காளிதாசன், ஹர்ஷர், பாஷன் என்று தொடர்ந்து இரண்டு வாரங்களாகவே சமஸ்கிருதநாடங்களை வாசித்து வருகிறேன். நேற்று மத்தவிலாச பிரகசனம் என்ற நாடகத்தை வாசித்தேன் .இதை எழுதியது மாமல்லபுரச் சிற்பக்கலைக்குப் பெயர்பெற்ற மகேந்திரவர்ம பல்லவன். ஆயிரம் வருசங்களைத் தாண்டிய இந்த நாடகப்பிரதிகளை வாசிப்பது ஒரு தனித்த அனுபவம். இந்தியப் பண்பாட்டுச்சூழலில் நாடகம் எவ்வளவு முக்கியமான கலைவடிவமாக இருந்திருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் இவை.
சமஸ்கிருத நாடங்கள் இன்று அதிகம் மேடையற்றம் செய்யப்படுவதில்லை. ஆனால் புதிய மொழியாக்கங்கள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழிலும் முக்கியமான சில சமஸ்கிருத நாடகங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.
நான் மைக்கேல் லாக்வுட் மற்றும் விஷ்ணு பட் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மத்தவிலாசம் பிரதியை வாசித்தேன். கதை, கவிதைகள் என்று வாசிப்பவர்கள் கூட நாடகப்பிரதிகளை வாசிக்க விருப்பம் கொள்வதில்லை. அது நிகழ்த்துவதற்கான ஒரு பிரதி என்று மட்டுமே நினைக்கிறார்கள். நாடகம் மௌனவாசிப்பில் வேறுவிதமான அனுபவம் தரும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
மேடையேற்றப்பட்ட நாடகப்பிரதிகளை கூட வாசகர்கள் எவரும் தேடி வாசிப்பதில்லை. அதில் என்ன இருக்கிறது என்றே நினைக்கிறார்கள். நாடகப்பிரதிகளை வாசிப்பதற்கு தனித்த ஈடுபாடு வேண்டும். ஷேக்ஸ்பியரை வாசிக்கும் போது அது ஒரு நாடகப்பிரதி என்ற எண்ணமே வருவதில்லை. அது ஒரு தீவிர இலக்கியபிரதியாகவே உள்ளது. எட்வர்ட் ஆல்பி, ஐயனெஸ்கோ, யூஜின்ஒநில், ஆர்தர்மில்லர், டென்னசி வில்லியம்ஸ், செகாவ், சாமுவேல் பெக்கெட், பிரெக்ட், ஜெனே, சோபாக்ளீஸ் என நாடகங்களைத் தேடி ஒரு முறை வாசித்துப் பாருங்கள். அப்போது அதன் வலிமையும் முக்கியத்துவமும் புரியக்கூடும்.
சமஸ்கிருத நாடகங்களை வாசிப்பது ஒரு நீள்கவிதையை வாசிப்பதைப் போலவேயிருக்கிறது. உன்னதமான கவித்துவ உவமைகள், உணர்வெழுச்சிகள், இயற்கை சார்ந்த நுட்பமான மனப்பதிவுகள், கதாபாத்திரங்களின் புறச்செயல்களை விட மனஉணர்ச்சிகளை முதன்மைப்படுத்தும் பாங்கு என்று இப்போது வாசிக்கையில் முன்பு கவனிக்கத் தவறிய நுண்மைகள் புரியத்துவங்குகின்றன.
மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம். பகவத்ஜ÷கியம் ஆகிய இரண்டு நாடகங்களை எழுதியிருக்கிறார். இரண்டுமே அங்கத நாடகங்கள். இந்திய இலக்கியத்தில் ஊஹழ்ஸ்ரீங் எனப்படும் அங்கதம் தனித்த இலக்கியவகையாகவே மேலோங்கியிருந்திருக்கிறது. தமிழில் தனிப்பாடல் மரபில் அங்கதக் குரல் கொண்ட பாடல்கள் அதிகமிருக்கின்றன. உரைநடையில் பரமார்த்த குரு கதைகளைச் சொல்லலாம்.
