இரவின் சிறுபாடல்

புதிய சிறுகதை

கடைசிப் பஸ்ஸைத் தவறவிட்டிருந்தான் ரகுபதி.

வேலை தேடிச் சுற்றியலைகிறவன் சரியான நேரத்திற்கு வீட்டிற்குப் போய் என்ன ஆகப்போகிறது என்ற அவனது நினைப்பு தான் பேருந்தைத் தவறவிட முக்கியக் காரணம்.

இனி காலை ஐந்தரை மணிக்கு தான் அவனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து வரும். அதுவரை இந்தப் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியது தான்.

என்ன செய்வது எனத் தெரியவில்லை. நேரத்தை கழிக்க வேண்டும். நெருக்கடியான சூழலில் காலம் நீண்டுபோய்விடக்கூடியது. அன்றைக்கும் அப்படித்தான். இப்போது தான் மணி பத்து பத்து என்று காட்டியது அவனது கைக்கடிகாரம். விடியும் வரை என்ன செய்வது.

பேருந்து நிலையத்தை ஒரு சுற்றுச் சுற்றிவரலாம் என எண்ணி நடந்தான்.

••

அவனது கிராமத்திற்கு ஒரு நாளில் ஆறு முறை டவுன் பஸ் வந்து போனது. அவனது ஊர் தான் கடைசி. வழியில் உள்ள கிராமங்களைச் சுற்றிவந்து அவனது ஊரின் மைதானத்தில் பஸ் நின்றுவிடும். இந்த வசதி கூடப் பத்து வருஷங்களுக்குள் தான் உருவானது. அதன் முன்பு வரை மாட்டுவண்டி, சைக்கிள் அல்லது நடை தான். வசதியான ஒன்றிரண்டு பேர் பைக் வைத்திருந்தார்கள்.

பேருந்து வந்து போக ஆரம்பித்த போதும் பேருந்து நிலையம் என்ற ஒன்று அவனது ஊரில் கிடையாது. மைதானத்திலுள்ள கொடிக்கம்பத்தை ஒட்டி பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவரும் கண்டக்டரும் பெட்டிக்கடையில் போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

பள்ளி மாணவர்களின் போக்குவரத்திற்காகவும் மருத்துவமனைக்குப் போய் வருகிறவர்களுக்காகவுமே அந்தப் பேருந்து முதன்மையாக இயக்கபட்டது. அதுவும் சில நாட்கள் வழியில் ரிப்பேராகி நின்றுவிடுவதுண்டு. இரவு ஒன்பது நாற்பதுக்குக் கடைசிப் பஸ். அதைத் தவறவிட்டால் காலை வரை காத்திருக்க வேண்டியது தான்

ரகுபதிக்கு இப்படி நடப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. எத்தனையோ முறை இப்படிப் பஸ்ஸை தவறவிட்டுக் காத்திருக்கிறான். சில நாட்கள் யாராவது நண்பர்களைத் தேடிப் போய் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் உறங்கி எழுந்து காலை ஊருக்குப் போவதுண்டு. இன்றைக்கு யாரையும் தேடிப் போய்ப் பார்த்து உதவி கேட்க மனசில்லாமல் இருந்தது

பேருந்து நிலையத்தின் புத்தகக் கடையை மூடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை அவன் நினைவு தெரிந்த நாள் முதலே இருக்கிறது. வார இதழ்கள். நியூஸ் பேப்பர்கள் அங்கே கிடைக்கும். அந்தக் கடையில் இருப்பவர் எப்போதும் சந்தன நிறத்தில் தான் ஜிப்பா அணிந்திருப்பார். காலையில் நெற்றியில் வைத்த திருநிறு இரவிலும் அழியாமல் இருக்கும். மென்மையான குரலில் பேசுவார்.

