சலீம்-ஜாவேத்

ஹிந்தி திரையுலகின் பிரபல திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் பற்றி DIPTAKIRTI CHAUDHURI எழுதிய WRITTEN BY SALIM JAVED என்ற புத்தகத்தை வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமான நூல்.

ஹிந்தி சினிமாவின் முக்கிய இயக்குநர்கள்,  பிரபல நடிகர்கள் பற்றிப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அதன் முக்கியத் திரைக்கதையாசிரியர்களான குல்சார் , கே. ஏ. அப்பாஸ், ராஜேந்தர் கிஷன். விஜய் டெண்டுல்கர், ராஜேந்தர் சிங் பேதி, வி.பி. சாதே. சத்யன் போஸ், சச்சின் பௌமிக், காதர்கான், இந்தர் ராஜ் ஆனந்த் போன்றவர்களின் திரையுலக அனுபவம் மற்றும் திரைக்கதை பற்றி விரிவான புத்தகம் எதுவும் எழுதப்படவில்லை.

அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர் தீப்தகீர்த்தி சௌத்ரி. அமிதாப்பின் வெற்றிப்படங்களுக்குச் சலீம்-ஜாவேத் ஜோடி கதை  எழுதியிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் மீது கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார். அந்த ஆர்வம் மெல்ல வளர்ந்து சலீம்-ஜாவேத் பற்றி விரிவான புத்தகம் எழுதுமளவு விரிவு கொண்டிருக்கிறது.

சலீம் கான் மற்றும் ஜாவேத் அக்தர் இருவரும் இணைந்து சலீம்-ஜாவேத் என்ற பெயரில் 1970களில் ஹிந்தி சினிமாவின் மிக முக்கியத் திரைக்கதையாசிரியர்களாக வெற்றி படங்களைக் குவித்து வந்தார்கள். இந்த இருவரின் வாழ்க்கை மற்றும் திரையுலக அனுபவங்களை விரிவாக எழுதியிருக்கிறார் சௌத்ரி

இந்த நூலின் துவக்கத்தில் தங்களது தொடர்ந்த வெற்றிக்கான காரணம் பற்றி சலீம் கான் ஒரு பதில் சொல்கிறார்.

“ஒரு பட வெற்றி. இரண்டு வெற்றி என்பது அதிர்ஷ்டத்தில் கிடைத்துவிடும். தொடர்ந்து பத்து பன்னிரண்டு வெற்றிப்படங்கள் என்பது வெறும் அதிர்ஷ்டமில்லை.

ஏழுமாடி கட்டிடம் ஒன்றிலிருந்து ஒரு ஸ்டண்ட்மேன் கிழே குதிக்கிறான். ஆனால் அடி எதுவும் படவில்லை என்றால் மக்கள் ஆச்சரியம் அடைவார்கள். இதை அவன் மறுபடியும் செய்தால் வியந்து போவார்கள்.. தொடர்ந்து பத்துத் தடவைகள் இது போலக் குதித்துக் காயம்படாமல் இருந்தால் குதிப்பதில் ஏதோ டெக்னிக் இருப்பதாக மக்கள் முடிவு செய்துவிடுவார்கள்.

எங்கள் திரைக்கதையில் டெக்னிக்கும் இருந்தது. எதிர்பாராத வியப்பும் இருந்தது. நாங்கள் இருவரும் நிறைய வாசித்தோம், நிறையப் படங்கள் பார்த்தோம். அதுவே எங்கள் திரைக்கதை உருவாக்கத்திற்கான ஆதாரம்“

**

சலீம் கானின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி. மத்தியப்பிரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களைப் பிடிக்கும் பணியில் இருந்தவர். ஆகவே சலீம்-ஜாவேத் உருவாக்கிய கதைகளில் போலீஸ் சார்ந்த கதைகளுக்குச் சலீமின் அனுபவங்களே அடிப்படை.

