ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இதுவென்பேன்.. சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது..
110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். மூன்று நாட்களாகக் கையில் வைத்து வைத்துப் படித்துக் கொண்டேயிருக்கிறேன். அற்புதம், அற்புதம் என மனம் அரற்றிக் கொண்டேயிருக்கிறது. ஒரு கவிஞனாக ஷங்கர் ராம சுப்ரமணியன் தனது கவித்துவ உச்சத்தைத் தொட்டிருக்கிறார்..
பாஷோவின், ழாக் பிராவரின் ரூமியின் கவிதைகளில் அடைந்த உன்னத அனுபவத்தை ஷங்கரின் கவிதைகளும் தருகின்றன.
ஷங்கர் ராம சுப்ரமணியனின் கவித்துவம் தமிழ் மரபிலிருந்து தனது கிளைகளை விரித்துக் கொண்டிருக்கிறது.. அசலான கவிமொழியும் பாடுபொருளும் கொண்ட இக்கவிதைகள் ஆழமும் செறிவும் கொண்டிருக்கின்றன. காலை வெளிச்சத்தைப் போலத் தூய்மையும் பேரழகும் கொண்டதாகயிருக்கின்றன..
ஆயிரம் சந்தோஷ இலைகள் வரையான அவரது முந்தைய கவிதைத் தொகுப்பிலிருந்த கவிதைகள் பெரிதும் காமத்தின் சஞ்சலமும், நகர வாழ்வில் பொருந்த முடியாத பெருந்துக்கமும், தன் அடையாளம் இழந்த ஒருவனின் மனக்கொந்தளிப்பும், நிராகரிப்பின் வலியும் கொண்டவையாக இருந்தன.
இத் தொகுப்பு அந்த மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வெளிப்பாடாக உள்ளது. உலகை வியத்தலும், விளையாட்டுதனமும் பரிவும் புதிரும் நிதானமும் கொண்டதாக வாழ்வைக் காணுவதுமாக இக்கவிதைகள் காணப்படுகின்றன. இது ஒரு வகைக் கனிவு. பொறுப்புணர்வு. அன்பின் திறப்பு என்றே சொல்வேன்.
இக்கவிதைகளில் புத்தனும் முயலும் ஒன்றாகிறார்கள். வெளிச்சமும் சொற்களும் ஒன்றாகின்றன. பூனையும் சிறுமிகளும் ஒன்று போல நடந்து கொள்கிறார்கள்.
ஷங்கர் தனது கவிதைகளின் வழியே புதிய கனவுகளை உருவாக்குகிறார் என்றே சொல்வேன். ஆலீஸின் அற்புத உலகில் ஆலீஸிற்கு நடப்பதெல்லாம் கனவு தானா. இல்லை. நிஜமா. அவள் முயலைத்துரத்திக் கொண்டு தானே ஓடுகிறாள். ஆலீஸையும் முயலையும் துரத்திக் கொண்டு ஓடுபவராகவே ஷங்கரும் இருக்கிறார்.
இன்மையைப் பற்றிப் உரையாடுவது எளிது., உணர வைப்பது கடினம். அதுவும் கவிதையில் இன்மை கொள்ளும் வெளிப்பாடு சிக்கலானது. ஷங்கர் சதா இன்மையோடு விளையாடுகிறார். அதன் வழியே இருத்தலை ருசிக்கிறார். இருத்தலுக்கும் இன்மைக்கும் இடையில் சஞ்சரிக்கிறார்.
இக்கவிதைகளில் அசோகமித்ரனும் தேவதச்சனும் ஆத்மாநாமும் ரமணரும் புத்தரும் ஜே. கிருஷ்ணமூர்த்தியும் நேரடியாக இடம்பெற்றிருக்கிறார்கள். இது போல அவர்களை இதன் முன்பு கண்டதில்லை. அறிந்ததில்லை என்பது தான் இக்கவிதைகளின் சிறப்பு.
ஷங்கர் நினைவுகளை கவிதையாக்குகிறார் என்று எளிதாக சொல்லிவிட முடியாது. காரணம் நடந்த நிகழ்வுகள் தானே நினைவுகளாகின்றன. ஆனால் ஷங்கரின் கவிதைகளில் உலகியலின் தொடர்பின்றி நினைவுகள் பிறக்கின்றன. பகிரப்படுகின்றன.
நினைவுகள் எப்போதும் பள்ளதாக்கினைப் போல முடிவற்று நீண்டவை. அதன் இருட்டு நம்மை பயமுறுத்தக்கூடியது. ஷங்கரோ பள்ளத்தாக்கினுள் செல்லும் ஒளியைப் போல நினைவுகளுக்குள் பிரவேசிக்கிறார். மிதந்தலைகிறார்
தண்ணீரை ஒவியமாக வரைந்து விளையாடும் சிறுமியின் மனது தான் ஷங்கருக்கும் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர்களிடம் தண்ணீர் பேசுகிறது. கதைக்கிறது. அவர்களை தன்னுலகிற்கு அழைத்துப் போகிறது. விந்தையின் பாதை பெரியவர்களின் கண்களுக்குப் புலப்படாதது .
வாசிக்கும் போது மனதில் சலனத்தை ஏற்படுத்தும் இக்கவிதைகள் வாசித்து முடிந்தவுடன் வேறொரு அமைதியை அடைகின்றன என்று தனது முன்னுரையில் கவிஞர் ஆனந்த் குறிப்பிடுகிறார்.
அவர் சொல்லும் அமைதி என்பது நாம் அறிந்த அமைதியில்லை. எல்லா நிசப்தமும் ஒன்று போனதில்லை தானே. அது போலத் தான் இந்த அமைதியும்.
பஷீரின் கதையொன்றில் வெளிச்சம் எவ்வளவு வெளிச்சமாக இருக்கிறது என்று ஒரு இளம் பெண் வியந்து சொல்லுவாள். அந்த மனநிலையினைத் தான் இக்கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன.
புற உலகின் நெருக்கடிகளில், அவஸ்தைகளில் சிக்கி வாழ்வின் மீது எண்ணிக்கையற்ற புகார்களை அடுக்கிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் இது மட்டும் வாழ்க்கையில்லை என வாழ்க்கையின் மறுபக்கத்தைத் திறந்து காட்டுபவையாக இருக்கின்றன ஷங்கரின் கவிதைகள் .
தொலைந்தவற்றின் தோட்டம் என்று ஷங்கர் எழுதியுள்ள முன்னுரை அபாரம். அது தான் இக்கவிதைகளைத் திறக்கும் திறவுகோல்.
இன்னும் சில முறை வாசித்த பிறகு இக்கவிதைகள் பற்றி விரிவாக எழுத நினைத்திருக்கிறேன்.
கவிதையை நேசிக்கும் அனைவரும் வாங்கிக் கொண்டாட வேண்டிய புத்தகமிது.
பெனிட்டா பெர்சியாள் வரைந்த மிக அழகான அட்டை ஒவியத்துடன் வெகு நேர்த்தியாக க்ரியா பதிப்பகம் இக் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.