அம்பின் வேகம்

பழைய திரைப்படங்களைக் காணும் போது இன்றைய ஊரடங்கு வாழ்க்கையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட உணர்வு ஏற்படுவதுடன் வேறு ஒரு காலத்தில் சஞ்சாரம் செய்கிறோம் என்ற சந்தோஷமும் ஏற்படுகிறது. அதுவும் சரித்திரப்படங்கள் என்றால் கூடுதல் சந்தோஷம் உருவாகிறது. இதற்காகவே பழைய பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கச் சரித்திரப் படங்களை விரும்பி பார்த்து வருகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக The Flame and the Arrow படத்தைப் பார்த்தேன். வார்னர் பிரதர்ஸ் தயாரித்தது. Jacques Tourneur இயக்கியது. ராபின் ஹூட் கதை போன்ற படம். பர்ட் லான்காஸ்டர், வர்ஜீனியா மாயோ மற்றும் நி க்ராவட் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

கதை பன்னிரண்டாம் நூற்றாண்டில் இத்தாலியின் லம்பார்டியில் நடக்கிறது, ஒரு சிறந்த வேட்டைக்காரனான டார்டோ வேட்டைக்குச் சென்று ஊர் திரும்புவதில் படம் ஆரம்பிக்கிறது.

விளையாட்டாகச் சிறுவர்களின் தொப்பியைக் குறி பாய்த்து அம்பு எய்கிறான் டார்டோ, மதகுருவோடு அன்பாகப் பழகுகிறான். இளம்பெண்கள் அவனைக் காதலிக்கிறார்கள். டார்டோவை அந்த ஊரில் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. டார்டோவின் மகன் ரூடியும் தந்தையைப் போலவே அம்பு எய்வதில் கில்லாடி.

டார்டோவின் மனைவி பிரான்செஸ்கா மலைக்கிராமத்தில் கணவனுடன் வாழப்பிடிக்காமல் விலகிப்போய் உல்ரிச்சின் அரண்மனையில் வசிக்கிறாள்.

வேட்டை பருந்துகளை வளர்க்கும் உல்ரிச் பிரபுவின் ஆட்கள் ஒரு நாள் மலைக்கிராமத்திற்கு வருகை தருகிறார்கள். புறாக்களை வேட்டைப்பருந்து கொல்ல முற்படும் போது அதை அம்பு எய்து கொல்கிறான் டார்டோ. இதனால் வீரர்கள் அவனைக் கைது செய்ய முற்படுகிறார்கள். இந்நிலையில் டார்டோவின் மகன் ரூடியை கோட்டைக்குப் பிடித்துக் கொண்டுவரவே அவர்கள் வந்துள்ள விபரம் தெரிய வருகிறது.

டார்டோ. தன் மகனுடன் தப்பியோடுகிறான். வழியில் எதிரியின் அம்பால் காயப்படுகிறான். ரூடி காவலர்களிடம் பிடிபட்டுவிடுகிறான். டார்டோ. காயத்துடன் மயங்கி விழுகிறான்

கோட்டைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட தன் மகனை மீட்க டார்டோ. செய்யும் முயற்சிகளே படத்தின் மையக்கதை.

கதையின் இன்னொரு தளமாக, உல்ரிச் விதித்துள்ள வரிகளைச் செலுத்த மறுக்கிறார். மார்சேஸ் அலெஸாண்ட்ரோ. அவருக்குத் தன் மருமகள் ஆனை திருமணம் செய்து தர உல்ரிச் தயாராக இருக்கிறார். அதையும் மார்சேஸ் ஏற்கவில்லை. ஆகவே அவரைக் கைது செய்து அழைத்து வர உத்தரவிடுகிறான் உல்ரிச்.

கைதியாக வண்டியில் ஏற்றிக் கொண்டுவருபவர்களை மலைப்பாதையில் தடுத்து நிறுத்தி மார்சேஸை மீட்கிறான் டார்டோ. அவரும் டார்டோவுடன் இணைந்து கொள்கிறார். இருவரும் ஒன்று சேர்ந்து உல்ரிச்சை பழிவாங்க முற்படுகிறார்கள்.

