நீலக்குடை


 


 


 


 


ஹிந்தி திரைப்பட உலகம் கடந்த சில ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய கதை சொல்லும் முறை, புதிது புதிதான இளம் இயக்குனர்கள். மாறுபட்ட கதைகள் என்று அதன் வளர்ச்சி உலக அளவில் விரிந்துள்ளது. வழக்கமான கேளிக்கை படங்களின் வருகை ஒரு பக்கம் அதிகரித்திருந்த போதும் மறுபக்கம் மாற்றுமுயற்சிகளுக்கான வாசல் திறந்து விடப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பெருநகரங்களில் உருவாகியுள்ள மல்டிபிளக்ஸ் எனப்படும் சிறிய அரங்கங்களுக்கான திரைப்படங்கள் அதிகரித்துள்ளன.

பெரும்பான்மை ஹிந்தி படங்களின் முக்கிய அம்சம் ஜனரஞ்சகமான நகைச்சுவை. ராம்கோபால் வர்மாவின் பாக்டரி மட்டுமே நிழல்உலகம், வன்முறை என்று குற்றவுலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. மற்றபடி பெரும்பான்மையான ஹிந்திபடங்களில் வில்லன்களே கிடையாது. அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்ட முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பது வெகு இயல்பாகிவிட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் எம்ஜிஎம்மின் சிங்கம் போல எல்லா ஹிந்திபடங்களிலும் தவறாமல் இடம்பெறுகின்றார் அமிதாப். வீட்டில் பேரன் பேத்திகளோடு ஒய்வு எடுத்துக் கொண்டிருந்த தர்மேந்திரா, பெரோஸ்கான்,சசிகபூர் உள்ளிட்ட பலரும் மறுபிரவேசம் செய்து கலக்குகிறார்கள். கதாநாயகிகளை விட அழகான, பால்வடியும் இளம் கதாநாயகர்கள் அறிமுகமாகி கல்லூரி மாணவிகளை தூக்கம் கெடச் செய்கிறார்கள். சமீபத்தைய உதாரணம் சாவரியாவில் அறிமுகமான ரன்பீர் கபூர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர்கள் ஹிந்திசினிமாவின் முக்கிய இடத்தை கைப்பற்றி ஆட்சி செய்கிறார்கள். உதாரணங்கள் ரவி.கே.சந்திரன், மணிகண்டன்,திரு, நீரவ் ஷா மற்றும் நட்ராஜ். ரஹ்மான் ஹிந்தி திரையிசையுலகின் அவதார புருஷனாக கொண்டாடப்படுகிறார். சீனிகம்மிற்கு பிறகு இளையராஜா அலை திரும்பியிருக்கிறது.

நான் பார்த்தவரையில் சமீபத்தில் வெளியான முக்கியமான ஹிந்தி படங்கள் என்று பத்து படங்களைக் குறிப்பிடலாம். இவை ஒவ்வொன்றும் தன்னளவில் தனியான கதை சொல்லும் தன்மையும், நுட்பமான தருணங்களும் தேர்ந்த ஒளிப்பதிவும், உளவியல் பாங்கோடு கதாபாத்திரங்களை அணுகிச் செல்லும் இயக்குனரின் அகப்பார்வையும் கொண்டவை.

1)The blue umbrella 2) , Taare Zameen Par, 3) Black Friday 4) Traffic Signal 5) Metro 6) Omkara 7)Gandhi My Father 8) Yatra 9) Dus Kahaniyan 10) Johnny Gaddaar

