சுவிஸ் ஃபேமிலி ராபின்சன் நாவலை எனது பள்ளி வயதில் வாசித்திருக்கிறேன். 1813ல் வெளியானது. புயலில் சிக்கிய கப்பல் ஒன்றிலிருந்து ஒரு குடும்பம் தீவில் அடைக்கலமாகிறது. அங்கே எப்படி அவர்கள் வசித்தார்கள். எவ்வாறு தீவிலிருநது தப்பினார்கள் என்பதைச் சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் ஜொஹான் டேவிட் வைஸ்.
இந்த நாவல் 1960ல் திரைப்படமாக்கப்பட்டது. வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்த பிரம்மாண்டமான படமிது. தொலைக்காட்சியில் ஒருமுறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். தற்போது மீண்டும் பார்க்கலாம் எனத் தேடிப் பார்த்தேன்.
ஒரு சுவிஸ் குடும்பம் யுத்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க நியூ கினியாவில் உள்ள ஒரு காலனிக்கு இடம் பெயர முயற்சிக்கிறார்கள். இதற்காகக் கப்பலில் பயணம் செய்கிறார்கள். அந்தக் கப்பல் புயலில் சிக்கிக் கொள்கிறது. கப்பலில் இருந்தவர்கள் தப்பிப் போய்விடவே அந்தக் குடும்பம் மட்டும் மாட்டிக் கொள்கிறது. தந்தை தாய் மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகள் எப்படிக் கப்பலிலிருந்து தப்பி அருகிலுள்ள தீவிற்குப் போனார்கள் என்று படம் துவங்குகிறது.
கப்பலில் இருந்த கேப்டனின் வளர்ப்பு நாய்களைத் தன்னோடு வைத்துக் கொள்ள இளையமகன் ஆசைப்படுகிறான். ஆனால் தந்தை மறுக்கிறார். அவர்கள் மரக்கட்டைகளை ஒன்று சேர்ந்து மிதவை போலாக்கி அதில் ஏறி தீவு நோக்கி பயணிக்கிறார்கள். அந்தக் கடற்பயணத்தின் போது கூடவே நாய்களும் நீந்தி வருகின்றன. முடிவில் நாய்களைக் காப்பாற்றி மிதவையில் ஏற்றிக் கொள்கிறார்கள்.
மனிதர்கள் வசிக்காத தீவு. அங்கே ஒரு இடத்தில் தங்குகிறார்கள். திடீரெனத் தீவில் மழை கொட்டுகிறது. நனைந்தபடியே அந்தக் குடும்பம் இரவைக் கழிக்கிறது.
தீவில் எதுவும் நடக்கக் கூடும் எனப்பயந்து இரவு முழுக்கக் காவல் இருக்கும் கணவனிடம் உங்கள் நலனும் முக்கியம் என மனைவி அவரை உறங்கச் சொல்வது அன்பின் அடையாளம்.
மறுநாள் தந்தையும் மகன்களும் ஒன்று சேர்ந்து கப்பலிலிருந்த விலங்குகளையும் மீட்டுக் கொண்டுவருகிறார்கள். அத்தோடு மரவீடு ஒன்றையும் கட்டுகிறார்கள். அந்த வீட்டில் தங்களுக்காக ஒரு தனி அறை ஒன்றைக் கட்டிக் கொள்கிறார் தந்தை. அங்கே தனது மனைவியை அழைத்துக் கொண்டு வந்து காட்டுகிறார். அவள் வியந்து போகிறாள். எல்லாமும் சரியாக இருக்கிறது. திரைச்சீலை தான் பொருத்தமாகவில்லை என்று சொல்லி அவளாகப் புதிய திரைச்சீலைகளைச் செய்து பொருத்துகிறாள். அந்தக் காட்சி மிக முக்கியமானது. வீட்டை ஆணால் உருவாக்கிவிட முடிகிறது.அதை அழகுறச் செய்வது பெண்ணே.
நெருக்கடி ஒரு மனிதனை எந்தச் சவாலையும் எதிர்கொள்ள வைக்கும். புதிய விஷயங்களில் நாட்டம் கொள்ளச் செய்யும். புது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.
நகர வாழ்விலிருந்து இயற்கைக்குத் திரும்புவதன் மூலம் அவர்கள் வாழ்வின் உண்மையான மதிப்பைக் கண்டறிகிறார்கள். அந்தத் தீவில் கடற்கொள்ளையர்கள் ஒரு கப்பலின் தலைவர் மற்றும் மகளைக் கட்டிப்போட்டுக் கொல்ல முயற்சிக்கையில் அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறான் மூத்தமகன். அந்த இளம்பெண்ணின் வருகை காதலைக் கொண்டு வருகிறது. முடிவில் அந்தக் குடும்பம் கடற்கொள்ளையர்களுடன் சண்டையிட்டு வெல்கிறது.
படத்தில் கடைசி பையன் பிரான்சிஸ் செய்யும் வேடிக்கைகள் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. அதிலும் அவன் யானை ஒன்றைத் தன்வசப்படுத்துவதும். நெருப்புக் கோழி அவனை இழுத்துக் கொண்டு போவதும் நல்ல வேடிக்கை.
கிறிஸ்துவ மதகுருவான ஜொஹான் டேவிட் வைஸ் தனது நான்கு மகன்களுக்கும் குடும்ப மதிப்பினை உணர்த்துவதற்கும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைக் கற்றுத் தரவுமே இந்த நாவலை எழுதினார். இந்த நாவலுக்கு ஒவியம் வரைந்தவர் டேவிட் வைஸின் இளையமகன்.
சுவிஸ் ஃபேமிலி ராபின்சன் குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் பிடித்தமான படமே.
தற்போதைய சூழலில் இந்தப் படம் மிக நெருக்கமான உணர்வைத் தருகிறது என்பதே நிஜம்.
••
26. 3. 20

