துறவியின் காதல்

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவல் ஒரு இளைஞன் வீட்டிலிருந்து வெளியேறி துறவு வாழ்க்கையை நோக்கிப் போவதை விவரிக்கிறது. ஞானத்தைத் தேடும் சித்தார்த்தன் முடிவில் அதை எப்படி அடைகிறான் என்பதை ஹெஸ்ஸே அழகாக விவரித்திருக்கிறார். சித்தார்த்தா நாவலின் மறுபக்கம் போன்றதே நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான அனடோல் பிரான்ஸ்(anatole france) எழுதிய தாயிஸ் (THAIS)

இந்நாவலை தாசியும் தபசியும் என்ற தலைப்பில் எஸ். சங்கரன் மொழி பெயர்த்திருக்கிறார். தபசி என்ற சொல்லை இன்று எவரும் பயன்படுத்துவதில்லை. தவம் செய்பவன் தபசி.

தாயிஸ் நாவலில் ஒரு துறவி காதலில் விழுகிறான். துறவு வாழ்க்கை சரியானது தானா என்று குழப்பமடைகிறான். கடவுளின் இருப்பு, இன்மை குறித்த கேள்விகளை எதிர்கொள்கிறான். அவனது சஞ்சலமே நாவலின் ஆதாரப்புள்ளி.

உலகின் மிகச்சிறந்த நாவல் வரிசையில் தாயிஸ் இன்றும் கொண்டாடப்படுகிறது. என் கல்லூரி நாட்களில் இலக்கியவாதிகள் பலரும் இந்நாவலைப் புகழ்ந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். நூலகத்தில் தேடி கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் மதுரையின் பழைய புத்தகக் கடையில் இந்நாவலை வாங்கினேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியத்தில் அனடோல் பிரான்ஸ் மிக முக்கியப் படைப்பாளி. இவர் 1921ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார்.

தாயிஸ் நாவல் 1890 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் செயிண்ட் தாயிஸ் என்ற துறவியின் வாழ்க்கையின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

அனடோல் பிரான்ஸின் தந்தை ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார். அவர் ஒரு பதிப்பாளரும் கூட. ஆகவே அனடோல் சிறுவயது முதலே புத்தகங்ளுடன் நெருக்கம் கொண்டிருந்தார். பன்முகப்பட்ட எழுத்தாளராக கவிதை, நாவல். விமர்சனம், கட்டுரைகள் எனத் தீவிரமாக எழுதியவர் அனடோல் பிரான்ஸ். இவரது நாவல்கள் பெரிதும் மதம் சார்ந்த நம்பிக்கைகளை விசாரணை செய்கின்றன.

தாயிஸ் நாவல் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களைக் கொண்டது. ஒருவர் துறவி பாப்னூடியஸ் மற்றவர் தாசி தாயிஸ். இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.

ஆணும் பெண்ணும் இருளும் ஒளியும் போன்றவர்கள். இருளும் ஒளியும் ஒன்றுக்கொன்று எதிரானதில்லை. இருளால் தான் ஒளி புலப்படுகிறது என்கிறது தாவோ. இந்நாவல் ஆணின் மெய் தேடலும் பெண்ணின் தேடலும் எந்தப் புள்ளியில் மாறுபடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

எகிப்தில் அந்த நாட்களில் ஏராளமான கிறிஸ்துவத் துறவிகள் பாலைவனத்தில் வாழ்ந்தார்கள். வாழ்க்கை இன்பங்களை உதறித்தள்ளி பாலையின் நடுவே அவர்கள் கடுந்தவம் செய்து வந்தார்கள். அந்தத் துறவிகளில் ஒருவரே பாப்னூடியஸ்.

இவர் அலெக்சாண்டிரியாவில் வசிக்கும் தாயிஸ் என்ற தாசி இளைஞர்களை மயக்கிப் பாவம் செய்ய வைப்பதைப் பற்றிக் கேள்விப்படுகிறார். அவளை எப்படியாவது திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என முடிவு செய்து பாலைவனத்தை விட்டு அவள் இருக்கும் நகரத்திற்குச் செல்கிறார்.