சலீமின் அப்பா பணியாற்றிய காலத்தில் கப்பர் சிங் என்ற கொள்ளைக்காரன் தன்னைத் தேடி வந்த போலீஸ்காரர்களைப் பிடித்துக் காதை அறுத்து அனுப்பிவைத்தான். அந்த நினைவில் இருந்தே ஷோலே படத்தின் கப்பர் சிங்கை உருவாக்கியதாகச் சொல்கிறார் சலீம்கான்.

சலீமின் குடும்பம் வசதியானது. தனி பங்களா, கார் என இனிமையான பால்யகாலமிருந்தது. அவரது அம்மாவிற்குக் காசநோய். ஆகவே சலீம்கான் அம்மாவை விட்டு விலகியே வளர்ந்தார். சலீமின் ஐந்து வயதில் அம்மா இறந்து போனார். அவரது 14வது வயதில் அப்பாவும் இறந்து போய்விடவே சலீம் நெருக்கடியான வாழ்க்கை சூழலுக்குத் தள்ளப்பட்டார். கஷ்டப்படும் அம்மா, இறந்து போன தந்தை இந்த இரண்டு விஷயங்களும் சலீம்-ஜாவேத் படங்களில் தொடர்ந்து இடம்பெறும் விஷயம். இதற்கு காரணம் அவரது சொந்த வாழ்க்கையே.

சலீம்கானிற்கு புத்தகங்களே உறுதுணையாக இருந்தன. லெண்டிங் லைப்ரரிக்குப் போய்ப் புத்தகங்களை எடுத்து வந்து பகலிரவாக வாசித்தார். அந்த நாட்களில் சினிமா மீது அவருக்கு விருப்பம் உண்டானது.

ஹிந்தி சினிமாவில் சிறுசிறு வேஷங்களில் நடிக்கத்துவங்கிய சலீம் தனது எழுத்தார்வம் காரணமாகத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

குரு தத்தின் நீண்ட கால நண்பரும் திரைக்கதை வசனகர்த்தாவுமான அப்ரார் ஆல்வியின் உதவியாளராகப் பணியாற்றினார் சலீம்.

ஒரு நாள் ஆல்வியிடம் நடிகர்கள் பெறும் ஊதியத்தை எழுத்தாளர்களும் ஒரு நாள் நிச்சயம் பெறுவார்கள் என்று சொன்னார்.

அதைக்கேட்ட ஆல்வி “இப்படி ஸ்டுடியோவில் போய்ப் பேசிக் கொண்டிருக்காதே. இது ஒரு நாளும் நடக்காத விஷயம். உன்னைப் பைத்தியக்காரன் என நினைப்பார்கள்“ என்றார்.

ஆனால் சலீம் கானிற்கு நடிகர்களை விட அதிகச் சம்பளம் எழுத்தாளருக்கு கிடைக்கும் நாள் வரும் என்ற எண்ணம் இருந்தது.

பின்னாளில் அது உண்மையாக நடந்தேறியது. சலீம்-ஜாவேத் ஜோடி வெற்றிப்படங்களைத் தந்துவருவதை அறிந்து ஒரு தயாரிப்பாளர் அவர்களிடம் கதை கேட்டார். தோஸ்தானா என்ற அந்தப் படத்தின் கதை திரைக்கதை எழுதுவதற்குப் பனிரெண்டரை லட்சம் படம் எனப் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

அப்படத்தின் நாயகனாக நடித்த அமிதாப்பிற்குச் சம்பளம் பனிரெண்டு லட்சம். புகழ்பெற்ற நடிகரை விடவும் அதிகம் சம்பளம் வாங்கிவிட்டோம் என்ற சந்தோஷத்தைத் தெரியப்படுத்த அப்ரார் ஆல்வியைத் தேடிச் சென்றார்கள். அவர் மகிழ்ச்சியோடு அவர்களை ஆசிர்வதித்து எழுத்துலகிற்குக் கிடைத்த வெற்றியது என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்

••

ஜாவேத் அக்தரின் தந்தை நிசார் அக்தர் ஒரு கம்யூனிஸ்ட். உருது மொழிக் கவிஞர். அக்தரின் தாய் சஃபியா ஒரு பேராசிரியர். பாடகி. எழுத்தாளர்.

