துக்கலின் கதைகள்

பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல், (Kartar Singh Duggal ) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இவர், இந்தியப்பிரிவினை குறித்து முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார்,  சிறந்த நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர்

பாலுறவையும் விலக்கிவைக்கபட்ட இச்சைகளையும் பற்றிப் பகிரங்கமாக எழுதினார் என்று துக்கலின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கபட்டன, பத்திற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ள இவர் சிறந்த விமர்சகரும் கூட, துக்கல் அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர், பத்மபூஷண் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்,

துக்கலின் பௌர்ணமி இரவுமற்றும் பிற கதைகள் தொகுப்பினை சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது, இந்தச் சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமானது,

இதில் உள்ள ஒவ்வொரு கதையும் புதிதாகக் கதை எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்வேன், கதை சொல்லும் முறை, தொனி, திருப்பம், மொழியைக் கையாளும் விதம் எனத் தனது கலைத்திறனின் மேதமையைத் துக்கல் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்

பஞ்சாபின் மரபு இலக்கியம் வாரே எனப்படும் வீரப்பாடலாகும், இது போர் வீரர்களின் தீரங்களைப்பற்றிக் கூறுகிறது இந்த ‘வாரே’ காவியங்கள் பஞ்சாபியரின் வீரவரலாற்றின் அடையாளங்கள், போரில் தோற்ற வீரன் மீது ‘வாரே’ காவியங்கள் பாடப்படுவதில்லை.

கவிதையும் செய்யுளும் கதைப்பாடல்களுமாக இருந்த பஞ்சாபி இலக்கிய உலகில் வீரசிங் என்ற எழுத்தாளரே நவீன இலக்கியத்தைத் தொடங்கியவராகக் கருதப்படுகிறார். பஞ்சாபி மொழியில் இவரே முதன்முறையாக நெடுங்கதையை எழுதியவர்,

பஞ்சாபி மொழியின் நவீன சிறுகதை நானக் சிங்கிலிருந்து துவங்குகிறது, இவர் நடுத்தர வர்க்க பஞ்சாபிகளின் உலகை எழுத்தில் பதிவு செய்ததில் முக்கியமானவர்,

நானக் சிங்குக்கு அடுத்தபடியாகக் குருபக்‌ஷ சிங் முக்கியமானவர், இவரது கதைகள் பஞ்சாபிகளின் இடம்பெயர்தலையும், நகரவாழ்வையும் பிரதானப்படுத்துகின்றன,  ஸேகோன் – துக்கல் இருவரும் பஞ்சாபிக் கதைக்கு முதிர்ச்சி நிலையை அளித்தவர்கள்.

உணர்ச்சியில் தம்மை இழக்காமல் கதைகள் சொல்வதில் ஸேகோன் இணையற்றவர், கர்த்தார் சிங் துக்கல் பஞ்சாபிகளின் ஆன்டன் செகாவ் எனப்படுகிறார், தொடர்ச்சியாகச் சிறுகதைகளை எழுதி தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்ட இவர் நான்கு நாவல்கள், மூன்று கவிதை தொகுப்புகள், நாடகங்கள் எழுதியிருக்கிறார், பிரிவினைக்கதைகளை ஆங்கிலத் தொகுப்பாகவும் கொண்டுவந்திருக்கிறார்

பௌர்ணமி இரவு கதையை மார்க்வெஸின் காலரா காலத்து காதல் நாவலின் எதிர்வடிவம் என்று சொல்லலாம்,

தனது காதலுக்காக நீண்ட காலம் காத்திருக்கும் ஆணின் கதையைச் சொல்கிறார் மார்க்வெஸ், ஆனால் ஒவ்வொரு கார்த்திகை மாத பௌணர்மியின் போதும் வீட்டின் முன்வந்து நின்று தனது காதலுக்காகப் பல காலமாகக் காத்திருக்கும் ஒருவனை ஒரு பெண் எப்படி ஏற்றுக் கொண்டாள் என்று அவளது பார்வையில் துக்கலின் கதை விவரிக்கிறது,

மகளின் திருமணத்திற்கு நாள் குறிக்கபட்டு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் மாலாவிற்குள் காதல் மீண்டும் துளிர்விடத்துவங்குகிறது,