இந்தப் படங்களை இயக்கியவர்களில் யாத்ராவை இயக்கிய கௌதம்கோஷ் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். இதில் ப்ளு அம்பர்லா இயக்கிய விஷால் பரத்வாஜ் இசையமைப்பாளர். ப்ளாக்பிரைடே இயக்கிய அனுராக் காஷ்யப் எழுத்தாளர், காந்தி மை பாதர் இயக்கிய பெரோஸ் கான் நாடக இயக்குனர், ஜானி கதாரை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் தமிழர், பூனா திரைப்படக்கல்லூரி மாணவர். தாரே ஜமீன்பர் இயக்கிய அமீர்கான் நடிகர். இப்படி சினிமாவுலகின் பல்வேறு துறைகளில் சிறப்பித்த கலைஞர்களும் முதல்முறையாக திரையுலகில் பிரவேசம் செய்கின்றவர்களும் உருவாக்கிய படங்கள் புதியதொரு அழகியலை உருவாக்கியுள்ளன.

இவர்களில் எனக்குப் பிடித்த இயக்குனர் விஷால் பரத்வாஜ். இவர் ஒரு இசையமைப்பாளர். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். இசை ஆர்வத்தின் காரணமாக டெல்லி சென்று அங்கே பிரகிதி மைதானில் நடைபெறும் கண்காட்சிகளில் ஹார்மோனியம் வாசித்து கொண்டிருந்திருக்கிறார். தற்செயலாக அறிமுகமான ஒரு நண்பரின் வழியே கவிஞர் குல்சாரின் நட்பு கிடைத்து அவரது தொலைக்காட்சிப் படங்களுக்கு இசையமைக்கத் துவங்கினார்.

பின்பு குல்சார் இயக்கிய மாச்சீஸ் படத்திற்கும் இசையமைத்தார். அப்படத்தில் விஷால் பரத்வாஜின் இசை தனித்துவமானதாகயிருந்தது. அதற்குக் கிடைத்த பாராட்டும் அங்கீகாரமும் அவருக்கு ஹிந்தி சினிமாவில் இசையமைப்பாளராக ஒரு இடத்தை உருவாக்கித் தந்தது. சத்யா, சாச்சி420, உள்ளிட்ட பல முக்கியப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இவர் இயக்கிய முதல்படம் மக்தி. குழந்தைகளுக்கான திரைப்படம். படம் இரண்டு சிறார்களைப் பற்றியது. வட இந்திய கிராமம் ஒன்றில் நூறு வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூன்யக்காரியிருக்கிறாள். அவளொரு பாழடைந்த வீட்டில் வசிக்கிறாள். அதன் உள்ளே போகும் எவரையும் அவள் விலங்காக உருமாற்றிவிடுவாள் என்றொரு நம்பிக்கையிருக்கிறது.

அந்தக் கிராமத்தில் விளையாட்டுதனம் மிக்க சூனி என்றொரு சிறுமி இருக்கிறாள். இவள் துடுக்கதனம் நிரம்பியவள். இவளுக்கு நேர் எதிர் அவளது சகோதரி முன்னி. அடக்கமானவள். ஒரு நாள் சூனியின் விளையாட்டுதனத்தால் முன்னி சூன்யக்காரியின் வீட்டிற்குள் போய்விடவே அவளை ஒரு கோழியாக மாற்றிவிடுகிறாள் சூனியக்காரி. முன்னியை திரும்பவும் உருமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக நூறு கோழிகளை கொண்டு வந்து தருவதாக வாக்கு தருகிறாள் சூனி . அதற்காக எப்படி அவதிபடுகிறாள் என்பதே கதை.

வேடிக்கையும் சிரிப்பும் சற்றே குழந்தைகளைப் பயம் கொள்ளச் செய்யும் சூன்யக்காரியுமாக அழகான குழந்தைகள் படமிது. பலவருடங்களுக்கு முன்பு சத்யஜித்ரேயின் கூபி கானே பாஹே பானே என்ற படத்தைப் பார்த்த போது அடைந்த சந்தோஷம் இப்படத்திலும் ஏற்பட்டது.