ஜாவேத் அக்தரின் பரம்பரையில்  ஏழு தலைமுறையினர் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். ஆகவே ஜாவேதின் ரத்தத்தில் கவிதை இயல்பாகவே ஓடிக் கொண்டிருந்தது. அம்மாவின் மூலம் அவர் உருது மொழியை நன்றாக கற்றுக் கொண்டார். திரைக்கதை எழுதும் போதும் ஜாவேத் அக்தர் உருதுவில் தான் எழுதுவார். அதை  உதவியாளர்கள் ஹிந்தியில் மொழியாக்கம் செய்து கொள்வார்கள்.

அலிகாரில் தன்னுடை மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்துப் போபாலில் உள்ள சாய்ஃபியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ பட்டம் பெற்றார். 1964ஆம் ஆண்டில் அக்தர் மும்பை நகரத்திற்கு வந்து சேர்ந்தார். வேலை தேடி அலைந்து கஷ்டப்பட்டு முடிவில் சினிமா ஸ்டுடியோவில் க்ளாப் அடிக்கும் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். சொற்ப சம்பளம். கடினமான வேலை. ஆனாலும் ஒடியோடி வேலை செய்து இயக்குனரின் அன்பைப் பெற்றார். இதனால் படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வசனங்களை பிரதியெடுத்து தரும் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்த நாட்களில் தான் சலீம்கானின் நட்பு கிடைத்தது. இருவரும் இணைந்து திரைக்கதை எழுதலாம் எனத் தீர்மானித்தார்கள்.

ஜி.பி.சிப்பி பிலிம்ஸின் கதை இலாகாவில் அவர்களுக்கு வேலை கிடைத்தது. மாத ஊதியத்திற்குத் திரைக்கதை எழுதிக் கொடுப்பது அலுப்பூட்டுவதாக இருக்கவே அதை விட்டு விலகி தாங்களாகப் புதிய திரைக்கதையை எழுத முயன்றார்கள்.

அப்போது அவர்கள் சொன்ன கதையைக் கேட்ட ஒரு தயாரிப்பாளர். கதை மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்தச் சப்ஜெக்டில் இதுவரை யாரும் படம் எடுக்கவில்லை. ஆகவே இதைப் படமாக்க யோசிக்கிறேன். ஏற்கனவே வெளியாகி ஒடிய சப்ஜெக்டில் புதிய கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம் என்றார்.

தயாரிப்பாளரின் யோசனையை ஜாவேத் அக்தர் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டார். வெற்றிகரமாக ஒடிய கதைக்களன்களை வைத்துக் கொண்டு புதிய திரைக்கதையை உருவாக்குவதே தங்கள் பணி என அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள். சலீம்-ஜாவேத்தின் வெற்றிப்படங்கள் யாவும் முன்னதாக ஹிந்தியில், ஆங்கிலத்தில் வெளியான திரைப்படங்களின் சாயலைக் கொண்டிருப்பதே அதன் வெற்றிக்கான காரணம்.

சலீம்-ஜாவேத் ஜோடியின் வெற்றிக்கு இன்னொரு முக்கியக் காரணம் பிரபல நடிகர்கள் அவர்களுக்குக் கொடுத்த ஆதரவு. குறிப்பாக ராஜேஷ்கன்னா அவர்கள் மீதான அன்பால் தனது அடுத்த படத்தில் எழுதும்படி கேட்டுக் கொண்டார்.

