ஒரு திரைக்கதை எப்படி உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அகிரா குரசேவாவின் திரைக்கதையாசிரியர் ஷினோபு ஹஷிமோடோ எழுதிய Compound Cinematics: Akira Kurosawa and I என்ற புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும்.
இந்நூலின் வழியே அகிரா குரசேவா எவ்வாறு திரைக்கதையை எழுதுகிறார் என்பதை அறிந்து கொள்வதுடன் அவருடன் இணைந்து பணியாற்றிய திரைக்கதையாசிரியர்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்தார்கள் என்பதையும் துல்லியமாக அறிந்து கொள்ளமுடிகிறது.
அகிரா குரசேவாவின் ரஷோமான் படத்தின் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானவர் ஹஷிமோடோ .
திரையுலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஹஷிமோடோ காசநோய் சிகிச்சைக்கான மையம் ஒன்றில் சில காலம் தங்கியிருந்த போது அருகிலுள்ள படுக்கையிலிருந்த ஒருவர் சினிமா இதழ் ஒன்றை அவரிடம் படிக்கக் கொடுத்தார்.
அதில் ஒரு ஜப்பானியப் படத்தின் திரைக்கதை வெளியாகியிருந்தது. திரைக்கதை எழுதுவது இவ்வளவு எளிதானது தானா என வியந்த ஹஷிமோடோ தானும் அது போன்ற திரைக்கதை ஒன்றைத் தனது போர்க்கால அனுபவங்களில் இருந்து எழுத முற்பட்டார்.
இரண்டு மாத காலத்தில் விரும்பியது போன்றே ஒரு திரைக்கதையை எழுதி முடித்தார். ஆனால் யாரிடம் கொடுப்பது. எப்படித் திரையுலகினரை அணுகுவது என்று எதுவும் தெரியாது. ஆகவே அன்று திரையுலகில் பிரபலமாக இருந்த திரைக்கதையாசிரியர் மனசாகு இதாமியைப் பற்றி அறிந்து கொண்டு அவரது முகவரிக்குத் தனது திரைக்கதையை அனுப்பி வைத்தார்
ஒரு பதிலும் வரவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்து போயின. அவ்வளவு தான் தனது திரைக்கதை என நினைத்துக் கொண்டு ரயில்வே நிர்வாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாள் ஒன்றில் இதாமியிடமிருந்து அழைப்பு வந்தது.
அவ்வளவு பெரிய திரைக்கதையாசிரியர் தனது திரைக்கதையை வாசித்து அது குறித்துப் பேச அழைத்துள்ளதைக் கண்டு வியந்து. குறித்த நேரத்தில் டோக்கியோ சென்று அவரைச் சந்தித்தார் ஹஷிமோடோ
இதாமி ஜப்பானிய சினிமாவில் தனியிடம் பெற்றிருந்த காலமது. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பணிகளுக்கு நடுவே ஹஷிமோடோவை சந்தித்து உரையாடினார்.
திரைக்கதை மிகவும் நன்றாகயிருக்கிறது எனப்பாராட்டிய இதாமி. இது போன்று புதிய திரைக்கதைகளைத் தொடர்ந்து எழுதுங்கள். விருப்பமிருந்தால் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கதைகளையும் திரைக்கதையாக்க முயற்சியுங்கள் என்று வாழ்த்து தெரிவித்தார்.
அந்த உற்சாகம் ஹஷிமோடோவை தொடர்ந்து எழுத தூண்டியது. ஜப்பானின் புகழ்பெற்ற எழுத்தாளரான அகுதகவாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கி அதிலிருந்த கதைகளுக்கு திரைக்கதை எழுத முனைந்தார் ஹஷிமோடோ.
1914ல் அகுதகவாவினால் எழுதப்பட்ட ’இன் எக் குரோவ் ” எனும் சிறுகதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அக்கதையை மையமாகக் கொண்டு திரைக்கதை ஒன்றை எழுத ஆரம்பித்தார்.
பன்னிரண்டாம் நூற்றாண்டை கதைக்களனாகக் கொண்ட இக்கதை ஒரு சாமுராய், அவனது அழகான மனைவி. ஒரு வழிப்பறித்திருடன் மற்றும் ஒரு மரவெட்டி ஆகிய நான்கு முக்கியக் கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தது. சாமுராயின் மனைவி மீது ஆசை கொண்ட வழிப்பறித்திருடன் அவளை அடைவதற்காக எவ்வாறு சாமுராயை மடக்கிச் சண்டையிட்டுக் கொல்கிறான் என்பது படத்திற்கான மையக்கருவாகத் தோன்றியது.