துக்கல் இந்தக் கதையைத் துவங்கும் விதமே அற்புதமாக உள்ளது,

அவர்கள் இருவரையும் தாயும் மகளும் என யாரும் நம்பவில்லை, அக்கா தங்கை போலவே இருந்தார்கள் என மாலாவையும் அவளது மகள் மினியையும் பற்றி எழுதுகிறார்,

தன் மகளை உற்றுப் பார்க்கும் மாலாவிற்கு அது தனது இளமைப்பருவத்தைத் தானே மீண்டும் பார்த்துக் கொள்வது போலவே உள்ளது

மகளுக்குத் திருமணமாகப் போகிற சூழலில் தான் ஒரு ஆணை நினைப்பது எவ்வளவு தவறு என அவள் உணருகிறாள், ஆனால் சஞ்சலப்பட்ட மனது ஏக்கம் கொள்ளவே செய்கிறது,

வீட்டில் திருமணச் சடங்குகள் துவங்க இருக்கின்றன, மணப்பெண்ணிற்கு மருதாணி வைக்கப் பெண்கள் வர இருக்கிறார்கள், மாலா தனது மணநாளில் மருதாணி வைக்கபட்டதை நினைவு படுத்திப் பார்க்கிறாள், ஆசையாகத் தனது மருதாணி வைத்த காலில் கணவன் முத்தமிட்டதில்லை என்பதும் நினைவிற்கு வருகிறது,

அவள் கணவன் வாரிசிற்குப் பிள்ளை வேண்டுமே என்பதற்காக மட்டுமே நடுஇரவில் எழுந்து அவளுடன் உறவு கொள்கிறான், மற்றபடி அவளது அழகை, ஆசைகளை அவன் அறிந்து கொள்ளவேயில்லை,

இத்தனை நாட்களாக இல்லாமல் மகளின் திருமணம் அவளுக்குள் ஒடுக்கபட்ட ஆசையைக் கிளறிவிடுகிறது,  ரகசியமாக மகளின் கல்யாண வளையலை தான் அணிந்து பார்க்கிறாள், மகளின் துப்பட்டாவை போட்டுக் கொள்கிறாள்,

அன்று பௌர்ணமி நாள், நிச்சயம் காதலன் தன்னைத் தேடி வருவான் என மாலா நினைக்கிறாள், அது போலவே அவனும் வந்து கதவின் வெளியே நின்று மென்மையாகத் தட்டுகிறான்,

வானில் இருந்த நிலவு மறைகிறது, மாலா தன்னை மீறி அந்தக் கதவைத் திறக்கச் செல்கிறாள், அடுத்தக் கணம் கதவைத் திறந்து அவன் கைகளில் அடைக்கலமாகிறாள், இருவரும் அழுந்த முத்தமிட்டுக் கொள்கிறார்கள், உணர்ச்சிவேகத்தில் வயல்வெளிக்குள் போய் உடலுறவு கொள்கிறார்கள், விடியும் போது தன்னுணர்வு வந்துவிட எழுந்து அவசரமாக வீடு திரும்பி மகளின் வளையல்களைக் கழட்டி வைத்துவிட்டு அவளது துப்பட்டாவை மடித்து வைத்துவிட்டு உறங்கிவிடுகிறாள் மாலா,

நல்ல ஆழ்ந்த உறக்கம், சூரியன் முற்றத்திற்கு வந்த பிறகே எழுந்து கொள்கிறாள்,  இப்படித் தூங்குகிறாயே என மகள் தாயைக் கேலி செய்கிறாள்,

திடீரெனப் பக்கத்துவீட்டுகாரி மாலாவிடம் வந்து உன் மகள் ஒரு கெட்டுகேட்ட பெண், நேற்றிரவு ஒரு ஆணுடன் வெளியே போவதை கண்டேன், அவள் கள்ளக்காதலனுடன் பழகுகிறாள் என்று குற்றம்சாட்டுகிறாள்,

இது போலவே மாலா தனது காதலனுடன் வெளியேறி போனதை வேறு சிலரும் பார்த்திருக்கிறார்கள்,  அத்தனை பேரும் அது அவளது மகள் மினி என நினைத்துவிடுகிறார்கள்,

உண்மையைச் சொல்லமுடியாமல் தடுமாறுகிறாள் மாலா, முகம் வெளிறிப்போய்விடுகிறது,  மகளின் கள்ளஉறவினை உறுதிசெய்வதைப் போல வயல்வெளியில் கிடைத்த வளையல் எனக் கல்யாண வளையலை எடுத்து வந்து காட்டுகிறான் ஒருவன்,

