சஞ்சாரம் விமர்சனம்

அவலத்தின் வலி உணர்த்தும்  ஓர் இசைப்பயணம்

பேராசிரியர் ராமகுருநாதன்

காவிரி மண்ணுக்குரிய பெருமை அது கலைகளின் தாயகமாக ஒருகாலத்தில் இருந்ததுதான். இசை, நாடகம், நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் தஞ்சை மாவட்டத்திற்குத் தனித்தன்மை உண்டு. கலைஞர்கள் பலரை உருவாக்கி உலவ விட்டது அந்தக் காவிரி மண்.  இசைக்கலைஞர்களில் குறிப்பாக நாதஸ்வர இசைக் கலைஞர்களில் சிறப்புக்குரியோராகப் பலர்தஞ்சை மண்ணால் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்தவர்கள். அவர்களில் சிலர் இந்திய அளவில் புகழ் பெற்றவர்கள். காவிரி மண்ணுக்கு மட்டும் இந்தப் பெருமை இல்லை. நாவலாசிரியர் முன்னுரையில் சொல்லியிருப்பது போல, ‘ தஞ்சை மாவட்டத்தில் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், மெய்சிலிர்க்க வைக்கும் நாதஸ்வரத்தைக் கேட்கமுடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இது கால் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும் உண்மை.

கரிசல் மண்ணிலும் நாதஸ்வரக் கலைஞர்கள் இருந்துள்ளனர். இந்தப் பின்னணியில் கரிசல் மண்ணில் வாழ்ந்த இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை முன் வைத்து வெளிவந்த நாவல்சஞ்சாரம். நாவலின் முன்னுரையில்,

கறுப்பின மக்கள் எப்படி தங்களுக்கெனத் தனி இசை வகைமையைக்  கொண்டிருந்தார்களோ அதற்கு நிகரானது  கரிசலில் கேட்கிற நாதஸ்வரம்  என்றேதோன்றுகிறது. கடவுளுக்குப் பக்கத்தில் நின்று வாசிக்கிற நாதஸ்வரக் கலைஞன்  சாதியின் பெயரால் ஒடுக்கப்படுவது, சன்மானம் கேட்டுக் கூனிக் குறுகிக்கையேந்தி நிற்க வைக்கப்படுவது, பந்தியில் சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதி மறுப்பது எனக்காலம் காலமாக அவர்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளும்அவலங்களும் தொடர்ந்துவருகின்றன

என்ற பண்பாட்டுக்கவலையைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

கரிசல்வாழ் இசைக்கலைஞர்களின்  வாழ்க்கைப்போராட்டத்தை ஒரு புனைவாகச் சொல்லி யி\ருப்பதில் சஞ்சாரம் சற்றே வித்தியாசமானது.  ஆனாலும் கூட இந்த நாவலைப் படிக்கும் போது காவிரி மண்ணின் இசைமணமும் கலந்து பரந்திருப்பதைச் சுட்டாமல் இருக்க முடியவில்லை. தஞ்சை இசைக் கலைஞரில் சிறப்புற்றிருந்த ஒரு சிலரை நினைத்துப் பார்க்கவும்இடம் தருகிறது.

நாவலாசிரியரின் நோக்கம் இசைக் கலை பற்றியதன்று. இசைக்கலைஞர்களுக்கிருந்த அவல       வாழ்வின் போராட்டத்தைக் குறிப்பாக, கரிசல் மண்ணில் பிறந்த நாதஸ்வரக்கலைஞர்களின் அவலத்தை வாழ்வோவியமாகத் தீட்டியிருப்பதில் இந்நாவல் வெற்றி கண்டுள்ளது. இசைக்  கலைஞர்களுக்குச் சமூகத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் பற்றிய கண்ணோட்டமே நாவலின் பாடுபொருளாக உள்ளது.  அவர்கள் எப்படியெல்லாம் சிறுமைப்பட்டு அலைக்கழிப் பட்டிருக்கிறார்கள் என்ற கோணத்தைப் பல சூழ்நிலைகளில் வெளிப்படுத்துவதுநாவலாசிரியரின் நோக்கமாகத் தெரிகிறது.

