செர்ஜியோ லியோனி.


 


 


 


 


அகிரா குரசோவாவிற்கு இணையான இன்னொரு திரைப்பட இயக்குனரைச் சொல்ல முடியுமா என்று அமெரிக்காவின் பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது அவர் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் சொன்ன பதில், செர்ஜியோ லியோனி. (Sergio Leone)


ஆனால் குரசோவா அறியப்பட்ட அளவு செர்ஜியோ லியோனியின் பெயர் கொண்டாடப்படவில்லை. அவரது படங்களை அறிந்தவர்கள் கூட அதை இயக்கியவர் செர்ஜியோ லியோனி என்று அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் அவை கலைப்படங்கள் அல்ல. மாறாக சாகசப்படங்கள். அதிலும் கௌபாய் வகை படங்களே பிரதானம். ஆனால் செர்ஜியோ லியோனியை அறிய செய்வதற்கு ஒரே படத்தை சொன்னால் போதும் உடனே அதன் இசை நம், நினைவுகளை மீள் எழச்செய்துவிடும். அந்த படம் The Good, the Bad and the Ugly.


வாயில் புகைந்தபடி இருக்கும் சுருட்டும், மின்னல் வேகத்தில் துப்பாக்கி சுடும் திறனும், இறுக்கமான முகமும், முரட்டு குதிரையுமாககிளிண்ட் ஈஸ்வுட் இந்த படத்தில் ஏற்று நடித்த கௌபாய்  கதாபாத்திரம் இன்றும் நினைத்து ரசிக்கபடுகிறது.


கௌபாய் படங்களை தழுவி தமிழில் எங்க பாட்டன் சொத்து,  நான்கு கில்லாடிகள் என்று கர்ணன் பல படங்களை தயாரித்திருக்கிறார். ஹிந்தியிலும் இது போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.


வெஸ்டர்ன் படங்கள் எனப்படும் அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர்களின் கொள்ளை மற்றும் சாகசங்களை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட ஹாலிவுட் படங்களில் High Noon   முக்கியமான படம்.  இதே வெஸ்டர்ன் பிரிவு படங்களில் இத்தாலியில் உருவாக்கபட்டதே ஸ்பாகெடி வெஸ்டர்ன் திரைப்படங்கள்.


பழிவாங்குவதும் புதையல் தேடி அலைவதும் மேய்ச்சலுக்காக கொண்டு போகும் மாடுகளை கொள்ளையடிப்பதும் வங்கியை ஏமாற்றி கொள்ளையடிப்பதும் என்று பூர்வகுடி இந்தியர்களை சுற்றி நிறைய கதைகள் பின்னப்பட்டுள்ளன. அந்த கதைகளுக்கு நிஜவாழ்வில் முன்னோடிகள் பலர் இருந்தார்கள்.


இந்த வகை படங்களில் துப்பாக்கியும் போதையேறிய கண்களும் காவிபடிந்த பற்களும் முரட்டு உருவமும் அடங்காத  குதிரைகளில் பயணம் செய்தபடியே இவர்கள் சாகச நாயகர்களாக வலம் வந்தார்கள்


ஜப்பானில் அகிரா குரசோவா சாமுராய்கள் எனப்படும் போர்மறவர்கள் பற்றிய படங்களை தொடர்ச்சியாக உருவாக்க துவங்கியது ஹாலிவுட்டில் பெரிய பாதிப்பை உருவாக்கியது. சாமுராய் படங்களை அமெரிக்க பின்புலத்திற்கு மாற்றி மறுஉருவாக்கபடங்கள் வெளியாக துவங்கின. பார்வையாளர்களின் இதற்கு கிடைத்த வெற்றி புதிய படங்களை உருவாக்குவதில் ஹாலிவுட் ஸ்டுடியோக்களை ஆர்வம் காட்ட செய்தது. அப்படி தான் லியோனியின் படங்களும் உருவாகின.


ஸ்பாகெடி வெஸ்டரன் படங்களுக்கான தனித்துவத்தை உருவாக்கிய  முக்கிய இயக்குனர் செர்ஜியோ லியோனி. இவரது இயக்கத்தில் உருவான A Fistful of Dollars, For a Few Dollars More , The Good, the Bad and the Ugly, Once Upon a Time in the West  போன்றவை உலகப்புகழ் பெற்றவை.