எப்படி இது எனப் புரிந்து கொண்ட மினிக்குத் தலை சுற்றி கண் இருண்டது என்பதுடன் கதை முடிகிறது,

மகளின் திருமணம் மாலாவிற்குள் உருவாக்கிய அகநெருக்கடியும் இத்தனை ஆண்டுகாலமாகக் காதலே இல்லாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோமே என்ற ஆதங்கமுமே காதலனை ஏற்றுக் கொள்ளவைக்கிறது,

இது சரியா, தவறா எனத் துக்கல் விவாதிப்பதில்லை, இப்படிதானிருக்கிறது வாழ்க்கை என்றே அடையாளம் காட்டுகிறார்,

மினியின் தாய் போன்ற பெண்கள் பஞ்சாபில் மட்டுமில்லை எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள், அம்மா வந்தாளில் வரும் தாயிற்குள்ளும் இதே தன்மை தானே இருக்கிறது, கதையில்  பௌர்ணமி நிலவு திடீரென முழுமையான தடையற்ற இன்பத்தின் அடையாளம் போலமாறிவிடுகிறது

துக்கல் இந்தக் கதையைக் குரலை உயர்த்தாமல் எழுதிப்போகிறார், கச்சிதமான வாக்கியங்கள், மிகக் குறைவான உரையாடல்கள், இடைவெட்டி காட்சிகளை அடுக்கிச் செல்லும் முறை, யதார்த்தமாகத் துவங்கி மெல்ல கதையின் போக்கினை உக்கிரப்படுத்துகிறார், ஒரு பெண்ணின் மனவோட்டங்களின் வழியே இயற்கையை அவர் விவரிக்கும் முறை அற்புதமாக உள்ளது

தன்னந்தனிமையில் என்றொரு கதை இந்தத் தொகுப்பில் உள்ளது, முழுக்கதையும் டெலிபோன் உரையாடல் மட்டுமே,  விவரணைகள் கிடையாது, பேசும் குரலின் வழியே முழுக்கதையை விவரிக்கிறார்,

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகச் சிறுகதையில் இது போன்ற பரிசோதனையை செய்து பார்த்திருப்பது துக்கலின் தனித்துவம்

குல்ஸீம் என்று இன்னொரு கதை, பிரிவினை பற்றி எழுதப்பட்ட சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று, சதத் ஹசன் மண்டோவின் கதையைப் போலவே இக்கதையும் படித்து முடித்தபிறகு நம்மை உலுக்கிவிடுகிறது.

பிரிவினையின் போது இக்கதை நடக்கிறது, கலவரத்தில் கிடைத்த ஒரு இளம்பெண்ணைத் தூக்கி கொண்டுவந்து பள்ளி ஆசிரியராக உள்ள தனது எஜமானனுக்குப் பரிசாகத் தருகிறான் ஒரு கிழவன்,

அவள் ஒரு முஸ்லிம், பெயர் குல்ஸீம். பள்ளி ஆசிரியன் முதன்முறையாக ஒரு பெண்ணை அடையப்போகிறான்,

தயக்கம், எப்படி அவளை அடைவது என்ற யோசனை, தடுமாற்றம் அவனைத் தாக்குகிறது,  அவனது உதட்டில் கீழ்த்தரமான முறுவல். கண்களில் காமப்பசி அவன் அந்தப்பெண்ணை நோக்கிப் பாய்கிறான்,

அவளோ அவனை விலக்கியபடியே, தயவு செய்து முதலில் என்னோடு பேசு, முன்பின் தெரியாத ஒருவனுடன் எப்படிப் படுப்பது எனக் கெஞ்சுகிறாள், அவன் சிந்திக்கும் சக்தியை இழந்து போவனைப் போல வெறித்தனத்துடன் நடந்து கொள்கிறான்,

அவளோ என்னை அடைய வேண்டுமானால் நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்,, நான் உன் குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பேன் என்று கெஞ்சுகிறாள்,

