புத்தகங்களை நேசிப்பவள்.

The Bookshop என்ற 2017ல் வெளியான திரைப்படத்தைப் பார்த்தேன்.

1978 ஆம் ஆண்டு பெனிலோப் ஃபிட்ஸ்ஜெரால்டு எழுதிய நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள். பெண் இயக்குநரான இசபெல் கோய்செட் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ஸ்பானிய திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர். இந்தப் படத்தில் எமிலி மோர்டிமர், பாட்ரிசியா கிளார்க்சன் மற்றும் பில் நைகி ஆகியோர் நடித்துள்ளனர்

1950 களின் பிற்பகுதியில் கதை நடக்கிறது. புளோரன்ஸ் கிரீன் என்ற பெண் போரில் கணவனை இழந்தவர். பல ஆண்டுகளாகக் காலியாக உள்ள தனது பூர்வீக வீட்டில் ஒரு புத்தகக் கடையைத் துவங்க நினைக்கிறார். ஆனால் நிர்வாகசபை துவங்கி உள்ளூரின் செல்வந்தரான வயலட் கமார்ட் வரை அதை எதிர்க்கிறார்கள். வயலெட் ஊரே தன் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்.

கிரீன் வங்கியின் உதவியை நாடிச் செல்கிறாள். வங்கி அதிகாரியோ தான் தினமும் இரண்டு பக்கங்கள் படித்தாலே தூக்கம் வந்துவிடுகிறது. யார் புத்தகம் வாங்கப்போகிறார். இந்தத் தொழில் பிரகாசமான எதிர்காலமற்றது என்று சொல்கிறார். அவளோ நம்பிக்கையுடன் புத்தகக் கடை துவங்கப்போவதாகச் சொல்கிறாள். வழக்கறிஞரும் அவளுக்கு வேறு இடத்தில் கடை ஆரம்பிக்கலாம் என்றே ஆலோசனை தருகிறார்.

ஆனால் தனது விருப்பத்தின் படியே பழைய வீட்டில் புத்தகக் கடை ஒன்றைத் துவங்குகிறார் கிரீன். இந்தக் கடையை உருவாக்கும் பணியில் பள்ளி சிறார்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அது ஒரு அழகான காட்சி. மழையில் நனைந்தபடியே அந்தச் சிறுவர்கள் கடை வாசலில் காத்திருக்கிறார்கள். அவர்களே ஒன்று சேர்ந்து புத்தகங்களை அடுக்கித் தருகிறார்கள்.

கிரீன் தனது கணவரை ஒரு புத்தகக் கடையில் தான் முதலில் சந்திக்கிறாள். முதற்சந்திப்பிலே காதல் உருவாகிறது. இருவரும் புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் கணவரின் நினைவாக அவள் புத்தகக் கடையை நடத்த விரும்புகிறாள்.

கடைக்குப் புதிய புத்தகங்கள் வர ஆரம்பிக்கின்றன. அவற்றை அழகாக அடுக்கி வைக்கிறாள். அந்த ஊரில் தனியே வசித்து வரும் எட்மண்ட் புருண்டிஷ் என்ற பணக்காரர் புத்தகங்கள் படிப்பதிலே தன் வாழ்நாளை கழிக்கக்கூடியவர். அவர் புதிய புத்தகக் கடைக்கு ஆதரவு தருகிறார். அவருக்குப் பிடித்தமான புத்தகங்களை அனுப்பித் தருகிறாள் கிரீன்.

ரே பிராட்பரியின் எழுத்துகள் அவருக்கு அறிமுகமாகிறது. அவர் தொடர்ந்து பிராட்பரியை வாசிக்க ஆரம்பிக்கிறார். இதன் வழியே கிரீனை ஒருமுறை தேநீர் அருந்த தன் வீட்டிற்கு அழைக்கிறார்.

கிரீன் அவரைத்தேடி அவரது மாளிகை போன்ற வீட்டிற்குச் செல்கிறாள். அங்கே அவருடன் இனிமையான சந்திப்பு நடக்கிறது. தன்னைப் பற்றிய கதைகளைச் சொல்லி அவர் சிரிக்கிறார்.