அந்தக் கடையை ஒட்டி ஒரு காலத்தில் சிறிய கேண்டியன் ஒன்றிருந்தது. அங்கே நல்ல காபி கிடைக்கும். அதை எப்போதோ மூடிவிட்டார்கள். அந்த இடத்தில் இப்போது ஒரு சலூனும், டீக்கடையும் வந்துவிட்டது. அந்தக் கடைகளை இரவு எட்டு மணிக்கெல்லாம் எடுத்து வைத்துவிடுவார்கள். இரவில் யார் சவரம் செய்யப் போகிறார்கள்.

பழைய லாட்டரி சீட்டுக் கடையை ஒட்டிய ஆவின் ஸ்டால் மட்டும் பத்து மணி வரை திறந்திருக்கும். அந்தக் கடையை நெருங்கும் போதே பால்கவிச்சி அடிக்கும். தரையில் பால் சிந்திய பிசுபிசுப்பு மாறாதிருக்கும்.

அந்தக் கடையில் ஒரு தட்டில் பால்கோவா பாக்கெட்டுகளை அடுக்கி வைத்திருப்பார்கள். எப்போதும் ஒரே போல அந்தப் பாக்கெட்டுகள் வைக்கபட்டிருக்கும். அதை யாரும் வாங்கிப்போகிறார்களா எனத் தெரியாது.

பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உடைந்து கிடந்த சுவரோடு உள்ளது மூத்திரப்பிறை. அங்கே பெய்யப்படும் மூத்திரம் தாரை தாரையாக வழிந்து பேருந்து நிலையத்தில் ஒடிக்கொண்டிருக்கும். மூக்கைப்பிடித்துக் கொண்டு கடந்து போவார்களே அன்றி ஒருவரும் புகார் செய்யமாட்டார்கள். சிலர் அவரசமாக நடந்தபடியே மூத்திரம் பெய்வதைக் கண்டிருக்கிறான்.

பேருந்து நிலையத்தினுள்  ஒரேயொரு வேப்பமரம் நின்றிந்தது. எப்படி அந்த வேப்பமரத்தை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று ரகுபதி யோசித்திருக்கிறான். பெரும்பாலும் கிராமவாசிகள் தான் அந்த மரத்தடியில் உட்கார்ந்திருப்பார்கள். நகரவாசிகளில் ஒருவரும் பேருந்து நிலையத்தின் தரையில் உட்கார்ந்து அவன் கண்டதில்லை. அந்த வேப்பமரம் மூத்திரம் குடித்து வளர்ந்ததால் தானோ என்னவோ அதன் காற்று கூட நாற்றமடிக்கும்.

வெளியூர் பேருந்துகள் வந்து நிற்பதற்கு மேற்கில் வரிசையாகத் தளம் அமைத்திருந்தார்கள். காலியாக நிற்கும் பேருந்துகளில் ஏறி விளையாடுவது சிறார்களுக்குப் பிடித்தமானது. அவன் சிறுவயதில் அப்படி விளையாடியிருக்கிறான்.

பங்குனித் திருவிழா நாட்களில் தான் அந்தப் பேருந்து நிலையம் புதிய அழகு கொள்ளும். அன்றைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பார்கள். பேருந்து நிலையத்தினுள் வண்ண விளக்குகள் அமைத்திருப்பார்கள். பலூன் வியாபாரிகள். கொட்டு அடிப்பவர்கள். அக்னிச் சட்டி ஏந்திய பெண்கள். குரங்காட்டி. பாம்பாட்டி, சவுக்கால் அடித்துக் கொள்பவன் என விசித்திரமான ஆட்கள். விடிய விடிய பொருட்காட்சி பார்த்துவிட்டு வந்து அலுப்போடும் பேருந்து நிலையத்தில் உறங்கும் குடும்பம் என விநோத காட்சியாக இருக்கும்.