செர்ஜியோ லியோனி இத்தாலியை சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு திரைப்பட இயக்குனர். அம்மா ஒரு நடிகை. ஆகவே சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது விருப்பம் கொண்டிருந்தார். பதினாறு வயதில் உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கினார். பல வருடங்கள் இத்தாலிய படங்களில் பணியாற்றிய அவர் தன்னுடைய குருவான மரியோ போனார்டு நோய்வாய்படவே அவரது படத்தை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அப்படி அவர் இயக்கிய படம் வெற்றி பெற்ற காரணத்தால் செர்ஜியோ லியோனிக்கு தனித்து படம் செய்யும் விருப்பம் உண்டானது


அவரது முதல்படம்  Fistful of Dollars, 1965ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கிளிண்ட் ஈஸ்வுட் கதாநாயகனாக அறிமுகமானார். அகிரா குரசோவாவின் பாதிப்பு அதிகம் உள்ள படமிது. லியோன் அமெரிக்காவை அறிந்திராதவர். பூர்வ குடி வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாது. ஆனாலும் படத்தை மிக சிறப்பாக இயக்கியிருந்தார்


இவரதுபடங்களின் பொது தன்மை கதாநாயகனுக்கு பெயர் இருக்காது. அவன் அடையாளம் இல்லாத ஒரு சாகசவீரன். ஈஸ்ட்வுட் அதற்கு சிறப்பாக பொருந்தியிருந்தார். இந்த படத்தை ஆங்கிலத்தில் அவர்கள் உருவாக்கிய போதும் தயாரிப்பில் இருந்த எவருக்கும் ஆங்கிலம் தெரியாது. திரைக்கதை இத்தாலிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இயக்குனர் தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் இத்தாலியில் தான் பேசினார்கள். ஸ்பெயினில் இந்த படம் தயாரிக்கபட்டது.


பிஸ்ட் புல் ஆப் டாலரின் வெற்றி லியோனுக்கு தனிகவனத்தை உருவாக்கி தந்தது. அவரது திரைப்படங்களின் முக்கிய பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை. மிகவும் நெருக்கமான குளோசப் காட்சிகளையும் நீண்ட தொலைவுள்ள லாங்ஷாட்டுகளையும் அடுத்து அடுத்து வெட்டி காட்டக்கூடிய தனிபாணி அவருடையது. அது போலவே முந்தைய கௌபாய் படங்களில் இல்லாத விதத்தில்  துப்பாக்கியை பயன்படுத்தி சண்டையிடும் விதம் காட்சி கோணங்களும் லியோனியிடம்  புதிதாக இருந்தன.


செர்ஜியோ லியோனியின் பள்ளி நண்பரான இசைக்கலைஞர் எனியோ மோரிகோன் இந்த படங்களுக்கு இசையமைத்திருந்தார். சாகசபடங்களில் இது போன்ற இசையமைப்பு முன் எப்போதும் இருந்ததேயில்லை என்பது போல எனியோ மோரிகோன் பின்ணணி இசை அமைத்திருந்தார். படத்தின் மேலான உயரத்திற்கு கொண்டு சென்றதில் இவரது இசைக்கு பெரிய பங்கிருந்தது. இருவரும் சேர்ந்து உருவாக்கய படங்கள் இன்றளவும் அதன் உயர்ந்த கலைத்தன்மைக்காக கொண்டாடப்படுகின்றன.


இந்த படத்தின் வழியே கிளிண்ட் ஈஸ்ட்வுட் அமெரிக்காவின் முக்கிய நடிகராக உருவாகினார். படம் முழுவதும் அதிக வசனம் இல்லாத இறுகிய முகத்தோற்றம் கொண்ட கதாபாத்திரம் அவர் நடித்தது. அதில் பாதி நேரம் சுருட்டை வாயில் புகைத்தபடியே இருக்க வேண்டும். ஆனால் ஈஸ்ட்வுட்டிற்கு புகைக்க தெரியாது. ஆகவே காட்சி நேரத்தின் போது ஒருவர் சுருட்டை பற்ற வைத்து இழுத்து அதை ஈஸ்ட்வுட் வாயில் பொருத்திவிடுவார். சில நிமிசங்கள் அதை உறிஞ்சுவதற்குள் ஈஸ்ட்வுட்டிற்கு மூச்சடைத்து போய்விடும். அப்படியிருந்தும் படத்தில் அவர் மிக ஸ்டைலாக புகைப்பது போல தோற்றம் தந்திருந்தார்.


