ஒவிய உலகில்

சென்னை லலித் கலா அகாதமியில் நடைபெற்று வரும் Regional Art Exhibition 2014 பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன், ஏழு மாநிலங்களைச் சேர்ந்த இளம் ஒவியர்களின் அரிய ஒவியங்கள், சிற்பங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருந்தன,

இரண்டாயிரத்துக்குப் பிறகு இந்தியாவின் நவீன ஒவியஉலகில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மிக அதிகமாகயிருப்பதைப் பலரது ஒவியங்களில் காணமுடிகிறது, நிறத்தேர்வு. காட்சிக்கோணம், உருவங்களைச் சிதறடிக்கும் விதம், லயம் போன்றவற்றில் தொழில்நுட்பத்தின் பாதிப்பு மேலோங்கியிருக்கிறது.

அதே நேரம் மேற்குலகின் பாதிப்பிலிருந்து விலகி தங்களுக்கான தனித்தன்மையுடன் சில இளம் ஒவியர்கள் அசலாக உருவாகிவருகிறார்கள் என்பதன் அடையாளமாகச் சில முக்கிய ஒவியங்களையும் காணமுடிந்தது,

திருக்கோவிலூரைச் சேர்ந்த ஏபல் வரைந்த மார்க்கெட் சீரியஸ் எனும் நீர்வண்ண ஒவியம் அபாரமானது, நீர்வண்ணங்களை அவர் உபயோகித்துள்ள விதம், உருவங்களின் கரைந்த தோற்றம், நிறக்கலவையின் தேர்ந்த பயன்பாடு, சந்தையின் ஆன்மாவை இந்த ஒவியத்தில் நாம் தரிசிக்க முடிகிறது,

ஆந்திராவைச் சேர்ந்த ஆஞ்சநேயலு நவீன ஒவியர், ஒவ்வொரு பொருளும் ஒரு நடிகர், அது இடத்திற்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதை உணர்த்தும் விதமாகத் தண்ணீர் கூஜா ஒன்றினை ஒவியமாக வரைந்திருக்கிறார்,

பழங்களையும், மலர்களையும் Still life ஒவியமாக ரசித்த நமக்குத் தண்ணீர் கூஜா தருவது மாறுபட்ட அனுபவம், கூஜாவின் ஊடாகப் பிரதிபலிக்கும் உருவங்கள், அதன் நேர்த்தியான வண்ணம் தீட்டல், துல்லியமான சித்தரிப்பு இந்த ஒவியத்தை மிகவும் ரசிக்க வைத்தது

திருநின்றவூரில் வசிக்கும் ஒவியர் பூஜா வரைந்துள்ள கலைடாஸ்கோப் ஒவியம். பால்யவயதில் நாம் உருட்டி விளையாடிய கலைடாஸ்கோப் தந்த சிதறிய ஒளிவடிவங்களின் தொகுப்பாக உருவாக்கபட்டுள்ளது, நுட்பமும் பேரழகும் கொண்ட இந்த ஒவியத்தை மேலும் கீழுமாகப் பார்க்க பார்க்க கலைடாஸ்கோ போலவே வண்ணங்கள் உருமாறுகின்றன, பாராட்டிற்குரிய ஒவியங்களில் இதுவும் ஒன்று

கர்நாடகாவைச் சேர்ந்த ரகு வரைந்துள்ள what goes around comes around ஒவியத்தை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தேன், திறந்திருக்கும் வாயின் வெளியே வரும் வண்ணத்துபூச்சி, அருகில் காத்திருக்கும் தவளை, கனவுத்தோற்றம் போன்ற ஒவியமது,

சுயலாபங்களுக்காக இயற்கையை நாம் அழித்து வருகிறோம், இதன் காரணமாக அடிப்படை வாழ்வாதரங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன, அந்த அக்கறையில் இருந்தே இந்த ஒவியத்தை வரைந்திருக்கிறேன் என்கிறார் ரகு,

நீண்ட நேரம் அந்தத் தவளையின் கண்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன், அக் கண்களில் வியப்பும் ஏக்கமும் காணமுடிகிறது, மனிதன் இயற்கையின் ஒரு அங்கம் அதை அவன் உணரும் போதே உயிரியக்கம் சிறப்பாகச் செயல்படும் என்பதை இந்த ஒவியம் உணரச் செய்கிறது,

மரபான சிற்பங்களை ரசிக்கப் பழகிய நமக்கு நவீன சிற்பங்களை ரசிப்பதற்கு ஈடுபாடு உருவாகவில்லை, ஆனால் நவீன சிற்பக்கலை பல உன்னதமான சிற்பங்களை உருவாக்கியிருக்கிறது, இந்தக் கண்காட்சியிலும் அது போன்ற சில சிற்பங்களைக் கண்டேன்,

உருவநேர்த்தியை மட்டுமே சிற்பத்தில் பார்த்து பழகியவர்களுக்கு இது போன்ற நவீன சிற்பங்களை எப்படி ரசிப்பது என்பது பிரச்சனையாக இருக்கிறது, நாம் சிற்பங்களை ஆண் ,பெண், மிருகம், கடவுள் என அடையாளப்படுத்தவும், யார் அவர், என்ன செய்கிறார் எனப் பொருள் கொள்ளவே எப்போதும் முயற்சிக்கிறோம், அதன் அழகியலைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை,

நவீன சிற்பங்கள் அதன் நேர்த்தி, வெளிப்பாடு, நுட்பம், தனித்துவம் எனப் பலதளங்களைக் கொண்டது, அவற்றைப் பொம்மைகளாகப் பார்க்கும் நமது பார்வையை மாற்றிக் கொண்டால் அது தரும் அனுபவம் உணர்ச்சிபூர்வமானதாகும்

••

0Shares
0