சமகால உதாரணம் சாருநிவேதிதா. அவரது உரைநடையைப் போல வாய்விட்டு ரசிக்க செய்யும் பகடியை வேறு எவரிடமும் நான் காணமுடிந்ததில்லை. சாருவின் எழுத்தில் வெளிப்படும் கேலி அசலானது. உயர்வானது. அவர் தனது கதைகள், கட்டுரைகள் என அனைத்திலும் சமூக, அரசியல், மற்றும் இலக்கியச் சூழலைக் கேலி செய்யும் விதம் அற்புதமானது. அது வெறும் கேலியில்லை. பற்றி எரியும் கோபமே கேலியாக வெளிப்படுகிறது. அது உண்மையான ஆதங்கம். அதே நேரம் அவர் தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் கலைஞன். அதுதான் முக்கியமானது. இது போன்று தெறிக்கும் கேலியும் கிண்டலையும் பிரமீள், நகுலன் இருவரின் நேர்பேச்சிலும் நான் அறிந்திருக்கிறேன்.
மகேந்திர வர்மன் நாடகத்தைப் புரிந்து கொள்ள அன்றைய மதச்சூழலை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாடகம் ஏழாம் நூற்றாண்டின் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. நாடகத்தின் பிரதான கதாபாத்திரங்கள் ஐந்து பேர். ஒரு காபலிகத் துறவி மற்றும் அவனது காதலி, அவர்களை வீதியில் சந்திக்கும் ஒரு பௌத்த பிக்கு. அவர்களுக்கு நியாயம் சொல்ல வந்த பாசுபதத் துறவி. இடையீடும் ஒரு பைத்தியக்காரன் . நாடகம் முழுவதும் காஞ்சிபுரத்தில் மதத்தின் பெயரால் நடைபெற்ற குளறுபடிகள் கேலி செய்யப்படுகின்றன. எல்லா காலத்திலும் காஞ்சிபுரம் என்றாலே போலிசாமியார்கள் நிரம்பிய ஊராகத் தான் இருந்திருக்கிறது போலும்.
ஏழாம் நூற்றாண்டில் பௌத்தம் தன்னுடைய செல்வாக்கை இழக்கத் துவங்கியிருந்தது. பௌத்த மடாலயங்கள் வணிகர்களின் ஆதரவை நம்பி அவர்களின் ஊதுகுழல்கள் போல செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதே நேரம் சைவம் புத்துருவாக்கம் பெற ஆரம்பித்திருந்தது. மகேந்திர வர்மன் சைவத்தை ஆதரித்திருக்கிறான். சிவன் கோவில்களைக் கட்டித் தந்திருக்கிறான். இந்த மதச்சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல் கலகக்குரலிட்டவர்கள் காபலிகர்கள் மற்றும் பாசுபத பிரிவைச் சேர்ந்த ஆதிசைவர்கள். அவர்களை பகடியாக விமர்சிப்பதே நாடகத்தின் முக்கிய நோக்கம்.
மகேந்திர வர்மன் ஏன் மதச்சூழலைக் கேலி செய்கிறான்.? மதம் அரசின் செயல்பாடுகளை நிர்ணயிக்கும் அதிகாரமாக வளர்ந்திருந்தது. சமணம், பௌத்தம், சைவம் என்று மூன்று மதங்களும் தங்களது கருத்தியல் யுத்தங்களைத் தாண்டி அதிகாரத்துடன் தங்களுக்கான உறவை வலுப்படுத்தவும் மேம்படுத்திக் கொள்ள இடைவிடாத போட்டியில் இருந்தன, இதில் தனது கறாரான அறக்கோட்பாடுகள் காரணமாக சமணம் பின்தங்கியது. பௌத்தமும் சைவமும் அதிகாரப்போட்டியில் நேரடியாக சண்டையிட்டு கொண்டன.