இந்தச் சூழலில் நபகோவின் லோலிதா நாவல் வெளியாகிறது. அதைத் தனது வாடிக்கையாளர்களுக்காக வாங்கி விற்கலாமா என முடிவு செய்யமுடியாமல் எட்மண்ட்டின் ஆலோசனை கேட்கிறாள். அவர் அந்த நாவலை ஆபாசம் எனச் சிலர் கருதக்கூடும் ஆனால் அது தரமான புத்தகமே என்று வாங்கி விற்கும்படி ஆலோசனை சொல்கிறார். 250 புத்தகங்களை வாங்குகிறாள் கிரீன்

இந்த நிலையில் அவளது கடையை மூடுவதற்கான குறுக்குவழிகளைக் கையாள ஆரம்பிக்கிறாள் வயலட் கமார்ட். அதன் விளைவாகப் புதுப்புது பிரச்சனைகள் உருவாகின்றன. அவற்றை எதிர்கொள்ள முடியாமல் நிலை குலைந்து போகிறாள் கிரீன்.

அவளுக்கு உதவி செய்வதற்கு எட்மண்ட் முன்வருகிறார். அவரே நேரில் சென்று வயலெட்டிம் பேசுகிறார். புதிய சட்ட திருத்தம் மூலம் அவளது இடத்தை அபகரிக்கக் கூடாது என்று வாதிடுகிறார். ஆனால் அவள் பிடிவாதமாக அது சட்டத்தின் செயல்பாடு என்று மறுக்கிறாள். மனம் உடைந்து போகிறார் எட்மண்ட். வேறு வழியின்றிக் கடை மூடப்படும் சூழல் உருவாகிறது. அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றை எடுக்கிறாள் கிரீன்

சிறிய புத்தகக் கடை ஒன்றினைச் சுற்றிலும் நடக்கும் இந்தக் கதை அத்தனை நெருக்கம் தருவதாக உருவாக்கப்பட்டுள்ளது. பெனிலோப் ஃபிட்ஸ்ஜெரால்டு சில காலம் புத்தகக் கடையில் பணியாளராக வேலை செய்தவர் என்பதால் அந்த அனுபவத்திலிருந்து நாவலை எழுதியிருக்கிறார்.

பெரிய திருப்பங்கள். அதிரடியான விஷயங்கள் எதுவுமின்றி அழகாகப் படம் விரிந்து செல்கிறது. கதாபாத்திரங்களின் இயல்பும் செயல்களும் அத்தனை அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில காட்சிகளில் கிரீன் மௌனமாக இருக்கிறார். கேமிரா அப்படியே உறைந்து விடுகிறது. அவளது மனநிலையைத் தெளிவாகக் கேமிரா பதிவு செய்துள்ளது.

குறிப்பாக வயலட் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் அவள் ஜெனரலுடன் பேசும் போதும் மற்ற விருந்தினர்கள் அவளை நடத்தும் விதமும் கிரீனின் உணர்ச்சிகள் மிகத் தெளிவாகப் பார்வையாளர்களுக்கு உணரச் செய்யப்படுகின்றன.

புத்தகக் கடையில் வேலைக்கு வரும் கிறிஸ்டின் என்ற 10 வயது சிறுமிக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமில்லை. ஆனால் அவள் நிறைய உதவிகள் செய்கிறாள். கடைசிக்காட்சியில் கிரீன் பரிந்துரைத்த புத்தகத்தை அவள் கையில் எடுத்துக் கொள்கிறாள். அது அழகான காட்சி.

புத்தகங்களுடன் இருக்கும் தருணங்களில் தான் கிரீன் சந்தோசமடைகிறாள். அதுவும் எட்மண்ட்டைச் சந்தித்துப் பேசச் செல்லும் தருணத்திலும் அவர் வீட்டில் கேக் சாப்பிடும் போதும் தான் அவள் உண்மையான சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறாள். மற்ற நேரங்களில் மென்சோகத்துடனே காணப்படுகிறார்.

சிறிய கடற்கரை கிராமத்தினைப் படம் வெகு அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறது.

0Shares
0