புதிய சிறுகதை. ஆகஸ்ட் 18. 2026
அந்த மனிதன் வருத்தமான முகத்துடன் சாலையோரம் கிடந்த கல்லில் அமர்ந்திருந்தான்.

ஐம்பது வயதிருக்கும். சீரற்ற தாடி. வருத்தம் படிந்த கண்கள். தலைமுடியை சீவியிருக்கவில்லை. அழுக்கடைந்து போன பேண்ட். பொத்தான்கள் சரியாகப் போடப்படாத கோடு போட்ட சட்டை. கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருப்பதைப் பார்த்தால் மீளமுடியாத கவலை கொண்டவனைப் போலிருந்தது.
அந்த மனிதன் அமர்ந்திருந்த சாலை வழியாகவே குமரேசன் தினமும் ஆபீஸ் போக வேண்டும். ஆகவே ஒரு வாரமாக அந்த ஆளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்
எதற்காக ஒருவன் இப்படிக் காலையிலே கல்லில் வந்து அமர்ந்து கொள்கிறான். வேலையற்றவனா, அல்லது நோயாளியா, அவனது வீடு அருகில் இருக்கிறதா. இல்லை. ஊருக்குப் புதிதாக வந்துள்ள வடமாநில தொழிலாளியா.
ஒரு சோகமான முகத்தைக் காலையில் காணும் போது அந்த வருத்தம் தன்னையும் தொற்றிக் கொள்வதாக குமரேசன் உணர்ந்தான்.
யார் தான் வருத்தமில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் எவரும் இப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லையே.
ஒருவேளை தன்னைக் கடந்து செல்பவர்கள் அத்தனை பேரும் தனது மனவேதனையைக் கண்டு செல்ல வேண்டும் என அவன் விரும்புகிறானோ என்னவோ, அஞ்சலி சுவரொட்டிகள் தரும் இனம் புரியாத வலியை போன்ற ஒன்றையே அவனும் ஏற்படுத்துகிறான்.
அவன் கல்லில் அமர்ந்திருந்த போதும் அவனது கண்கள் சாலையின் ஒரு புள்ளியை வெறித்துப் பார்த்தபடியிருந்தன. விமான நிலையம் செல்ல அந்தச் சாலையின் வழியாகவே போக வேண்டும். ஆகவே அச்சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கியது.
அதுவும் அந்த ஆள் அமர்ந்திருந்த கல்லிற்கு அருகில் டிரான்ஸ்பார்மரை அடுத்து முன்பு ஒரு தள்ளுவண்டிக்கடை இருந்தது. கூட்டமாக ஆட்கள் கையில் தட்டுடன் நின்று சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறான்
ஒருவேளை அந்தத் தள்ளுவண்டிக்காரன் இவன் தானா. கடையை எடுத்துவிட்டதால் தான் இப்படிச் சாலையை வெறித்தபடி அமர்ந்திருக்கிறானா. என்ன பிரச்சனையாக இருக்கும். யார் மிரட்டி கடையைக் காலி செய்ய வைத்திருப்பார்கள்.
அடுத்தவர் துயரத்தைப் பற்றிக் கற்பனை செய்வது எளிதானது. முடிவிற்கு வருவதும் எளிதானது.ஆனால் சொந்த வேதனைகளின் வேர்களை அறிவது கடினம். அதனை வெளிப்படையாகப் பேசவும் முடியாது.
குமரேசன் அந்தச் சிக்னலுக்கு வரும் போது சோக மனிதனைக் காணக்கூடாது என்று நினைத்தபடி காரை ஒட்டிவருவான். வேறு எதையாவது பார்த்தபடி கடந்து போய்விட வேண்டும் என்றும் நினைப்பான். ஆனால் சிக்னலில் கார் திரும்பியவுடன் அந்த முகம் கண்ணில் பட்டுவிடும்.