அரசின் மதச்சார்ப்பினை ஏற்றுக் கொள்ள முடியாத பிறமதங்கள் தங்களது எதிர்ப்பை மதப்பிரச்சாரமாக உருமாற்றிக் கொண்டன. ஆகவே இன்றைய மதச்சூழலுக்கும் ஏழாம் நூற்றாண்டின் மதச்சூழலுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவ்வகையில் மத்தவிலாசம் இன்றும் முக்கியமானதாகவே உள்ளது.
கேரளாவில் சமஸ்கிருத நாடகங்கள் இன்றும் நிகழ்த்தப்படுகின்றன. மத்தவிலாசம் கூடியாட்டம் எனப்படும் கலைவடிவமாக கோவில் அரங்கில் நடத்தபடுகிறது. இதில் பெண்களும் பங்கேற்று நடிக்கிறார்கள். பெண்நடிகர்களுக்கு நங்கையர் என்றும் ஆண்களுக்கு சாக்கியார் என்றும் பெயர். பெண்களாக மட்டுமே நடத்தப்படும் கூத்திற்கு நங்கையர் கூத்து என்று பெயர். ஆண்கள் மட்டுமே நிகழ்த்துவது சாக்கியர்கூத்து. கூடியாட்டத்தில் நாடகம் முழுமையாக மேடையேற்றம் செய்யப்படுவதில்லை. நாடகத்தின் பிரதானப் பகுதியை அது தேர்வு செய்து கொள்கிறது
பாடகர்கள் எப்படி ஒரு ராகத்தை தனது கற்பனையால் விஸ்தாரமாகச் சஞ்சாரம் செய்கிறார்களோ அது போலவே நடிகர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தின் உணர்ச்சிநிலையை பல்வேறு முகபாவங்களில் நுட்பமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே இது நடிகனின் அகவெளிப்பாட்டை பிரதானமாகக் கொண்ட ஒரு கலைவடிவம்.
திருச்சூரில் மத்தவிலாசம் கூத்தைக் கண்டிருக்கிறேன். அதில் காபலிகன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தனது முகபாவங்களால் பரிகாசம், கோபம், குடிவெறி, எள்ளல், ஆதங்கம், வெறுப்பு என நிமிசத்துக்கு ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தியது ஆகச்சிறப்பாக இருந்தது. திருவனந்தபுரத்தில் காவாலம் நாராயணப் பணிக்கர் சமஸ்கிருத நாடகங்களுக்கு என்று தனியே ஒரு அரங்கை உருவாக்கி நிகழ்த்திவருகிறார். தென்னிந்திய நாடகவிழாவில் அவரது நாடகங்களைக் கண்டிருக்கிறேன். பாஷனின் நாடகங்களை அவர் புதிய உத்திகளின் மூலம் மேடையேற்றுவது சிறப்பாக அமைந்திருந்தது.
மத்தவிலாசம் நாடகம் சூத்ரதாரியின் மூலம் துவங்குகிறது. அரச சபையில் புதிய நாடகம் போட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்தி தன் மீது கோபம் கொண்டுள்ள மூத்த மனைவியை மகிழ்விக்க போதைக் களிப்பூட்டும் கேளிக்கையான ஒரு அங்கத நாடகம் போடலாம் என்கிறான் சூத்ரதாரி. அதை கேட்ட அவனது மனைவி நடீ உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று முறைக்கிறாள்
ஆனால் அவனோ, உன் நடிப்பில் மகிழ்ந்து நிறைய பாராட்டுகள் கிடைக்கும். ஆகவே அதையே நிகழ்த்துவோம் என்று அவளை உற்சாகப்படுத்துகிறான். முடிவில் அவளும் சம்மதிக்கிறாள். மன்னர் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாசம் என்ற நாடகத்தை தான் நிகழ்த்த உள்ளதாகச் சொல்லி துவக்குகிறான் சூத்ரதாரி.
நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒரு காபலிகன். அவனது பெயர் சத்தியசோமன். காபலிகர்கள் கையில் கபாலம் ஏந்தி வீதி வீதியாகப் பிட்சை வாங்கியுண்டு, மயானத்தில் வாழ்பவர்கள். பிட்சாடனக் கோலம் கொண்ட ருத்ரனின் வாரிசுகள். நாடகத்தில் வரும் காபலிகன் மது, மாமிசம், மாது இந்த மூன்றுமே முக்திக்கு வழிகாட்டுபவை என்கிறான். நாடகம் துவங்கும் போது காபலிகனும் அவனது காதலி தேவசோமாவும் மிதமிஞ்சிக் குடித்துவிட்டு போதைக் களிப்போடு ஆடியபடியே மேடையில் நுழைகிறார்கள்.
பெண்கள் போதையேற்றிக் கொண்டப் பிறகு புதிய அழகு பெற்றுவிடுகிறார்கள் என்று பாராட்டுகிறான் சத்தியசோமன். அப்போது அவள் பெயரைத் தவறாக மாற்றிச் சொல்லிவிடுகிறான். உடனே தேவசோமா அது எந்தப் பெண் என்று சந்தேகப்படுகிறாள். காபலிகன் அது போதையில் ஏற்பட்ட நாக்குளறல். இதுபோல வம்புகள் உருவாகின்ற காரணத்தால் நான் இனிமேல் குடிக்கவே மாட்டேன் என்கிறான்.
அதை கேட்ட தேவசோமா இதற்காகப் போய் இன்பம் தரும் குடியை விட்டுவிடாதே இது உன்னுடைய தவம் என்று மறுக்கிறாள். இருவரும் போதை ஏறவில்லை என்று இன்னொரு மதுக்கடையைத் தேடிப்போகிறார்கள். காஞ்சிபுரம் நகரமே ஒரு காடியேறிய மதுவைப் போல தித்திப்பாக இருக்கிறது என்கிறான் துறவி. இன்னொரு மதுக்கூடத்தினுள் நுழைகிறார்கள் அங்கே மதுவை வாங்கிக் கொள்ள முயற்சிக்கும் போது சத்தியசோமன் தன் கையில் இருந்த பிட்சைபாத்திரமான கபாலம் களவு போயிருப்பதை அறிந்து கூச்சலிடுகிறான் .
இப்போது எங்கே போய் கபாலத்தை தேடுவாய், மாட்டுக் கொம்பில் மதுவை வாங்கி குடி என்று அவனை சமாதானப்படுத்துகிறாள் காதலி. அவனோ தனது திருட்டுப் போன கபாலவோட்டினை உடனே தேட வேண்டும். இல்லாவிட்டால் தனது துறவித்தன்மை கெட்டுவிடும் என்று கத்துகிறான். நகரம் முழுவதும் அதைத் தேடியலையும் இருவரும் முன்பு தாங்கள் குடித்த இடத்திற்கே மறுபடி போகிறார்கள். தனது கபாலபாத்திரத்தில் கொஞ்சம் கறி மீதமிருந்தது. ஆகவே அதை ஒரு நாயோ அல்லது புத்த துறவியோ தான் திருடியிருக்க வேண்டும் என்கிறான் சத்தியசோமன்
அந்த நேரம் வீதியில் ஒரு பௌத்தபிக்கு வணிகன் வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு அந்த சுகபோகத்தைப் புகழ்ந்தபடியே திரும்பி வருகிறான். ஒளிந்து ஒளிந்து அவன் வருவதைக் கண்டதும் தனது கபாலத்தைத் திருடியவன் அவனே என்று கூச்சலிடுகிறான் சத்தியசோமன். வீதியில் இருவருக்கும் சண்டை நடக்கிறது.
