அலன் ராபே கிரியே

கதையைக் கடந்து செல்லும் காட்சிகள்.

சமகால பிரெஞ்சு இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படும் அலன் ராபே கிரியே(Alain Robbe-Grillet) தனது எண்பத்தைந்தாவது வயதில் நேற்று மரணமடைந்தார். பிரெஞ்சு நவீன இலக்கிய உலகில் ராபே கிரியேவின் பெயர் தனித்துவமானது. கதை சொல்லலில் அவர் நிகழ்த்திய மாற்றங்களே இன்றைய பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. ராபே கிரியேவின் சிறுகதை ஒன்றை கல்குதிரை வெளியிட்ட உலகச்சிறுகதை தொகுதிக்காக நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வந்த ராபே கிரியேவை ஜேம்ஸ்ஜாய்ஸிற்கு ஒப்பிடுகின்றவர்கள் அதிகம். சம்பவங்களை விலக்கிய கதை எழுத்து என்று அவரை அடையாளம் காட்டுகிறார்கள். 

1950களில் பிரெஞ்சில் எழுந்த புதிய அலை எழுத்தாளர்களில் கிளாடே சிமோன், நதாலியே சரட் ராபே கிரயே மூவருமே முக்கியமானவர்கள். இவர்கள் அதுவரை வரலாற்றை சுவாரஸ்யப்படுத்தி எழுதப்பட்டு வந்த நாவல்களை மறுதலித்து புதியவகை நாவல்களுக்கான விவாதத்தை முன்வைத்தனர். புதிய நாவல், எழுத்தின் வழியே தனக்கென தனியானதொரு புனைவுலகை உருவாக்க வேண்டும். அது தோற்றமாக நாம் காணும் யதார்த்த உலகோடு தொடர்பு உடையதாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. காரணம் மொழியின் வழியாக உருவாக்கபடும் யதார்த்தம் அது. 

ஆகவே புதிய நாவலின் அடித்தளம் கற்பனையின் சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவதே என்று ராபே கிரியே தனது நாவல் குறித்த கட்டுரை ஒன்றில் பிரகடனம் செய்தார். அதன் வேகம் புதிய நாவல் வருகைக்கு கதவுகளை திறந்துவிட்டது. 

அலென் ரெனே இயக்கி ராபே கிரியே திரைக்கதை வசனம் எழுதிய லாஸ்ட் இயர் அட் மரியான்பாட் என்ற படத்தை பத்து வருடங்களுக்கு முன்பாக கேரள திரைப்படவிழா ஒன்றில் பார்த்தேன். பரிசோதனை திரைப்படங்களில் மிக முக்கியமானது என்று கொண்டாடப்படும் மரியான்பாட் அது வரை பிரெஞ்சு சினிமா கொண்டிருந்த சம்பிரதாயமான திரைக்கதையை முற்றிலும் மாற்றி புதியதொரு காண் அனுபவத்தை உருவாக்கியிருந்தது. 

மரியான்பாட் திரைப்படத்தை முதல் முறையாக பார்த்த போது தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. மாறாக இரண்டாவது மூன்றாவது முறைகள் வேறு விழாக்களில் பார்த்த போது அது ஒரு படிமங்களால் உருவான கவிதை போல வடிவம் கொண்டிருப்பதை உணர முடிந்தது. 

திரைப்படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் . இருவர் ஆண்கள் ஒரு பெண். முவருக்கும் தனித்துவமான பெயர்களோ, சிறப்பு அடையாளங்களோ இல்லை. ஏ என்ற பெயருடைய மனிதன் எம் என்ற பெயருடைய மற்றொரு நபரின் மனைவியை தற்செயலாக சந்திக்கிறான். அவளிடம் தாங்கள் இருவருக்கும் முன்னதாகவே உறவு இருந்தாகவும் தாங்கள் மரியான்பாட்டில் சந்தித்து கொண்டதாகவும் தெரிவிக்கிறான். அவளோ அப்படியொரு சம்பவமே நடைபெறவே இல்லை என்கிறாள். அவன் தன்னிடம் அவள் கால அவகாசகம் கேட்டது உண்மை என்று சொல்லி அவள் உறவிற்கு ஏங்குவதாக சொல்கிறான். 

அவளுக்கு தான் எப்போது அவனை சந்தித்தோம் என்று குழப்பமாக உள்ளது. நிஜமாகவே அவர்கள் மரியான்பாட்டில் சந்தித்து கொண்டார்கள்.ஒன்றாக பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்களா அல்லது யாவும் கற்பனையான என்று புரியாத இரட்டை தன்மையோடு சந்திப்புகள். தொடர்கின்றன. புதிர் கட்டங்களில் நகர்வது போன்று முன்பின்னாக கதை பயணிக்கிறது. முடிவில் அந்த பெண் தனக்கு அறிமுகமில்லாத ஆளோடு பயணம் செய்ய முடிவு செய்கிறாள்.

கதை நகர வாழ்வின் வெறுமையையும் கற்பனை எந்த அளவு வாழ்வை முன்னெடுத்து செல்ல துணை போகிறது என்பதையுமே மையப்படுத்துகிறது. விசித்திரமான கேமிரா கோணங்கள் . மிக நெருக்கமான அண்மைகாட்சிகள், உணர்ச்சிவசப்படாத குரலில் விவரிக்கபடும் நகர வர்ணனை. படிமங்களைப் போல திரும்பத் திரும்ப தோன்றிமறையும் காட்சிகள் என மரியான்பாட் திரைப்படத்தை காண்பது நவீன ஒவியங்களை போன்று ஒரு அனுபவ வெளியை உருவாக்குகிறது 

ராபே கிரியே அலேன் ரெனோயுடன் இணைந்து திரைக்கதை எழுதியது மட்டுமின்றி அவரே திரைப்படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.  பத்துக்கும்மேற்பட்ட நாவல்களும் தன்னுடைய வாழ்வை விவரிக்கும்Ghosts in the Mirror புதிய வகை நாவல்கள் குறித்துFor a New Novel என்ற கட்டுரை தொகுப்பும் வெளியிட்டுள்ளார். அவரது திரைக்கதைகளும் புத்தகமாக வெளிவந்துள்ளன. 

சர்சைகள், விவாதங்கள் என்று தன் இறுதிநாள்வரை தனது ஆளுமையை நிருபணம் செய்தபடியிருந்தவர் ராபே கிரியே. இனி அவர் எழுத்தாக மட்டுமே இருப்பார் என்பது தவிர்க்க இயலாத சோகம்.

அலென் ராபே கிரியாவை அறிந்து கொள்ள https://www.halfaya.org/robbegrillet 

அவரது நேர்காணலுக்குhttps://www.bookforum.com/archive/spr_03/interview_gril.html

0Shares
0