இயற்கையின் வண்ணங்கள்

Life in Colour என்ற டேவிட் அட்டன்பரோவின் புதிய ஆவணத்தொடரைப் பார்த்தேன். இயற்கையின் வண்ணங்களை ஆராயும் இந்தத் தொடர் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது.

இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்குக் கொடையாக வழங்கியுள்ள வண்ணங்களையும் அதன் தனித்துவத்தையும் மிக அழகாக விவரிக்கிறார் அட்டன்பரோ. அவர் அளவிற்கு உலகெங்கும் சுற்றி இயற்கை வளங்களை, உயிரினங்களை, கடலை, கானகங்களைக் கண்டவரில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் அவர் இயற்கையின் வண்ணங்களைப் படமாக்கியுள்ள விதம் அபாரம். குறிப்பாக ஒரு நண்டின் பார்வையில் உலகம் எப்படித் தெரிகிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருப்பது நவீனத் தொழில்நுட்பத்தின் பெரிய சாதனை என்றே சொல்வேன்

இந்த ஆவணப்படம் இந்தியாவிலிருந்து தான் துவங்குகிறது. தோகைவிரித்தாடும் மயிலை படமாக்கியிருக்கிறார்கள். மயில் தோகையின் கண்கள் மின்னுகின்றன. எத்தனையோ முறை மயிலின் தோகை விரிப்பைப் பார்த்திருந்தாலும் இத்தனை துல்லியமாக. வண்ண ஜாலத்துடன் காண்பது பரசவமூட்டவே செய்கிறது.

பெண் மயிலை கவர்வதற்காக ஆண் மயில்,தோகையை விரிக்கும்போது அதிலுள்ள கண்கள் விரிந்து ஒளிருகின்றன. முழுவதுமாக தோகையை விரிக்கும் போது மயில் படபடப்பு ஒசையை ஏற்படுத்துகிறது. இந்த நடனத்தில் மயங்கியே பெண் மயில் துணை சேர சம்மதிக்கிறது.

உயிரினங்களுக்குப் பாதுகாப்பாகவும் துணையை வசீகரிப்பதற்காகவும் உடலின் வண்ணம் பயன்படுகிறது. தன் அடையாளத்தை நிறத்தைக் கொண்டு எப்படி உயிரினங்கள் மறைத்துக் கொள்கின்றன என்பதை அழகாக விவரிக்கிறார்.

ஒரு காட்சியில் Strawberry poison dart எனும் இரண்டு தவளைகள் சண்டையிட்டுக் கொள்கின்றன. சுண்டுவிரல் அளவிலுள்ள சிவப்பு நிற தவளை ஒன்று இன்னொரு சிவப்பு தவளையோடு மோதுகிறது. தாவித்தாவிச் சண்டையிடுகின்றன. ஒரு பக்கம் உற்சாகமாக இருந்த போதும் அதை எப்படிப் படமாக்கினார்கள் என்று வியப்பும் ஏற்படவே செய்கிறது

மனிதர்களுக்கு நிறங்கள் அழகுணர்வின் வெளிப்பாடு மட்டுமே. அதுவும் நிலப்பரப்பு பண்பாடு சார்ந்து நிறங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. சில நிறங்களை வெறுக்கிறார்கள். சில வண்ணங்களை மிகவும் நேசிக்கிறார்கள். இயற்கையில் இந்தப் பேதமில்லை. அங்கே வண்ணங்கள் உயிர்வாழ்வதற்காகக் கவசம். எதிரிகளை எச்சரிக்கை செய்யவும் தப்பித்துக் கொள்ளவும் வண்ணங்களே துணை செய்கின்றன.

இயற்கையின் அதிசயங்களை அறிந்து கொள்ள இது போன்ற ஆவணப்படங்களே பெரிதும் உதவி செய்கின்றன

இந்தத் தொடருக்காகப் புதிய கேமிராக்கள் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அது பற்றியும் ஆவணத்தொடரிலே விளக்குகிறார்கள்.

வரிக்குதிரை ஏன் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளைக் கொண்டுள்ளது என்பதற்காகப் பதிலை இந்தப் படம் விளக்குகிறது.

