சிங்கப்பூர் எழுத்தாளர்கள் .

சமகால சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதற்கான தனித்துவத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறது. புதிதாக எழுத  துவங்கியுள்ள இளம் படைப்பாளிகளும் வலைப்பக்கத்தின் வழியே எழுத துவங்கியுள்ள பலரும் கவனிக்கபட வேண்டிய முக்கிய படைப்புகளை உருவாக்கி வருகிறார்கள்.


இந்நாள் வரையான தமிழ் இலக்கியத்தை புரட்டி போட்டுவிட்டது என்றெல்லாம் மயக்கமடையாமல் தங்களது சூழல் சார்ந்த அக்கறையுடன் செயல்படும் படைப்புகள் இவை.



சமகால தமிழ் இலக்கிய போக்கோடு ஒப்பிட்டு சிங்கை தமிழ் இலக்கியத்தை வாசிக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழும் வாழ்வியல் மற்றும் பல்லின கலாச்சார சூழல், அதிலிருந்து உருவாகும் நெருக்கடிகள்  சந்தோஷங்கள்  யாவுமே சிங்கப்பூர் இலக்கியவாதிகளின் படைப்பின் முக்கிய கவனங்களாக உள்ளன.


வலைப்பக்கத்தின் வழியிலும் புத்தகங்களின் வழியாகவும் நான் வாசித்து அறிந்த சிலரைப்பற்றிய குறிப்புகள் இவை. இவர்களை வெவ்வேறு சந்தர்பங்களில் வாசித்திருக்கிறேன். தங்களுக்னெ தனித்துவமான எழுத்து முறையும் அகஉலகமும் கொண்ட படைப்பாளிகள் இவர்கள்


இது தரவரிசைப் பட்டியல் அல்ல. மாறாக நான் வாசித்து அறிந்த சில படைப்பாளிகளை பற்றிய சிறிய அவதானிப்புகள். இதற்கு வெளியிலும் மிக முக்கிய படைப்பாளிகள் இருக்க கூடும். அவை என் கவனத்தில் இடம் பெறாமலும் என் வாசிப்பிற்கு கிடைக்காமலும் போயிருப்பதே காரணம் என்பேன்.


***


மாதங்கியின் கவிதைகள்.


அன்றாட உலகின் காட்சிகளிலிருந்து பிறக்கிறது மாதங்கியின் கவிதைகள். குறிப்பாக பெண்களின் அகஉலகம் சார்ந்த சிறு நிகழ்வுகள் இவரது கவிதையின் முக்கிய புள்ளியாகி அதிலிருந்து விடுபடும் மெல்லிய இழையோடு கூடியதாக கவிதை பிறக்கிறது. குறிப்பாக பத்துமணியும் ஆறுமணியும் என்ற கவிதையின் வழியாக வெளிப்படும் குழந்தையின் நிராதரவும் தாயின் மொழியற்ற தவிப்பும்  கவிதையில் மிக சிறப்பாக பதிவாகி உள்ளது. இவரது குறுங்கதைகளும் வாசிக்க சுவாரஸ்யமானவையே. இவரது நாளை பிறந்து  இன்று வந்தவள்  என்ற கவிதை  தொகுப்பு சமீபத்தில் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது .


பத்து மணியும் ஆறுமணியும்


 


இறுக்கப்பிடித்த விரலை


மெல்ல அவிழ்க்கிறாள் அம்மா


உடலோடு ஒட்டியிருந்த


காதுகளை இழந்த பொம்மையை


எடுத்து


மேசையில் வைக்கிறாள்


போர்வையைச் சரி செய்துவிட்டுப்படுக்கப்போகிறாள்.


 


கண்விழித்ததும்


முதல் வேலையாக


பொம்மையை


எடுத்து


குழந்தையிடம் வைக்கிறாள்


உடலோடு ஒட்டி


https://clickmathangi.blogspot.com/2008/04/blog-post.html


**


ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்



ஜெயந்தி சங்கர்  நாவல் சிறுகதை கட்டுரை மொழியாக்கம் என்று பரந்த தளங்களில் இயங்குபவர். ஒரு முறை இவரை சந்தித்து உரையாடியிருக்கிறேன். மிகுந்த ஈடுபாட்டுடன் கூடிய படைப்பாளி. சீன பெண்களின் கடந்த கால வாழ்வு குறித்த இரவது பெருஞ்சுவருக்கு பின்னே மிக முக்கியமான நூல் .அது போலவே இவர் மொழிபெயர்த்துள்ள சீன கவிதைகளும் மிக குறிப்பிடும்படியானவை.



ஜெயந்தி சங்கரின் கதைகள் நேரடியான மொழியில் தன்னை சுற்றி நடக்கும் உலகை விவரிக்க கூடியவை. ஒருவகையில் இந்த கதைகள் மரபான சிறுகதைகளின் தொடர்ச்சியிலிருந்து மாறுபட்ட பதிவுகள் என்று சொல்லலாம். 


