– அ.திருவாசகம். மதுரை.
உங்களின் ஒவ்வொரு புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் போது உள்ளே புதிதாக ஒரு உலகத்தைக் காணமுடிகிறது.சமீபத்தில் நெடுங்குருதி நாவல் படித்தேன். கிட்டத்தட்ட 525 பக்கங்கள் வேம்பர்களின் வாழ்வு வேம்பலைக் கிராமத்தின் வழியாகச் சொல்லப்படுகின்றன. நம் கரிசல் நிலத்தின் வெயில் குடித்து வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கையின் அவலத்தைச் சிறப்பாய் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்நாவலில் வரும் பாத்திரங்கள் நாகு , ரத்னாவதி , வேணி, திருமா , வசந்தா , ஜெயக்கொடி , வடுவார்பட்டி குறவர்கள், லட்சுமணன், ஈரத்துணி கள்ளன் சீனி ,லயோனல், ஜெசிந்தா, துந்தனா வாசிக்கும் பரதேசிகள் , வேல்சிதுரை , சிங்கி கிழவன் , பண்டார மகள் , தேவானை ஜெயராணி ,மல்லிகா, சேது .வசந்தா , சங்கு ,கிட்நா , நாகுவின் தாத்தா , நாகுவின் அய்யா , அம்மா , அம்மாவோட மயினி ,பக்கிர் , பக்கிரின் மனைவி , ஆதி லட்சுமி , மரக்கடை வியாபாரி அஷ்ரப் , ரத்னாவதியின் அத்தை அனைவரும் நெஞ்சில் நிழலாடுகிறார்கள்.
ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த போது நாகுவிற்குப் பதினோரு வயது நடந்து கொண்டிருந்தது என நாவல் தொடங்குகிறது.
எறும்புகளின் வெளியேற்றத்தை ஆதிலட்சுமி ”வீட்ல ஈரமிருக்கும் வரைக்கும்தான் எறும்புகள் சுவரேறி நடமாடும். ஈரம் உலந்து போயிட்டா வீட்ல தங்காது. எறும்பு வீட்டை விட்டு போயிட்டா மனுஷன் அந்த வீட்டில குடியிருக்கவே முடியாது. வீடு வெறிச்சோடி போயிடும் இந்த ஊரில் இனிமே எறும்பேயிருக்காதுடா” ஆதிலட்சுமியின் சொற்கள் வழியாக வேம்பலை கிராமத்தின் வரப் போகும் துயரம், பஞ்சத்தின் வரவை அறிவிக்கின்றது.
வேம்பர்களின் வாழ்வை சொல்கிறபோது அம்மனிதர்களுடன் இணைந்த வெயில், மழை, பனி, இருட்டு, வெளிச்சம் என எல்லாமே நேர்த்தியாகவும் சொல்லப்பட்டுள்ளன.
‘சுனையில் நீர் சுரப்பது போன்ற சத்தத்தோடு வேம்பின் காற்று கசிந்து கொண்டிருக்கிறது’ என்பது அற்புதமான உவமையாக உள்ளது.
வெயில் உகந்த அம்மன் கோவிலில் நாகுவின் அம்மாவும், அவளின் அண்ணன் மனைவி ஈஸ்வரியும் சந்தித்த போது, ஈஸ்வரி அழும் போது “பொட்டலில் இறங்கியிருந்த வெயிலைத் தவிர நின்று கவனிக்க ஆட்களேயில்லை”.
“மயினி…. உண்டாகியிருக்கீங்களா.. எத்தனை மாசம்?”
என நாகுவின் அம்மா கேட்ட போது
“காயுற வயிறு போதாதுன்னு, இது ஒண்ணு வேற வயித்துல துள்ளிக்கிட்டு இருக்கு. நாலு மாசம் முடிஞ்சு போச்சு” என ஈஸ்வரி சொல்லுமிடம்
இல்லற வாழ்க்கைக்கு உயிரளிக்கும் குழந்தை இன்பம் கூட அந்த மண்ணின் வறுமை அவர்களுக்குத் துன்பமாகிறது.
நாகுவின் அய்யா, நீலாவைப்புதைத்த இடத்தில் சேற்றில் நெளியும் மண்புழு ஒன்றை அந்தச் சமாதியில் முளைத்த உயிராக எண்ணி,அதை எடுத்துக் கைகளில் ஏந்தியபடி தன் வீட்டுக்கு வந்து தன் வீட்டின் தண்ணீர் தொட்டி அருகே அவர் மண் புழுவை விட்டுவிட்டு ,அவர் தன் மகளிடம் பேசுவது போல ‘வீட்டடிலேயே இருந்துக்கோ தாயி’ எனச் சொல்லும் காட்சி இந்நாவலின் ஆகச்சிறந்த மனித நேயம் வெளிப்படும் இடம்.இது
வேம்பலை மனிதர்கள் வாழ்வுடன் போராடிப் போராடித் தோற்று மறைந்து கொண்டே இருந்தாலும் அவர்களது உடல்கள் வழியாகக் குருதி காலத்தில் ஒரு மாபெரும் நதி போல ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதை அழகாக ஒரு கரிசல் காட்டு துன்பியல் இதிகாசமாய்ப் படைத்துள்ளீர்கள்.
தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய நாவல்.
****