வேண்டாம் என்று நினைப்பதை தான் மனது முதலில் பார்க்க விரும்புகிறது. ஒரு நிமிஷத்திற்குள் அவனைக் கடந்துவிட்ட போதும் வேதனை தோய்ந்த முகம். கைகளைக் கோர்த்துக் கொண்டு தனக்குத் தானே பிரார்த்தனை செய்வது போன்ற அவனது நிலை. மனதைச் சங்கடப்படுத்தும்
மாநகரிடம் இவ்வளவு தான் ஒரு மனிதனால் வெளிப்படுத்த முடியும் போலும். இப்படி ஒருவன் கிராமத்தின் வீதியில் வருத்தமாக அமர்ந்திருக்க முடியாது. யாராவது அவனிடம் காரணம் விசாரிப்பார்கள். எதையாவது பேசி ஆறுதல் படுத்த முனைவார்கள். கிராமம் என்பதே அறிந்தவர்கள் அதிகம் வாழும் இடம் தானே.
நகரம் அறியாதவர்கள் அதிகம் வாழுமிடம். புதிது புதிதாக மனிதர்கள் மாநகருக்கு வந்தபடியே இருக்கிறார்கள். அதுவும் வடமாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக ரயிலில் வந்து இறங்குகிறார்கள். பசி தான் அவர்களை இயக்குகிறது. கிடைத்த வேலைகளைச் செய்கிறார்கள். மொழி தெரியாமல் திட்டு வாங்குகிறார்கள். நகருக்கு ஆயிரம் வாசல்கள் இருக்கின்றன. அத்தனையும் திறந்தேயிருக்கின்றன. குளத்து தண்ணீரின் மீது பெய்யும் மழையைப் போலப் புதியவர்களின் வருகையை நகரம் இயல்பாக ஏற்றுக் கொள்கிறது. அரவணைத்துக் கொள்கிறது.
சொந்த ஊரால் கைவிடப்பட்ட ஒருவன் தான் இப்படிச் சாலையோரக் கல்லில் அமர்ந்திருக்கிறானா. எவர் கல்லில் அமர்ந்தாலும் அவர்கள் கல்லின் திண்மையை, உறுதியை அடைந்துவிடுகிறார்கள்.
சாலையோர மனிதனைப் போலவே அந்தக் கல் எப்படி அங்கே வந்தது என்பதும் குமரேசனுக்குப் புதிராக இருந்தது. உடைந்த பாறை துண்டு போலிருந்த அந்தக் கல்லை ஏன் சாலையோரம் போட்டு வைத்திருக்கிறார்கள். எங்கேயிருந்த பாறையது. சில நேரம் கல்லின் துயரம் தான் அந்த மனிதனின் வேதனையாக மாறிவிட்டதோ என்று கூடக் குமரேசனுக்குத் தோன்றும்
எளிய காட்சிகள் தான் ஒருவனை அதிகம் தொந்தரவு செய்கின்றன. பிரம்மாண்டங்களை வியந்து கடந்து போய்விட முடிகிறது. ஆனால் எளிய நிகழ்வுகள். எளிய மனிதர்கள். எளிய செயல்களின் பின்னால் உண்மை ஒளிந்திருக்கிறது. அது தான் நம்மை ஈர்க்கிறது.

ஒரு சிலையைக் கடந்து போவதை போல ஏன் இந்தக் கவலையுற்ற மனிதனை எளிதாகக் கடந்து போய்விட முடியவில்லை. தனக்குத் தொடர்பில்லாதவர்களின் துயரை ஏன் கவனிக்கிறோம். பொருட்படுத்துகிறோம். அனுபவிக்கிறோம். தண்ணீர் துளி எதன்மீது படும் போதும் தனது ஈரத்தை இழப்பதில்லையே. அப்படித் தான் தானும் நடந்து கொள்கிறேனா
நகரம் அவ்வளவு கருணையானதில்லை. அது உருட்டி விளையாடும் மனிதர்களில் பலர் அடையாளமற்றுப் போகிறார்கள். மீளாத வேதனையை அடைகிறார்கள். பயன்படுத்தி எறிந்த காலி பேப்பர் கப் போலத் தன்னை உணருகிறார்கள். நகரின் கடைவாயில் சிக்கிக் கொண்ட உணவுத்துகளைப் போலச் சிலர் வாழுகிறார்கள்.
ஏதாவது நடந்து அந்த மனிதன் சாலையை விட்டு அகன்று போய்விடக் கூடாதா எனக் குமரேசன் ஏங்கினான்.
