படித்ததும் பிடித்ததும் 2


வலைப்பக்கங்களில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான கட்டுரைகள் செய்திகள் வெளிவருகின்றன. அப்படி என் கவனத்தை கவர்ந்தது இக்கட்டுரை.



இன்னும் கிராமப்புறங்களில் காணப்படும் விசித்திர நடைமுறைகளில் ஒன்று மொய் பணம் தருவது. அதை பற்றிய சுவாரஸ்யமாக தகவல்களை தருகிறது இந்தக் கட்டுரை. 


 சின்ன கவுண்டர் படத்தில் இப்படியொரு மொய்விருந்து காட்சியிருக்கிறது. ஆனால் இவ்வளவு விபரமாக அதில் குறிப்பிடப்படவில்லை.


**


மொய்விருந்து


 


 


நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?………….. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் அன்பளிப்புக்கு ஈடான ரொக்கப்பணத்தை திருப்பித் தருமாறு ஒரு அழைப்பிதழ்மூலமாக கேட்பார். அவர்கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுவிட்டு அவருக்குநாம் கொடுக்கவேண்டிய ரொக்கத்தைக்கொடுத்துவிட்டு வரவேண்டும்…….. இதுதான் மொய்விருந்து!


 


அப்படிக்கொடுக்கும்போது இடைப்பட்ட காலத்திற்கு ஒரு வட்டித்தொகையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்த விருந்திற்கு நாம் போகமறந்தால் அல்லது மறுத்தால் கடிதம் மூலமாகவோ, ஆள்மூலமாகவோ அந்தப்பணம் நம்மிடமிருந்து வசூல் செய்யப்படும்.


 


புதுமையாக இருக்கிறதா? சமீபத்தில் மொய்விருந்து நடத்தியவருக்கு கிடைத்த மொய்ப்பணம் ஒருகோடிரூபாய் என்றால் நம்பமுடிகிறதா?…. 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறதாம்!


 


மொய்விருந்து நடைமுறையை ஆவணப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் விபரங்கள் தரப்பட்டால் இந்தப்பக்கம் திருத்தியமைக்கப்படும். எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.


 


ஒரு தாத்தாவும், பாட்டியும்……….அவர்களுக்குப் பிள்ளையில்லை.


இதுவரை எத்தனையோ பேருக்கு மொய்ப்பணம் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சகாலத்தில் மரணம் வந்துவிடும். மொய்ப்பணம் சும்மா போகலாமா?…


 


ஒரு பெரிய பந்தல் போட்டார்கள்……. தாத்தாவும் பாட்டியும் மொட்டை அடித்துக்கொண்டார்கள்…..பாட்டிக்கு சிறுவயதிலேயே காதுகுத்திவிட்டதால் பவுன் செலவு மிச்சம். தாத்தாமட்டும் காது குத்திக்கொண்டார். வருகிறவர்களுக்கு ஆட்டுக்கறியுடன் சோறுபோட்டு தங்களுக்கு வரவேண்டிய மொய்ப்பணத்தை திரும்பவும் வசூல் செய்து கொண்டனர். மொய் கொடுக்காதவர்களுடைய வீடுகளுக்கு ஆள் அனுப்பி பணத்தை வாங்கிவரச்செய்தனர்.


 


தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் மொய்விருந்து பற்றிய தகவல்கள் சுவையானவை.


 


திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்……….அப்புறம்………நாடியம் தொடங்கி மேற்பனைக்காடு ….கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருவதாக தெரிகிறது.


 


மொய்விருந்து அழைப்பிதழ்கள் படிக்கச்சுவையானவை.


 


நாடாங்காடு என்னும் ஊரில் நடை பெற்ற எனது நண்பர் ஒருவரின் திருமண அழைப்பிதழ் கண்டேன். அதில் `முக்கியக்குறிப்பு` என்று போட்டு ` கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் எங்கள் வீட்டில் எந்த விசேஷமும் நடைபெறவில்லை என்பதை கவனத்தில் கொண்டு மொய் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று ஒரு குறிப்பும் இருந்தது.


 



கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டுமல்ல, சைக்கிள் கடை துவக்கம், பெட்டிக்கடை துவக்கம் என்ற நிகழ்ச்சிகளின்போதும் கூட பத்திரிக்கை அடித்து மொய்வாங்கப்படுகிறது. மொய் வாங்கிக்கொள்வதற்காகவென்றே விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது இங்கே வழக்கமாக உள்ளது.


 


உங்கள் வீட்டிற்கு மொய்விருந்து பத்திரிக்கை வந்து சேர்ந்தவுடனேயே நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை அந்த விருந்திற்கு நீங்கள் எத்தனை ரூபாய் மொய் செய்யவேண்டும் என்பதை கண்டுபிடிக்கவேண்டியது. அடுத்த வேலை அந்தப்பணத்தைத் திரட்ட அலைந்து திரியவேண்டியதுதான்……..


