ருமேனிய இயக்குனர் ஹோராட்டியு மலேலின் (Horațiu Mălăele) புதிய படம் Silent Wedding. அட்ரியன் லுஸ்டிக் மற்றும் ஹோராட்டியு மலேலே ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். ருமேனியாவின் ஒரு சிறிய கிராமத்தில் 1953ல் நடந்த ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது.
ருமேனிய கிராமம் ஒன்றை நோக்கித் தொலைக்காட்சி குழுவினர் வருகிறார்கள். அந்த ஊரில் வயதான பெண்கள் மட்டுமே வசிக்கிறார்கள், ஏதோ ஒரு அமானுஷ்ய நிகழ்வு நடந்து முடிந்துள்ளது என்பதைப் போலிருக்கிறது. கைவிடப்பட்ட ஊராக உள்ள அக்கிராமம் ஒரு காலத்தில் எப்படியிருந்தது என்ற கதையை ஊரின் மேயர் சொல்லத் தொடங்குகிறார்.
நினைவுகளின் வழியே படம் பின்னோக்கிச் செல்கிறது.
அழகான விவசாயக் கிராமமது. ஒரு பெரிய குடும்பம் போல ஊரே ஒன்றாக வாழுகிறார்கள். அக் கிராமத்தில் இளம்பெண்ணான மாராவைக் காதலிக்கிறான் ஐங்கு என்ற இளைஞன். காதலர்கள் ஒன்றாகச் சுற்றுகிறார்கள். வயலில் உடலுறவு கொள்கிறார்கள். ஊரே வேடிக்கை பார்க்கிறது
அந்த ஊரின் மதுவிடுதியில் மாராவின் தந்தையும் ஐங்குவின் தந்தையும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
தன் மகள் பின்னே உன் மகன் சுத்துவது பிடிக்கவில்லை என்று மாராவின் தந்தை சண்டைபோடுகிறான். உன் மகளை அடக்கி வை என்று ஐங்குவின் தந்தை கோபம் கொள்கிறான். இந்தச் சூழலில் ஐங்கு மதுவிடுதிக்கு வருகிறான். தான் காதலிக்கும் மாராவைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவிக்கிறான். இரண்டு தந்தைகளும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். வியாழன் அன்று திருமணம் என நாள் குறிக்கிறார்கள்.
இந்தச் செய்தியை சொல்ல ஐங்கு மாராவைத் தேடி வருகிறான். வீட்டுக் கொடியில் ஈரத்துணியைக் காயவைத்துக் கொண்டிருக்கும் மாராவை துணியோடு சேர்த்து அணைத்து முத்தமிடுகிறான். அவளும் ஆசையில் கட்டிக்கொண்டு வலிமையாக முத்தமிடுகிறாள்.காதல் பித்தேறிய அவர்களை முதிய தம்பதிகள் வெறித்துப் பார்க்கிறார்கள்.
காதல் ஜோடியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்த ஊரே ஒன்றுகூடுகிறது. இதற்குள் அந்த ஊருக்குச் சர்க்கஸ் வரவே அதன் கலைஞர்களும் இந்தக் கொண்டாட்டத்தின் பகுதியாகிறார்கள். சர்க்கஸ் கிராமத்திற்குள் வரும் இரவுக்காட்சி சர்ரியலிச ஒவியம் போலவேவுள்ளது.
திருமண நாளின் முன்பாக அந்த ஊருக்கு வரும் கம்யூனிஸ்ட் அரசின் அதிகாரி, ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் இறந்துவிட்டார் ,ஆகவே தேசம் முழுவதும் ஏழு நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த நாட்களில் எவரும் எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடக்கூடாது. திருமணம், குடும்ப விழா எதற்கும் அனுமதி கிடையாது என உத்தரவிடுகிறான். ருமேனியா கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்த காலமது.
திருமண ஏற்பாடுகள் நடந்துவிட்டன. உறவினர்கள் ஒன்று கூடி விட்டார்கள். விருந்து கூடத் தயாராகி வருகிறது. ஆகவே திருமணத்தை நடத்த மட்டும் அனுமதி கொடுங்கள் என்று மன்றாடுகிறார் பெண்ணின் தந்தை. கம்யூனிஸ்ட் அதிகாரி அனுமதி தர மறுக்கிறார். மீறி நடந்தால் அவர்களைக் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்.
வெளியுலகம் அறியாமல் அந்தத் திருமணத்தைச் சப்தமேயில்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என ஊர்மக்கள் முடிவு செய்கிறார்கள். இதற்காகப் பெண்ணின் வீட்டில் ஒன்றுகூடுகிறார்கள்.
சப்தம் எழுப்பிவிடக்கூடாது என்று சிறுவர்களின் வாயைக் கட்டிவிடுகிறார்கள். கண்ணாடி டம்ளர்கள் சப்தம் எழுப்பும் என அதன் மீது துணியைச் சுற்றுகிறார்கள். முள்கரண்டி, ஸ்பூன் போன்றவற்றை விலக்கி கையால் சாப்பிடுகிறார்கள். பாதிரியார் சப்தம் வெளிப்படாமலே பிரார்த்தனை செய்கிறார். விருந்திற்கு வந்தவர்கள் சப்தம் வெளிவராமலே ஆசி தருகிறார்கள். சப்தம் வராத இன்னிசை நிகழ்ச்சி கூட நடக்கிறது. விருந்துக்கு வந்தவர்கள் சைகையாலே கேலி செய்து கொள்கிறார்கள். மணப்பெண்ணும் பையனும் நிழல்கள் போலச் சப்தம் எழுப்பாமல் நடனமாடுகிறார்கள்.
இந்தக் கல்யாணம் எப்படி நிறைவுபெற்றது. அந்த மணமக்கள் என்ன ஆனார்கள். அவர்களின் குடும்பமும் ஊரும் என்னவானது என்பதே படத்தின் பின்பகுதி.
ஒரு கல்யாணத்தைச் சிறுசப்தம் கூட எழுந்துவிடாமல் அமைதியாக நடத்திக் காட்டுவது மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரம் தனிநபர்களின் வாழ்க்கையை என்ன செய்யும் என்பதற்கு இந்தப் படத்தின் திருமணக் காட்சியே சிறந்த உதாரணம்.
காதலி மாராவாக வரும் மேடா ஆண்ட்ரியா விக்டர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். திருமணத்தின் போதும், காதலுற்ற நாட்களின் போதும் அவரது முகத்தில் தான் எத்தனை பிரகாசம். சந்தோஷமாக நடக்க வேண்டிய திருமணம் இப்படி ரகசியமாக, அமைதியாக நடக்கிறதே என அவர் முகத்தில் வெளிப்படும் வேதனை அவரை மிகச்சிறந்த நடிகையாக அடையாளம் காட்டுகிறது.
மதுவிடுதியில் காணப்படும் பெண். காதலனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் குள்ளன். சர்க்கஸின் வருகை, பொதுவெளியில் படம் திரையிடப்படுவது போன்ற காட்சிகள் பெலினியின் படங்களை நினைவுபடுத்துவது போலிருக்கின்றன.
மௌனம் என்பது அடங்கிப்போவதில்லை. மீறுதலும் மௌனத்தின் அடையாளமே என்பதையே படம் நமக்குப் புரிய வைக்கிறது.
••
பதிவு செய்த நாள்
6.10.2019