இதற்காக அவர் தனிமையான சாலைகளில் பயணம் செய்கிறார். புளியமரங்களுக்கு நடுவே கடந்து செல்லும் தென்றலின் முணுமுணுப்பு கூட அவரை நடுங்கச் செய்கிறது, எந்த அழகினையும் தான் காணக்கூடாது என்பதற்காக அவர் கண்களை மூடிக்கொண்டு நடக்கிறார். ஆறு நாட்கள் நடந்த பிறகு, அவர் சில்சில் என்ற இடத்திற்கு சென்று சேருகிறார். அங்கே. குன்றில் செதுக்கப்பட்ட கோர உருக் கொண்ட சிற்பங்களைக் கண்டு அவை சாத்தானின் வேலை எனச் சிலுவை குறியிட்டுப் பிரார்த்தனை செய்துகொள்கிறார்.

பதினெட்டு நாட்கள் பயணித்து  முடிவில் ஒரு கிராமத்திலிருந்த குடிசை ஒன்றைக் காணுகிறார். கதவு இல்லாத குடிசையது அங்கே டிமோக்கிள்ஸ் என்பவரைச் சந்திக்கிறார். அவர் கடவுள் நம்பிக்கையற்றவராக இருக்கிறார். இந்த உலகில் நல்லது கெட்டது எனத் தனியாக எதுவுமில்லை. உணவிற்கு உப்பு ருசி தருவது போல நம் செயல்களே நன்மை தீமையைத் தீர்மானிக்கின்றன என்கிறார் டிமோக்கிள்ஸ். ஏன் இப்படி இறைநம்பிக்கையில்லாமல் பேசுகிறார் எனப் பாப்னூடியஸ் கேட்டதற்கு அவர் தனது கடந்தகால வாழ்க்கையைச் சொல்கிறார். அதில் நான் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவன். கிரேக்கத்தில் தத்துவம் படித்தேன். அது எனக்கு விருப்பமாகயில்லை. உலகை அறிந்துவர எங்கெங்கோ பயணம் செய்து முடிவில் இந்தியாவிற்குச் சென்றேன். அங்கே கங்கைக் கரையில் ஒரு நிர்வாண மனிதனைக் கண்டேன், அவர் முப்பது வருடங்களுக்கும் மேலாகக் கால்களை ஆசனமிட்டுத் தவம் செய்வது போல அசைவில்லாமல் அமர்ந்திருக்கிறார். அவர் மீது செடிகொடிகள் படர்ந்திருந்தன. அவரது தலையில் பறவைகள் வந்து அமர்கின்றன. அவரைப் பார்த்த போது இந்த இந்தியர் ஒரு ஞானி என்பதை நான் உணர்ந்தேன்.

அவரைப் போலவே எல்லாவற்றையும் உதறி இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு முயற்சிக்கத் துவங்கினேன். அந்த இந்திய ஞானி எனக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கிறார் என்கிறார்

இந்தியத் துறவியினை முன்மாதிரியாகச் சுட்டுவதன் வழியே அனடோல் பிரான்ஸ் இந்திய மெய் தேடலின் தனித்துவத்தை அடையாளம் காட்டுகிறார். அந்த வகையிலும் இந்நாவல் ஹெஸ்ஸேயின் நாவலோடு நெருங்கவே செய்கிறது.

தாயிஸ் ஒரு பேரழகி. அவள் ஒரு நாடக நடிகை. அவளது அழகில் மயங்கி பலரும் அவளைக் காதலித்தார்கள். வீடு, வசதி, விருந்து, புகழ் என அவள் சலித்துப் போகுமளவு இன்பங்களை அனுபவித்துவிட்டாள். இப்போது மரணம் குறித்த பயம் அவளுக்குள் உருவாகியிருந்தது.

அலெக்சாண்டிரியா சென்ற பாப்னூடியஸ் தாயிஸைச் சந்திக்கிறார். அவளுடன் விருந்துக்குச் செல்கிறார். அந்த விருந்தில் மதச்சர்ச்சைகள் நடைபெறுகின்றன. ஒட்டுமொத்த விருந்தும் பெரும் அபத்தமாகத் தோன்றுகிறது.

