காதம்பரி தேவியின் காதல்

ரவீந்திரநாத் தாகூருக்கும் அவரது அண்ணி காதம்பரி தேவிக்குமான நட்பையும் காதலையும் விவரிக்கும் காதம்பரி (Kadambari) என்ற வங்காளப்படத்தைப் பார்த்தேன். சுமன் கோஷ் இயக்கியது . காதம்பரி தேவியாக நடித்திருப்பவர் கொங்கனா சென்.

காதம்பரி தேவி பற்றிச் சுனில் கங்கோபாத்யாயா Pratham Alo நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். தாகூரின் இந்த காதல் உறவு குறித்தும் இன்றும் சர்ச்சை தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது.

தாகூரின் சகோதரர் ஜோதிரிந்திரநாத்தின் மனைவியே காதம்பரி தேவி. தாகூரை விடவும் இரண்டு வயது சிறியவர் . தாகூர் குடும்பத்தின் கணக்காளரின் மகள் காதம்பரி

காதம்பரி தேவி க்கு 10 வயதாக இருந்தபொழுது அவரது திருமணம் நடைபெற்றது. ஜோதிரிந்திரநாத்தினை விட ஒன்பது வயது இளையவராக இருந்தார் . காதம்பரி தேவிக்கு வீட்டிலே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

படத்தில் இடம்பெற்றுள்ள சிறுவயது நிகழ்வுகளில் பெரும்பாலானவை தாகூரின் எழுத்துக்களிலிருந்து மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தாகூரின் குடும்பம் இசை, நாடகம், ஒவியம், இலக்கியம் எனக் கலைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது. ஒரு காட்சியில் வீட்டு மாடியில் ஆணும் பெண்ணும் ஒன்று கூடி கவிதை வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள். முக்கியமான வங்க கவிஞர் ஒருவர் தனது கவிதைகளை வாசித்துக் காட்டுகிறார். அன்றாடம் கவிஞர்களும் கலைஞர்களும் வந்து போகுமிடமாக இருந்தது ஜோரசங்கோ தாகூர் பாரி.

இன்னொரு காட்சியில் ஜோதிரிந்திரநாத்திடம் பக்தி இலக்கியம் குறித்துப் பேசுகிறார் காதம்பரி தேவி. ஷேக்ஸ்பியரின் நாடகத்தைப் படுக்கை அறையில் வாசித்துக் காட்டுகிறார் தாகூரின் சகோதரன். இப்படி இலக்கியமே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு குடும்பம் இந்தியாவில் வேறு எங்கும் இருந்திருக்குமா என்பது ஐயமே.

வேறு ஒரு காட்சியில் தாகூரின் வீட்டில் மூன்று பெண்கள் ஒன்று கூடி அந்தகால மாத இதழ்களையும் அதில் வரும் தொடர்களையும் பற்றிப் பேசுவது மறக்கமுடியாத காட்சி. தொடர்கதைகள் வங்காளிகள் வாழ்வில் செலுத்திய ஆதிக்கத்தை இந்தக் காட்சி அழகாகப் பதிவு செய்திருக்கிறது.

தாகூருக்கும் காதம்பரிக்குமான உறவு சிறுவயதிலே துவங்குகிறது. காதம்பரிக்கு அந்த வீட்டில் இருந்த ஒரே தோழன் தாகூர் மட்டுமே. அவரது கவிதைகளின் முதல் வாசகி அவளே. இருவரும் ஒன்றாக மாலை சூரியனை ரசிக்கிறார்கள். மழையில் நனைந்து பாடுகிறார்கள். பூக்களை பறிக்கிறார்கள். அந்த வீட்டில் தன்னைப் புரிந்து கொண்ட ஒரே ஆத்மா ரபி மட்டுமே  என நினைக்கிறாள் காதம்பரி.

காதம்பரி தேவி தாகூரின் கவிதைகளைப் பாடி மகிழுகிறாள். எளிமையான குடும்பத்தில் பிறந்த காதம்பரியை தாகூரின் பராம்பரியம் மிக்க குடும்பம் முறையாக நடத்தவில்லை. அந்தக் குறை அவள் மனதை அழுத்துகிறது. அவள் தனது மனக்கவலைகளை மறக்க இசையிலும் இலக்கியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள்.

காதம்பரியின் கணவர் ஜோதிரிந்திரநாத் சிறந்த இசைக்கலைஞர். பிரெஞ்சு ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகள் அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து முக்கிய இலக்கியப் படைப்புகளை வங்கத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். நாடகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  கப்பல் கம்பெனி ஒன்றையும் நடத்தி வந்தார். ஆகவே அவருக்குக் குடும்ப விஷயங்களில் அதிக நாட்டமில்லை.