இப்படத்தில் சூன்யக்காரியாக நடித்திருப்பவர் ஷப்னா ஆஸ்மி. கதை திரைக்கதை இயக்கத்தோடு இதை தயாரித்திருந்தார் விஷால்

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் பவர்ரேஞ்சர் என்று பிம்பங்களின் பின்னால் செல்லும் குழந்தைகளுக்கு அவசியம் அறிமுகம் செய்ய வேண்டிய படமிது. விஷால் பரத்வாஜின் தேர்ந்த இசையமைப்பும் கல்லுவாக நடித்த மக்ரந்த் தேஷ்பாண்டேயின் நடிப்பும் சிறப்பானவை. ஸ்வேதா முன்னி சூனி என்று இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷால் ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தைத் தழுவி மெக்பூல் என்றொரு படத்தை உருவாக்கினார். நிழல்உலகின் கதையைப் போல உருமாற்றப்பட்ட இக்கதை ஷேக்ஸ்பியரை இப்படியும் உள்வாங்கிக் கொண்டு மாற்றம் செய்ய முடியுமா என்பதற்குச் சாட்சியாக இருந்தது.

மெக்பெத்தில் வரும் சூன்யக்காரிகளுக்குப் பதிலாக இதில் இரண்டு போலீஸ்காரர்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே தெரியபடுத்துகிறார்கள். டங்கன் அரசன் கதாபாத்திரத்திரமாக நிழல்உலக தாதா அப்பாஜி மாற்றப்பட்டிருக்கிறார். மெக்பத் தான் மெக்பூல். பங்கஜ் கபூர், தபு மற்றும் இர்பான் கான், நஸ்ருதீன்ஷா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் விஷாலின் ஆளுமையை சரியாக அடையாளம் காட்டியது.

இதன்பிறகு உருவாக்கிய படமே தி ப்ளு அம்பர்லா எனப்படும் சிறுவர்களுக்கான சினிமா. ரஸ்கின் பாண்டின் குறுநாவலது.

ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள மலையடிவாரத்தைச் சேர்ந்த சிறிய ஊர். அந்த ஊரில் வசிக்கும் பினியா என்ற சிறுமி, ஒரு நாள் வெளிநாட்டு பயணிகள் தங்கள் ஊரின் இயற்கை எழிலைக் காண சுற்றுலா வருவதைக் காண்கிறாள். அதில் ஒரு பயணியிடம் அதிசயமான நீலக்குடை ஒன்று இருப்பதை காண்கிறாள். அந்தக் குடையை தன்னிடம் உள்ள புலிநகம் ஒன்றைக் கொடுத்து அதற்கு மாற்றாக வாங்கிக் கொள்கிறாள்.

அந்தக் குடையை எல்லோரிடமும் காட்டிச் சந்தோஷம் கொள்கிறாள். ஆடிப்பாடுகிறாள். அந்த ஊரில் சிறிய பெட்டிக்கடை வைத்திருப்பவர் நந்தகிஷோர். அவர் நரித்தனம் கொண்டவர். எப்படியாவது ஏமாற்றி அந்த குடையைப் பறித்துக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் பினியா தருவதேயில்லை.

ஆத்திரமான நந்தகிஷோர் அதைத் திருடி ஒளித்து வைத்துக் கொள்கிறார். குடையைக் காணாமல் தேடி அலையும் பினியா அதை நந்தகிஷோர் தான் திருடியிருப்பார் என்று நம்புகிறாள். ஆனால் அதை மெய்பிக்க வழியில்லை. இந்த நிலையில் நந்தகிஷோர் அவளிடமிருந்தது போன்ற ஒரு சிவப்புக் குடை ஒன்றை வாங்கி வந்து பெருமையடிக்கிறான். அது திருடப்பட்ட பினியாவின் குடை தான் என்பதைக் கண்டுபிடித்து தன் குடையை மீட்கிறாள் பினியா.

படத்தின் துவக்க காட்சியில் வரும் சிறார்களின் விளையாட்டுதனமான பாடலும், பெட்டிக்கடைக்காரர் அறிமுகமாகும் காட்சியும், அந்தக் கடையில் வேலை செய்யும் சிறுவனின் குறும்பும், புதியதொரு அனுபவத்தை உருவாக்குகின்றன.

