இதயத்திலிருந்து எழும் குரல்

எப்போது தஸ்தாயெவ்ஸ்கிக்கு தான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகப் பிறந்தது என்பதைப் பற்றி Jacques Catteau புத்தகத்தில் ஒரு தகவலைப் படித்தேன்.

1837ல் பொறியியல் புகுமுக வகுப்பில் பயிலுவதற்காகத் தனது சகோதரன் மிகேலுடன் பீட்டர்ஸ்பெர்க் வந்த தஸ்தாயெவ்ஸ்கி புஷ்கின் சண்டையிட்டுக் கொல்லப்பட்ட இடத்தைக் காணச் சென்றார். சில மாதங்களுக்கு முன்பு தான் அந்தச் சம்பவம் நடந்தேறியது. புஷ்கின் மீது தஸ்தாயெவ்ஸ்கியும் அவரது சகோதரனும் தீராத காதல் கொண்டிருந்தார்கள். ஆகவே புஷ்கின் டூயல் சண்டை செய்த இடத்தைத் தேடிச் சென்று பார்த்தார்கள்.

அந்த நாட்களில் மிகேல் நிறையக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தான். தஸ்தாயெவ்ஸ்கி தனது மனதிற்குள்ளாக ஒரு நாவலைக் கற்பனை செய்து கொண்டிருந்தார். 1839 ஆகஸ்ட் 16 தனது 17 வயதில் எழுதிய ஒரு குறிப்பில் தான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தைத் தஸ்தாயெவ்ஸ்கி பதிவு செய்திருக்கிறார்.

நாவலாசிரியன் தன்னுடைய இதயத்திலிருந்து எழும் குரலைக் கேட்க வேண்டும். அவன் தலைக்குள் கதாபாத்திரங்கள் உலவிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படி மனதிற்குள் நாவல் வளர்ந்தபிறகே அதைக் காகிதத்தில் எழுத வேண்டும் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.

 சிக்கலான கதாபாத்திரங்களின் உளவியலைக் கூடத் தஸ்தாயெவ்ஸ்கி ஒரே மூச்சில் துல்லியமாக எழுத முடிந்ததற்கு இதுவே காரணம் என்கிறார்கள்

ஷேக்ஸ்பியர் மீது பெரும் விருப்பம் கொண்டிருந்த தஸ்தாயெவ்ஸ்கி அவரது முதல் நாவலின் கதாபாத்திரங்களை ஷேக்ஸ்பியர் ஜாடையில் உருவாக்கியுள்ளார் என்கிறார் ஸ்டராட்ஸ்கி.

ஷேக்ஸ்பியரின் அவல உணர்வுகளை மட்டுமே தஸ்தாயெவ்ஸ்கி எடுத்துக் கொண்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. நாவல் எழுதுவதற்கான தூண்டுதலை அவருக்கு உருவாக்கியது பிரெஞ்சு இலக்கியமே. அதிலும் குறிப்பாகப் பால்சாக். அவரது நாவல்களை விரும்பி வாசித்த தஸ்தாயெவ்ஸ்கி அவரைப் போலவே தானும் நாவல் எழுத விரும்பினார்.

கனவு நிலைப்பட்ட யதார்த்தமே தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம். தன் இளமையில் ஒரு நாள் நேவா ஆற்றங்கரையில் சூரியன் மறையும் காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டெனப் பகல் மறைந்து இருள் பரவத்துவங்கிய போது அவரது மனதில் சொல்லமுடியாத ஒரு உணர்வு பீறிட்டது. தான் இதுவரை அடையாத பேருணர்வு ஒன்று தன்னை ஆக்கிரமிப்பது போல அவர் உணர்ந்தார். அந்த நிமிஷம் அவரது உடல் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இந்தத் தருணத்தின் பிறகு அவரது புற உலகம் குறித்த பார்வை மாறிவிட்டது எனலாம்.