••

இன்றைய இரவில் பேருந்து நிலையம் தன் நீண்டகால அசதியில் தூங்கி வழிவது போலப்பட்டது. மனிதர்களைப் போலவே இடங்களுக்கும் முதுமை ஏற்படவே செய்கிறது. பார்த்துப் பழகிய இடங்களைப் போலச் சலிப்பு தருவது வேறு எதுவுமில்லை. அன்றாடம் பேருந்து நிலையத்திற்கு வந்து போகிறவர்களுக்குப் பேருந்து நிலையத்தின் வாசலில் பூ விற்கும் பெண் கண்ணில் படுவதேயில்லை. அவர்கள் பார்வை முழுவதும் ஏற வேண்டிய பேருந்தின் மீது மட்டுமேயிருக்கும்.

அந்தப் பேருந்து நிலையம் கட்டி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் என்றார்கள். பஸ் ஸ்டாண்ட் பிள்ளையார் கோவிலை ஒட்டி சிறிய கல்வெட்டு இருக்கிறது. அதை யார் படிக்கப்போகிறார்கள். இரவில் எல்லாப் பேருந்து நிலையங்களும் ஒன்று போலவே இருக்கின்றன. மனிதர்கள் வடியத்துவங்கிவிட்ட பேருந்து நிலையங்களுக்கு கிழட்டு நோயாளி போன்ற தோற்றம் வந்துவிடுகிறது. ரகுபதி அதை உணர்ந்திருக்கிறான்.

பேருந்து நிலையத்தின் மேற்கில் ஒரு சைக்கிள் மற்றும் பைக் ஸ்டாண்ட் இருந்தது. அது ஒன்று தான் இரவிலும் இயங்கிக் கொண்டிருக்கும். யாராவது செகண்ட் ஷோ சினிமா விட்டு கூடச் சைக்கிளை எடுக்க வந்து நிற்பார்கள். சிவப்பு நிற பனியன் அணிந்த ஒரு ஆள் தான் எப்போதும் ஸ்டாண்டில் இருக்கிறார். அவரது கழுத்தில் எம்ஜிர் படம் போட்ட டாலர் தொங்கிக் கொண்டிருக்கும். சைக்கிளை வரிசையாக அடுக்கி வைப்பதில் அவர் கில்லாடி. ஒரு சைக்கிள் கூட முன்பின்னாக நிற்காது. அத்தனை ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்.

பேருந்து நிலையத்தின் நுழைவாயிலை ஒட்டி வடை, போண்டா, அதிசரம், சமோசா விற்பவர்கள் கடையிருக்கும். அங்கே பகலில் சிறிய அடுப்பில் எப்போதும் வடையோ, பஜ்ஜியோ வெந்து கொண்டிருப்பது வழக்கம். அந்தக் கடைகளில் நல்ல கூட்டமிருக்கும். அதுவும் வெளியேறும் வாசலை ஒட்டிய தள்ளுவண்டிக்கடையில் எப்போதும் ஆட்கள் நின்று எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். பேருந்து நிலையத்தினுள் விற்கபடும் உணவு ஏனோ ருசியற்றுப் போய்விடுகிறது. அது பசிக்கான உணவு. அதுவும் அவசரமான பசிக்கானது

பேருந்து நிலையத்தின் இரண்டு வாசலை ஒட்டியும் இரண்டு சினிமாத் தியேட்டர்கள். யார் இந்த ஏற்பாட்டினை செய்தது எனத் தெரியவில்லை. ஆனால் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையத்தின் அருகில் தான் சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. புதுப்படம் ரீலிஸ் ஆகும் நாட்களில் பேருந்திலிருந்து இறங்கி அப்படியே தியேட்டரை நோக்கி ஒடுவார்கள்.