அந்த நாட்களில் சிறுவர்களுக்கு அப்பா, அம்மா இந்த இரண்டு வார்த்தைகளுக்குப் பிறகு தெரிந்த மூன்றாவது வார்த்தை ராஜேஷ் கன்னா. அந்த அளவு அவர் புகழின் உச்சியில் இருந்தார், அப்படி ஒரு உச்ச நட்சத்திரம் தங்களைப் பணியாற்ற அழைக்கிறார் என்பதால் அவர்கள் கதை என்னவென்று கேட்காமல் ஒத்துக் கொண்டார்கள்.

Haathi Mere Saathi எம்.ஜி. ஆர் நடித்து வெற்றிகரமாக ஒடிய நல்ல நேரம் படத்தின் ஹிந்தி வடிவம். Haathi Mere Saathi  படத்திற்காகத் தேவர் ராஜேஷ் கன்னாவை தேடிப்போன போது ராஜேஷ் கன்னா தேதியில்லை என்று சந்திக்க மறுத்துவிட்டார். அப்போது ராஜேஷ் கன்னா புதுவீடு வாங்குவதற்காகப் பண நெருக்கடியில் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட தேவர் ஐந்து லட்ச ரூபாயை ஒரு பையில் எடுத்துக் கொண்டு போய் ராஜேஷ் கன்னா முன்னால் கொட்டி தனக்குத் தேதி வேண்டும் என்று கேட்டார்.

வியந்து போன ராஜேஷ்கன்னா உடனே அடுத்த படத்திற்கான தேதியைக் கொடுத்துவிட்டார்.

நல்ல நேரம் படத்தை ஹிந்திக்கு ஏற்ப மாற்றித் திரைக்கதை எழுதும் பணிக்காகச் சலீம்-ஜாவேத்தை தேவரிடம் சிபாரிசு செய்தார் ராஜேஷ் கன்னா.

சின்னப்பா தேவர் கதையில் மாற்றம் செய்வதை விரும்பாதவர். ஆனால் ராஜேஷ்கன்னா சொல்வதால் சலீம்-ஜாவேத்தை ஏற்றுக் கொண்டார். அவர்கள் கதையைக் கேட்டதோடு நல்ல நேரம் படத்தையும் பார்த்தார்கள். இந்தக் கதையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றதும் நாலும் யானைகளையும் கதாநாயகனையும் அப்படியே வைத்துக் கொண்டு வேறு எதை வேண்டுமானாலும் மாற்றுங்கள் என்றார் ராஜேஷ் கன்னா.

அந்தச் சுதந்திரம் காரணமாகச் சலீம்-ஜாவேத் புதிய திரைக்கதையை எழுதினார்கள். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் படத்தில் அவர்களுக்குத் திரைக்கதையாசிரியர்கள் என்ற டைட்டில் கொடுக்கப்படவில்லை. கதை விவாதத்தில் மட்டுமே உதவி செய்தார்கள் என டைட்டில் கொடுக்கத் தேவர் மறுத்துவிட்டார். இனி தேவர் படங்களில் வேலை செய்யமாட்டோம் எனச் சலீம்-ஜாவேத் அன்றே முடிவு எடுத்தார்கள்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து Seeta Aur Geeta என்ற படத்தின் கதையை எழுதினார்கள். இது The Prince and the Pauper படத்தின் மறுவடிவம். இதே படத்தை மையமாகக் கொண்டே எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் திரைப்படத்தை உருவாக்கினார். உருவ ஒற்றுமை உள்ள இருவர் இடம் மாறிவிடுவதைப்பற்றிய இக்கதையைக் கதாநாயகிக்கு ஏற்ப சலீம்-ஜாவேத் மாற்றினார்கள். அப்படமும் மிகப்பெரிய வெற்றி.

