சலூன் நூலக விழா

இரண்டு நாட்களாகத் தூத்துக்குடியிலிருந்தேன். தனது சலூனில் நூலகம் ஒன்றை அமைத்து புத்தக வாசிப்பைப் பரவலாக்கி வரும் பொன் மாரியப்பன் இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

இப்படி ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் எங்கும் நடந்ததில்லை. மில்லர்புரத்தில் தனது சலூன் உள்ள வீதியிலே மேடை அமைத்து திறந்தவெளிக் கூட்டமாக அமைத்திருந்தார். இருநூறு பேருக்கும் மேலாக வந்திருந்தார்கள். அவரது கடையின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றிப் பொது மருத்துவமனை மருத்துவர்கள், தொழிலதிபர்கள். அரசு அதிகாரிகள். வங்கி அதிகாரி. பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி உறுப்பினர், காவல்துறை அதிகாரி, எழுத்தாளர்கள். நூலகர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

எளிய குடும்பத்தில் பிறந்து, சிகை திருத்தும் கலைஞராக வாழ்க்கை நடத்தும் மாரியப்பன் புத்தக வாசிப்பை முன்னெடுப்பதற்காகத் தன்னால் முடிந்த அத்தனை விஷயங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

அவரது சலூனில் புத்தகம் படிக்கிறவர்களுக்குக் கட்டணச்சலுகை தருகிறார். முடிவெட்டிக் கொள்ள வரும் சிறுவர்களுக்குத் தமிழ் எழுத்துகளைக் கற்றுத்தருகிறார். இதற்கென ஒரு மைக் வைத்திருக்கிறார். சலூனில் எழுத்தாளர்களின் இலக்கிய உரைகளைக் கேட்க வைக்கிறார். காலச்சுவடு, கல்குதிரை, உயிர்மை, அந்திமழை போன்ற இதழ்களையும் வாங்கிப் போடுகிறார்.

சலூன் நூலகத்தில் புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா கு.அழகிரிசாமி, தி. ஜானகிராமன் மௌனி குபரா அசோகமித்திரன் ஜெயகாந்தன். ஜி.நாகராஜன், ப.சிங்காரம் ஆதவன். ஆ. மாதவன் சுந்தர ராமசாமி, சா.கந்தசாமி, கி ராஜநாராயணன், எம்.வி. வெங்கட்ராம், பிரபஞ்சன் வண்ணநிலவன். வண்ணதாசன். கோணங்கி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பூமணி, திலீப்குமார், தேவதச்சன் அ.முத்துலிங்கம் , அம்பை, இந்திரா பார்த்தசாரதி, இமையம், தேவதேவன், தோப்பில் முகம்மது மீரான் பெருமாள் முருகன் எனச் சிறந்த எழுத்தாளர்களின் முக்கிய நூல்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். எனது புத்தகங்கள் அத்தனையும் தனியே அடுக்கி வைத்திருக்கிறார்.

நோபல் பரிசு பெற்ற நாவல்கள் துவங்கி பல்வேறு மொழியாக்க நாவல்கள். சிறுகதைகள் வரை அத்தனையும் வைத்திருக்கிறார். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள். கம்பராமாயணம் எனப் பழந்தமிழ் இலக்கியத்தின் முக்கிய நூல்களைத் தனியே அடுக்கி வைத்துள்ளார். அவரது குறைந்த வருமானத்திற்குள் பெருமளவு நூல்களை விலைகொடுத்து வாங்கி வைத்திருப்பது பாராட்டிற்குரியது.

“சலூனுக்குள் நூலகம் வைத்திருக்கவில்லை. ஒரு நூலகத்திற்குள் சிறிய சலூனை வைத்திருக்கிறீர்கள்“ என்று மாரியப்பனைப் பாராட்டினேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்படி ஒரு இலக்கிய வாசகர் விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாரியப்பன் விரும்பினார். லாக்டவுன் காரணமாக அதைச் செயல்படுத்த முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதற்கான திட்டமிடல் துவங்கியது. பாரதி நினைவுநாளில் இப்படி ஒரு விழாவை நடத்துவது பொருத்தமானது எனச் செப்டம்பர் 11 மாலை நிகழ்வை ஏற்பாடு செய்தோம்.