இதன் தொடர்ச்சியாக லியோனி உருவாக்கிய படமே The Good, the Bad and the Ugly    இந்த படத்தின் இசை தமிழகத்தின் சிற்றூர்கள் வரை பிரபலமானது. தனித்த இசைத்தட்டாக வெளியாகி விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தில் Clint Eastwood, Lee Van Cleef, and Eli Wallach  ஆகிய மூவரும் நடித்திருந்தார்கள்.


லூசினோ வின்சினோனி இதற்கான திரைக்கதையை எழுதியிருந்தார். டோனியோ டெல் கோலி இதன் ஒளிப்பதிவாளர். கில்லாடிகளான மூன்று கௌபாய் வீரர்களையும் அவர்களுக்குள் உள்ள போட்டி சண்டைகளையும் அவர்களை பிடிக்க நினைப்பவர்களுக்கும் இடையில் உள்ள சாகசங்களையும் படம் விவரிக்கிறது. கொள்ளையர்களை பிடித்து வந்து பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் பழக்கம் அந்த காலத்தில் இருந்தது.


அது போலவே ஒரு கொள்ளையனை பிடித்து வந்து தந்தால் செரீப் அவன் தலைக்கு வைக்கப்பட்ட விலையை பரிசாக தந்துவிடுவார். இதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஈஸ்வுட்டின் சாகசம் திரையில் மிக அசாதாரணமாக சித்தரிக்கபட்டிருந்தது. அகன்ற காட்சியமைப்புகளும், துப்பாக்கி சண்டைகளும் கதாபாத்திரங்களின் உள்ளோடிய மூர்க்க மனநிலைகளும்  இன்றும் அதிரடிபட வரிசையில் முக்கிய இடத்தில் வைத்திருக்கிறது.


படத்தை உருவாக்குவதில் எண்ணிக்கையற்ற குழப்பங்கள் நடைபெற்றன. படத்தின் திரைக்கதை ஆசிரியருக்கும் லியோனிக்கும் ஏற்பட்ட சண்டையில் அவர் விலகி கொண்டு போனார். அது போலவே படத்திற்கு 1500 துணை நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதற்கு ஸ்பானிய உள்ளுர்வாசிகள் பயன்படுத்தபட்டார்கள். இவர்களுக்கான உணவு உடைகளில் பல பிரச்சனைகள் உருவானது. ஒரு நாள் அக்லியாக நடித்த எலிவாலா  சோடா என்று நினைத்து தவறுதலாக பாட்டிலில் வைக்கபட்டிருந்த திராவகத்தை குடித்துவிட்டார்.


இது போலவே தூக்கிலிடும் காட்சியில் குதிரை வேகமாக முன்னால் போய்விட கயிறு அவரை இறுக்கி செத்து பிழைத்தார் எலிவாலா. செர்ஜியோ லியோனி எவ்வளவு திறமை மிக்கவராக இருந்தாரோ அதே அளவு முன்கோபியாகவும் இருந்தார். அதனால் அவரது படப்பிடிப்பில் சச்சரவுகளும் காரணமற்ற குழப்பங்களும் தொடர்ந்து நீடித்தன. அத்தனையும் தாண்டி அவர் உருவாக்கிய படம் அமெரிக்காவில் மட்டுமில்லாது உலகம் எங்கும்  பெரிய சாதனை செய்தது.


ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களில் செர்ஜியோ செல்வாக்கு பெற்றதால் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அவர் உருவாக்கிய அடுத்த படம் Once Upon a Time in the West  . சார்லஸ் பிரான்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹார்மோனிகா என்ற கதாபாத்திரம். எப்போதும் வாயில் மவுத் ஆர்கனை வைத்து இசைத்தபடியே சண்டையிடும் சாகசகாரன்.