இதன் அடுத்தபடமாக Zanjeer கதையை எழுதிமுடித்து அதைப் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் சொன்னார்கள். இதைத் திலீப்குமாரை வைத்து செய்தால் நன்றாக இருக்கும் என ஒரு தயாரிப்பு நிறுவனம் சொன்னது. அதை அவர்கள் ஏற்கவில்லை. Prakash Mehra படத்தை இயக்க முன்வந்தார். அமிதாப் பச்சனை அவரிடம் அழைத்து வந்து இவரைக் கதாநாயகனாகப் போடுங்கள் என்று சலீம்-ஜாவேத் சிபாரிசு செய்தார்கள். அப்படித்தான் அமிதாப்பின் திரைவாழ்க்கை துவங்கியது. சலீம்-ஜாவேத் ஜோடியின் கதைகளே அமிதாப்பினை ஹிந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமாக்கியது. அந்த படங்களின் தமிழ் ரீமேக் ரஜினிகாந்தின் வெற்றிப்படங்களாகின.

Zanjeer படம் வெளியான போது தங்களது பெயர் போஸ்டரில் இல்லை என அறிந்த சலீம்-ஜாவேத் தாங்களாகவே ஒரு பிரிண்டரை அழைத்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மீது தங்கள் பெயரை இணைந்து ஒட்டும்படியாக துண்டு போஸ்டர் அடிக்கச் சொன்னார்கள். அந்தப் பிரிண்டர் ஆர்வம் மிகுதியில் சலீம் ஜாவேத் பெயர் மட்டும் உள்ள Zanjeer போஸ்டர் ஒன்றை அடித்து மும்பை எங்கும் ஒட்டிவிட்டார்.

அந்தப் போஸ்டரில் அமிதாப் பெயரோ, இயக்குநர் பெயரோ எதுவும் கிடையாது. வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் வழங்கும் Zanjeer என்று மட்டுமே இருந்தது.

தங்களுக்கு உரிய பெயர் கிடைக்காத போதும் இதைச் செய்வதில் தவறில்லை என்று அக்தர் உறுதியான குரலில் தெரிவித்தார். Zanjeer படம் பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழில் இப்படத்தை எம்-ஜி..ஆர் சிரித்து வாழ வேண்டும் என்ற பெயரில் நடித்தார். அதுவும் வெற்றிபெற்றது.

Zanjeer கதையைச் சிறிது மாற்றி உருவாக்கியதே யாதோன் கி பாரத். இரண்டின் மையக்கதையும் ஒன்றே. ஆனால் ஒன்றில் கதாநாயகன் போலீஸ், மற்றொன்றில் திருடன். இவ்வளவு தான் வித்தியாசம். தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றன. யாதோன் கி பாரத் படம் நாளை நமதே என எம்ஜி.ஆர் நடித்து தமிழிலும் வெற்றிப்படமாகியது.

தொடர் வெற்றிகள் சலீம்-ஜாவேத்தை திரையுலகின் திரைக்கதை மன்னர்களாகக் கொண்டாடச் செய்தது. Deewaar இவர்களின் வெற்றிப்படங்களில் பெரும் வசூல் சாதனையைச் செய்தது.

••

ஒரு ராணுவ அதிகாரியின் குடும்பம் படுகொலை செய்யப்படுகிறது. அந்த அதிகாரி ஒரு காலத்தில் இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார். சிறையிலுள்ள அந்த இரண்டு குற்றவாளிகளையும் அவரே விடுதலை செய்ய வைத்து தன் எதிரியைப் பழிவாங்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற நான்குவரியைச் சொல்லி சிப்பி பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒன்றரை லட்ச ரூபாயை அட்வான்ஸாகச் சலீம்-ஜாவேத் பெற்றார்கள். அந்தப்படம் தான் ஷோலே.