சினிமா தியேட்டரின் வடபுறத்தை ஒட்டி இரண்டு பரோட்டா கடைகள். ஒரு உரக்கடை. ஒரு மருந்துக்கடை, மாத தவணையில் பொருட்கள் விற்கும் பர்னிச்சர் கடை. அதை ஒட்டி ஒரு எலக்ட்ரிக்கல் கடை. இது போலவே தென்புறத்தை ஒட்டிச் சேவு மிக்சர் விற்கும் மிட்டாய்கடைகள். சைவ உணவகம், இரண்டு பெட்டிக்கடைகள். சைக்கிள் வாடகைக்கு விடும் கடை. வரிசையாகப் பூக்கடைகள். முனியாண்டி விலாஸ் ஹோட்டல். முன்பு அதன் எதிரில் நிறைய ரிக்சாக்கள் இருந்தன. இப்போது ஒரு ரிக்சா கூட கிடையாது. ஆட்டோ ஸ்டாண்ட் தியேட்டரை ஒட்டியிருந்தது. பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் விநோதமான ஒரு வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதில் எத்தனையோ மனிதர்கள். எத்தனையோ விதமான வணிகங்கள்.

பேருந்து நிலையத்தினுள் விசித்திரமான குரல்களைக் கேட்கலாம். குறிப்பாக அலுமினியத் தட்டில் சமோசா வைத்துக் கொண்டு விற்பவனின் குரலைப் போன்ற ஒன்றை வேறு எங்கும் இதுவரை கேட்டதேயில்லை. இது போலவே பூவிற்கும் சிறுமியின் குரல். அது ஒரு வேண்டுதல் போலவே ஒலிக்கும். கண்தெரியாத பிச்சைக்காரன் பாடும் பாடல், கண்டக்டர்களின் அழைப்பொலி என விசித்திரமான குரல்கள்.

சிலநாட்கள் பேருந்து நிலையத்திற்குள் யானையை அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள். யானை பேருந்தினுள் தும்பிக்கையை நுழைத்துக் காசு கேட்கும். யானை நுழைந்தவுடன் பேருந்து நிலையத்தின் இயல்பு மாறிவிடுகிறது. யானை பேருந்தின் டிரைவர்களை ஆசிர்வாதம் செய்யும். பிள்ளையார் கோவிலில் யானைக்கு வாழைப்பழம் கொடுப்பார்கள். சில நேரம் யானைப்பாகன் ஆவின் கடையில் ஒசியில் தரப்படும் பாலை சூடு ஆற்றி மெதுவாகக் குடிப்பான். அதுவரை யானை பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்தபடியே நின்றிருக்கும்.

இந்த இரவில் ரகுபதி அந்த யானையை நினைத்துக் கொண்டான். அந்த நகரில் ஒரேயொரு யானை மட்டுமே இருந்தது. அதுவும் கோவில்யானை. மனிதர்களைப் போலத் தன் தனிமையைப் பற்றி யானை நினைக்குமா என்ன.

பேருந்து நிலையத்தினை ஒட்டியிருந்த பிள்ளையார் புழுதியும், தூசியும் அப்பியிருந்தார். அதிகாலை நகரப்பேருந்துகள் கிளம்பும் முன்பு அந்தப் பிள்ளையாரைத் தான் கண்டக்டர்கள். டிரைவர்கள் வணங்குகிறார்கள். பேருந்து நிலையத்தில் காணப்படும் குப்பைகளைத் தினமும் அள்ளிக் கொண்டுபோவதில்லை. சுத்தமான பேருந்து நிலையம் என ஒன்றை அவன் தன் வாழ்நாளில் கண்டதில்லை.

பேருந்து நிலையத்திற்கென்ற சில நாய்கள் இருக்கின்றன. அவை இரவிலும் வெளியேறிப் போவதில்லை. அவை பேருந்தின் டயர்களுக்கு நடுவே உலவுவதுண்டு. பேருந்து நிழலில் உறங்குவதும் உண்டு.

கடைகள் அடைத்து சாத்திவிட்ட பேருந்து நிலையத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என ரகுபதிக்கு எரிச்சலாக வந்தது

••

பரோட்டா கடையின் வாசலில் உள்ள பெஞ்சில் இருவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பேசாமல் செகண்ட் ஷோ சினிமாவிற்குப் போய்விடலாம் என்று தோன்றியது. இரண்டு தியேட்டரில் ஒடும் படங்களும் அவன் பார்த்தது தான். ஆனால் நேரத்தைக் கொல்வதற்காக ஏதாவது ஒரு படத்திற்குப் போய்த் தான் ஆக வேண்டும்.