தினமும் தனது அலுவலகத்தினுள் காரை நிறுத்திவிட்டு படியேறும் போது அந்த மனிதனை பற்றி நினைக்கக் கூடாது என்று முடிவு செய்து கொள்வான். வேலைச்சுமையில் அவனை மறந்தும் விடுவான். ஆனால் தேநீர் அருந்தும் போதும் சாப்பிடப் போகும் போதும் அந்த மனிதனை நினைக்காமல் இருக்க முடியாது.
அன்றாடம் பார்க்கும் மனிதனிடம் ஏன் நேரில் போய் ஒரு வார்த்தை பேச தோன்றவில்லை என்று நினைத்த ஒரு நாளின் மதியம் குமரேசன் அவனைத் தேடிச் சென்றான்.
வழியில் அவனிடம் என்ன பேச வேண்டும் என மனதிற்குள் ஒத்திகை பார்த்தபடியே சென்றான். அருகில் சென்றதும் அந்தச் சோக முகம், கரைந்த மெழுகைப் போல அமர்ந்திருந்த கோலம் எதையும் பேச விடாமல் செய்தது. தயக்கத்துடன் அந்த ஆளிடம் பேசினான்.
“ஒரு வாரமா உங்களை பார்க்குறேன். உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா “
அந்த மனிதன் பதில் அளிக்கவில்லை.
தன்னைத் தேடி ஒருவன் வந்து பேசுவதைக் கூட விரும்பாதவன் போல அவன் சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னை அவன் பொருட்படுத்தாதது சற்றே கோபத்தை உருவாக்கிய போதும் அதனைக் காட்டிக் கொள்ளாமல் குமரேசன் கேட்டான்
“ஏன் இப்படி வருத்தமா இருக்கீங்க. “
முறிந்த கிளை ஒன்று மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது அந்த மனிதனின் மௌனம்.
மெஸ்ஸிற்குப் போய்ச் சாப்பிட அமர்ந்த போது குமரேசன் எதற்காக அந்த மனிதனுக்கு உதவி செய்ய முன்வந்தோம் என யோசித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை நாமும் ஒரு நாள் இப்படி ஆகிவிடுவோம் என்ற பயமா. இல்லை, அவனை விடத் தான் உயர்ந்தவன் என்ற நினைப்பா
அந்த மனிதன் எந்த உதவியும் கேட்கவில்லையே. பின்பு எதற்காக அவனிடம் வலிய போய்ப் பேசினோம். அவனது உறைந்த சோகம் தான் இப்படி நம்மை நடத்துகிறதா.
குமரேசனுடன் வேலை செய்யும் கேஷியர் செந்தில்வேல் மெஸ்ஸில் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் குமரேசன் கேட்டான்
“ரோட்ல ஒரு ஆள் கல்ல உட்கார்ந்துகிட்டு இருப்பார். பாத்திருக்கியா“
“எங்கே“
“சிக்னல் ரைட் சைட்“
“கவனிச்சதில்லை“
“ஐம்பது வயசிருக்கும். ரொம்ப சோகமா இருப்பார்“
“சோகமா இருக்கிற யாரும் என் கண்ணில படமாட்டாங்க. அவங்களை எனக்குப் பிடிக்காது“ எனச் செந்தில்வேல் சிரித்தான்
“நிஜமாவே பார்த்ததில்லையா“
“ரோட்ல போற பொண்ணுகளைத் தவிர வேற யாரையும் கவனிக்க மாட்டேன்.. நாம எதுக்கு எதையும் பாக்கணும் சொல்லுங்க. “
“நான் அந்த ஆளை டெய்லி பாத்துட்டு வர்றேன். இன்னைக்கு அவன் கிட்ட பேசினேன். ஒரு வார்த்தை பதில் பேசலை. “
“உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை. ரோட்ல உட்கார்ந்துகிட்டு இருக்கான்னா, ஒண்ணு லூசா இருக்கணும் இல்லை. டோப் அடிச்சிட்டு கிக்குல இருக்கணும்“
“இந்த ஆள் அப்படியில்லை. பாக்க ரொம்பப் பாவமா இருக்கு“
“பாவம் பாத்தா.. நம்ம காசை பிடுங்கிட்டுவிட்டுருவாங்க சார்.. இப்படி எத்தனையோ நடந்திருக்கு“
“அவர் காசு கேட்கலை“
“அப்போ நிச்சயம் கிரிமினலா தான் இருக்கணும். யாரையாவது பாலோ பண்ணக்கூட இப்படி உட்கார்ந்து இருப்பாங்க. “
“அப்படி தெரியலை“
“சிட்டில யாரையும் ஆளை பாத்து எப்படினு கண்டுபிடிச்சிர முடியாது. “.