இதற்கிடையில் பௌத்த பிக்கு காபலிகனின் காதலியை ஒரக்கண்களால ரசித்தபடியே பொய்யாக பயந்தவன் போல சண்டையிடுகிறான். அவர்களது வாதத்தின் வழியே பௌத்தம் மிகவும் பரிகசிக்கபடுகிறது. தங்களது அறக்கருத்துகளைப் பௌத்தம் திருடிக் கொண்டுவிட்டது என்கிறான் சைவன். அவனது கபாலபாத்திரத்தை தான் திருடவில்லை என்று பௌத்த துறவி மறுத்தவுடன் கோபத்தில் உன் மண்டையை உடைத்து அதையே தனது கபாலமாக எடுத்துக் கொள்ள போவதாக பிக்குவின் முடியை பிடிக்கத் துள்ளுகிறான் சத்தியசோமன்
உன்னைப் போன்ற மூடர்களிடம் நாங்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே எங்கள் தலையை புத்தர் மொட்டையடிக்க சொல்லியிருக்கிறார். உன்னால் முடிந்தால் செய்து பார் என்கிறான் பிக்கு. இவர்கள் சண்டைக்கு நியாயம் சொல்ல வருகிறான் ஒரு பாசுபதன். அவன் நடந்ததைப் பற்றி விசாரிக்கிறான்
வழக்காடு மன்றம் சென்றாலும் பௌத்தர்கள் தங்களுக்கு அரசாங்கத்திலுள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களை ஏமாற்றிவிடுவார்கள் என்று குறை சொல்கிறாள் தேவசோமா. அப்போது ஒரு பைத்தியக்காரன் கபால ஒட்டினை கவ்விக் கொண்டு ஒடும் ஒரு நாயைத் துரத்தபடியே வருகிறான். அவன் நாயிடமிருந்து கபாலத்தைப் பறிக்கிறான்.
அது தன்னுடைய கபால ஒடு என்பதைப் புரிந்து கொண்ட கபாலிகன் பைத்தியக்காரனிடமிருந்து அதை பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கிறான். முடிவில் பைத்தியக்காரன் அதை ஒரு தங்கக்கிண்ணம் என்று சொல்லி காபாலிகனுக்கே பரிசாகத் தந்துவிடுகிறான். உங்களைச் சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள் என்று பௌத்த துறவியிடம் மன்னிப்பு கேட்கிறான் கபாலி. அதற்கு பிக்கு உன்னை சந்தோஷப்படுத்த முடிந்ததற்கு நன்றி என்று பெருந்தன்மையுடன் சொல்கிறான். அவரிடமிருந்து விடைபெற்று சத்தியசோமன் தன் காதலியோடு வெளியேறிச் செல்வதோடு நாடகம் நிறைவு பெறுகிறது
நாய் தூக்கிப்போன ஒரு கபால ஒட்டினை முன்வைத்து பிக்குவும் சமணத்துறவியும், காபலிகர்களும் கேலி செய்யப்படுகிறார்கள். மூவருமே மதத்தின் பெயரால் பிறரை ஏமாற்றுகிறவர்களாக சித்தரிக்கபடுகிறார்கள்.