குடையோடு பினியா சுற்றியலையும் காட்சிகளும், அவளை ஏமாற்றி குடையைப் பறிக்க நந்து மேற்கொள்ளும் தந்திரங்களும் வேடிக்கையானவை. படத்தின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ள பனி பெய்யும் சாலையில் செல்லும் சிறுமியும் நந்துவும் தொடர்பான காட்சிகள் ருஷ்ய திரைப்படங்களில் காணப்படும் அழகியலுக்கு நிகரானவை.
அழகான குடை ஒரு சிறுமியின் வாழ்வை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பதை நேர்த்தியாக விவரிக்கிறது இப்படம். குடை ஒரு படிமம் போலவே படத்தில் பயன்படுத்தபட்டிருக்கிறது. ஹிமாசல்பிரதேசத்தின் சிற்றூர். பசுமையான புல்வெளிகள். நீரோடைகள். மலைப்பாதைகள். அதன் ஊடாக காற்றில் பறந்து செல்லும் குடை என்று கவித்துவமாக விவரிக்கிறது படம்.

குடையை இழந்த சிறுமியின் துயரம் பார்வையாளர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக் கொள்கிறது. இப்படத்தில் பாடல்களும் பிண்ணனி இசையும் அற்புதமானவை. அது போலவே சச்சின் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், பங்கஜ் கபூரின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவை.
உலகத்தரம் மிக்க படங்கள் எதுவும் நம்மிடம் இல்லை என்று குறை சொல்லியே பழகிய நாம் இது போன்ற ஒரு படத்தை கொண்டாட மறந்துவிட்டோம் என்பது தான் நிஜம். தாரே ஜமீன்பர் படத்திற்கு கிடைத்த வரவேற்பில் பத்தில் ஒரு பங்கு கூட இதற்கு கிடைக்கவில்லை.

தாரே ஜமீன்பர் கொண்டாடப்பட வேண்டிய படம் தான். ஆனால் ஒப்பிடுகையில் அதை விடப் பல மடங்கு சிறப்பான படம் நீலக்குடை. உலகத் திரைப்படவிழாக்களில் தொடர்ந்து பங்கேற்று பல முக்கிய விருதுகளை பெற்றிருக்கிறது.

இதன்பிறகு ஒம்காரா என்று ஷேக்ஸ்பியரின் ஒத்தலோவை படமாக்கினார் விஷால் அதுவும் பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஷேக்ஸ்பியரின் கிங் லியரை மையமாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் லியர் அரசனாக நடிப்பவர் அமிதாப் பச்சன்.

ஹிந்தி சினிமாவில் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்கியவர்களில் விஷால் பரத்வாஜ் முக்கியமானவர். ஒரு இசையமைப்பாளர் சிறந்த திரைப்பட இயக்குனர் ஆன அதியசத்தை இன்றும் ஹிந்தி திரையுலகம் வியப்போடு பார்த்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் படங்களை இயக்கி வருவதோடு தனக்கு விருப்பமான இசையமைப்பையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் விஷால்.

தமிழில் வெளியாகும் மிரட்டல் அடி, பானிகாட் முனிஸ்வரன் போன்ற மொழிமாற்று படங்களை சிறார்கள் தேடி போய் பார்க்கிறார்கள். நீலக்குடை மக்தி போன்ற படங்கள் தமிழில் மாற்றப்பட்டு வெளியானால் நிச்சயம் பெரிய வரவேற்பு பெறும் என்றே தோன்றுகிறது.

பெரியவர்கள் தாங்களும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தோம் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள் என்று குட்டி இளவரசன் நாவலில் ஒரு வரி உள்ளது. இந்த படம் அப்படி வயது வரம்பற்ற குழந்தைகளுக்கானது என்றே சொல்வேன

0Shares
0