
சொல்வனம் இணைய இதழ் இங்கிலாந்தில் வசிக்கும் ஜெர்மானிய எழுத்தாளரான டபில்யூ.ஜீ. ஸீபால்ட் குறித்துச் சிறப்பிதழ் ஒன்றை உருவாக்கியுள்ளது. அரிய கட்டுரைகள், அறிமுகத்துடன் ஸீபால்ட் குறித்த விரிவான பார்வையைத் தரும் விதமாக சிறப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது.
சொல்வனம் ஆசிரியர் குழுவினருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.
இதழின் முக்கியக் கட்டுரைகளை எழுதியிருப்பவர் நம்பி கிருஷ்ணன். இவரது கட்டுரைகளை நான் விரும்பி வாசிப்பவன். இந்த இதழில் இவர் ஸீபால்ட் பற்றி எழுதியுள்ளதையும் மொழியாக்கம் செய்திருப்பதையும் வாசித்த போது பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு ஆழ்ந்த வாசிப்பு. புரிதல். நினைத்தவற்றை துல்லியமாகச் சொல்லமுடியும் மொழி
இசை, ஓவியம். இலக்கியம், தத்துவம், அறிவியல் எனப் பன்முகப் புரிதல் கொண்ட மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கும் நம்பி கிருஷ்ணனுக்கு நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.
டபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு என்ற கட்டுரையினையும் நம்பியின் சில கட்டுரைகளில் உள்ள வரிகளையும் முன்பின்னாகத் துண்டித்து அவரைப்பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்க முயன்றேன்.
ஸீபால்ட் எழுதத் தொடங்கியபோது அவருக்கு வயது நாற்பத்தி ஐந்து.
தாயகம் நீத்த வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஸீபால்டின் புத்தகங்கள் எளிதில் வகைமைப்படுத்த முடியாதவை. அவை புனைவுகளா அபுனைவுகளா? வரலாறா அல்லது உண்மைத் தகவலின் மீது இட்டுக்கட்டப்பட்ட போர்ஹெசிய புனைச்சுருட்டா? அவரது பதிப்பாளர் சமயோசிதமாக, இரண்டுக்குமே தயாராக இருப்பது போல், புனைவு-இலக்கியம் என்ற இரட்டை வகைமையைத் தேர்வு செய்கிறார்.
இவரது The Rings of Saturn 1999 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
கிறுக்குத்தனம் அடங்க மறுத்து தன் தலையை மீண்டும் மீண்டும் உயர்த்தும்போதெல்லாம் அக்கணமே அதை இரக்கமில்லாமல் அடக்குபவர்கள் ஸீபால்டின் பாத்திரங்கள். வாழ்வுடன் உறவு பூணுதல் என்ற விஷயத்தை அவர்கள் மிகவும் எச்சரிக்கையாய் தவிர்க்கிறார்கள் என்பதால் அவர்கள் ஒரு நோய்மையாய், ஒரு சுயவாதையாய், சோக உணர்வுடன் இணக்கம் பாராட்டுகிறார்கள்
வாழ்வின் ‘கடினமான ஒரு காலகட்டத்திலிருந்து மீள்வதற்காகத்தான்” அவன் பயணம் செய்கிறான் என்ற ஏற்கனவே நாம் அறிந்திருக்கும் தகவலுடன் கற்பனை வரம்பிற்குட்பட்ட அவனது புரிந்து கொள்ளவே முடியாத அலைச்சல்களை தொடர்புபடுத்திப் பார்க்கையில் அவன் தன் ‘ஆறுதல் வெளியைக்’ கடந்து இன்னல்களை எதிர்கொள்ளாதிருப்பதற்காகவே பயணிக்கிறானோ என்று வாசகர்களாகிய நாம் சந்தேகிக்கத் தொடங்குகிறோம்.
வாசகர்களாகிய நாமே பிரதியை நம் உலகிற்கும், நம் வாழ்விற்கும் எடுத்து சென்று, ஆசிரியர் ஒரு போதும் அறிந்திருக்க முடியாத அர்த்தங்களை அதற்கு இடையறாது அளித்துக் கொண்டிருக்கிறோம்.
ஸீபால்ட் தனக்குப் பிடித்த ஆறு கலைஞர்களைப் பற்றி எழுதிய, ஒன்றுடன் ஒன்று மெல்லிய தொடர்புடைய ஆறு கட்டுரைகளைக் கொண்ட “A place in the country” ஸீபால்டைப் பாரபட்சமின்றித் தேடிச் சேகரிப்போருக்கே ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும் என்று சொல்ல தோன்றுகிறது. ஆனால் ஸீபால்டின் வாசகர்களில் தேடிச் சேகரிக்காத ஒருவரை காண்பது அரிது.
கதைசொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பூகோள வெளியில் மட்டும் பயணிப்பதில்லை- பிரதிகளினூடே காலத்திலும் பயணித்து அவர் பயணித்த / தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் அதே இடங்களுக்கு முன்னாளில் பயணித்திருக்கும் மற்றவர்களின் பயணங்களையும் (நான் வேறொரு கட்டுரையில் விவரித்த ‘வெர்டிகோ’ என்ற புத்தகத்தில் ஸ்தெண்டால், காஃப்கா, கிரில்பார்சர் ஆகியோரின் பயணங்களை) நினைவுகூர்கிறார் என்பதால். அது மட்டுமல்லாது அவர்களின் நினைவுகளை தனதாக்கிக் கொண்டு, கதையாடலை முன்னர் பயணித்திருந்த பிரபலங்களின் (‘வளையங்கள்’ புத்தகத்தில் தாமஸ் பிரவுன், ஜோசஃப் கான்ராட், ஷடூபிரியாண்ட் மற்றும் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட்) சரிதைத் துண்டங்களுக்குத் திசைதிருப்பி மனதளவில் பயணிக்கிறார். இத்திசைதிருப்பலுடன் பல வரலாற்று மற்றும் இயற்கைப் பேரழிவுகள் பற்றிய தகவல்களைப் பிணைத்துப் பரந்து விரியும் இடம் மற்றும் கால இடைவெளிகளிடையே வியப்பளிக்கும் தொடர்புகளை கண்டெடுக்கிறார். மாபெரும் கிழக்கு இருப்பூர்தி வாரியத்தின் கிளைப் பிரிவுகளில் ஓடும் ரயில் வண்டிகளின் கருப்புச் சாயத்திற்கடியேயுள்ள சீன வல்லரசின் டிராகன் மரபுச் சின்னத்தின் கோட்டோவிய மீதத்திலிருந்து, தாய்ப்பிங் புரட்சி, விதவை பேரரசி சூ-ஷி,அவளது சர்வ வல்லமையளிக்கும் பொடித்த முத்து நிவாரணிகள் மற்றும் அவளுக்குப் பிரியமான பட்டுப்பூச்சிகளுக்குத் தாவும் பகுதிகள் இத்தகைய தொடர்புறுத்தல்களுக்கான நல்ல உதாரணங்கள்.
ஸீபால்டின் பயணமுறை (ஆசிரியரையும் கதைசொல்லியையும் குழப்பிக் கொள்ளும் பெரும்பாவத்தைச் செய்கிறேன் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது, ஆனால் ஸீபால்டைப் பொருத்தமட்டில் அது மன்னிக்கக்கூடிய தவறே, தவிர்க்கமுடியாததும்கூட) கணிசமான நடைப்பயிற்சிகளை கோருகிறது
இணைய இதழ் தொடர்பு :
https://solvanam.com/