 


1)   மொய்விருந்து நடைபெறும் இடம் கல்யாண மண்டபமாகவோ, இதற்கென அமைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகையாகவோ இருக்கும். இதற்கென கீற்றுக்கொட்டகை அமைத்து வாடகைக்கு விடுகிறவர்களும் உண்டு.


 


2)   மொய்விருந்து பந்தலின் ஒரு பகுதியில் ஐந்தாறு கவுண்டர்கள்……சினிமா கொட்டகை மாதிரி…… `சேந்தன்குடி, மேற்பனைக்காடு, கீரமங்கலம் ஊரைச்சேர்ந்தவர்கள் இங்கே மொய்செலுத்தவும்` என்று இருக்கும். எந்த ஊரையும் சேராதவர்கள் `பல ஊர்` என்ற கவுண்டரில் பணம் செலுத்த வேண்டும்.


 


3)   உங்கள் வீட்டு விசேஷங்களின்போது தேங்காய், பூ, பழம், வெற்றிலை, என்று மரியாதை செய்திருப்பார்கள் இல்லையா?….. அதை `தட்டு தாம்பாளம் வாங்கிக்கொள்ளப்படும்` என்று அழைப்பிதழில் குறிப்பிடுவார்கள்.


 


4)   மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. செலவினத்தை பகிர்ந்துகொள்வார்கள். வரவினத்தை தனித்தனியாக எழுதிக்கொள்வார்கள். இந்த பந்தல் பொதுப்பந்தல் என்று அழைக்கப்படும்.


 


5)   பந்தலில் மணல் பரப்பியதரையில்தான் கறிவிருந்து.உள்ளூர் சலவைத்தொழிலாளி விரித்துப்போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.


 


 


6)   கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி பரத்திவைத்துக்கொள்ளவேண்டும்.வடித்தசோறும் ஆட்டிறைச்சிக்குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை.


7)   ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. எங்குமே சாப்பிடாமல் நொந்துபோய் வீட்டில் தண்ணீர் சோறும், பச்சை வெங்காயமும் சாப்பிடுபவர்களும் உண்டு.


8)    காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துகொள்ளப்படுகிறது.


9)   மிகச்சில விருந்துகள் மட்டும் சைவ விருந்துகள்.அசைவம் சாப்பிடாத மிகச்சிலருக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும்.


10) மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.


11) புத்தககூடுதலுக்கும், இருப்பு கூடுதலுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் வரவுவைத்தவர் தான் அதை சொந்தப்பணத்தில் இருந்து ஈடு செய்யவேண்டும்.


12) விருந்து முடிந்தபிறகு தாமதமாக மொய்செய்பவர்களுக்கு `பின்வரவு` என்று தனியாக பக்கம் திறக்கப்பட்டு எழுதப்படும். பின்வரவு செய்தவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறையும். ஏளனப்பேச்சிற்கு உட்படவேண்டியிருக்கும்.


13) `நீ எனக்கு செய்த மொய் எல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. இது புது கணக்குப்பா…….` என்று வரும் பணம் `புதுநடை` என்ற தலைப்பில் எழுதப்படும்.


14) அண்மைக்காலத்தில் எதிரியாகிப்போனவன் வீட்டில் மொய்விருந்து என்றால்கூட சேரவேண்டிய மொய்சேர்ந்துவிடும்.


15) குடும்பத்தகராறா?……..இனிமேல் உறவுவேண்டாமா?……பஞ்சாயத்து செய்து உறவு அறுக்கப்படும்போது மொய்ப்பணமும் தீர்க்கப்படும்.


16) மொய்க்கணக்கிற்குள் சிக்கவிரும்பவில்லையா?……கூப்பிட்ட மரியாதைக்கும் சாப்பிட்ட மரியாதைக்கும் ஏதாவது செய்ய வேண்டுமா?…….வழி இருக்கிறது……”இதை எழுதவேண்டாம்” என்று கொடுத்தால் அதற்கும் ஒரு தலைப்பிட்டு எழுதிக்கொள்வார்கள். பத்து வருடங்களுக்குப்பிறகு நீங்கள் திருத்தணியில் இருந்தால் கூட உங்கள் வீட்டு விசேஷத்தின்போது வந்து நிற்பார்கள்.


17)  ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஏழுபேரிலிருந்து பத்துபேர்வரை என்றகணக்கிற்குஆடுகள் வெட்டப்படும். எனக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு விருந்தில் 20,000 பேர்சாப்பிட்டார்களாம்.


18) பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீடு தேவைப்படுமல்லவா?………..கவலைப்பட வேண்டியதில்லை…..உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் ………விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.


19) ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.


20) மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள்.


 


பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.


 


நன்றி: https://thanjavure.blogspot.com.


 


 

0Shares
0