“அவரை பார்க்க எனக்கு சங்கடமா இருக்கு“
“ஏன் சார் இப்படி ஏமாளியா இருக்கீங்க.. அந்த ஆள் உங்களுக்கு யாரையோ ஞாபகபடுத்துறானு நினைக்குறேன். அதான் பரிதாபப்படுறீங்க“
“இருக்கலாம். சிலரை பார்க்கும் போது நம்மை அறியாம அவங்க மேல ஒரு ஈர்ப்பு வந்திருதுல்லே“
“இன்னும் உங்களுக்கு இந்தச் சிட்டி லைப் புரியலை.. தினம் இப்படி ஆயிரம் பேர் ஆயிரம் பிரச்சனையோட ரோட்ல கண்ல படுவாங்க. அவங்களுக்கு நாம பரிதாபபட்டா.. நாளைக்கு நாமளும் ரோட்ல தான் நிக்கணும் பாத்துக்கோங்க“
குமரேசன் தலையாட்டிக் கொண்டான். செந்தில்வேல் சொல்வது உண்மை தான். ஆனால் தன்னால் அப்படியிருக்க முடியாது. இயலாது.
சாப்பிட்டுவிட்டு தனது அலுவலகத்திற்குத் திரும்பி போகும் போது குமரேசன் அந்த மனிதனை மௌனமாகக் கடந்து போனான். சாலையை விட்டு அகலாத அந்த மனிதனின் பார்வை நிலைகுத்தியிருந்தது. மனிதர்களால் இப்படித் திடீரென உறைந்துவிட முடியும் என்பது அதிர்ச்சி அளித்தது.

வீட்டிற்குள் இதே போல ஒரு மனிதன் நாள் கணக்கில் சோகத்துடன் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தால் உலகம் அவனைக் கண்டுகொள்ளாது. அதே மனிதன் சாலையில் பிறர் கண் பட அமர்ந்திருப்பது தான் பிரச்சனை. சாலைக்கு ஆயிரம் கண்கள் உண்டு. என நினைத்தபடியே குமரேசன் தனது இருக்கைக்குத் திரும்பி தான் ஒரு சுவரிடம் பேசித் திரும்பியதைப் போல உணர்ந்தான்.
சுழலும் நாற்காலியில் சுழன்றபடியே உதவியை ஏற்க மறுப்பவர்களின் பிடிவாதம் பற்றி குமரேசன் யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனே அப்படிச் சில முறை உதவிகளை மறுத்திருக்கிறான். பிடிவாதம் மனிதர்களை உச்சதிற்கும் கொண்டு சென்றிருக்கிறது. பெரும் வீழ்ச்சியை அடையவும் செய்திருக்கிறது. இல்லாதவர்களின் பிடிவாதம் விளக்க முடியாதது. கைகளை இறுக்கமாக மூடிக் கொள்பவர்களைப் போல மனதை மூடிக் கொள்ளும் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் பிடிவாதத்தைத் தளர்த்த முடியாது.
குமரேசன் அன்றிரவு வீடு திரும்பி சாலைமனிதனைப் பற்றித் தனது மனைவியிடம் சொன்னான்.