மூன்று நாட்களில் திரைக்கதை எழுதும் பணியை முடித்தார் ஹஷிமோடோ. மொத்தம் 93 பக்கங்கள் கொண்டதாக அந்தத் திரைக்கதை இருந்தது. இதை அகிரா குரசேவாவின் பார்வைக்கு அனுப்புவது என்று தீர்மானித்த ஹஷிமோடோ நண்பர் ஒருவர் மூலம் குரசேவாவிற்குக் கிடைக்கும்படி அனுப்பி வைத்தார்.
சில மாதங்களின் பின்பு குரசேவா அலுவலகத்திலிருந்து திரைக்கதை தேர்வாகியுள்ளது. நேரில் வரவும் என்றொரு தபால் அட்டை ஹஷிமோடோவின் வீட்டிற்கு வந்திருந்தது.
அந்தத் தபால் அட்டை அவரை மிகுந்த மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. குறிப்பிட்ட நாளில் டோக்கியோவில் இருந்த குரசேவா வீட்டிற்குச் சென்றார் அங்கே குரசேவாவின் வயதான தந்தை அவரை வரவேற்று ஹாலில் அமர வைத்தார். ஆறடிக்கும் மேலான உயரத்துடன் இருந்த குரசேவா அறைக்குள் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அப்போது ஹஷிமோடோவின் வயது 31. குரசேவாவின் வயது 39.
ஹஷிமோடோவிடம் நேரடியாகத் தனக்குத் திரைக்கதை பிடித்திருக்கிறது. ஆனால் திரைப்படம் உருவாக்கும் அளவிற்குப் போதுமான காட்சிகள் இல்லை ஆகவே திரைக்கதையைச் சற்று விரிவு படுத்த வேண்டும் என்றார்.
உடனே ஹஷிமோடோ அப்படியானால் ரஷோமான் கதையை இணைத்துவிடலாம் என்று சொன்னார்.
ஏன் அப்படிச் சொன்னார் என்று அவருக்கே தெரியாது. ஆனால் அந்த யோசனை பிடித்திருப்பது போலக் குரசேவா தலையாட்டியபடி, அதை இணைத்து புதிய திரைக்கதையை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று விடைகொடுத்தார்.
ரயிலில் வீடு திரும்பும் வழியில் இரண்டு கதைகளையும் எப்படி ஒன்று சேர்ப்பது என்று யோசித்தபடியே வந்தார். ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றிருந்த இரண்டு கதைகளை எப்படி ஒரே திரைக்கதைக்குள் கொண்டுவருவது எனப் புரியவில்லை. அடுத்தச் சில நாட்கள் பல்வேறு விதமாக யோசித்த போது ரஷோமான் கதையை இணைக்கமுடியவில்லை.
சாமுராய் மற்றும் அவனது மனைவியின் கடந்தகாலத்தைப் பெரியதாக்கினால் திரைக்கதை விரிவாகிவிடும் என்று தோன்றியது. ஆனால் அப்போதும் ரஷோமானை இணைக்கமுடியாது. இந்தப்பிரச்சனை அவரை இம்சிக்கத் துவங்கியது. இரவு பகலாக விதவிதமாக யோசித்தார். எப்படியும் வழி கண்டறிய முடியவில்லை
குரசேவாவிடம் ஏன் திடீரென ரஷோமான் என்று சொன்னேன் என அதையே திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தார்.
மூன்று மாத காலம் கடந்த போதும் இரண்டு கதைகளையும் ஒன்று சேர்ந்து புதிய திரைக்கதையை எழுத இயலவில்லை. இதற்கிடையில் அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு நடக்கமுடியாமல் போனது. அதற்கான சிகிட்சைகள் மேற்கொண்டுவந்தார்.
ஒருநாள் அகிரா குரசேவாவிடமிருந்து ஒரு தபால் வந்திருந்தது. அதில் திருத்தப்பட்ட திரைக்கதைப் பிரதியும் ஒரு கடிதமும் இருந்தன. அந்தத் திரைக்கதை பிரதியை அவசரமாக வாசித்தார் ஹஷிமோடோ.
