கர்நாடகப் பயணம்

கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவின் கூர்க்கில் இருந்தேன். விட்டு விட்டுப் பெய்யும் மழை. இதமான காற்று.    காபித்தோட்டத்தின்  நடுவே அமைந்த விடுதி. மிகவும் அமைதியானது.  பரபரப்பான நகரவாழ்விலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டேன்.

குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி ‘பைலகொப்பா’ எனும் இடத்தில் அமைந்திருக்கும்  பௌத்த தங்கக் கோயிலை காணச் சென்றிருந்தேன்.  சீன ஆக்ரமிப்பு காரணமாக திபெத்தை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதில் இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்றப்பகுதியே பைலகுப்பே.  இங்கே நம்ட்ரோலிங் என்ற பௌத்த மடாலயம் அமைந்திருக்கிறது.

இந்த மடாலயத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகள் வசிக்கிறார்கள். இதனுள்ளே பௌத்த மதக்கல்லூரியும் மருத்துவமனை ஒன்றும் செயல்படுகிறது.
நான் சென்றிருந்த மாலை நேரம்  நூற்றுக்கணக்கான புத்த துறவிகள் ஒன்றாக அமர்ந்து ஒரே குரலில் புத்த மந்திரங்கள் சொல்வதை கேட்க முடிந்தது.
இந்த கோயிலின் சுவர்களில் மிக அழகிய ஒவியங்கள் காணப்படுகின்றன. இதில் சில புத்தரின் வாழ்க்கையை விளக்ககூடியவை.  வஜ்ராயன பௌத்த கலைமரபு சார்ந்த  ஓவியங்களும்  காணப்படுகின்றன.
கோவிலின் வெளியே உள்ள சதுக்கம் ஒன்றில் பௌத்த துறவிகளில் சிலர் ஆர்வமாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். திபெத்திய கலைப்பொருட்கள் விற்கும் அங்காடிகள் நிறைய காணப்படுகின்றன.
0Shares
0