டார்டோவின் நெருங்கிய நண்பன் பிக்கோலோ. அவன் வாய்பேச முடியாதவன். ஆனால் படு வேடிக்கையானவன், தைரியமாகச் சண்டை போடக்கூடியவன். இருவரும் ஒரு நாள் அரண்மனைக்குள் புகுந்து ரூடியை மீட்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சி தோல்வி அடையவே அரண்மனையிலிருந்த உல்ரிச்சின் மருமகள் சீமாட்டி ஆனை கடத்திக் கொண்டுபோய் விடுகிறார்கள்.

மறைவிடத்தில் ஆனி தங்க வைக்கப்படுகிறாள். அவள் அங்கிருந்து தப்பிக்கப் பல முறை முயற்சி செய்கிறாள், அது முடியவில்லை. இறுதியில் அவள் டார்டோவைப் புரிந்து கொள்கிறாள்.

ஒரு முறை தன் மகனை மீட்க பிக்கோலோவை தூது அனுப்புகிறான் டார்டோ. இதில் ஆத்திரமான உல்ரிச் பிக்கோலோவை அடித்துத் துன்புறுத்தி அனுப்பி வைக்கிறான். அத்தோடு பாதிரியார் பியட்ரோவை தூக்கிலிடவும் உத்தரவிடுகிறான்.

அவரைக் காப்பாற்ற டார்டோ தனது ஆட்களுடன் கிளம்பிப் போகிறான். தந்திரமாகப் பியட்ரோவை மீட்கிறான்.ஆனால் மற்ற ஐந்து கைதிகள் மறுநாள் தூக்கிலிடப்படப் போகிறார்கள் என்பதை அறிந்து தானே சரணாகதி அடைவது போல நாடகமாடுகிறான்

டார்டோவை தூக்கிலிடுகிறார்கள். ஆனால் அவன் ரகசியமாகத் தப்பிவிடுகிறான். இந்நிலையில் உல்ரிச்சை தேடி ஒரு நாள் கழைக்கூத்தாடிகளின் குழு வருகிறது. அவர்களைப் போல உடையணிந்த டார்டோ அரண்மனைக்குள் புகுந்துவிடுகிறான். அந்தரத்தில் தாவும் வித்தைகளைத் தானும் செய்து காட்டுகிறான். இதன் ஊடாக ரூடியை மீட்கும் பணியில் ஈடுபடுகிறான்

இந்தக் கழைக்கூத்தாடிகளின் வருகை காட்சியின் பாதிப்பில் தான் எம்ஜிஆர் அடிமைப்பெண் படத்தின் கிளைமாக்ஸ் பாடலை உருவாக்கியிருக்கிறார். படத்தில் டார்டோ செய்யும் சாகசங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

ஊரே ஒன்று கூடி ஒரு சர்வாதிகாரியை எப்படி வீழ்த்துகிறார்கள் என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாக இருட்டில் டார்டோ மார்சேஸோடு சண்டை செய்வது. அரண்மனையினுள் கழைக்கூத்தாடிகள் செய்யும் வித்தைகளை அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். சிறந்த ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

மகனை இழந்த தந்தை அவனை மீட்பதற்காக என்ன செய்வான் என்ற கதைக்கரு பல்வேறு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட ஒன்று. இன்றும் அக்கதைக்கருவைக் கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டு வெற்றியடைகின்றன..

டார்டோ காட்டில் ஒளிந்து வாழும் போது அவனைத்தேடி வந்து மதகுருவின் மனைவி அவனால் ஊருக்கே மோசம் வந்துவிட்டது எனச் சண்டையிடுவதும் டார்டோ அவளிடம் எது சரியெனப் பேசுவதும் நல்லதொரு காட்சி.

படம் துவங்கிய இரண்டாவது நிமிஷத்திலிருந்து கடைசிக்காட்சி வரை அம்பின் வேகம் போலப் பரபரப்பாகச் செல்கிறது.

டார்டோ கதாபாத்திரத்தின் துடிப்பான சண்டைகளும் சுவாரஸ்யமான காட்சிகளும் படத்தை ரசிக்கச் செய்கின்றன.

**

0Shares
0