இரவுக்காட்சி பத்தரை மணிக்குத் துவங்குவார்கள் என்றாலும் பதினோறு மணி வரை டிக்கெட் கொடுப்பார்கள். அவன் தியேட்டருக்குள் போன போது படம் துவங்கியிருந்தது. இருட்டிற்குள்ளாக ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்தான். தியேட்டரில் கூட்டமேயில்லை. பேசாமல் கண்களை மூடிக் கொண்டு தூங்கிவிடலாமா என்று யோசித்தான். அப்படி முயன்றபோது படம் ஒடும் சப்தம் தொந்தரவாக இருந்தது.

சரி படத்தைப் பார்க்கலாம் எனக் கொஞ்ச நேரம் படம் பார்த்தான். படத்தோடு ஒட்டவே முடியவில்லை. எழுந்து திறந்து கிடந்த கதவைத் தாண்டி வெளிக்காற்றை நுகர்ந்தபடியே நின்றிருந்தான். அவன் சிகரெட் புகைக்க நிற்கிறான் என்பது போல ஒருவர் அருகில் வந்து அவனிடம் தீப்பெட்டி கேட்டார். அவன் தன்னிடமில்லை என்றான். அவர் தீப்பெட்டி கேட்பதற்காக வாட்ச்மேனைத் தேடி நடந்தார்.

என்ன செய்தாலும் நேரம் போகவேயில்லை. இடைவேளையின் போது தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தான். ஒருவருமில்லை. அப்படியே வெளியே போய்விடலாமா என்று நினைத்தான். பேருந்து நிலையத்தில் காத்திருப்பதை விடவும் இது மோசமான விஷயமில்லை என்று தோன்றியது. படம் போட்டபிறகு மெதுவாக உள்ளே நடந்து போனான்.

செகண்ட் ஷோ விட்டு வெளியே வந்தபோது. பரோட்டா கடைகளும் மூடியிருந்தன. பேருந்து நிலையத்தினை ஒட்டிய சாலையில் நடமாட்டமேயில்லை

விட்டுவிட்டு மினுக்கும் டியூப் லைட் வெளிச்சத்தில் பேருந்து நிலையம் ஒடுங்கியிருந்தது. அவனைப் போலப் பேருந்தை தவறவிட்ட சிலர் மட்டுமே தென்பட்டார்கள். பேருந்து நிலையத்தின் இருட்டும் கூடக் கலங்கியே இருந்தது. தூக்கம் அப்பிய முகத்துடன் ஒருவர் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரது அருகில் துணிப்பை ஒன்று காணப்பட்டது.

எங்கோ கோவிலுக்குப் போய்விட்டு திரும்பிய ஒரு குடும்பம் சேலையை விரித்துப் படுத்திருந்தது. சந்தனம் உலர்ந்த மொட்டை தலையுடன் ஒரு ஆள் உறங்கிக் கொண்டிருப்பதை வியப்பாகக் கண்டான் ரகுபதி.

இரண்டு போலீஸ்காரர்கள் கையில் டார்ச் லைட்டுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேருந்து நிலையத்தினுள் வந்தார்கள். அங்கே இருந்தவர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்தார்கள். ரகுபதி தனது சினிமா டிக்கெட்டினைக் காட்டினான். வேறு எதையும் அவர்கள் கேட்டுக் கொள்ளவில்லை.

பேருந்து நிலையத்தில் வசிக்கும் பிச்சைக்காரன் ஆவின் பூத்தை ஒட்டிய குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தான். தண்ணீர் ஒடும் சப்தம் தெளிவாகக் கேட்டது.