“உங்களுக்கு எதுக்கு இந்த வீண்வேலை“ என்று தான் அவளும் சொன்னாள்
“எனக்கே தெரியலை. ஆனா அந்த ஆளைப் பார்த்தா மனசு கஷ்டமா இருக்கு“
“கூட இருக்கவங்க கஷ்டம் தெரியாது. ஊர்க்காரன் கஷ்டம் தெரிஞ்சிருதாக்கும்“ எனக் கோவித்துக் கொண்டாள்
சிலரது கஷ்டம் அவர்கள் சொல்லாமலே தெரிந்துவிடுகிறது. உணர முடிகிறது. தனது வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் செல்லும் சாலையில் எத்தனையோ மனிதர்கள். நிகழ்வுகள். உராய்வுகள். தற்செயல்கள் தோன்றி மறைகிறதே. அதில் எதுவும் தன்னை ஈர்க்கவில்லையே.
ஒரு மனிதன் வெறுமனே சாலையைப் பார்த்தபடி இருப்பது மட்டும் ஏன் தன்னைத் தொந்தரவு செய்கிறது.
திடீரென மனிதர்கள் தனக்கென யாருமில்லை என்பது போல உணரத் துவங்கி விடுகிறார்கள். அப்படி உணரத் துவங்கிய பின்பு அவர்களுக்கு உலகம் மிகச்சிறியதாகிவிடுகிறது. உறவுகளும் கூட அந்நியமாகத் தோன்றுகின்றன. நேற்றுவரை களிப்பூட்டிய எதுவும் இன்று களிப்பூட்டுவதில்லை. அசைவற்ற பொருட்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிடுகிறார்கள்.
அந்த மனிதனும் அப்படியே ஆகியிருந்தான்
சாலையில் கவலையாக அமர்ந்திருப்பவனைக் கடந்து செல்லும் பள்ளிச்சிறுவர்கள் எவரும் அவனையோ. அவனது கவலையினையோ பொருட்படுத்தவில்லை. ஒரு பள்ளிச்சிறுவன் தனது கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை காற்றில் உயர்த்தி ஆட்டியபடி நடக்கும் போது எதிரேயிருந்த மனிதனின் கவலைகளையும் கிரிக்கெட் மட்டையால் அடித்து விளையாடி போவதைப் போலிருந்தது.
அந்த நிகழ்வின் போது கவலையுற்ற மனிதனின் முகம் மாறியது. அவன் சிறுவர்களிடம் எதையோ சொல்ல முயன்றவன் போல முகத்தைத் திருப்பினான். ஆனால் பேசவில்லை. தனக்குத் தானே விளையாட தெரிந்தவர்களுக்குக் கவலையிருக்காது என்பதைப் போலிருந்தன மாணவர்களின் நடத்தை. அவர்கள் சாலையைக் கடந்து போவதை அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு உலர்ந்த தனது உதட்டை எச்சில்படுத்திக் கொண்டபடி சாலையை வெறிக்கத் துவங்கினான்
அன்றைய பிற்பகலில் பைக்கில் வந்த ஒரு போலீஸ்காரன் தனது பைக்கை ஒரமாக நிறுத்திவிட்டு இறங்கி அந்த மனிதனை நோக்கி வந்தான்
“யார்டா நீ…. எதுக்காக.. இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கே. “ எனக்கேட்டான்
அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.
“உன்னை தான்டா.. கேட்குறேன்.. ஒரு வாரமா இதே இடத்துல உட்கார்ந்து இருக்கேனு கம்ப்ளெயிண்ட் வந்துருக்கு…. எதுக்கு உட்கார்ந்திருக்கே “
அந்த மனிதன் பதில் சொல்லவில்லை
“தமிழ் தெரியாதா.. இந்திக்காரனா“
அந்த மனிதன் லேசாக தலையைத் திருப்பினான்
“கேட்குறது புரியலையா.. எந்திரிடா நாயே.. “
அவன் எழுந்து கொள்ளவில்லை
போலீஸ்காரன் கல்லில் அமர்ந்திருந்தவனின் தலைமயிரைப் பிடித்து உலுக்கியபடி சொன்னான்
“ஸ்டேஷனுக்கு நட“
அந்த மனிதன் மெல்லிய குரலில் சொன்னான்
“நான் ஒண்ணும் தப்பு பண்ணலே… போயிடுவேன்“
“போறது இருக்கட்டும். யார் எவருனு விவரம் சொல்லு. ஐடி கார்ட் வச்சிருக்கியா“
அந்த மனிதன் கலங்கிய குரலில் சொன்னான்
“என் மக அங்கே இருக்கா… “
“உன் மகளா.. எங்கே “
அவன் விரல் நீட்டிய இடத்தில் யாருமில்லை.
