மஞ்சள் கொக்கு
பல மாதங்களாக வேலையற்றுப்போனதால் சகாதேவன் மிகுந்த மனச்சோர்வு கொண்டிருந்தான். நண்பர்களும் உறவும் கசந்து போயிருந்தார்கள். வெளிஉலகின் இரைச்சலும் பரபரப்பும் அவனைத்; தொந்தரவு செய்தது. சாப்பிடுவதற்கு கூட அவன் தயக்கம் கொள்ளத்; துவங்கினான். உலகின் மீது தீராத வன்மமும் ஆத்திரமும் மட்டுமே அவனுக்குள் இருந்தது.
யாரையும் பார்க்கப் பிடிக்காமல் அறைக்கதவை சாத்திக் கொண்டு செய்வதறியாமல் தன்னிடமிருந்த தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து விளையாட்டாக உரசி உரசி போட்டபடியே இருந்தான். அது ஒன்று தான் அவனது ஒரே பொழுது போக்காக இருந்தது . அதற்காக தினம் ஒரு தீப்பெட்டி வாங்கினான்.
சுவர் ஒரமாக உட்கார்ந்தபடியே தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசுவான். அதில் நெருப்பு எவ்வளவு நேரம் எரிகிறது என்று உற்றுக் கவனித்தபடியே இருப்பான். சில குச்சிகளில் நெருப்பு எரியத் துவங்கும் போது மிகப் பிரகாசமாக இருக்கிறது. ஆனால் பாதியில் பிரகாசம் வடிந்து நெருப்பு மெலிந்து போய்விடுகிறது.
சில தீக்குச்சிகளில் நெருப்பு அணைவது மிக அவசர அவசரமானதாகயிருக்கிறது. வேறு சில குச்சிகளிலோ நெருப்பு குமிழ் போல தோன்றி நிமிசத்தில் மறைந்து போய்விடுகின்றது. இப்படித் தீக்குச்சிகளின் வழியே அவன் நெருப்பை உன்னிப்பாக அறியத் துவங்கியிருந்தான்.
உலகில் மிகவும் வியப்பானவை தீக்குச்சிகள் என்று அவனுக்குத் தோணியது. அத்தோடு நெருப்பை நம் கண்ணால் அறிந்து கொள்ள முடியாது என்ற எண்ணமும் உருவானது. எதையோ சொல்ல நினைத்து வார்த்தை தடுமாறும் மனிதனைப் போல நெருப்பு அவசரமாக சப்தமிட்டு ஒடுங்கிவிடுவது வியப்பாக இருக்கும்
நெருப்பிற்குள் ஒன்றிற்கும் மற்றதிற்கும் வித்யாசமிருக்கிறதா? நேற்றைய நெருப்பு இன்றைய நெருப்பு என்று ஏதாவது உண்டா? இல்லை கற்பூரத்தில் எரியும் நெருப்பு கல்லில் எரியும் நெருப்பு என்று பேதமிருக்கிறதா .?
நெருப்பு உலகின் தொன்மையான சாட்சி போல அவனுக்குள் தோன்றியது. விசித்திரமான ஆதிமிருகம் ஒன்றின் கண்களை நினைவுபடுத்துவது போலவே நெருப்பு அவன் கண்முன்னே நடனமாடி மறைந்தது.
அப்படியொரு வெறுமை படிந்த மாலைப்பொழுதில் தன்னிடமிருந்த தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசும் போது தற்செயலாக நெருப்பின் உள்ளே ஒரு மஞ்சள் நிறக் கொக்கு ஒன்று பறந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவனால் நம்ப முடியவில்லை. அது கொக்கு தானா என்று உற்றுப் பார்த்தான்.
கொக்கு தான், ஆனால் மிகச் சிறியதாக இருந்தது. சில வேளைகளில் இரவில் வழிதவறி அலையும் இது போன்ற கொக்கைத் தொலைதூர வானத்தில் பார்த்திருக்கிறான். அது போன்றதொரு கொக்கு தான் அது. ஆனால் மஞ்சள் நிற இறக்கை கொண்டிருக்கிறது.