இந்தக் கதையை ரமேஷ் சிப்பி இயக்குவது என முடிவானது. திரைக்கதை உருவாக்கும் பணி துவங்குகிறது. அதில் நிறைய மாற்றங்களைச் செய்தார்கள். சலீம் தன் தந்தை காவல்துறையில் பணியாற்றிப் போது சம்பல் பள்ளத்தாக்கில் இருந்த கப்பர் சிங் என்ற கொள்ளைக்காரனைப் பற்றிச் சொன்னார். அவரை முக்கிய வில்லன் ஆக்கினார்கள். அப்படித்தான் ஷோலே படத்தின் கதை மெல்ல உருமாற்றம் கொண்டது. அந்தப் படத்திலும் அமிதாப்பை அழைத்து வந்து கதாநாயகனாக்கியது சலீம்-ஜாவேத் ஜோடியே. வில்லனாக நடிக்க தாங்கள் நாடகமேடையில் கண்ட அம்ஜத்கானை தேடிப் போய் அழைத்துவந்தார்கள். ஷோலே படத்தின் திரைக்கதை எழுதும் போது Seven Samurai, ONCE UPON A TIME IN THE WEST, THE SECRET OF SANTA VITTORIA ஆகிய படங்களில் இருந்து சில முக்கியக் காட்சிகளை எடுத்துக் கொண்டார்கள். அது இன்றும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

கர்நாடகாவில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் சலீம்-ஜாவேத் கலந்து கொண்டார்கள். முக்கிய காட்சிகளுக்கான வசனத்தை படப்பிடிப்பின் போது எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஷோலே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சென்சாருக்காக மாற்றப்பட்டது. உண்மையான கிளைமாக்சில் கப்பர்சிங்கை சஞ்சய்குமார் தானே அடித்துக் கொல்லுவார். அதை ஏற்க முடியாது எனச் சென்சார் சொன்ன காரணத்தால் மாற்றியமைக்கபட்டதே இன்றுள்ள போலீஸ் கப்பர்சிங்கை கைது செய்யும் கிளைமாக்ஸ்.

ஷோலே படம் வெளியாகி சில நாட்களில் ஒரு பத்திரிக்கையில் விமர்சனம் வெளியாகியிருந்தது. அதில் படத்தில் அமிதாப் கொல்லப்பட்டது தவறானது. அவர் ஜெயபாதுரியைத் திருமணம் செய்வது போல முடிவு உருவாக்கபட வேண்டும். துயர முடிவிற்குத் திரைக்கதையாசிரியர்கள் சலீம்-ஜாவேத்தே பொறுப்பு.  இந்த முடிவு காரணமாகப் படம் வசூலில் தோல்வி அடையும் என ஒரு விமர்சகர் கடுமையாக எழுதியிருந்தார்.

இதைக் கண்டு கோபமடைந்த சலீம்-ஜாவேத் மறுநாள் அதே பத்திரிக்கையில்  ஒரு விளம்பரம் கொடுத்தார்கள். அதில் ஷோலே எல்லாச் சென்டரிலும் ஐம்பது வாரங்கள் ஒடி ஒவ்வொரு சென்டரிலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யும் என இருந்தது.

ஒரு படத்திற்காக அதன் கதாசிரியர் விளம்பரம் கொடுப்பது அதுவே முதல்முறை. சலீம்-ஜாவேத் சொன்னது போலவே படம் நூறு வாரம் ஒடி பெரும் வசூலைக் குவித்தது. இந்தியாவில் மட்டும் இன்றுவரை ஷோலே நானூறு கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

தொடர் வெற்றிப்படங்களைத் தந்த இருவரும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள். குழப்பங்கள் காரணமாகப் பிரிந்துவிட முடிவு எடுத்தார்கள்.

ஹெலன் என்ற கவர்ச்சிநடிகையோடு காதல் கொண்ட சலீம்கான் அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இது சலீம் குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்கியது.

இன்னொரு பக்கம் ஜாவேத் அக்தர் பிரபல நடிகையான ஷபனா ஆஸ்மியோடு காதல் கொண்டார். இதன் காரணமாக முதல்மனைவியை ஜாவேத் அக்தர் விவாகரத்துச் செய்ய முயன்றார். அக்தரின் மனைவி ஹனி இரானி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். அவரும் திரைக்கதை எழுதக்கூடியவர். விவாகரத்திற்குப் பிறகு ஹனி இரானி தன் பிள்ளைகளுடன் தனியே வாழத்துவங்கினார்.

