நேற்று மாலை எனது பையன் ஹரிபிரசாத்தின் குறும்படமான மை டியர் செகாவ் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். இயக்குநர் சீனு ராமசாமி குறும்படத்தை வெளியிட்டு ஹரியையும் படக்குழுவினர்களையும் வியந்து பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
“கதைசொல்வதற்காக நாற்காலியோடு சாலையில் சுற்றித்திரியும் ஒருவரை முதன்முறையாகத் திரையில் பார்க்கிறேன். மிகவும் யதார்த்தமாகப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்குறும்படம் நிச்சயம் திரைப்படவிழாவில் விருதுகளைப் பெறும்“ என வாழ்த்தினார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி
குறும்படத்தைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திய இயக்குநர் ராஜு முருகன் “சமகாலச் சூழலுக்குப் பொருத்தமான ஒரு கதையை மிகச்சிறப்பாகப் படமாக்கியுள்ளார்“ என்று ஹரியையும் அவனது படக்குழுவினர்களையும் வாழ்த்தினார். ராஜு முருகனுக்கு என் அன்பும் நன்றிகளும்
தனது படக்குழுவினரை அறிமுகப்படுத்தி விழாவிற்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினான் ஹரி பிரசாத். மேடையில் தயக்கம் எதுவுமின்றி ஹரி பேசியது எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி தந்தது.
செகாவின் சிறுகதைகளைப் பற்றிய சிறப்புரையை இரண்டு மணி நேரம் நிகழ்த்தினேன். பேசத்துவங்கியதும் மனம் அதில் கரைந்து போய்விட்டது.
என் கல்லூரி நாட்களிலிருந்து செகாவை வாசித்துக் கொண்டிருக்கிறேன். செகாவைப் பற்றி இரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன். நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்த உரையை நிகழ்த்துவதற்காக மறுபடியும் அவரது கதைகளையும் நாட்குறிப்பையும் கடிதங்களையும் வாசிக்க நேர்ந்தது மிகுந்த புத்துணர்ச்சி தருவதாக இருந்தது.
ஆகவே உரை துவங்கிய சில நிமிசங்களில் மனம் கொண்டு செல்லும் திசையில் செல்வதாகப் பேச்சு அமைந்துவிட்டது.
அரங்கில் இருக்கைகள் நிரம்பிவிட்டதால் நிறையப் பேர் நின்று கொண்டே உரையைக் கேட்டார்கள். முன்னால் இருக்கும் கேமிரா, பார்வையாளர்கள் எதுவும் என் கவனத்தில் இல்லை. மாஸ்கோவின் தெருக்களில் செகாவின் நிழலைப் போலச் சுற்றிக் கொண்டிருந்தேன். டிசம்பர் மாத பனி பெய்த தெருவில் நின்றபடி தேவாலய மணி ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கண்முன்னே குதிரை வண்டிகள் கடந்து போயின. நடன விருந்து நடந்தேறியது. செகாவ் காதலின் உற்சாகத்துடன் வீடு திரும்பினார். அவர் வளர்த்த நாரை பனியில் நடனமாடிக் கொண்டிருந்தது.
செகாவின் மாஷாவை, அன்னாவை, டிமிரிட்ரியை, குரோவ்வை, அச்சுமலோவ்வை, லாப்தேவை, இவானை,யெகோரை, பெலகியாவை அழைத்து வந்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
செகாவின் தோழர்களாகப் புதுமைப்பித்தனை. கி.ராஜநாராயணை, புரசு பாலகிருஷ்ணனை, பிரபஞ்சனை, கிருஷ்ணையாவை, சுந்தர ராமசாமியை வண்ணதாசனை இணைத்துக் கொண்டேன்.
இந்த நிகழ்விற்கு வந்திருந்து ஹரியை வாழ்த்திய தோழர் எஸ்.ஏ.பெருமாள். வசந்தா அக்கா, சுகாசினி, சந்தியா நடராஜன், மேனாள் துணைவேந்தர் மா. ராஜேந்திரன், டாக்டர் வெங்கடாசலம், தம்பி ராமலிங்கம் குடும்பத்தினர், மருத்துவர் ராஜேந்திரன், தங்கை கமலா, ஸ்ரீனிவாசன், ஜென் ராம் குடும்பத்தினர், ராஜகோபால், சாம் டேனியல் பொன்.காசிராஜன், மாரிமுத்து, பிரபாகர் குடும்பத்தினர், மணிமாறன், பரிதி, பேச்சாளர் மணிகண்டன், சாமிநாதன், கருணாபிரசாத், மணிகண்டன், பாலபாரதி, ஹேமா உள்ளிட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி
ஹரியோடு இணைந்து குறும்பட உருவாக்கத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அன்பும் நன்றிகளும்
நிகழ்வைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதி டிவி கபிலனுக்கு அன்பும் நன்றியும்
சிற்றுண்டி வழங்கிய க்ரீன் கபே ராஜு அவர்களுக்கும். கவிக்கோ மன்றத்தின் நிர்வாகிகள் தமிழ் முதல்வன், உஸ்மான் உள்ளிட்ட நண்பர்களுக்கும், புகைப்படம் எடுத்து உதவிய கமலகண்ணனுக்கும், தொகுத்து வழங்கிய சரவணனுக்கும் நன்றிகள்.
••
புகைப்படங்கள் :
நன்றி
ஸ்ருதி டிவி.