போனது. நூற்றாண்டு கடந்த சோல்செனிட்சினைக் கொண்டாடும் விதமா ரஷ்ய அரசு சோல்செனிட்சினுக்குச் சிலை வைத்து அவரது பெயரை வீதி ஒன்றுக்குச் சூட்டியிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட அதிபர் புதின் சோல்செனிட்சின் ரஷ்யாவின் மனசாட்சியைப் போன்றவர். அவர் ரஷ்ய மக்களின் உரிமைகளுக்காகவே பேசினார். செயல்பட்டார். அவர் அடைந்த துன்பம் யாவும் மக்களுக்கானதே. அவரது எண்ணங்கள் இன்றைய ரஷ்யாவிற்கும் வழிகாட்டுவதாக உள்ளன என்று குறிப்பிட்டார்

ரஷ்ய இலக்கியம்,  அதிகாரம், சிறைவாழ்க்கை, வரலாறு எனத் தனது அகவுலகை திறந்து காட்டும் சோல்செனிட்சினுடன் சேர்ந்து நாமும் நடக்கிறோம். அருகில் அமர்ந்து உரையாடுகிறோம். கேமிராவை ஒரு தோழனைப் போல உடன் இருக்கச் செய்திருக்கிறார் சுக்ரோவ்.

சோல்செனிட்சின் குறித்துத் தமிழில் எஸ்.வி. ராஜதுரை விரிவான கட்டுரை  ஒன்றை எழுதியிருக்கிறார். ரஷ்யப் புரட்சி: இலக்கியச் சாட்சியம் என்ற எஸ். வி. ஆரின் நூல் அன்னம் பதிப்பகத்தால் 1989ல் வெளியிடப்பட்டுள்ளது.

••

0Shares
0