எளிமையான எண்ணங்கள் கூட அவருக்குள் தீப்பற்றிக் கொண்டது போலத் தீவிரமான உணர்வெழுச்சியை உருவாக்கியது. ஆகவே அவர் தினசரி நிகழ்வுகளிலிருந்தே பேரனுபவங்களை உருவாக்கினார். அது தான் தஸ்தாயெவ்ஸ்கியின் பலம் என்கிறார் ஸ்டராகோவ்

தனக்குப் புத்தி பிசகிவிடும். தான் பித்தேறிப்போய்விடுவேன் என்று அவர் உள்ளுக்குள் பயந்து கொண்டேயிருந்தார். அது பற்றி அவரது குறிப்பிலும் காணமுடிகிறது. இந்த அச்சம் அவரது படைப்பினுள் வெளிப்பட்டது என்கிறார்கள். அவரது கதாபாத்திரங்கள் Burning Head and Weak Heart கொண்டவர்கள் என்கிறார் ஸ்டராகோவ். அது உண்மையே.

தன் இளமையில் தஸ்தாயெவ்ஸ்கி நிறைய வாசித்தார். ஆழ்ந்துவாசித்து அதிலேயே ஊறிக்கிடந்த காரணத்தால் அவருக்கு எழுத்தின் அடிப்படைகள் எளிதாகக் கைவசமாகின. தஸ்தாயெவ்ஸ்கி வீட்டிலிருந்த நூலகத்தைப் பற்றியும் அவர் படித்த புத்தகங்களின் கேட்லாக்கினையும் காணும் போது அவர் விரிவாகப் படித்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பொறியியல் பயின்ற போது பௌதீகம். கணிதம், வேதியியல் மற்றும் கட்டிடக்கலை. இயந்திரவியல் என அறிவியலின் பல்துறைகளையும் ஆழ்ந்து படித்திருக்கிறார். இதன் வெளிப்பாடே அவரது படைப்பில் வெளிப்படும் அறிவியல் பார்வை மற்றும் அறிவியலின் தேவை குறித்த விவாதங்கள்.

தனது ஐரோப்பிய வாழ்க்கையின் போது உலகப்புகழ் பெற்ற சிற்பங்களையும் ஓவியங்களையும் அவர் ரசித்துப் பார்த்து வியந்திருக்கிறார். இசையில் அவருக்கு இருந்த ஈடுபாடு மிக அதிகம். இசையின் வழியே தான் தனது அகம் மீட்சியுறுகிறது என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. பீதோவன். மொசார்ட், லிசட், சோபின் போன்றவர்களை விரும்பி கேட்டிருக்கிறார். இத்தாலிய ஒபராவும் அவருக்குப் பிடித்தமானது.

அடர்ந்த இருளில் தான் சுடரின் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும். அது போலவே தனது கதாபாத்திரங்கள் ஒளிர்வதற்கு இருண்ட பின்புலமாக அவர்களின் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று விரும்பினார். கரமசோவ் சகோதரர்களில் தந்தை மோசமான மனிதராக இருப்பது தான் பிள்ளைகளின் மீது நாம் அதிகக் கவனம் கொள்வதற்கு முக்கியக் காரணம். தேவாலயத்தின் பிரம்மாண்டமான கோபுரத்தைப் போல நாவல் அண்ணாந்து பார்க்கும் படியாக உருவாக்கப்பட வேண்டும். அதே நேரம் கனவுகளும் யதார்த்தமும் ஒன்று கலந்து எழுதப்பட வேண்டும். அந்த வகையில் விக்டர் கியூகோவும் டிக்கன்ஸ்சும் தனது நாவலை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களே எனது ஆதர்சங்கள் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி

தினசரி வாழ்விற்குள் ஒரு புதிர் தன்மையும் மர்மமும் கலந்திருக்கிறது. மனிதர்களின் செயல்கள் எல்லாவற்றையும் காரணங்களால் விளக்கிவிட முடியாது. சில செயல்களைப் புரிந்து கொள்வது இயலவே இயலாது. இதையே தஸ்தாயெவ்ஸ்கி தனது படைப்புகளில் கவனம் கொள்கிறார்.