விழாவிற்கான ஏற்பாடுகளைச் சலூனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் இலக்கிய நண்பர்களின் உதவியோடு கவனித்துக் கொண்டார். ஷிப்பிங் நிறுவனம் நடத்திவரும் எட்வின் சாமுவேல், பள்ளி ஆசிரியர் ஜெயவேல். UG அருண்பிரசாத், நூலகர் மா. ராம்சங்கர் ,காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், டாக்டர் ஸ்ரீராம், டாக்டர் ஆர்த்தி, எழுத்தாளர் முகமது யூசுப், வழக்கறிஞர். பொன் இசக்கி, வார்டு கவுன்சிலர் பொன்னப்பன், எம்.எஸ். சொலுசன்ஸ் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வினைப் பற்றிக் கேள்விபட்டு எனது உரையைக் கேட்பதற்காகவும் மாரியப்பனை வாழ்த்துவதற்காகவும் சென்னையிலிருந்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.

நிகழ்வில் கலந்து கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்குப் புத்தகங்களைப் பரிசாக வழங்கினோம்.

பொன் மாரியப்பனின் தந்தை மற்றும் அவரது துணைவியார், பிள்ளைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

தனது நெருக்கடியான வாழ்க்கைச் சூழலுக்குள்ளும் இப்படி இலக்கியத்தை, புத்தக வாசிப்பை முன்னெடுத்து வரும் மாரியப்பனின் செயல் முன்னோடியானது. அவரைப் பாராட்டியதோடு வாசிப்பின் வெளிச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

அதில் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு வங்க மொழியில் எழுதப்பட்ட சிப்பியின் வயிற்றில் முத்து என்ற நாவலைப் பற்றி விரிவாகப் பேசினேன். போதி சத்வ மைத்ரேய. என்ற வங்காள எழுத்தாளர் தூத்துக்குடியில் மீன்வளத்துறை அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறார். இந்த நாவல் பாண்டியர் காலம் துவங்கி 1960கள் வரையான தூத்துக்குடியின் வரலாற்றைப் பேசுகிறது. மிக அற்புதமான நாவல். இந்த நாவலை எழுதிய போதி சத்வ மைத்ரேயாவை தூத்துக்குடி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

பலரும் இந்த நாவல் எங்கே கிடைக்கும் என்று கேட்டார்கள். இதனை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. தற்போது அச்சில் இல்லை என்கிறார்கள். ஒருவேளை ஏதாவது புத்தகக் கண்காட்சியில் பழைய பிரதிகள் கிடைக்கக் கூடும். இந்நாவல் இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது.

இது போலவே இடிந்தகரை, உவரி, மணப்பாடு பகுதியை மையமாகக் கொண்டு வண்ண நிலவன் எழுதிய கடல்புரத்தில் நாவலைப் பற்றிப் பேசினேன். சிவராம காரந்தின் அழிந்தபிறகு, தகழியின் செம்மீன் நாவல் பற்றியும் குறிப்பிட்டேன். ஜோ டி குரூஸ் எழுதிய கொற்கை , ஸ்ரீதர கணேசனின் உப்பு வயல், முகமது யூசுப்பின் நாவல்களை வாசிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டேன்.

இரண்டு நாட்களிலும் ஜெயபாலும் அவரது நண்பர்களும் செய்த உபசரிப்பு மறக்க முடியாதது. மாரியப்பனும் அருண்பிரசாத்தும் விமான நிலையம் வரை உடனிருந்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள்.

சென்னையிலிருந்து ஸ்ருதிடிவி கபிலன் வந்து இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்து வலையேற்றம் செய்துள்ளார். அவருக்கும் மனம் நிறைந்த நன்றி

புத்தக வாசிப்பை முன்னெடுக்கும் பொன் மாரியப்பன் போன்றவர்களைப் புத்தகத் திருவிழாவில் கௌரவிக்க வேண்டும். அவர்களுக்குப் புத்தகக் கொடையை அளிக்க வேண்டும்.

வாசிப்பின் வெளிச்சம் – எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை

0Shares
0