தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எழுத்தாளர் வண்ணதாசன். பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கிறது. இதற்கான பட்டமளிக்கும் விழா இன்று அக்டோபர் 22 -ம் தேதி தஞ்சையில் நடைபெறுகிறது.
தனது கவித்துவ எழுத்துகளால் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்ந்தவர் வண்ணதாசன். அன்பின் துணை கொண்டு இந்த உலகின் குரூரங்களை, அபத்தங்களை வென்றுவிட முடியுமெனக் காட்டும் அற்புதமான படைப்புகளை உருவாக்கியவர் வண்ணதாசன். ரெனார், மோனே போன்ற புகழ்பெற்ற ஒவியர்கள் இயற்கையைத் தனது தூரிகையின் வழியே வசீகரமான ஒவியங்களாக உருமாற்றினார்கள். அதே செயலை தனது சொற்களைக் கொண்டு நிகழ்த்தியவர் வண்ணதாசன். அவர் டாக்டர் பட்டம் பெறுவது நவீன தமிழ் இலக்கியத்திற்கே கிடைத்த பெருமை என்பேன்.
இதுபோலவே நாட்டார் வழக்காற்றியல் மற்றும் வரலாறு சார்ந்த ஆய்வுகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் பெருமதிப்பிற்குரியவர், அவர் விருது பெறுவதும் மகிழ்ச்சிக்குரியது.
படைப்பாளியைக் கௌரவிக்கும் இம் முயற்சிக்கு காரணமாகயிருந்த பண்பாட்டுத்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், தஞ்சை பல்கலைகழக துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் இருவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

