உனது மலர் கொடியிலே

நேற்றிரவு ஜூலியன் பார்ன்ஸ் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மனதில் சினிமா பாடலின் வரிகள் தோன்றியது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அந்த பாடலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் படித்துக் கொண்டிருந்த The Sense of an Ending நாவலுக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு. ஏன் நினைவில் வந்தது என்று புரியவில்லை. இது போல நினைவின் அடுக்கிலிருந்து சில பாடல்கள் மேல் எழுந்து வருவதுண்டு

உனது மலர் கொடியிலே

எனது மலர் மடியிலே

உனது நிலா விண்ணிலே

எனது நிலா கண்ணிலே

பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை. பி.சுசிலா எல்.ஆர்.ஈஸ்வரி இருவரும் இணைந்து மிக அழகாகப் பாடியிருப்பார்கள்.

அந்தப் பாடலை உடனே கேட்க வேண்டும் என இணையத்தில் தேடி பாடலைக் கேட்டு முடித்தேன். ஆனால் மனம் திருப்தி அடையவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பி.சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி இருவரது குரலையும் மாற்றி மாற்றி எனது காந்திமதி சித்தி பாடுவார். அந்த ஞாபகம் எழுந்தது. இன்று அவரில்லை. ஆனால் பாடலின் வழியே அவரது இனிய முகம் தோன்றி மறைகிறது.

நினைவில் வாழுகிறவர்களை எழுப்புவது தான் பாடலின் வேலையா.

உண்மையில் இந்தப் பாடலின் வழியே எதையோ தேடுகிறேன். எதையோ அடைகிறேன். பாடல் ஒரு தூண்டுதல் மட்டுமே.

கேட்கும் போது அடையும் மகிழ்ச்சியை யார் புரிந்து கொண்டால் என்ன, புரியாமல் போனால் என்ன.

காதலனை நினைத்துப் பாடும் பாடல் என்றாலும் இரண்டு பெண்களும் இருவேறு உணர்ச்சி நிலையின் அடையாளமாக இருக்கிறார்கள். பாடலைக் கேட்கும் போது இரண்டு சிறுமிகளின் விளையாட்டு போலவும் தோன்றுகிறது.

உனது மலர், எனது மலர் என்று அவர்கள் மாறி மாறி பூப்பந்தை வீசுவது போலச் சொற்களை வீசிக் கொள்கிறார்கள்

பாடலைக் கேட்கும் நாமும்,

எனது மலர் எங்கேயிருக்கிறது

எனது நிலா எங்கேயிருக்கிறது என்று இந்த விளையாட்டிற்குள் இணைந்து கொள்கிறோம்.

எளிய வரிகளின் வழியே ஆழமான துயரை, துள்ளியாடும் மகிழ்ச்சியை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் கண்ணதாசன் என வியப்பாக இருக்கிறது.

கண் மயங்கிப் பயணம் போகும்

உனது தோணி கடலிலே

என்ற வரியில் வரும் கண்மயங்கிப் பயணம் போவது பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது கிடைக்கும் அரிய அனுபவமது. .

காலம் பார்த்து வந்து சேரும்

எனது தோணி கரையிலே என்று சாவித்திரி பாடும் போது காலம் பார்த்து வந்து சேரும் தோணி தான் காதல் என்பது ரசிக்க வைக்கிறது.

சந்தோஷத்தில் துள்ளியபடியே விஜயகுமாரி பாடுகிறார்

ஆற்று வெள்ளம் தடையை மீறிப்

பாய்ந்து செல்லும் அவரிடம்

அதன் மறுமொழியாகச் சாவித்திரியிடம் வெளிப்படுவது சங்க இலக்கியத்தில் வரும் பெண்ணின் காதலைப் போன்ற பதில்.

ஆசையா……..இன்னுமா ..

அந்த நெஞ்சம் என்னிடம்

இரவில் கேட்கும் போது பாடலின் சுவை மாறிவிடுகிறது.

இதே பாடலை முன்னொரு நாள் ரேடியோவில் கேட்டிருக்கிறேன். அன்று இந்த நெருக்கத்தை அடையவில்லை.

பாடலை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். இருவரின் வீடு. உடைகள். காதணிகள். நெற்றிப்பொட்டு. நெளியும் கூந்தல். திரைச்சீலையை விலக்கி வெளியே வரும் சாவித்திரியின் வலது கன்னத்தில் படிந்துள்ள பிரிவுத்துயரம். நிழலும் வெளிச்சமும் கலந்து அவர் மீது படரும் விநோதம். சாவித்திரியின் முகமும் ரோஜாவும் கொண்ட அந்தக் கால க்ளோசப். (இன்றைக்கு இது போன்ற காட்சிகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. என்றாலும் அந்த அழகு வசீகரமாகவேயிருக்கிறது.) விஜயகுமாரி கண்களில் சந்தோஷம் மின்னுகிறது. அவரது வீட்டின் பிரம்பு நாற்காலி. பெரிய ஜன்னல்கள். பொம்மைப்படகு. பாடலின் ஊடாகத் தென்படும் இரண்டு பழங்கள். கண்ணாடியில் மூன்றாகத் தெரியும் அவர்களின் முகம். ஒவ்வொரு பிரேமும் மனதுக்கு இதம் தருவதாகவே இருக்கிறது

இரவிலே என் நண்பரை அழைத்து இந்தப்பாடலைக் கேட்கச் சொன்னேன். அவர் சிரித்தபடியே உங்களுக்கும் வயதாகிவிட்டது என்றார்.

உண்மை தான் என்று சிரித்தேன்

புதிய உடைகள் நமது வயதை மறைத்துக் கொள்வதைப் போல பழைய பாடல்கள் நம் வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறதோ என்னவோ

•••

0Shares
0