குரசேவா தனது திரைக்கதை வடிவத்தில் ரஷோமான் கதையை மிக அழகாக இணைத்திருந்தார்.
அதாவது படம் ரஷோமான் நுழைவாயிலில் துவங்குகிறது. மழைக்குக் கோட்டை வாயிலில் ஒதுங்கும் மூவர் தாங்கள் சாட்சிகளாகப் பங்கேற்ற ஒரு கொலைவழக்கைப் பற்றிப் பேசிக்கொள்ளத்துவங்குகிறார்கள். அதன் வழியே முந்தைய சாமுராய் கதை கச்சிதமாக இணைக்கப்பட்டிருந்தது. தலைப்பும் ரஷோமான் என்று பொருத்தமாக வைக்கபட்டிருந்தது. ஹஷிமோடோ. தனது திரைக்கதைக்கு Male and Female என்று தலைப்பு வைத்திருந்தார்.
படத்தில் நடந்த கொலையைப் பற்றி நால்வரும் அவரவர் கோணத்தில் விவரிக்கின்றனர் அனைத்தும் உண்மையாக இருக்கிறது. இதில் எவரது கோணம் சரியானது என்று படம் தீர்மானிக்கவில்லை.. படத்தின் இறுதியில் மீண்டும் அதே ரஷோமான் நுழைவாயில். அங்கே ஒரு குழந்தை கைவிடப்பட்டுக் கிடக்கிறது. அதை விறகு வெட்டி வளர்ப்பதற்காக எடுத்துக் கொள்வதுடன் நிறைவு பெறுகிறது
இத்தனை அழகாகக் கச்சிதமாக அகிரா குரசேவா ஒருவரால் தான் திரைக்கதையை உருவாக்க முடியும் என்று வியந்த ஹஷிமோடோ நேரில் தனது பாராட்டினை தெரிவிக்க ஊன்றுகோலை ஊன்றியபடியே டோக்கியோ பயணம் மேற்கொண்டார்
குரசேவாவிடம் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். அவர் இந்தத் திரைக்கதையை நீங்கள் இல்லாத நாட்களில் வேறு சிலருடன் விவாதித்தேன். எங்கள் விவாதம் சுமோ பயில்வான்கள் போடும் குஸ்திச் சண்டை போலிருந்தது. என்னை நன்றாகப் புரட்டி எடுத்துவிட்டார்கள்.. நான் எழுதிய திரைக்கதை வடிவம் உங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சந்தோஷம் அடைந்தார்
ரஷோமான் படம் என்றதும் இன்றைக்கும் நினைவிற்கு வருவது பெருமழையில் தோன்றும் அந்த ரஷோமான் நுழைவாயில் காட்சிகளே
இடிபாடுகள் கொண்ட அந்த நுழைவாயிலில் பெருமழை கொட்டுகிறது. காலத்தின் அழியா சாட்சி போலிருக்கிறது அக்காட்சி. கதாபாத்திரங்களின் நினைவுகளைக் கொந்தளிக்கச் செய்வதற்கு மழையே துணை செய்கிறது. படம் நிறைவு பெறும் போது மழை ஓய்கிறது. ஆறு குழந்தைகளின் தந்தையான விறகு வெட்டி ஏழாவது குழந்தையை வளர்க்க கொண்டு போகிறான். வாழ்வு குறித்த புதிய நம்பிக்கை உருவாகிறது.
படத்தில் அந்தப் பெண்ணுக்கும் திருடனுக்குமான உறவினை மிக அழகாகக் குரசேவா உருவாக்கியிருக்கிறார். திரைக்கதை அத்தனை அழகாக வடிவமைக்கபட்டிருக்கிறது.
ரஷோமான் வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஹஷிமோடோ. அதன்பிறகு குரசேவா படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்
ஒவ்வொரு திரைக்கதையும் ஒரு சவால் எனச் சொல்லும் ஹஷிமோடோ அதைத் தாங்கள் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதை இந்நூலில் மிக அழகாக விளக்கியிருக்கிறார்.
தனது ஆரம்பப் படங்களில் மட்டுமே குரசேவா தானாகத் திரைக்கதை எழுதினார். அதன்பிறகு அவரது நான்கு திரைக்கதையாசிரியர்கள் இணைந்தே படத்தின் திரைக்கதையை உருவாக்கினார்கள். அந்தக் கூட்டுழைப்பே அவரது வெற்றியின் ரகசியமாகக் கடைசிவரை இருந்தது.
••