சலீம்-ஜாவேத் இருவரின் நட்பு வட்டமும் வேறுபட்டது. அவர்களின் ஆலோசனையும் வம்பு பேச்சுகளும் இருவரது மனதையும் மாற்றியது.

ஒரு நாள் ஜாவேத் அக்தர் இனி நாம் பிரிந்து தனித்தனியாக வேலை செய்வோம் என தனது முடிவை அறிவித்தார். அது தான் உன் விருப்பம் என்றால் அப்படியே செய்வோம் எனச் சலீம் விடைபெற்றுப் போய்விட்டார்.

இந்தப் பிரிவின் பிறகு ஹெலனோடு வசிப்பதற்காகச் சலீம்கான் லண்டன் போய்விட்டார். ஜாவேத் அக்தர் ஷபனா ஆஸ்மியை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு பாடல்கள் எழுதுவதில் தீவிர கவனம் கொள்ளத் துவங்கினார். திரையுலக நட்பு வளர்ந்து கதை திரைக்கதை வசனம் பாடல் என அவருக்கான வாய்ப்புகளைக் குவிப்பதாக மாறியது. ஆனால் இந்தியா திரும்பிய பிறகு சலீம் கான் சில படங்களுக்கு கதை எழுதினார். அவரால் தனித்து வெற்றிபெற முடியவில்லை.

••

சலீம்கானின் மகன் தான் பிரபல நடிகர் சல்மான் கான். இன்று ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரம். சல்மானின் இரண்டு சகோதரர்களும் திரைப்பட நிறுவனத்தை நடத்துகிறார்கள். சலீம் கான் ஒய்வில் தனது பிள்ளைகளின் திரையுலக வெற்றியை ரசித்தபடியே அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

ஃபர்ஹன் அக்தர் மற்றும் ஜோயா அக்தர் இருவரும் ஜாவேத் அக்தரின் பிள்ளைகள். இருவரும் ஹிந்தி சினிமாவின் முக்கிய இயக்குநர்களாக உள்ளார்கள். ஃபர்ஹன் அக்தர் முன்னணி நடிகராக விளங்குகிறார். சிறந்த பாடலாசிரியருக்கான ஃபிலிம்பேர் விருதை ஜாவேத் அக்தர் 19 முறை பெற்றிருக்கிறார்.  இன்றும் அவரது திரைப்பணி தொடர்கிறது

புத்தகங்கள் தான் என்னை உருவாக்கியது. இன்று என் பிள்ளைகள் வாசலில் கிடக்கும் நியூஸ்பேப்பரை கூடக் கையில் தொடுவதில்லை என்று கவலையோடு தெரிவிக்கிறார் சலீம்கான்.

அக்தரின் மனைவி ஹனி இரானி திரைக்கதைகள் எழுதி வருகிறார். சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கிறார்.

சலீம்-ஜாவேத் என்ற இரண்டு நண்பர்கள் ஒன்றாக இணைந்து ஹிந்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியதே ஒரு படத்தின் திரைக்கதை போலத் தான் இருக்கிறது.

சலீம்-ஜாவேத் உருவாக்கிய திரைக்கதை அமைப்பு இன்றும் இளம் இயக்குநர்களால் பின்பற்றப்படுகிறது. Andhadhun படத்தின் இயக்குநர் Sriram Raghavan தான் சலீம் ஜாவேத்தின் படங்களில் இருந்தே திரைக்கதையின் பாலபாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்கிறார்.

syd field எழுதிய திரைக்கதை நூல்களை வாசிப்பதை விடவும் WRITTEN BY SALIM JAVED போன்ற புத்தகங்களை வாசிப்பது திரைக்கதையைப் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்ள உதவும்.

••

0Shares
0