கடலுக்கு அடியில் கேமிராவை எடுத்துக் கொண்டு சென்று Peacock Mantis Shrimp எனும் அபூர்வ இறால் மீனைப் படமாக்கியிருக்கிறார்கள். அதன் கண்கள் விநோதமாக இருக்கின்றன. இந்த மீனின் உடலமைப்பும் அதன் வண்ணமும் வியப்பூட்டுகின்றன. உலகைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளது மிகக்குறைவு என்ற எண்ணத்தைப் படம் உருவாக்குகிறது. பெருந்தொற்று மிகுந்த காலத்தில் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் நம்பிக்கையின்மையைப் போக்குவதற்கு இந்தப் படம் பெரிய வழிகாட்டுதலாக அமைகிறது.

இயற்கையை ஆழ்ந்து அவதானிக்கும் போது உயிர்வாழ்வதற்காக அவை மேற்கொள்ளும் போராட்டங்களில் பத்துச் சதவீதம் கூட மனிதனுக்குக் கிடையாது என்பது புரிகிறது. தனக்கென ஒரு வெளியும் காலப் பகுப்பு முறைகளும் மனிதனுக்கு மட்டுமே உரியது. தனக்குத் தேவையான உணவைப் பாதுகாப்பாக மனிதன் சேகரித்து வைத்துக் கொள்கிறான். ஆனால் விலங்குகளைப் பசி தான் வழிநடத்துகிறது. வேட்டையாடப் பாயும் சிறுத்தை சப்தமில்லாமல் நடக்கிறது. அதைக் காணும் போது நிழல் ஊர்ந்து போவது போலவே இருக்கிறது. துரத்தின் போன மானைப் பிடிக்க இயலவில்லை. பசித்த கண்களுடன் திரும்பிச் செல்கிறது.

தனக்காக இணையைத் தேடிக் கொள்ளவும் வசீகரிக்கவும் விலங்குகளும் பறவைகளும் எவ்வளவு தீவிரமாக முனைகின்றன என்பதைப் படம் அழகாக விளக்குகிறது. அதிலும் வண்ணப்பறவை ஒன்று தனது இணையை வசீகரிக்கத் தன் உடலை ஒரு மலரைப் போல விரித்துக் காட்டுவதும் தன் இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் நாலைந்து பெண் பறவைகள் தன்னை தேடி வந்தபோது அதிலிருந்து ஒரு பறவையைத் தனது துணையாகத் தேர்வு செய்வதும் அபாரம்.

தன்னுடைய உணர்ச்சிகளை மனிதனைத் தவிர வேறு விலங்குகள் மறைத்துக் கொள்வதில்லை. அச்சமும் பதைபதைப்பும் சந்தோஷமும் விலங்குகளிடம் வெளிப்படும் விதம் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது 94வது வயதில் டேவிட் அட்டன்பரோ இத்தனை துடிதுடிப்பாகவும் உற்சாகமாகவும் இயங்குவதும் பயணிப்பதும் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. முதுமையை அவர் பொருட்படுத்தவேயில்லை. நூற்றாண்டினைக் கடந்த மரம் உறுதியாகிவிடுவது போலவே அவர் நடந்து கொள்கிறார். பறவைகளுடன் அத்தனை ஸ்நேகமாக இருக்கிறார். தேன்சிட்டுகள் செயற்கையாக உருவாக்கப்பட்ட சிவப்பு மலரிலிருந்து தேனை உறிஞ்சிச் செல்லும் காட்சியிருக்கிறது. அது தான் இன்றைய காலத்தின் அடையாளம்.

டேவின் அட்டன்பரோ இயற்கையைப் புரிந்து கொண்டுள்ள விதமும் அதை வெளிப்படுத்தும் அவரது மென்மையான குரலும் அபாரம். இயற்கை உலகின் ஒப்பற்ற தூதுவராகவே அவரைச் சொல்வேன்.

நாம் இதுவரை காணாத, நேரடியாக சென்று காணமுடியாத இயற்கையின் பேரதிசயங்களை நம் வீட்டிற்குள் கொண்டுவந்து காட்டுகின்றன இது போன்ற ஆவணப்படங்கள். இவற்றை நாம் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டும். வகுப்பறைகளில் திரையிட வேண்டும். இயற்கையின் பேரியக்கத்தின் முன்னால் மனிதன் சிறுதுளியே என்பதை இந்தபடம் மீண்டும் உறுதி செய்கிறது

••

0Shares
0