தனிமையில், பகிர்ந்து கொள்ளப்படாத அன்பின் வலியோடு நாட்களைக் கடத்திய காதம்பரி தனக்கான தோழனாக ரவீந்திரனைக் கருதினாள். இருவரும் ஒன்றாகச் சுற்றுவதை உறவினர்கள் தவறாகப் பேசினார்கள். ஆனால் ஜோதிரிந்திரநாத் அதைப் பெரிதாகக் கருதவில்லை.

படத்தில் இருவரது உறவும் மிகுந்த கவித்துவமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மனதிலுள்ள ஆசைகளைக் கண்களின் வழியாக மட்டுமே வெளிப்படுத்துகிறார் காதம்பரி தேவி. கொங்கனா சென் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று ஜோதிரிந்திரநாத், காதம்பரி,  ரவீந்திரநாத் மூவரும் இரவில் ஆற்றில் படகு சவாரி போவது. படகில் ஜோதிரிந்திரநாத் வயலின் இசைத்துப் பாடுவது. அவரோடு இணைந்து தாகூரும் பாடுவது என அந்தக் காட்சி மறக்கமுடியாதது.

காதம்பரி தேவியின் பிறந்த நாள் இரவில் கொட்டும் மழையோடு அவளைத் தேடி வரும் தாகூரின் கண்களில் மின்னுவது காதல். அவளது கண்களிலும் காதலே பீறிடுகிறது. தன்னை மறந்து அவரது மார்பில் சாய்ந்து கொள்கிறாள்.

காதம்பரி தேவியிடமிருந்து தாகூரைப் பிரிக்கவே அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மிருணாளினி என்ற பத்து வயது பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இந்தத் திருமணம் நடந்த மூன்று மாதங்களில் காதம்பரி தேவி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். படம் இந்தப்புள்ளியில் தான் துவங்குகிறது. எதனால் தற்கொலை செய்து கொண்டாள் என்பது இன்று வரை தெரியவில்லை அவளது மரணம் மர்மமாகவே உள்ளது. ஆனால் காதம்பரி தேவியின் மரணம் தாகூரை மிகவும் பாதித்தது. வாழ்நாள் முழுவதும் அவளது நினைவிலே தாகூர் கவிதைகள் எழுதி வந்தார். ஒவியங்கள் வரைந்தார்.

தாகூரின் மனைவியும் இருபத்தியெட்டு வயதில் இறந்து போனார். அதன்பிறகு தன் வாழ்க்கையைப் பொதுநலனிற்காக அர்ப்பணித்துக் கொண்டார் தாகூர்.

பரம்பிரதா சட்டோபாத்யா படத்தில் ரவீந்திரநாத் தாகூர் போல நீண்ட முடி மற்றும் தாடியுடன் தோற்றமளிக்கிறார்,. ஒப்பனை பொருத்தமாக உள்ளது. ஆனால் நடிப்பு மிகவும் சுமார். சில காட்சிகளில் மாறுவேஷப்போட்டியில் கலந்து கொண்டவரைப் போலிருக்கிறார்.

தாகூரை காதலித்த குற்றத்திற்காகக் காதம்பரி தற்கொலை செய்து கொண்டாளா.? அல்லது அவளது கணவருக்கு வேறு ஒரு பெண் வழியாகக் குழந்தை உருவாகியிருப்பதை அறிந்து அதற்காகத் தற்கொலை செய்தாளா? இல்லை தனக்குக் குழந்தையில்லை என்ற வருத்தம் காரணமா ?. ஊர்மிளா என்ற குழந்தை இறந்து போகத் தான் காரணம் என்ற குற்றவுணர்ச்சியா?, எது அவளைத் தற்கொலை செய்யத்தூண்டியது என எவருக்கும் தெரியாது.

ஜோரசங்கோ தாகூர் பாரி எனப்படும் தாகூரின் மாளிகைக்கு மட்டுமே அங்கு நடந்த விஷயங்கள் தெரியும். உலகின் காதுகளுக்கு எட்டாத ரகசியங்கள் அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் சுவர்களுக்குள் புதைந்து விட்டன.

காதம்பரி தேவிக்கும் தாகூருக்குமான உறவைத் தான் சத்யஜித்ரேயின் சாருலதா படம் விவரிக்கிறது. ரே அந்தப்படத்தை ஒரு காவியமாக உருவாக்கியிருப்பார். தாகூரின் சிதைந்த கூடு என்ற கதையை மையமாகக் கொண்டே சாருலதா உருவாக்கப்பட்டது. சாருலதாவின் ஊஞ்சல் காட்சி ஒரு போதும் மறக்கமுடியாதது.

காதம்பரி படத்தின் பாடலும் பின்னணி இசையும் மிகச்சிறப்பு. இசையமைப்பாளர் பிக்ரம் கோஷ் பாராட்டிற்குரியவர்.

••

0Shares
0