பதிமூன்று புத்தங்களுக்கும் மேலாக எழுதியுள்ள ஜெயந்தி சங்கர் வாசிப்பதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தொடர்ந்து உயிர்மை , கல்கி மற்றும் வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றவர். 


இவரது நாலேகால் டாலர் என்ற சிறுகதை எதிர்பாராத விதமான சூழலில் மாட்டிக் கொண்டு காவலர்களிடம் ஒரு பெண் எதிர் கொள்ளும் நெருக்கடியை மிக நுட்பமாக பதிவு செய்துள்ள மிக முக்கியமான கதை.


https://jeyanthisankar.blogspot.com


**


லதா  கவிதைகள்



சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் லதாவின் கவிதைகளை காலச்சுவடு பாம்புக்காட்டில் ஒரு தாழை என்ற கவிதை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. இவரது கவிதைகளை தொடர்ந்து வாசித்திருக்கிறேன். உள்ளார்ந்த கோபமும் தனிமையும் இவரது கவிதையின் முக்கிய புள்ளிகள். அன்றாட நிகழ்வுகள் மீதான விமர்சனமாகவும், அகநெருக்கடி மிக்க மனவலிகளையும் குறியீட்டு தளத்தில் நிறுத்தி அவரது கவிதைகள் பேசுகின்றன. வல்லினம் இதழில் வெளியான நாளை ஒரு விடுதலை என்ற இவரது சிறுகதை மிக முக்கியமான கதைகளில் ஒன்று. இவரது கவிதையில் தொக்கி நிற்கும் அங்கதம் சிறப்பானது


எதிர்பாராதபொழுது 


பட்டாம் பூச்சியாய்ப் பறக்கும்


உன் துடிப்பில்எத்தனை யுகங்கள்


உயிர்த்திருந்தேன்


சிலிர்க்கும் புயலாய்உன் வேகம்


என் கணங்களைஅர்த்தப்படுத்தின


அன்று இரவு கண்ணாமூச்சி


விளையாடிக் கொண்டிருந்தபோதா


உன் கால்கள் வளர்ந்தன?


நீ பொறுக்கி வந்த உடைந்த பொருட்களும்


தெருச் சண்டைகளும்


இன்னமும்ஒட்டப்படாமல் கிடக்கின்றன


உனக்கும் நிலவுக்கும் உருட்டி வைத்துள்ள


சோற்று உருண்டைகளை


என்ன செய்யட்டும்



**
சித்ரா ரமேஷ் நினைவலைகள்


https://ooviyam.blogspot.com/



வண்ணதாசன் படைப்புகள் குறித்து இவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன்  நன்றாக வந்திருந்தது.  அது போலவே வலைப்பக்கத்தில் ஆட்டோகிராப் என்ற பெயரில் தனது கடந்தகாலத்தை திரும்பி பார்த்து அவர் எழுதி வரும் நினைவலைகள் பலரது ஞாபகங்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டவை


**


பாண்டித்துரை -நகுலன் குறித்து


நகுலன் என்ற வலைப்பக்கத்தை பார்த்தவுடன் உடனே வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அறிமுகமானவர் பாண்டித்துரை. இந்த வலைப்பக்கத்தில் அதிக பதிவுகள் இல்லை. ஆனால் தமிழ் இலக்கியம் குறித்து தீவிரமான வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்பதை அவரது பிறபதிவுகள் நிரூபணம் செய்தன. நகுலன் குறித்து அவரது வலைப்பதிவில் உள்ள இணைப்புகளும் அவரது எண்ணங்களும் முக்கியமானவை. குறிப்பிடத்தக்க கவிஞர்.


https://pandiidurai.wordpress.com


**



எம்.கே.குமார் சிறுகதை


இவரது சிறுகதை தொகுப்பு ஒன்று அன்னம் வெளியீடாக வெளிவந்திருக்கிறது.  யதார்த்தவகை கதைகள் அவை. தனது வலைப்பக்கத்தில் இவர் தொடர்ந்து எழுதிவரும் பதிவுகள் சுவராஸ்யமானவை.


 https://yemkaykumar.blogspot.com


**


ரம்யா நாகேஸ்வரன் சிறுகதை


இவரது  முகவரி புத்தகம் என்ற சிறுகதையை வாசித்திருக்கிறேன். வயதான ஒருவர் சிங்கப்பூரில் தனது நினைவலைகளுடன் மகள் வீட்டில் தங்கியுள்ள நாட்களையும் அவருக்கு காது கேட்காததால் ஏற்படும் மன அவஸ்தைகளையும் மிக நன்றாக எழுதியிருந்தார். கதையின் மையப்பொருள் முகவரிகள் பதிவிடும் புத்தகம் பற்றியது. அதன் ஊடாகவே மாறிவரும் இளந்தலைமுறை பற்றியும் தான் இழந்து போன கடந்த கால வாழ்வை வயதானவர் நினைத்து வேதனை கொள்வது நன்றாக வந்திருந்தது.


https://ramyanags.blogspot.com


**

0Shares
0