இந்த படத்தின் ஆரம்ப காட்சிகள் இன்று வரை திரைப்படம் பயிலுவோருக்கு பாடமாக உள்ளன.  துப்பாக்கியால் பறந்து கொண்டிருக்கும் ஈ ஒன்றை பிடித்து அமுக்கும் காட்சியும்,சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்டி தொப்பியில் நிறைவதும் யாருமில்லாத ரயில்வே ஸ்டேஷனும் புகை கக்கியபடி வந்து நிற்கும் ரயிலும் அதை தொடர்ந்து துப்பாக்கிசண்டை காட்சிகளும் திரை ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாதவை.


பழிக்கு பழிவாங்கும் எளிமையான கதை ஒன்றை தனது உருவாக்கத்தின் வழியே உலகின் நூறு சிறந்த படங்ளில் ஒன்றாக மாற்றிகாட்டினார் செர்ஜியோ .


படத்தின் துவக்கத்தில் அரிசோனா பகுதியின் யாருமற்ற ஒரு ரயில்நிலையம் ஒன்றில் மூன்று அடியாட்கள் யாருக்காகவோ காத்திருக்கிறார்கள். ரயில் வருவதற்கு நேரமிருக்கிறது. அவர்களின் காத்திருத்தல் மிக நுட்பமாக படமாக்கபட்டிருக்கிறது. முடிவில் ரயில் புகையோடு வந்து சேர்கிறது. காத்திருந்தவர்கள் தேடிப்போகிறார்கள். அவர்கள் தேடிய நபரை காணவில்லை. மற்றவர்கள் போன பின்பு நிழல் போல சார்லஸ் பிரான்சன் மவுத் ஆர்கன் ஊதியபடியே அறிமுகமாகிறார். நான்கு பேர் இருக்கிறோம். மூன்று குதிரைகள் தானே இருக்கிறது நீ நிச்சயம் உயிரோடு போகபோவதில்லை எதற்கு உனக்கு குதிரை என்று கேட்கிறான்.


அதற்கு பிரான்சன் ஒரு குதிரை எனக்கு போதும் மற்ற இரண்டும் தேவையற்றது தானே என்று கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் துப்பாக்கியை எடுத்து சுடுகிறார். காத்திருந்த அடியாட்கள் சுடப்பட்டு விழுகிறார்கள்.


இன்னொரு பக்கம் தன் மனைவி வரப்போவதை கொண்டாடும் மெக்பின் குடும்பத்தை பிராங் என்ற வில்லன் தன் ஆட்களுடன் வந்து சுட்டு கொல்கிறான். அவனது இளம் மனைவி ரயலில் வந்த பெண் இறங்கி கோச் வண்டி ஒன்றில் ஏறி ஸ்வீட் வாட்டர் என்ற பகுதியில் உள்ள மெக்பெயின் பண்ணைக்கு போகிறாள். அங்கே அவளது குடும்பமே சுட்டு கொல்லப்பட்டிருக்கிறது. அவள் கதறி அழுகிறாள். தன் கணவனை கொன்றவர்களை தேட துவங்குகிறாள். கதை துவங்கி அடுத்த நகர்விற்குள் போவதற்குள் பார்வையாளர்கள் தன்னை மறந்து காட்சியில் ஒன்றிவிடும் அளவு படமாக்கபட்டிருக்கிறது.


இதிலும் எனியோ மோரிகோனின் இசை மிக உயர்வாக அமைந்திருந்தது. குறிப்பாக மவுத் ஆர்கனை வைத்து கொண்டு அவர் நிகழ்த்தியுள்ள விந்தை மனதை மயக்க கூடியது. இந்த படத்தில் செர்ஜீயோ லியோனுடன் துணை இயக்குனராக பணியாற்றியவர் பெர்னாடோ பெர்ட்டோலூசி. இவர் பின்னாளில் லாஸ்ட் எம்பரர், லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ், போன்ற படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குனராகி ஆஸ்கார்  விருது பெற்றார்.