ரகுபதி காலியாகக் கிடந்த ஒரு பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது மணிக்கூண்டினை ஒட்டி ஒரு குடும்பம் நியூஸ் பேப்பரைத் தரையில் விரித்துப் படுத்துக்கிடப்பதை கண்டான். அதுவும் ஒரு பெண்ணின் கொலுசு கண்ணில் பட்டவே கூர்ந்து கவனித்தான். இளம்பச்சை நிற சேலை கட்டிய பெண் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். அருகில் அவளது கணவன் காலை அகலமாக விரித்துத் தன்னை மறந்து உறங்கியிருந்தான். அவனை ஒட்டி ஆறு வயது பையன். நடுவில் இரண்டு கட்டைபைகள். ஒரு லெதர்பேக். அந்தப் பெண்ணின் சேலை விலகி அவளது கெண்டைக்கால் சதையும் அணிந்திருந்த கொலுசும் தெரிந்தன. எங்கோ நீண்ட தூரம் பயணம் போய்விட்டு வருகிறவர்களா இருக்கக் கூடும். அதனால் தான் இப்படி ஆழ்ந்து தூங்குகிறார்கள்.

உறங்கும் பெண்ணை அவதானிப்பது சந்தோஷம் அளிப்பதாக இருந்தது. அதிகாலை நேரத்தில் பேருந்து நிலையத்தினுள் ஈரத்தலையுடன் நெற்றியில் சந்தனம் துலங்க வரும் இளம்பெண்களைக் கண்டிருக்கிறான். அவர்கள் முகத்தைப் பார்த்தால் போதும் அந்த நாளே மகிழ்ச்சியுடையதாக இருக்கும். அந்தப் பெண் தூங்கத்திலே தன்னை உணர்ந்தவள் போலக் கால்களில் விலகிய புடவையைச் சரிசெய்து கொண்டாள். ரகுபதி தலையே வேறு பக்கம் திருப்புவது போல நடித்தான்.

பேருந்து நிலையத்திலிருந்து வானத்தைப் பார்ப்பது அன்று தான் முதன்முறை. பேருந்து நிலையத்திற்குள்ளும் வானம் தெரியுமா என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் போலவே வழி தவறிப்போன ஒற்றை நட்சத்திரம் தனியே மினுங்கிக் கொண்டிருந்தது. கலங்கிய மேகங்களுக்குள் நிலவு மறைந்திருந்தது.

கையிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். இரண்டு நாற்பது. இன்னும் விடிவதற்கு நேரமிருக்கிறது. என்ன செய்வது. எப்படி நேரத்தை கடத்துவது என்று புரியவில்லை. தூக்கம் அவனையும் அழுத்த ஆரம்பித்தது. சைக்கிளில் டீக் கொண்டு வருகிறன் தென்படுகிறானா எனப் பார்க்க வெளிவாசல் வரை நடந்து வந்தான். தெருவிளக்கும் அணைந்து போய்ச் சாலை தெரியாத இருட்டு.

அவன் திரும்பி வந்தபோது அந்தப் பெண் உறக்கம் கலைந்தவள் போல எழுந்து உட்கார்ந்திருந்தாள். பெஞ்சில் அமர்ந்தபோது அவளது முகம் தெளிவாகத் தெரிந்தது. வெண்கலச்சிற்பம் போன்ற உடல். இருபத்தைந்து வயதிற்குள் தானிருக்கும். வட்டமான முகம். காதில் சிறிய கம்மல். கையில் கண்ணாடி வளையல்கள். தூக்கம் கலையாத முகம் என்றாலும் தனி வசீகரமிருந்தது. தான் அவளைப் பார்க்கிறோம் என்பதை அறிந்து கொண்டவளைப் போல அவள் புடவையைச் சரிசெய்து கொண்டாள். மறுபடியும் படுத்துக் கொண்டுவிடுவாள் என்று ரகுபதிக்கு தோன்றியது. ஆனால் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரகுபதி மெலிதாகச் சிரித்தான். அவள் அதைக் கண்டுகொண்டவளாகத் தெரியவில்லை