அவன் உற்றுப்பார்த்தான் கொக்கு தன் சிறகை விரித்தபடியே பறந்து போய் விருட்டென மறைந்தது. நம்ப முடியாமல் அடுத்த தீக்குச்சியை உரசிப் பார்த்தான். அதிலும் அதே கொக்கு பறந்து கொண்டிருந்தது. நம்பமுடியாத திகைப்புடன் அவன் ஒவ்வொரு தீக்குச்சியாக உரசி உரசிப் பார்த்தான். எல்லா குச்சிகளிலும் சிறகசைக்கும் சப்தமின்றி அந்த கொக்கு பேரழகுடன் பறந்து கொண்டிருந்தது.
அன்றைய இரவிற்குள் அவன் தீப்பெட்டியிலிருந்த குச்சிகள் தீருமளவு எரித்து மகிழ்ந்தான். எங்கிருந்து இந்தக் கொக்கு எங்கு பறக்கிறது. இதுவரை உலகில் கண்ட கொக்குகளில் இல்லாத வசீகரம் இதற்கு எப்படி வந்தது என்று அவனது கண்டுபிடிப்பைச் சுற்றியே மனது ஏதேதோ கற்பனைகளை நெய்து கொண்டிருந்தது.
உண்மையில் தான் கனவு காண்கிறோமோ எனும் சந்தேகம் உருவாகும் போது திரும்பவும் ஒரு குச்சியை உரசி உற்றுப் பார்ப்பான் , சலனமற்று கொக்கு பறந்து செல்லும். அதை பார்க்கையில் தன்னை மீறிய பரவசம் ஏற்படுவதை அவன் உணரத் துவங்கினான்.
அந்தக் கொக்கு எங்கே பறந்து கொண்டிருக்கிறது. அது ஏன் திரும்பிப் பார்ப்பதேயில்லை என்று யோசனை செய்தபடியே படுத்துக் கிடந்தான்
இந்த விந்தையின் பிறகு அறையில் தான் முன்பு உணரும் வெறுமை மெல்ல கரைந்து போவதை உணரத் துவங்கினான்.
தன்னிடமிருந்த கடைசி தீக்குச்சியை உரசினான்.
நெருப்பு பற்றிக் கொண்டவுடன் சுடரினுள் பறந்து கொண்டிருந்த மஞ்சள் கொக்கு மெல்ல நெருப்பிலிருந்து வெளியேறி அவன் அருகில் வந்து அரைவட்டமடித்து விட்டுத் திரும்பவும் அதே நெருப்பிற்குள் சென்று மறைந்தது.
அவன் வியப்போடு தன்னைக் கடந்துசென்ற கொக்கைப் பார்த்து கொண்டிருந்தான்.
தீக்குச்சி எரிந்து முடிந்து புகை எழுந்தது. அவன் தன்னை மீறிய சந்தோஷமும் துக்கமும் கொண்டபடியே அறையை விட்டு வெளியேறி ஒடினான். அதன்பிறகு அந்த நகரத்திற்கு திரும்பி வரவேயில்லை. எப்போதும் மலர்ந்த முகத்துடன் அவன் ஒரு நாடோடியாக ஹரித்துவாரில் அலைந்து கொண்டிருந்ததைப் பார்த்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்.
வீட்டு ஆணி
நன்மாறன் எப்போதும் போல வீடு திரும்பி, உடை மாற்றிக் கொண்டு முகம் கழுவச் சென்ற போது ஆணியில் மாட்டப்பட்ட அவனது சட்டை நழுவி கிழே விழந்தது. அதைக் கவனிக்காமல் பின்வாசலுக்குச் சென்றான்.
தொட்டியில் இருந்த நீரில் ஆகாசம் விழுந்து கிடந்தது. அவன் தன் கைகளால் ஆகாசத்தை தண்ணீரை விட்டு விலக்கிவிட்டு முகத்தில் அடித்து கொண்டான். திரும்பும் போது தரையில் விழுந்து கிடந்த தனது சட்டையை ஆணியில் எடுத்து மாட்ட வேண்டும் என்று தோன்றியது. நெருங்கிச் சென்று ஆணியில் மாட்டும் போது ஆணியை உற்றுப் பார்த்தான்.
துருவேறிய ஆணியின் தலை நெளிந்து போயிருந்தது. யார் அதை சுவரில் அடித்தது என்ற கேள்வி அவனுக்குள் உண்டானது.
அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த ஆணி அதே இடத்தில் தானிருக்கிறது. அதில் பையோ சட்டையோ எதுவோ ஒன்று தொங்கி கொண்டுதானிருக்கிறது. ஆனால் ஆணியை அதுவரை ஒருமுறை கூட உற்றுக் கவனித்ததேயில்லை .
இதுவரை பார்த்திராத பொருளைக் கவனிப்பது போல ஆர்வத்துடன் ஆணியைப் பார்க்க துவங்கினான். எதற்காக ஆணிகள் இப்படி ஒரே சுவரில் பலவருடமாக எவ்விதமான முணுமுணுப்பும் இன்றி தன்னை ஒப்புக் கொடுத்து கொண்டிருக்கின்றன.
ஒரே சுவரில் இருந்த போதும் ஒரு ஆணியும் மற்றொரு ஆணியும் ஒன்றோடு ஒன்று ஏன் பேசிக் கொள்வதில்லை. சுவரிலிருந்து விடுபடுவதற்கு ஆணிகள் ஏதாவது முயற்சி எடுக்குமா இல்லையா என்று ஏதேதோ தோணியது.
சட்டென தானும் அந்த ஆணியைப் போல ஒரே வீட்டில் இருபத்தைந்து வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ, ஒரு வேளை இது போலவே நமது வாழ்வும் முடிந்து விடுமா? என்ற அச்சம் உருவாகத் துவங்கியது. தன் விரலால் ஆணியைத் தடவிப் பார்த்தான். அதன் இறுக்கம் குற்றவுணர்ச்சியை உள்ளாக்கியது
எந்த ஆணியும் தன்னைச் சுவரில் அடிப்பதற்கு ஒரு போதும் சம்மதித்து இருக்காது. எதற்காக ஆணிகள் இப்படித் தங்களை யாருடைய கையிலோ ஒப்படைத்துவிட்டு இயக்கமற்றுப் போகின்றன என்று ஆத்திரமாக வந்தது
ஆணியாகவே இருந்தாலும் ஏதாவது ஒரு கப்பலின் அடிப்பகுதியில் அடிக்கபட்டிருந்தால் கடல்கடந்து போய்க் கொண்டிருந்திருக்கலாம். அல்லது ஒரு பியானோவின் கால்கட்டையில் அடிக்கபட்டிருந்தால் இசையை ரசித்திருக்கலாம். அப்படியின்றி ஏன் இப்படி ஒரு காரைச் சுவரில் வந்து மாட்டிக் கொண்டது.
பார்க்கப் பார்க்க ஆணி யாரையோ நினைவுபடுத்துவது போலிருந்தது. ஆமாம் அது அம்மாவை நினைவுபடுத்துகிறது. அம்மா இந்த ஆணியைப் போல இதே வீட்டில் நாற்பது வருடத்திற்கும் மேலாக இருந்தாள். அவளிடம் சலிப்போ, முணுமுணுப்போயில்லை. தலையிருந்து ஆணிகள் பேசாமலிருப்பதற்கு காரணம் அவை மனித ரகசியங்கள் அறிந்தவை என்பதால் தானோ என்று தோணியது.
திடீரென ஆணி அவனுக்கு மனச்சோர்வையும் துக்கத்தையும் வலியையும் உருவாக்குவதாக இருந்தது. ஆணியைப் பற்றி நினைக்காமலிருக்க ஒரே வழி அதை மறைத்துவிடுவது மட்டும் தான் என்றபடியே தனது சட்டையை எடுத்து அவசரமாக ஆணியில் மாட்டிவிட்டு தொலைக்காட்சி பார்க்க துவங்கினான் . ஆணியிலிருந்த சட்டைகாற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
ஏன் இந்த ஆணி தன் வீட்டில் வந்து மாட்டிக் கொண்டது என்ற குற்றவுணர்ச்சி அவனுக்குள் மெல்லப் பீறிடத் துவங்கி இரவெல்லாம் தூக்கமற்று செய்தது. மறுநாளில் இருந்து அவன் ஆணியை நிமிர்ந்து பார்க்காமல் வீட்டில் வாழத் துவங்கினான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழிகள் எதுவும் தெரியவில்லை.