அந்த ஆசிரியன் அக்குரலை சட்டை செய்யாமல் அவளைக் கட்டிலை நோக்க இழுக்கிறான்,

அவள் கைகூப்பியபடியே,, உன் வயதை ஒத்த ஒருவனுக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுக்க நினைத்திருந்தார்கள், ஆனால் கலவரத்தில் அவனைத் துண்டு துண்டாக வெட்டி கொன்றுவிட்டார்கள் , நான் மட்டும் உயிர் தப்பியோடி வந்துவிட்டேன், எனக்கு வாழ்க்கை கொடு என்று மன்றாடுகிறாள்,

பள்ளி ஆசிரியன் எதையும் கேட்கும் நிலையில் இல்லை,

அவள் கண்ணீர்விட்டபடியே, எந்தப் பெண்ணாவது இப்படி அன்பிற்காகக் கெஞ்சியது உண்டா, உன் அடிமை போல நான் இருக்கிறேன், என்னைத் திருமணம் செய்து கொள் என்கிறாள்,

அவன் காமவேகத்தில் அவள் மீது பாய்கிறான். அவள் பலமாக அவனைப் விலக்கி தள்ளுகிறாள், இவளை எப்படி அடைவது எனப் புரியாமல் தடுமாற்றத்துடன் ஆசிரியன் குடிசையை விட்டு வெளியேறிப் போகிறான்,

வெளியே சணல்கயிறு திரிந்து கொண்டிருந்த கிழவன் ஆத்திரத்துடன் உள்ளே போகிறான், கதவை அறைந்து சாத்துகிறான்,

கல்யாணம் கேட்கிறதா சிறுக்கி உனக்கு எனக் கத்தியபடியே அவளை வீழ்த்துகிறான்,

மூன்று நிமிசங்களின் பின்பு லுங்கியை கட்டிக் கொண்டு வெளியேறி வந்து நின்று இனி நீங்கள் போங்க எஜமான் என்கிறான்,

பள்ளி ஆசிரியன் உள்ளே போகிறான், கூந்தல் கலைந்து நெற்றியிலும் கன்னத்திலும் வியர்வை வழிந்தோட அந்தப் பெண் கட்டிலில் கிடக்கிறாள், அவளது உடை நழுவி கிடக்கிறது, கிழவன் அனுபவித்து முடித்த அவளது உடல் தளர்ந்துள்ளது

அவள் பெயரை சொல்லி குஸ்லீம் என்கிறான்  பள்ளி ஆசிரியன்

மூன்று நிமிசம் முன்பு வரை அன்பிற்காக அவனிடம் மன்றாடிவள் இப்போது எதுவும் கூறவில்லை, அமைதியாக அசைவற்று அமர்ந்திருக்கிறாள்,

இனி அவனுக்கு எதிர்ப்பில்லை என்பதுடன் கதை நிறைவு பெறுகிறது,

துக்கலின் இக் கதையை வாசித்து முடித்தபோது உடல் அதிர்வு கொள்ளக் கலங்கிப்போய்விட்டேன்,

கிழவன் ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பள்ளி ஆசிரியனுக்குக் கற்பிக்கிறான், மூர்க்கத்தனத்துடன் அவளை வீழ்த்தி தனது ஆசையை அடைந்து கொள்வது என்ற வெறித்தனத்தை அவன் அடையாளம் காட்டுகிறான்,

கலவர நேரங்களில் இளைஞர்களை விடவும் முதியவர்களே அதிக வன்முறையிலும் வன்புணர்ச்சியிலும் இறங்கினார்கள் என்ற வரியை வரலாற்றில் வாசித்திருக்கிறேன், இக்கதை அதன் நேரடி சாட்சிபோல இருக்கிறது,

சகித்துக் கொள்ளமுடியாத இந்த வன்முறை வரலாற்றின் துயரசாட்சியாக உள்ளது, இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்பது இதுபோன்ற நூறாயிரம் துயரக்கதைகளின் தொகுப்பு தானில்லையா

கதையில் துக்கல் ஒருவரி கூடப் பிரிவினையின் வலியை பற்றிப் பேசவில்லை, ஆனால் படிப்பவர்கள் அதை முழுமையாக உணருகிறார்கள், கண்ணீர்விடுகிறார்கள், அது தான் கலையின் வெற்றி,

துக்கலின் இக்கதைகளை ஆங்கிலம் வழியாக லதா ராமகிருஷ்ணன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்,  சாகித்ய அகாதமி பரிசுபெற்ற இந்தச் சிறுகதை தொகுப்பு இளம்வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்

••

0Shares
0