மூதூர் சூலக் கருப்பசாமி வேட்டைத் திருவிழாவில் சாமிக்கு யார் வில் கொடுப்பது என்பதில் கதை தொடங்குகிறது.  மூதூர்க்காரர்களுக்கும், பனங்குளத்துக்காரர்களுக்கும் இது சிக்கலைஉண்டாக்குகிறது. நாயனம் வாசிக்க வந்த பக்கிரி குழுவினர்க்கும், குடித்துவிட்டுவந்த வீர சின்னுவுக்கும் இடையே பிர்ச்சனை உருவாகிறது. பக்கிரி அடிபடுகிறான்; (வாசிக்கிறவன் கீழ்ச்சாதி என்ற காரணம்) பிரச்சனை பெரிதாகவே, பக்கிரியையும், அவனோடு ரத்தினத்தையும் வேப்ப மரத்தில் கட்டிப்போட, பூசாரி அவர்களை இரவோடு இரவாகத் தப்பிக்கவைக்க,பக்கிரி விழாப் பந்தலுக்குத் தீவைத்து ஓடிவிடுகிறான்.  ஊரைவிட்டுப் பல இடங்களில் தங்கி, வாழ்க்கையில் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள் இறுதியில் கைது செய்யப்படுகின்றனர்.இதனைக் கதைக் களத்தோடு, மாயாவாத யதார்த்தம்,(magical realism) வெற்றுக் கற்பனை(fantasy) சேர்ந்து கைகோத்துச் செல்கிறது நாவல்.

ஒரு சங்கிலிப் பிணைப்புப்போலத்  தொடர்ச்சியாகவும், வேறொரு கோணத்தில், தொடர்ச்சி அறுபடும் இழையாகவும் நிகழ்வுகள் கதைபோக்கில் இடம் பெற்றுள்ளன. முன்னும் பின்னுமான நகர்வுகளில் கதை நடக்கிறது.

நாதஸ்வரத்தின் பெருமையை ” அது வெறும் வாத்தியக் கருவியில்லை; அது கரிசலின் ஆன்மாவை விழிப்படையச்செய்யும் ஒரு வாத்தியம். வெயில் எப்படி கரிசல் பூமியில்பிறந்தவனை வளர்த்து எடுக்கிறதோ, அப்படித்தான் இந்த வாத்தியமும் ”(61) என்று வாலன் வழியாக ஆசிரியர் சொல்வது, கரிசல் மண்ணிலும் அத்தகைய எண்ணங்கொண்ட இசைக் கலைஞர் இருந்துள்ளதைக் காட்டும். நாவலாசிரியரே, நாதஸ்வரம் என்பது  கரிசலைப் பூக்க வைக்கும் ஒரு விசித்திர வாத்தியம். என்று சொல்கிறார்.

பக்கிரி, ரத்தினம் முக்கியமான படைப்புகள். பக்கிரிக்கு நாதஸ்வரம் மூன்றாவது கை. இவ்விருவரின் வாழ்க்கை அனுபவம் இசைக்கலைஞர்களுக்குரிய வகையிலும், நாதஸ்வரத்தைத்தொடர்புபடுத்துவதுமான சூழ்நிலைகளில் பல தரப்பட்டவர்களைச் சந்திக்க இடமளிக்கிறது. அவர்கள் போகிற இடங்களிலும், வாசிக்கச் சொல்லும் நிலையிலும் அவர்கள் அடைந்தஅவமானங்கள் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் பக்கிரியும், ரத்தினமும் பயணம் செய்யும்படியான கட்டாயத்திற்குக் காரணம் பக்கிரி தீ வைத்த விசயம்தான்.

நாவலில் இடையிடையே பல நிகழ்வுகள் தேவையோடும் தேவையின்மையோடும் நுழைந்துவிடுகின்றன. ஆனால், பெரும்பாலான நிகழ்வுகள், இசை குறித்து அவற்றுள் புகுந்து கொள்கின்றன. அதனால் இசை நுணுக்கத்தையும், இசை பற்றிய தொன்மங்களையும், இசைவாணர்களின் வாழ்க்கை முறையினையும் நாவலை நகர்த்திச்செல்வதற்கு ஊடும் பாவுமாகஅமைந்துள்ளன.  ஊரினைப் பற்றிய கதைகள், ஊர் மக்களின் உணர்வுகள், ஊருக்குள் இயற்கை விளைவித்த சீற்றம், இயற்கைக்கு அப்பாற்பட்டு அஃறிணைகள் இயங்கிய தன்மை,செத்துப்போன வலியன்–பில்லம நாயக்கர் உரையாடல் என்று கதை நகர்வுக்குத் தேவையானவையும், தேவையற்றவையும் வந்து போகின்றன.