சைக்கிளில் டீ கொண்டுவருகிறவன் பேருந்து நிலையத்தினுள் வரும் சப்தம் கேட்டது. அவன் ரகுபதி அருகே சைக்கிளை நிறுத்தி டீ வேண்டுமா எனக்கேட்டான். ரகுபதி தலையசைக்கவே அவன் டீயை கேனிலிருந்து பிடித்துக் கொடுத்தான்

அந்தப் பெண் டீக்குடிக்க விரும்புகிறவள் போல அங்கிருந்தபடியே “டீ எவ்வளவு“ என்று கேட்டாள்

எட்டு ரூபாய் என்றான் டீவிற்பவன். அவள் துணிப்பைக்குள் காசை துழாவினாள். கணவனின் பேண்ட் பாக்கெட்டில் அவன் பர்ஸ் இருப்பதை அறிந்தவளாக அதை எப்படி எடுப்பது எனப் புரியாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு டீக்குடிக்க வேண்டும் போலிருந்தது. வேறு எங்காவது காசு இருக்கிறதா எனப் பார்க்க அவள் உறங்கும் பையன் டவுசர் பையில் கூடத் தேடினாள்.

ரகுபதி சப்தமாகக் கேட்டான்

“டீ வேணுங்களா“

அவள் வேண்டும் என்று தலையாட்டினாள்

டீ விற்பவன் அவளுக்கும் ஒரு டீ கொண்டு போய்க் கொடுத்தான். ரகுபதி இரண்டு டீக்குமான காசை அவனிடம் கொடுத்தான்.

அவள் டீயைக் கையில் வாங்கிக் கொண்டு ஊதி ஊதி குடித்தாள்.

டீவிற்பவன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வெளியேறிப் போனான். டீக்கோப்பையின் கடைசிச் சொட்டுவரை ரகுபதி குடித்தான். அவளும் டீயை ரசித்துக் குடித்தபடியே இருப்பதைக் கண்டான்

பிறகு அவள் டீ குடித்த காலி பேப்பர் கப்பை நசுக்கி வீசி எறிந்தாள். அவளைப் போலவே ரகுபதியும் செய்தான். இனி தூக்கம் வராது என்பவள் போல அவள் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டாள்

அவளிடம் ஏதாவது பேசலாமா. என்ன பேசுவது எனப் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மறுபடியும் தன் கணவன் படுத்திருந்த இடத்தருகே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“எந்த ஊருக்கு போகணும் “என்று ரகுபதி சப்தமாகக் கேட்டான்

அவள் பதில் சொல்லவில்லை. மாறாகச் சிரிப்பது கேட்டது

எதற்காகச் சிரிக்கிறாள். தன்னைக் கேலி செய்கிறாளா. ரகுபதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விரல்களை மடக்கி ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில் கண்ணன் வருவான். கதை சொல்லுவான் என்ற பாடலை அவள் முணுமுணுக்கத் துவங்கினாள். அந்தப் பாடலை எத்தனையோ முறை ரேடியோவில் கேட்டிருக்கிறான். ஆனால் இந்த இரவில் அவள் பாடும்போது பாடலின் வழியே பிரகாசமான வெளிச்சம் ஒளிர்வதாக உணர்ந்தான். பாடலின் நாலைந்து அடிகள் பாடியிருப்பாள். பிறகு பாட்டைத் தனக்குள்ளாகவே அடக்கிக் கொண்டு அவள் படுத்துக் கொண்டாள்

என்ன விளையாட்டு இது. இந்தப் பாடல் தனக்கானது தானா. ஏன் இந்த இரவில் இந்தப் பாடலை பாடினாள். எழுந்து அவள் அருகில் போனால் என்னவென்று தோன்றியது. ஆனால் தைரியம் வரவில்லை. அவள் தன் கால்களை அசைத்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை மனதிற்குள் மீதப்பாடலை பாடிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ

அவளின் நாடகத்தை ரசித்தபடியே ரகுபதி அமர்ந்திருந்தான். ரோந்து சுற்றும் போலீஸார் திரும்பவும் வந்தார்கள். தொலைவில் அவர்களைக் கண்டதும் சிமெண்ட் பெஞ்சில் ரகுபதி படுத்துக் கொண்டான். அவர்கள் யாரையும் விசாரிக்கவில்லை. வீடு திரும்பும் சோர்வில் நடந்து கொண்டிருந்தார்கள்

அவர்கள் போனபிறகு அந்தப் பெண்ணைக் காணுவதற்காக எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவள் வேண்டுமென்றே தன் முகம் தெரியாமல் சேலையால் மூடிக் கொண்டாள். தனக்கும் அவளுக்குமான ஒரு அடி இடைவெளி ஏதோ கடக்க முடியாத தூரம் போல உணரச் செய்தது.

அவள் நடிக்கிறாள். உறங்குவது போல நடிக்கிறாள். இது ஒரு விளையாட்டு. தன்னிடமிருந்து தப்பிக்கும் விளையாட்டு. தன் மீது கோபம் கொண்டிருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டாள். அவன் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்ள ஆசைப்பட்டவள் போல ஒரு பையை எடுத்து முன்னால் வைத்துக் கொண்டாள். இப்போது அவள் முகம் தெரியவில்லை.

திடீரென நேரம் வேகமாக ஒடிவிட்டது போலிருந்தது. பால்கொண்டுவருகிற ஆளின் மணிச்சப்தமும் அதைத் தொடர்ந்து முதல்பேருந்தின் வெளிச்சமும் பேருந்து நிலையத்தை விழிக்க வைத்தது. அந்தப் பெண்ணின் கணவன் எழுந்து தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கையில் ஊற்றி முகம் கழுவி கொண்டிருந்தான். அந்தப் பெண் பையிலிருந்து துண்டு ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள். ஒன்றின் பின் ஒன்றாகப் பேருந்துகள் வரத் துவங்கியிருந்தன. அந்த வெளிச்சம் பேருந்து நிலையத்தைத் துயில் எழுப்பிக் கொண்டிருந்தது.

அந்தக் கணவனும் குழந்தையும் அந்தப் பெண்ணும் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு பேருந்தை நோக்கிப் போவதைக் கண்டான். தானும் அந்தப் பேருந்தில் ஏறி அவர்கள் போகிற ஊருக்கே போய்வரலாமா என்று தோன்றியது. ஆனால் அவன் அசைவற்று அவர்கள் போவதை பார்த்துக் கொண்டிருந்தான்

காலியாக இருந்த பேருந்தில் அவர்கள் ஏறி அமர்ந்து கொண்டார்கள். அந்தப் பெண் அவனைப் பார்ப்பது போலவே அமர்ந்திருந்தாள். அவள் தன்னிடம் ஏதோ சொல்கிறாள். மௌனமான உரையாடலது. பேருந்து கிளம்பும் போது அவள் திரும்பி பார்ப்பாள் என்று தோன்றியது. ஆனால் அவள் திரும்பவில்லை. பேருந்து வெளிவாசலைத் தாண்டிப் போனபிறகு ரகுபதி எழுந்து கொண்டான். தூக்கமில்லாத அலுப்பும் கசகசப்பும் எப்போது தன் ஊருக்கு போகும் பேருந்து வரும் என எரிச்சலை ஏற்படுத்தியது.

அவனது ஊருக்குச் செல்லும் பேருந்து வந்து அதில் ஏறிக் கொண்டபோது பேருந்து நிலையம் உயிர்பெறத் துவங்கியிருந்தது. யாரும் காணாமல் இரவில் பூக்கும் சில மலர்கள் இருப்பதாக அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அப்படியான ஒரு பூ தான் இந்த இரவில் மலர்ந்ததோ என நினைத்தபடியே கண்களை மூடிக் கொண்டான். நினைவில் அந்தப் பெண் பாடிய பாடல் மெதுவாகக் கேட்கத் துவங்கியது.

••

0Shares
0