பசுவின் கொம்பில் மதுவாங்கிக் குடிப்பது, கபாலத்தில் இறைச்சி உண்பது. பெண்கள் மதுகுடித்து ஆடுவது. பௌத்த பிக்குகள் வணிகர்களின் விருந்தில் கலந்து கொண்டு உல்லாசமாக வாழ்வது, சமணர்களைக் கேலிசெய்வது, என ஏழுôம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் சமூகவாழ்வு துல்லியமாக நாடகத்தில் பதிவாகி உள்ளது. இந்த நாடகம் அரசசபையில் நிகழ்த்தபட்டிருக்கிறது. ஆகவே இதன் பார்வையாளர்களாக இருந்தவர்கள் அரசை சார்ந்தவர்களாகவே இருந்திருக்க கூடும். பொதுமக்கள் இந்த சமஸ்கிருத நாடகத்தை கண்டார்களா? அது எங்கே நிகழ்த்தப்பட்டது. அவர்கள் என்ன எதிர்வினை செய்தார்கள் என்ற விபரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு நாயோ அல்லது பௌத்தபிக்குவோ தான் கறிக்கு ஆசைப்பட்டு தன்னுடைய கபால ஒட்டினை திருடியிருக்க வேண்டும் என்று சத்தியசோமன் சொல்வது பௌத்தர்களின் நிலையை விமர்சிக்கும் அரசின் குரலாகும். அது வெறும்கேலியில்லை. மாறாக பௌத்தர்கள் மீதான தீராத வெறுப்பு .
அதே வேளையில் வணிகனின் விருந்தை ரசித்து பாராட்டும் பிக்கு புத்தர் ஏன் மது மாது இரண்டையும் தனது சங்கத்தில் அனுமதிக்கவில்லை. இது நிச்சயம் கையாலாகாத மூத்த துறவிகள் செய்த ஏற்பாடாகத் தான் இருக்க கூடும். மூலபாடத்தைத் தேடிப் பார்க்க வேண்டும். நிச்சயம் இதை புத்தர் தடுத்திருக்க மாட்டார் என்று ஆதங்கப்படுகிறான். அவன் மனது ஞானத்தை விடவும் போகத்திற்காக ஏங்கித் தவிக்கிறது. ஆகவே பௌத்தம் குறித்த தனது தீவிரமான எதிர்ப்புமனநிலையை மகேந்திர வர்மன் நாடகமெங்கும் பிரதிபலிக்கிறான்.
இதை நேரடியான ஒரு விமர்சனமாக பௌத்தர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே காபலிகன் குடித்துவிட்டு இவற்றைப் பேசுவதாகவும். யாவும் போதையேறியவனின் எண்ணங்கள் என்றும் ஒரு மூடுதிரை உருவாக்கப்படுகிறது.
போதையில் கைப்பொருளை மறப்பதும், தெருச்சண்டையிடுவதும், தனது பொருளை யாரோ திருடிவிட்டார்கள் என்று அப்பாவியை வம்பிற்கிழுப்பதும், குடிப்பதற்காக இடம் தேடி அலைவதும், குடிக்கையில் கூட பெண்களுடன் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று சலித்துக் கொள்வதும் என குடிச்சண்டைகள் ஆயிரம் வருசத்தின் முன்பிருந்து இன்றுவரை ஒரு நீண்ட ஒரு மரபாகவே நடைபெற்றுவருகின்றன போலும். இந்த நாடகத்தின் காட்சிகளை வாசிக்கையில் பல டாஸ்மார்க் காட்சிகள், மதுக்கடை சண்டைகள் நினைவிற்கு வந்து போகின்றன.
மத்தவிலாசத்தை விடவும் பகவத்ஜீகியம் மேம்பட்டது. அதன் கேலியும் கவித்துவமும் மிகுந்த உச்சநிலையில் இயங்குகிறது. அதைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவு எழுதுகிறேன்
இந்த நாடகங்களை எழுதியது மகேந்திரவர்மன் தானா அல்லது மன்னரின் பெயரால் எழுதப்பட்டால் மட்டுமே இது போன்ற வெளிப்படையான மதச்சர்ச்சை கொண்ட அங்கத நாடகம் எதிர்ப்பின்றி நிகழ்த்தப்படக்கூடும் என்ற ஏற்பாடா எனத் தெரியவில்லை.
மத்தவிலாசத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப நவீனமான தளத்தில் மேடைற்றம் செய்து நிகழ்த்தினால் மிகப் பொருத்தமானதாக இருக்ககூடும். யாராவது முன்வந்தால் நானே அதன்நவீனப் பிரதியை எழுதித் தர முடியும்.
**