கொண்டம்மாள் திருடனுக்குக் கொடுக்கும்தண்டனை; குன்னன் கதை; தாடிக்காரன் கழுதை விற்ற கதை; கல் பறந்து செல்லுதல்; ஊரோடிப் பறவைகள் ஊருக்குள்  தரை இறங்கி வந்து  மக்களிடம் பேசுதல், பறவைகளின் சாபம்;கல் யானை நாயனம் வாசிப்பது கேட்டுக் காதுகளை அசைத்தல்  முதலானவை கதை நகர்வுக்குக் கை கொடுத்துள்ளன. இயற்கைக்கு அப்பாற்பட்டுக் கதை சொல்வதனை உத்தியாகப்பயன்படுத்தியிருப்பது சில இடங்களில் பாட்டி சொன்ன கதையை நினைவூட்டுமாறு செய்கிறது. இது ஒரு வகையில் தமிழ் மண்ணின் அல்லது இந்திய மண்ணின் கதை சொல்லும்மரபுதான் என்றாலும் அந்நியப் பதிவிலும் இது போல் பல  உள்ளன. அமெரிக்க இலத்தீனின் தாக்கம் கால்நூற்றாண்டு காலமாகத் தமிழ்மண்ணிலும் கோலோச்சுவது ஒரு வகையில்புதுமைதான்.

பக்கிரி இசைக்கலைஞர்களிடம் நாயனம் கற்க அனுப்பபட்ட சூழல், அதனால் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்;  நாயனம் வாசிப்பதில்  தேர்ந்த அரட்டானம் லட்சுமியய்யாவை அலாவுதின்கில்ஜியிடம்  மாலிக்காபூர் அழைத்துச் சென்று நாயனம் வாசிக்கவைத்தல்; அதன் தொடர்பாக வடநாட்டில் நாதஸ்வர   வாசிப்பு இல்லாதொழிதல்;  ஓதியூருக்கு முதன் முதலில் வந்துகுடியேறிய கண்ணுசாமி பரோடா சமஸ்தானத்தில் வாசித்தல்; செருப்புத் தைக்கும் கருப்பையாவுக்கு அவர் நாயனம் வாசிக்கக் கற்றுக்கொடுத்ததால் ஊர்மக்களால்  விலக்கப்படுதல்;திறமை மிக்க இசைக்கலைஞர் வேணுகோபாலிடம் பக்கிரி நாயனம் கற்க முயன்று முடியாது போனமை; மருதூர் ஆதின மடத்தில் ராகவையாவிடம் நாயனம் கற்றல்; இசைக்கலைஞர்சாமிநாத பிள்ளை வரலாற்றை ராகவையா பக்கிரியிடம் சொல்லுதல்; தெக்கணசாமி வரலாறு; மணலில் புதைந்திருந்த நாயனத்தை வாலன் எடுத்து வாசித்த கதை; ‘பொன்னும் மண்ணும்கொட்டிக்கொடுத்தாலும்’ சாமிநாத பிள்ளையின் வாசிப்புக் கிடைக்காத அவரது வரலாற்றை ராகவைய்யா பக்கிரியிடம் கூறுதல்’;வெளி நாட்டிலிருந்து ஷாகின்ஸ் மருதூர் மடத்திற்குநாயனம் கற்றுக்கொள்ள வருதல்; கண் தெரியாத இசைக்கலைஞன் தன்னாசி கதை, தன்னாசி- சரஸ்வதி கதை, தன்னாசியின் வக்கிர உணர்வு(a kind of masochism) கமலத்தோடு உறவு;கீதாரி மகாலிங்கம் வானூர் கிணற்றில் செல்லியைத் தூக்கி எறிந்த கதை முதலியவை கதைப்பின்னலுக்கு வெறுமனே துணை செய்யவில்லை. கதையோடு இணைந்து செல்வதற்கும்,இசைக் கலைஞர்களின் வாழ்க்கை முறை எங்ஙனம் நாயனத்தின் வழி இயங்கிவந்துள்ளது என்பதை ஆங்காங்கே பதிவு செய்வதற்கும் துணை செய்வனவாய் உள்ளன.  இவையே அன்றி,எம்.ஆர். கே தேர்தலுக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது  பக்கிரியின் நாயன வாசிப்பு,  வேப்பங்காடு கலவரம், அதில் கம்யூனிஸ்ட் பாலன் தலையீடு, கரகாட்டக்காரி ரஞ்சி கதை என்றுகதை நிகழ்வுகள் நீள்வதோடு உள்ளூர் தவிர, இலண்டன், சேலம், கேரளா, சென்னை என்ற அளவில்  கதை பயணிக்கிறது. மற்றும் துணைக்கதைப் பின்னலாக, பக்கிரியின் அக்காகோகிலம் குடும்பம், ரத்தினத்தின் குடும்பம், பக்கிரியின் 8 வயது வாழ்க்கை நிகழ்ச்சியில் தீப்பெட்டி அட்டை சேகரிப்பதும், உண்டியல் திருடுவதுமாகிய நிகழ்வுகளும், அவனது 16 வயதுஅனுபவமும், மற்றும் போகிற போக்கில் சரோஜாவோடு ஒரு நிமிட அரவணைப்பும், கட்டட தொழிலதிபர் உமாபதியிடம் அடைக்கலம் புகுதல் முதலானவையும் கூடக் கதைக்குத்தேவையானவைகளாக இருக்கின்றன.  நாவலில் கதை சொலல் என்பது ஒரு பரந்துபட்ட களம் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன.