விருந்தில் போதை அதிகமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளவே பாப்னூடியஸ் கொதித்துப் போகிறார். இந்த நரகத்தை விட்டு என்னோடு வா ,நிஜமான சொர்க்கத்தைக் காட்டுகிறேன் என்று தாயிஸை அழைத்துக் கொண்டு வெளியேறிப் போகிறார்.

அவளைத் தொலைவிலிருந்த ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் ஒப்படைக்கிறார். இனி அவள் தன்னுடைய மீட்சியைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்கிறார். ஒரு பாவப்பட்ட பெண்ணை மீட்டு ரட்சிப்பின் பாதையில் அழைத்துச் சென்றுவிட்டோம் என்று சந்தோஷம் அடைகிறார். ஆனால் அவர் நினைத்தது தவறு என்பது போல வாழ்க்கை திசை மாறத் துவங்குகிறது.

அதன் பிந்திய நாட்களில் முன்பு போலப் பாப்னூடியஸால் தவம் செய்ய முடியவில்லை. அவர் மனதில் தாயிஸ் பற்றிய நினைவுகள் பீறிடுகின்றன. அவளது அழகினைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். அவளது நினைப்பு அவருக்குள் காமத்தைக் கொந்தளிக்கச் செய்கிறது. நிம்மதியற்று அலைக்கழிக்கப்படுகிறார்.

தாயிஸின் கூந்தலை அலங்கரிக்கும் மலராகத் தான் இருக்கக்கூடாதா? அவளது அழகிய உடலை மூடியிருக்கும் உடையாக இருக்கக்கூடாதா? அழகான கால்களில் அணிந்திருக்கும் செருப்பாகவாவது இருக்கக்கூடாதா? உன்னுடைய கால்களில் என்னை அணிந்து கொள். எனது உடலை உன்னோடு போர்த்திக் கொள் என்று புலம்புகிறார்.

தான் பாவம் செய்துவிட்டதாக நினைத்துத் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறார். அவரால் தாயிஸின் காதல் நினைவிலிருந்து விடுபடமுடியவில்லை. இதற்காக அவர் கடுந்தவம் செய்ய முனைகிறார். சுயவதையே இதற்கான தீர்வு என்று நினைக்கிறார். ஆனால் தாயிஸ் அவரது மனதில் அழியாச்சுடர் போல எரிந்து கொண்டேயிருக்கிறாள்.

இத்தனை அழகான ஒரு பெண்ணை அடைந்து இன்பமயமான வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக ஏன் அவளைக் கன்னிமார் மடத்தில் சேர்த்துவிட்டேன் என்று புலம்புகிறார்.

முடிவில் ஒரு நாள் தாயிஸைத் தேடிப்போகிறார். அவளோ மரணப்படுக்கையில் இருக்கிறாள். அவள் முழுக்க இயேசுவை நம்பி தன்னை ஒப்படைத்துக் கொண்டு தூய ஆத்மாவாக உருமாறியிருக்கிறாள். அதைப் பாப்னூடியஸால் நம்ப முடியவில்லை. அவர் ஆற்றாமையில் புலம்பித் தவிக்கிறார்.

துறவியின் காதலையும் தாசியின் துறவு நிலையையும் எதிரெதிராக வைத்து அனடோல் பிரான்ஸ் வாழ்க்கையின் உண்மையான நோக்கம் எதுவெனக் கேள்வி எழுப்புகிறார்.

ஹ்ரோட்ஸ்விட்டின் எழுதிய பாப்னூட்டியஸ் நாடகம் பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. இந்த நாடகம் தாயிஸின் துறவு வாழ்வினை விவரிக்கிறது. கிறிஸ்துவச் சமய தொல்கதைகளில் ஒன்றாகவே தாயிஸைக் குறிப்பிடுகிறார்கள்.

இக்கதையைத் தான் அனடோல் பிரான்ஸ் புதிய கண்ணோட்டத்தில் தனது நாவலில் விவரிக்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதனிடம் கடவுள் நம்பிக்கை குறித்த பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் இருந்தன. அதைப் பிரதிபலிப்பது போலவே அனடோல் பிரான்ஸ் இந்நாவலை எழுதியிருக்கிறார்.