ரஸ்கோல்நிகோவ் கொலையைச் செய்வதற்கு முன்பாகத் துல்லியமாகத் திட்டமிடுகிறான். ஒத்திகை பார்க்கிறான். குறிப்பாகத் தனது வீட்டினை கடந்து செல்கிறவர்களின் எண்ணிக்கையைக் கூட அவன் கணக்கெடுக்கிறான். எதற்காக இந்தக் கணக்கு. தினசரி வாழ்க்கை ஒன்று போலத் தோன்றினாலும் அது ஒன்று போலவே இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதன் அடையாளம் போலவே வட்டிக்கடைப் பெண்ணைக் கொல்லச் சென்ற ரஸ்கோல்நிகோவ் அவளது தங்கை லிசாவெதாவையும் கொலை செய்கிறான். அது எதிர்பாராமையின் அடையாளம்

தனது வீட்டின் ஜன்னல் வழியாகக் கடந்து செல்பவர்களின் உடைகளை ரஸ்கோல்நிகோவ் அவதானித்தபடியே இருக்கிறான். பகட்டான உடை அணிந்தவர்கள் எவருமில்லை. அது தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி. ஆனாலும் மற்றவர்களின் உடையைக் காணும் போது தனது தோற்றம் குறித்துக் கவலை கொள்கிறான்

தஸ்தாயெவ்ஸ்கி துல்லியமாக அந்தப் பகுதியை விவரித்துள்ளார். அங்கு வசிக்கும் ஜெர்மானியர்கள். விளையாட்டுச் சிறுமிகள். துணிதுவைப்பவர்கள் கேரேஜ் தொழிலாளர்கள். பரத்தைகள் எனப் பலரையும் நுணுக்கமாகச் சித்தரிக்கிறார். இதன்வழியே வாசகருக்குக் கதையின் களம் துல்லியமாகக் கண்ணுக்குத் தெரிந்துவிடுகிறது. கற்பனையான கதைப்பரப்பினை உருவாக்காமல் நிஜமான பீட்டர்ஸ்பெர்க் நகரில் தனது நாயகனை உலவ விடுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி. அது தான் அவரது தனிச்சிறப்பு

தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவியான அன்னா தனது நாட்குறிப்பில் தங்களுக்குத் திருமணமான புதிதில் ஒரு நாள் தஸ்தாயெவ்ஸ்கி தன்னை இடிந்து போன சுவர் ஒன்றைக் காண அழைத்துப் போனதாகவும் அது ரஸ்கோல்நிகோவ் கொலைக்குப் பின்பு பொருட்களை ஒளித்து வைத்த சுவர் என்று சொன்னதாகவும் குறிப்பிடுகிறார். நாவலின் களத்தை எவ்வளவு நுட்பமாக அறிந்து வைத்திருக்கிறார் என்பதன் அடையாளமே இந்த நிகழ்வு

நகரமே அவரது நாவலின் மையம். கிராமிய வாழ்க்கை குறித்தோ, பண்ணையடிமைகள் பற்றியோ அவர் கவனம் கொள்ளவில்லை. அதிலும் நகரத்தில் தனக்கென அடையாளம் இல்லாமல் போனவர்களைத் தான் அவர் திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார்.

கனவும் குழப்பமான எண்ணங்களும் கொண்ட அவரது நாவலின் நாயகர்கள் உலகின் குற்றங்களுக்காக வருந்துகிறார்கள். தன் தவறுகளுக்கான தண்டனையைத் தானே வழங்கிக் கொள்கிறார்கள். உலகத்தால் மட்டுமின்றி உறவுகளாலும் வஞ்சிக்கப்படும் மனிதனின் நிலையைப் பற்றியே தஸ்தாயெவ்ஸ்கி எழுதுகிறார். தனது வேதனைகளைத் தான் மனிதன் நினைவில் வைத்துக் கொள்கிறான். சந்தோஷங்களை அல்ல எனும் தஸ்தாயெவ்ஸ்கி தன்னையே ஒரு பகடையாக மாற்றி உலகோடு விளையாடுகிறார்.

what is time ? time does not exist. time is numbers .time is the relationship of being to non being – – Notebook for crime and Punishment

என்ற அவரது வரி காலம் பற்றிய அவரது ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாகும். இந்த வரியின் மூலமே அவரது நாவல்களைப் புரிந்து கொள்ள முடியும்.

••

0Shares
0