இசைக்கலைஞர்களான பக்கிரிக்கும், ரத்தினத்திற்கும் ஏற்பட்ட அவமானங்கள் ஒரு புறம் இருப்பினும், பக்கிரியின் இசையின் பெருமை அறிந்து சித்ரகுடி மக்கள் உணவு தானியங்களைஅன்பளிப்பாகத் தருதலும், இடவலம் ஜமீன் வாரிசு தங்கப் பதக்கம் அளித்தலும், இசை ரசிகரான ஊமை ஐயர் பக்கிரியின் இசையை வானளாவப் புகழ்தலும், பக்கிரி இசைவாசிப்பில் அபிகொண்டிருந்த தாக்கம், பக்கிரியின் வானொலி நிகழ்ச்சி  போன்றவை  கரிசல் காட்டு இசைக்கலைஞனுக்கும் அங்கீகாரம் இருந்ததைக் கதை நிகழ்ச்சிகள் மேம்போக்காகக் காட்டிச் சென்றாலும், ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கைப் போராட்டமே முந்தி நிற்கிறது. இசைக் கலைஞன்  உள்ளூரிலும், வெளிநாட்டிலும் கூட ஏமாற்றத்தின் பிரதிபலிப்பைத்தான் சந்திக்கவேண்டியதாகவே இருக்கிறான் என்பதற்கான நிகழ்ச்சிகளும் நாவலில் வந்து போகின்றன.

தொடக்கத்தில் காணப்படும் திருவிழாப் பந்தலைத் தீயிட்ட நிகழ்ச்சியின் தகவலும்,விளக்கமும் 126 பக்கத்தில் பழனி அலைபேசி வழியாகப் பேசினாலும், 156 ஆம் பக்கத்தில்தான்தீயிட்டதால் நேர்ந்த விளைவு சொல்லப்படுகிறது. இடைப்பட்ட நிகழ்ச்சிகளில் அது பற்றிய செய்திகளோ, தகவல்களோ இல்லை. இடையே வரும் நிகழ்வுகள் யாவும் மாற்றுக் காட்சிக்குப்பயன்பட்டுள்ளன. (shifting method) இதனால் தொடர்பு இருப்பதும், இல்லாததுமானதொரு பின்னணியில் கதையின் களம், தொடர்பு அறுபடாததாகச் செல்வதற்குக் கதை சொல்லும் ஆசிரியரின் கலை நேர்த்தி சாமர்த்தியமானதொரு தடத்தில் நிறைவேறிவிடுவதுதான் காரணம்.

ஒரு நல்ல மாறுபட்ட நாவலைப் படித்தோம் என்ற மன அமைதியைப் பெறுகிறோம்

••

0Shares
0