ஹெஸ்ஸேயின் சித்தார்த்தாவும் அனடோலின் பாப்னூட்டியஸ் இருவரும் மிகுந்த ஒற்றுமை கொண்டிருக்கிறார்கள். சித்தார்த்தாவும் கமலா என்ற தாசியின் வீட்டில் தங்குகிறான். அவளுடன் நெருங்கிப் பழகுகிறான். ஆனால் சித்தார்த்தா கமலாவிடமிருந்து வெளியேறிவிடுகிறான். பாப்னூட்டியஸ் காதலில் இருந்து விலகமுடியவில்லை. நாவலில் பாப்னூட்டியஸ் தீவிரமான மதக்கட்டுபாடும் நெறிகளும் கொண்டவராகவே சித்தரிக்கப்படுகிறார். தங்களின் புனிதச் செயலால் பாலைவனம் ஒரு ரோஜா போல மணம் வீசும் என நம்புகிறவராக இருக்கிறார். பாவப்பட்ட மனிதர்களை மீட்பதற்காகவே தான் வாழ்வதாக நம்புகிறார்.

ஆனால் தாயிஸின் காதல் அவரை நிலைகுலைய வைக்கிறது. ஒரு சமயம் தீவிரமான துறவு வாழ்க்கை தவறானதோ என்று கூடச் சந்தேகம் கொள்கிறார்.. ஒரு புறம் அவர் சஞ்சலம் கொள்ளும் போது மறுபுறம் தாயிஸ் சஞ்சலத்திலிருந்து விடுபட ஆரம்பிக்கிறாள். ஒருவேளை சித்தார்த்தாவில் வரும் கமலா துறவு வாழ்க்கையை நோக்கிப் போயிருந்தால் என்னவாகியிருப்பாள் என்பதையே தாசியும் தபசியும் விவரிக்கிறது.

இந்த நாவலைத் தழுவியே முன்ஷி பிரேம்சந்த் தனது அஹங்கர் என்ற நாவலை எழுதியிருக்கிறார்.

தாசியும் தபசியும் கதையின் மாறுபட்ட வடிவம் ஜென் கதைகளிலும் காணப்படுகிறது. இந்திய நாட்டுப்புறக்கதைகளில் கூட இதன் மாறுபட்ட கதைவடிவத்தைக் காணமுடிகிறது.

பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தது வால்டேரின் கருத்துகள். வால்டேர் நிறைய எழுதிக் குவித்திருக்கிறார். மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகவே பிறக்கிறான். மதத்தின் பெயராலும் மரபின் பெயராலும் அவன் முடக்கப்படுகிறான். இந்தக் கட்டுப்பாடுகள், ஒடுக்குமுறைகளே அவனைச் சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுக்கின்றன. இக் கட்டுப்பாடுகளிலிருந்து மனிதனை விடுவிக்க வேண்டியதே தனது முதற்வேலை என்று வால்டேர் கூறினார். இதன் எதிரொலிப்பைத் தான் அனடோல் பிரான்ஸ் நாவலில் நாம் கேட்க முடிகிறது

நாவலில் பாப்னூட்டியஸ் தாயிஸின் அருகிலிருக்கும் போது சஞ்சலம் கொள்வதில்லை. அவளைக் காதலிப்பதுமில்லை. ஆனால் பிரிவு தான் அவள் மீதான காதலை உருவாக்குகிறது. நினைவுகளால் தான் பாப்னூட்டியஸ் அவதிப்படுகிறார். நினைவுகள் ஏன் அவரை இப்படித் துன்புறுத்துகின்றன. அதே நேரம் தாயிஸ் ஏன் தன் கடந்த கால நினைவுகளிலிருந்து எளிதாகத் துண்டிக்கப்பட்டு துறவு வாழ்க்கைக்குத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறாள். நினைவு எதனால் தூண்டப்படுகிறது. நினைவினை எப்படிக் கடந்து செல்வது இது குறித்தே நாவல் பேசுகிறது

நுட்பமான விவரணைகள், அழுத்தமான கதாபாத்திரம். கவித்துவமான உரையாடல் என அனடோல் பிரான்ஸ் நாவலைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். நூற்றாண்டினைக் கடந்தும் வாசிப்பில் அதே ஈர்ப்புக் கொண்டிருப்பது வியப்பளிக்கிறது.

••

0Shares
0