தனது முந்தைய படங்களின் பாணியில் இருந்து பெரிதும் மாறி இதை லியோனி உருவாக்கினார். குறிப்பாக மிக நிதானமாக நகரும் கேமிரா கோணங்கள். வைட் ஆங்கிள் எனப்படும் விரிந்த காட்சிகோணங்களை கவித்துவமான அழகோடு பயன்படுத்தியிருந்தார். அது போலவே நடிகர்களின் முகபாவங்களும் உணர்ச்சிகளும் அண்மைகாட்சிகளாக அத்தனை துல்லியமாக வெளிப்பட்டிருந்தன.


கதை சொல்லும் முறையிலும் அவர் முன்பின்னாக சென்று வரும் பாணியை கொண்டிருந்தார். ரயில்வே தண்டவாளங்களும் அதன் பின்புலமாக விரிந்து கிடக்கும் எல்லையற்ற நிலப்பரப்பும் குறியீடுகள் போலிருந்தன. தைல வண்ண ஒவியங்களில் காணப்படும் நிலக்காட்சிகள் போல காட்சிகள் படமாக்கபட்டிருந்தன. இந்தபடத்தின் பாதிப்பில் தான் ஹிந்தியில் ஷோலே உருவாக்கபட்டது.


எனியோ மோரிகோனின் ஆகச்சிறந்த படம் என்று இதை குறிப்பிட வேண்டும். குறிப்பாக பின்ணணி இசையில் எங்கே மௌனம் இடம்பெற வேண்டும். எந்த இசை கருவியை எந்த மனநிலைக்கு வாசிக்க பட வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணப்படம். ஹென்றி போண்டாவும் பிரான்சனும் போட்டியிட்டு நடித்திருந்தார்கள்.


இதன்பிறகு லியோனி சாகசப்படங்களை தயாரிக்க துவங்கினார். அதில் அவர் காட்டிய அதீத ஈடுபாட்டின் காரணமாக  படம் இயக்குவதை பல வருசங்கள் ஒத்தி வைத்திருந்தார். அதன் பிறகு Once Upon a Time in America  என்ற படத்தை 1984 ஆண்டு லியோனி இயக்கினார். ராபர்ட் டி நீரோ நடித்த இப்படம் மாபியா உலகை நுட்பமாக சித்தரித்தபடம் என்றே சொல்ல வேண்டும்.


நான்குமணி நேர அளவு ஒடக்கூடிய படம். அதை தயாரிப்பாளர்கள் பாதியாக வெட்டி அரங்கில் திரையிட்டார்கள். எதிர்பார்த்த அளவு படம் வரவேற்பு பெறவில்லை. ஆனால்  இன்று அது கொண்டாப்படுகிறது.


இந்த படத்தில் தான் உப்பு மூட்டையை கடலில் தூக்கி போட்டு கடத்தும் காட்சி வருகிறது. அதை நாயகனில் மணிரத்னம் பயன்படுத்தியிருக்கிறார். ராபர்ட் டி நீரோவின் நடிப்பும், கதை சொல்லப்பட்ட முறையும், குழலிசையோடு கலந்த வயலின் இசை துள்ளல்களும் பாதி இருளும் ஒளியும் கலந்து படமாக்கட்ட விதமும் காட்பாதருக்கு நிகராக இதை பேசவைத்தது.


லியோனி அதன்பிறகு வேறு படம் எதையும் இயக்கவில்லை. இன்றும் அண்மை காட்சிகளையும் வைட் ஆங்கிள் காட்சிகளையும் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு இவரது படங்களை மாதிரிகளாக உள்ளன. இவர் படங்களின் பின்ணணி இசை தனித்து கேட்கபட  வேண்டிய முக்கிய இசைசேமிப்புகளாகும்


இன்று செர்ஜியோ லியோனியின் படங்கள் எளிதாக டிவிடியில் கிடைக்கின்றன. ஒரு இயக்குனரும் இசையமைப்பாளரும் சேர்ந்து என்னவிதமான மாயங்களை திரையில் உருவாக்கிவிட முடியும் என்பதற்காகவே இந்த படங்களை கட்டாயம் ஒரு முறை பார்க்க வேண்டும்.


**


 


 

0Shares
0