“யாரையும் காணோம்“ எனப் போலீஸ்காரன் திகைப்புடன் கேட்டான்
“என்னைப் பாத்துகிட்டே இருக்கா. “
“போன வாரம் இந்த இடத்துல ஒரு பொண்ணு ஆக்சிடெண்ட்ல செத்துபோச்சே. நீ அதோட அப்பனா “
கலங்கிய கண்களுடன் லேசாகத் தலையசைத்தான்
“ சிவப்பு ஸ்கூட்டில வந்த பொண்ணு.. வெடவெடனு இருந்தா. “
“என் வனஜா.. பதினெட்டு வயசு முடியலை.. “
“அன்னைக்கு இந்தச் சிக்னல் சரியா வேலை செய்யலை.. தப்பு உன் பொண்ணு மேல இல்லை. கார்க்காரன் அடிச்சி தூக்கிட்டான். அந்தப் பொண்ணு டிபன் பாக்ஸ்ல இருந்து கொட்டின தயிர்சாதம் இங்கே தான் சிதறிகிடந்தது. அதைச் சுத்தி பிசுபிசுனு அவளோட ரத்தம்.. என் கண்ணுலயே இருக்கு.. “
“என் பொண்ணு போயிட்டா“.. என அந்த மனிதன் உடைந்த குரலில் சொன்னான்.
போலீஸ்காரனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சட்டென அவன் சாலையில் அமர்ந்தான். கல்லில் இருந்தவனின் கைகளைப் பற்றிக் கொண்டபடியே சொன்னான்
“நடந்து போச்சி.. இனிமே என்ன செய்ய முடியும் சொல்லு “
“நான் என்ன தப்பு பண்ணினேன்“ எனக்கேட்டான் கல்லில் இருந்தவன்
அதற்குப் போலீஸ்காரனிடம் பதில் இல்லை. மௌனமாக அவனும் சாலையை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான். பின்பு எச்சிலை விழுங்கிவிட்டுச் சொன்னான்
“செத்துப் போன பொண்ணை நினைச்சிகிட்டே இருந்தா எப்படி…. நீயும் வாழணும் இல்ல“ .
இப்போது அவனது பேச்சில் வாஞ்சையிருந்தது
“எதுக்கு வாழணும்“
“இப்படி சொன்னா எப்படி.. என் கூட வா.. டீ சாப்பிடுவோம். நானே உன்ன வீட்ல கொண்டு போய் விடுறேன்“
“வேணாம்“
“அப்படி சொல்லக்கூடாது.. வா “
“வேணாம் “.
“அப்போ நான் போய் உனக்கு டீ வாங்கிட்டு வர்றேன். டீ குடிச்சிட்டு நாம கிளம்புவோம்“
அந்த மனிதன் பதில் சொல்லவில்லை. சாலையில் வாகன நெருக்கடி அதிகமாகயிருந்தது. போலீஸ்காரன் சாலையைக் கடந்து டீக்கடையை நோக்கிச் சென்றான். பின்பு ஒரு கிளாஸில் டீயை வாங்கிக் கொண்டு நடந்து வந்த போது கல்லில் அமர்ந்தவன் அதனை ஏற்க மறுத்தான்
உரிமையோடு வற்புறுத்தி அவனைத் தேநீர் குடிக்க வைத்தான் போலீஸ்காரன். பின்பு தனது பைக்கில் அவனை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
அடுத்த நாள் காலை குமரேசன் சிக்னலில் காத்திருந்த போது எதிரேயிருந்த கல்லை மட்டும் பார்த்தான். அந்த ஆளைக் காணவில்லை. ஏதோ நடந்திருக்கிறது. ஒரு மனிதன் எதற்காக அமர்ந்திருந்தான், எப்படி வெளியேறிப் போனான் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் மனதில் சற்று நிம்மதி உருவானது.
நினைவாக இருக்கட்டும் எனத் தனது செல்போனில் அந்தக் கல்லை மட்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டான்
••